என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி கைது"

    • போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
    • ரவுடி பென்சில் தமிழரசன் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.

    கரூர்:

    கரூர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பென்சில் என்கிற தமிழரசன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 18-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தமிழரசன் தனது கூட்டாளிகள் பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகியோருடன் சேர்ந்து கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் மலையாளம் என்பவரை மரக்கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கரூர் டவுன் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிரகாஷ் ஹரிஹரன், மனோஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    முக்கிய குற்றவாளியான ரவுடி பென்சில் என்ற தமிழரசன் தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இதற்கிடையே கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரூர் அரிக்காரம் பாளையம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே ரவுடி தமிழரசன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே உஷாரான கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக் டர் மணி வண்ணன் மற்றும் போலீ சார் ஜீப்பில் சம்பவ இடம் விரைந்தனர். போலீசை கண்டதும் தமிழரசன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார்.

    ஆனால் போலீசார் விடாமல் அவனை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பி ஓடினார்.

    உடனே இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் துப்பாக்கியால் சுட்டார் இதில் அவனது காலில் குண்டு பாய்ந்தது. பின்னர் அவனைப் பிடித்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு ரவுடி தமிழரசனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கரூரில் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தூத்துக்குடி புதிய பஸ் நிலைய பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அந்தோணி மைக்கேல் சுகந்தன் மீது கொலை வழக்கு உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்,

    அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி புதிய பஸ் நிலைய பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, வடபாகம் இன்ஸ்பெக்டர் பால முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதி தெருக்கள் மற்றும் முக்கிய சாலை பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதிய பஸ் நிலையம் பகுதியில் வாள், அரிவாள், கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி நின்ற தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தை சேர்ந்த அந்தோணி மைக்கேல் சுகந்தன் (வயது 40) என்பவரை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து தப்பி ஓடாதபடி எச்சரிக்கை செய்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ஆயு தங்களை பறிமுதல் செய்தனர்.

    தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் சரித்திர குற்றவாளி பதிவேட்டில் உள்ள இவர் மீது கொலை வழக்கு உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது.

    வெடிகுண்டு வீசியும், பழிக்குப் பழியாகவும் நடைபெற்ற கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர் தற்போது யாரை கொலை செய்ய திட்டமிட்டு பதுங்கி இருந்தார்? அந்த முக்கிய நபர் யார் ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரமேஷ் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
    • வியாபாரி ரமேஷ் ராயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப் பேட்டை அம்மையப்பன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரவுடி கல்லறை சுரேஷ் என்பவர் அடியாட்களுடன் சென்று மாமூல் கேட்டு மிரட்டினார்.

    வியாபாரி ரமேஷ் மாமூல் தர மறுத்ததால் அங்கிருந்த வாடிக்கையாளர்களின் முன்னிலையிலேயே ரவுடி கல்லறை சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆபாச வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து வியாபாரி ரமேஷ் ராயபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே ரவுடி கல்லறை சுரேஷ் கூட்டாளிகளுடன் வந்து மாமூல் கேட்டு மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த நிலையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கல்லறை சுரேஷ், அவனது கூட்டாளிகள் ஆதம்,பெருமாள் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அற்புதராஜூடன் 2 பேர் பொன்ராஜின் வீட்டுக்குள் சென்று விட்டு முகத்தை மறைத்துக் கொண்டு வெளியில் வரும் காட்சி அப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது.
    • கேமரா காட்சிகளை வைத்து அற்புதராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சென்னை:

    சென்னை அபிராமபுரத்தில் வசித்து வந்த காய்கறி வியாபாரி பொன்ராஜ். கடந்த 13-ந்தேதி வீடு புகுந்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    தூத்துக்குடியை சேர்ந்த இவருக்கும், இவரது தம்பி குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருந்து வந்த முன் பகையால் சென்னையில் வசித்து வந்த தம்பி மகனான அற்புதராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பொன்ராஜை வீடு புகுந்து கொலை செய்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது அற்புதராஜூடன் 2 பேர் பொன்ராஜின் வீட்டுக்குள் சென்று விட்டு முகத்தை மறைத்துக் கொண்டு வெளியில் வரும் காட்சி அப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதை வைத்து அற்புதராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அற்புதராஜூடன் சென்று பொன்ராஜை கொலை செய்தவர்கள் யார்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி வாண்டுமணி மற்றும் கூட்டாளியான சுப்ரமணி என்பது தெரியவந்தது.

    இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வாண்டு மணி, சுப்ரமணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அற்புதராஜின் மைத்துனர் நடத்தி வரும் 'பாஸ்ட் புட்' உணவகத்துக்கு ரவுடி வாண்டு மணி சாப்பிட செல்வது வழக்கம். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில்தான் அற்புதராஜ், வாண்டு மணியையும் அவரது கூட்டாளி சுப்ரமணியையும் துணைக்கு அழைத்து சென்று பொன்ராஜை கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    • போலீசார் விரட்டி சென்று புளியந்தோப்பை சேர்ந்த அருண் என்பவரை கைது செய்தனர்.
    • அருண் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே நேற்று நள்ளிரவு 3 இளைஞர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்தனர்.

    ரோந்து போலீசாரை கண்டதும் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரும் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு ஓடினர்.

