search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ponneri"

    • நீண்ட தூரம் சென்று ரேசன் பொருட்கள் வாங்க வர சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை எந்த பயனும் இல்லாமல் மூடி கிடக்கிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 19-வார்டு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ளவர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்று பொன்னேரி-தச்சூர் சாலையில் கவுரி தியேட்டர் மற்றும் பழைய டி.எஸ்.பி. அலுவலகம் அருகே உள்ள ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால் வயதானவர்கள் நீண்ட தூரம் சென்று ரேசன் பொருட்கள் வாங்க வர சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்களின் வசதிக்காக அருகே கும்மங்கலம் கால்நடை மருத்துவமனைக்கு பின்புறம் கடந்த 2015-16 ம் ஆண்டு ரூ. 7.41 லட்சம் மதிப்பில் புதிதாக ரேசன் கடை கட்டப்பட்டது. இந்த கடை திறக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே ரேசன் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் வருவதில் சிரமம் இருப்பதாக கூறி ரேசன் கடை மூடப்பட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் 19-வது வார்டு பகுதி மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ரேசன் பொருட்களை வாங்கி வரும் நிலை நீடித்து வருகிறது.

    கடந்த 9 ஆண்டுகளாக பயன்படாமல் மூடிகிடக்கும் ரேசன் கடையை திறந்தால் அப்பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்ற பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமையில் ரேசன் கடையை திறக்க கோரி துணை வட்டாட்சியர் கனக வள்ளியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்தனர். ஆனால் இதுவரை ரேசன் கடையை திறக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது, கும்மங்கலம் கால்நடை மருத்துவமனைக்கு பின்புறம் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை எந்த பயனும் இல்லாமல் மூடி கிடக்கிறது.

    இதனால் நாங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வருகிறோம். இதனால் வீடுகளில் தனியாக வசிக்கும் வயதானவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் ரேசன் பொருட்களை கொண்டு வர அடுத்தவர்களை நம்பி இருக்கும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கடந்த 9 ஆண்டுகளாக மூடி கிடக்கும் ரேசன் கடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • குதிரை பள்ளம் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும்.
    • இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (9-ந்தேதி) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதையடுத்து அழிஞ்சிவாக்கம், ஸ்ரீநகர், எம்.ஜி.ஆர். நகர், ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை, கணேஷ் நகர், சாய் கிருபா நகர், ஸ்ரீநகர், இருளிப்பட்டு, எம்.கே. கார்டன் விருந்தாவனம் நகர்,போக்காரிய சத்திரம், ஜெகநாதபுரம், ஆமூர், நெடுவரம்பாக்கம் மாலிவாக்கம், சத்திரம், குதிரை பள்ளம் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை இருளிப்பட்டு மின்வாரிய உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • சிறுவர்களையும், மாணவ-மாணவிகளையும் நாய்கள் கடிக்க பாய்ந்து அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
    • நாய்கள் குறுக்கே வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தட பெரும்பாக்கம் ஊராட்சியில் தெருநாய்கள் அதிகரித்து உள்ளது. தெருக்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித் திரிவதால் நடந்து செல்லவே அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.

    சிறுவர்களையும், மாணவ-மாணவிகளையும் நாய்கள் கடிக்க பாய்ந்து அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலம் வாகனங்களில் செல்லும்போது திடீரென நாய்கள் குறுக்கே வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மாணவ-மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
    • 3 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த அண்ணாமலை சேரி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி, அரசுஉயர்நிலைப் பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. சுமார் 300-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    பள்ளியில் மொத்தம் 16 ஆசிரியர்கள் இருந்த நிலையில் பணி மாறுதல், பணி ஓய்வு காரணமாக ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் தற்போது தொடக்க பள்ளிக்கு ஒரு ஆசிரியரும் உயர்நிலைப் பள்ளிக்கு 3 ஆசிரியர்களும் மட்டுமே உள்ளனர்.

    வேறு வேறு பாடப்பிரிவு ஆசிரியர்கள் பாடம் எடுப்பதால் மாணவ-மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்தும், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரியும் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அண்ணாமலைசேரி-பொன்னேரி சாலையில் மறியிலில் ஈடுபட்டனர்.

    மேலும் அவ்வழியே வந்த 3 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர். அவர்களிடம் திருப்பாலைவனம் போலீ

    சார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது.
    • விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம்.

    பொன்னேரி:

    விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். பின்னர் இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

    இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் தொடங்கி நடந்து வருகின்றன. பொன்னேரி பகுதியில் கிருஷ்ணாபுரம் வெள்ளோடை ஆண்டார்குப்பம், ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.

    பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல் 15 அடி வரை பல வண்ணங்களில் பலமுக விநாயகர், சிங்க முக விநாயகர், யானை முக விநாயகர், எருது விநாயகர், எலி அன்னம் விநாயகர், விளக்கு விநாயகர் , யானை புலி விநாயகர் என விதவிதமாக தயாராகி வருகின்றன.

    இவை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இப்போதே ஏராளமானோர் தங்களுக்கு தேவையான விநாயகர் சிலைகளுக்கு முன்பணம் செலுத்தி உள்ளனர்.

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ரசாயனம் கலக்காமலும், நீரில் எளிதில் கரையக்கூடிய வகையிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது தயாரான சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பொன்னேரியை சேர்ந்த சரவணன் என்பவர் கூறும்போது, விநாயர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    தினமும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது சிலைக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதத்தில் இருந்தே திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், மீஞ்சூர், பொன்னேரி, பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகள் கேட்டு முன்பதிவு செய்து உள்ளனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு சிலைகளை தயாரித்து வருகிறோம் என்றார்.

    • வலைகள் எப்படி தீப்பிடித்தது என்பது மர்மமாக உள்ளது.
    • 4-வது முறையாக வலைகள் எரிந்துள்ளன.

    பொன்னேரி:

    பழவேற்காட்டில் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை கடற்கரையில் வைத்து செல்வது வழக்கம்.

    அரங்ககுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் படகில் சென்று மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது மீன்பிடி வலைகளை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கிருந்த மீன்பிடி வலைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மீனவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் வலைகள் முழுவதும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    வலைகள் எப்படி தீப்பிடித்தது என்பது மர்மமாக உள்ளது. மர்ம நபர்கள் யாரேனும் வலைகளுக்கு தீவைத்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எரிந்து நாசமான வலைகளின் சேதமதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இது குறித்து மீனவர்கள் கூறும்போது, பழவேற்காடு பகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக வலைகள் எரிந்துள்ளன. பழவேற்காடு திருமலை நகர், கோட்டை குப்பம் பகுதியில் கடந்த மாதத்தில் மீன்பிடி வலைகள் எரிந்ததாகவும் இது குறித்து மீன்வளத்துறை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் பழவேற்காடு பகுதியில் மர்ம நபர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் மீன்பிடி வலைகளை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல தடை.
    • அவசர தேவைக்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல்.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளி துறைமுகம், அத்திப்பட்டு புதுநகர், காமராஜர் துறை முகம் மற்றும் அப்பகுதுயை சுற்றி உள்ள ஏராளமான தொழிற்சாலைகளுக்கு சாம்பல் கழிவு, நிலக்கரி, கண்டனர் லாரிகள், கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தச்சூர், பொன்னேரி, இலவம்பேடு, நாலூர், மீஞ்சூர்வழியாக தினமும் சென்று வருகிறன்றன.

    இதனால் பொன்னேரி, மீஞ்சூர் பஜாரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரிக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வந்தது.

    மேலும் தொடர்ந்து விபத்துக்களும் ஏற்பட்டன. அவசர தேவைக்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    வண்டலூர் சாலையில் சென்றால் 2 டோல்கேட் மற்றும் கூடுதல் தொலைவு என்பதால் தச்சூர்-பொன்னேரிய சாலையில் சென்று வந்தன.

    இதுபற்றி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் தெரிவித்தனர். இதைத்தொடரந்து பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கத் பல்வந் உத்தரவுப்படி தச்சூரில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர் வழியாக கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக பொன்னேரி போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் எச்சரிக்கை பதாகைகள் ஆங்காங்கே வைத்து உள்ளனர்.

    மேலும் தடையை மீறி வரும் கனரக வாகனங்களுக்கு ரூ.1500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் கனரக வாகனங்களை கண்காணித்தபடி வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1303 பல்வேறு மனுக்களில் 249 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவர்கள் மங்கை உமாபதி, பிரியா ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்டத்தில் கடந்த ஜூன் 7-ந் தேதி தொடங்கிய ஜமாபந்தி 14 நாட்கள் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1303 பல்வேறு மனுக்களில் 249 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பயனாளிகளுக்கு பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் சார் ஆட்சியர் வாகே.சங்கேத் பல்வத் சான்றிதழ் வழங்கினர். மீதம் உள்ள மனுக்களுக்கு பரிசிலனை செய்து வழங்கபடும் என தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சி பகுதியை சேர்ந்த 65 குடும்பத்தை சேர்ந்தவர்கள் பட்டாகேட்டு கடந்த 3 வருடமாக ஜமாபந்தியில் மனு அளித்தும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறறியும் இது வரை நடவடிக்கை இல்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்து கிராம மக்கள் பட்டா வழங்க கோரி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதேபோல் பொன்னேரி அடுத்த காட்டவூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த விடுபட்ட 16 பேருக்கு பட்டா வழங்க கோரியும் 66 பேருக்கு அசைமெண்ட் பட்டாவை கம்ப்யூட்டர் பட்டாவாக மாற்றியமைக்க கோரியும் பலமுறை ஜமாபந்தி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அவர்களிடம் துரைசந்திரசேகர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மங்கை உமாபதி, பிரியா ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டனர்.

    • விவசாய பாசனத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
    • விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    பொன்னேரி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் தலைமையில் நடைபெற்றது. நேர்முக உதவியாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வண்ண மீன் வளர்ப்பு, மீஞ்சூர், பழவேற்காடு, தாங்கல் பெரும்புலம், வெள்ளக்குளம் பள்ளிபாளையம் பகுதி சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆறு ஏரி குளங்களில் விடுவதால் நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், மெரட்டுர் ஏரியில் இருந்து விவசாய பாசனத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    பொன்னேரியில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் ரூ.3 லட்சம் மற்றும் 25 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே சக்திநகரை சேர்ந்தவர் சந்துருகுமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று இருந்தார். இந்தநிலையில் சந்துருகுமாரின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்தார்.

    இதுபற்றி சந்துருகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது 25 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    சந்துரு வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகை-பணத்தை சுருட்டி சென்று உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதுபற்றி பொன்னேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    நேற்று பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை போனது. பொன்னேரி பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    பொன்னேரி அருகே திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வேண்பாக்கத்தைச் சேர்ந்தவர் கணேஷ். சென்னை துறைமுகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (28). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது. தற்போது சசிகலா கர்ப்பமாக இருந்தார்.

    கணவர் வேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருந்த சசிகலா திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பொன்னேரி அருகே கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    பொன்னேரியை அடுத்த மாலிவாக்கத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் நந்தினி (19). ரெட்ஹில்ஸ் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் தனது தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்ப வில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் பொன்னேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நந்தினியை தேடி வருகின்றனர்.

    ×