    போலீசார் விரட்டி சென்று புளியந்தோப்பை சேர்ந்த அருண் (18) என்பவரை கைது செய்தனர். இவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    தப்பி ஓடிய புளியந்தோப்பை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சந்தோஷ் என்கிற தவக்களையை போலீசார் தேடி வருகின்றனர். கைதான அருணிடம் நடத்திய விசாரணையில், சூளை நெடுஞ்சாலையில் சாவியுடன் நிறுத்தி இருந்த ஒரு இருசக்கர வாகனத்தை திருடி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    • சிறையில் இருந்த பாஸ்கருக்கு தனது மனைவி எழிலரசியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
    • எழிலரசியின் உடலை புதைத்த இடத்துக்கு சென்று எலும்பு கூட்டை தோண்டி எடுத்து உழந்தை ஏரியில் வீசியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை பிரபல தாதா கருணா. ஆயுள் தண்டனை கைதியாக உள்ள இவரது தம்பி பாஸ்கர் (வயது 48) ரவுடி. இவர் ஒரு கொலை வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டு கைதாகி தண்டனை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். பாஸ்கர் மனைவி எழிலரசி. இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இதுகுறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் உறவினர்கள் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து எழிலரசியை தேடி வந்தனர். ஆனால் அவரை பற்றி கடந்த 9 ஆண்டுகளாக எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது.

    இந்த நிலையில் முதலியார் பேட்டை உழந்தை ஏரியில் எலும்பு கூட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் வீசி சென்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சிறப்பு அதிரடி படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த எலும்பு கூட்டை வீசியது ரவுடி பாஸ்கர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

    சிறையில் இருந்த பாஸ்கருக்கு தனது மனைவி எழிலரசியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கடந்த 2013-ம் ஆண்டு பாஸ்கர் பரோலில் வெளியே வந்தார். அப்போது மனைவி எழிலரசி கிருமாம்பாக்கத்தில் உள்ள அவரது தங்கை வீட்டில் இருந்தார். அங்கு தனது கூட்டாளிகளான ரவுடிகள் மனோகர், சரவணன் என்ற கருப்பு சரவணன், வேல் முருகன் என்ற தடிவேலு ஆகியோருடன் பாஸ்கர் சென்றார்.

    பின்னர் மனைவி எழிலரசியை காரில் ஏற்றி வந்துள்ளார். அதன்பிறகு காரிலேயே சேலையால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் உழந்தை ஏரி அருகே ஏற்கனவே தயாராக தோண்டி வைத்துள்ள குழியில் எழிலரசி உடலை புதைத்துள்ளார். உடல் சீக்கிரம் மக்குவதற்காக யூரியா உரம் தெளித்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக உழந்தை ஏரியை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதை அறிந்த பாஸ்கர் பள்ளம் தோண்டினால் எலும்பு கூடு கிடைத்து சிக்கிக்கொள்வோம் என பீதி அடைந்தார்.

    இதனால் எழிலரசியின் உடலை புதைத்த இடத்துக்கு சென்று எலும்பு கூட்டை தோண்டி எடுத்து உழந்தை ஏரியில் வீசியுள்ளார். ஆனால் எலும்பு கூட்டின் ஒரு சில பகுதிகளை மட்டும் அவசரத்தில் எடுத்து தூக்கி வீசியுள்ளார். மீதி உள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அப்புறப்படுத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்குள் போலீசாரின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து பாஸ்கர் அவரது கூட்டாளிகளான ரவுடிகள் மனோகர், சரவணன் என்ற கருப்பு சரவணன், வேல் முருகன் என்ற தடிவேலு ஆகிய 4 பேரையும் முதலியார் பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    மேலும் எழிலரசி புதைத்த இடத்தில் மீதமுள்ள எலும்பு கூட்டை தேடிவருகின்றனர். புதுவையில் 9 ஆண்டுகளுக்கு முன் பரோலில் வந்து மனைவியை கொன்று புதைத்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதும், இது தொடர்பாக ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தங்கராஜ் (வயது 54). இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 54). இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப் போது அவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்வமணி(29) என்பவர் கத்தி முனையில் தங்கராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ.1350 பறித்துக் கொண்டார். இது குறித்து தங்கராஜ் வீராணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சினிமா பாடலுக்கு நடனம் ஆடும் அஜித்குமார் சட்டையில் இருந்து பட்டா கத்தியை எடுத்து மிரட்டுவது போல காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
    • போலீஸ் விசாரணையில் அஜித்குமார் ஒத்தக்கடையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த சில ரவுடிகள் சமூக வலைதளத்தில் அடுக்கடுக்காக வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதிச்சியத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவன், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டான்.

    அதில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடும் அஜித்குமார் சட்டையில் இருந்து பட்டா கத்தியை எடுத்து மிரட்டுவது போல காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

    எனவே இதில் தொடர்புடைய நபரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீஸ் விசாரணையில் அஜித்குமார் ஒத்தக்கடையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். இவன் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரை மாநகரில் மட்டும் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    • கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த திருவிழாவின்போது மேளம் அடித்ததில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
    • கோயம்பேட்டில் பதுங்கி இருந்த பரத்தை இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் அன்னை சத்யா நகர் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த திருவிழாவின்போது மேளம் அடித்ததில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கத்தி கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

    அப்போது திடீரென நாட்டு வெடிகுண்டு வீசிப்பட்டது. இதில் 2 பேர் படுகாயமடைந்தனர். வெடிகுண்டு வீசிய ரவுடியான பரத் (வயது23) என்பவரை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் பரத் தினமும் எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனை ஜாமீனில் கடந்த செப்டம்பர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் அதன்பிறகு ரவுடி பரத் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கோயம்பேட்டில் பதுங்கி இருந்த பரத்தை இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    • மாயமான சிறுமி கருப்பாயூரணியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது.
    • கரண் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்துவிட்டு அதே பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    அதில் தங்களது மகளை வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று இருப்பதாக தெரிவித்திருந்தனர். சிறுமி கடத்தல் விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் வடக்கு துணை கமிஷனர் (பொறுப்பு) ஆறுமுகசாமி மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில் மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சிறுமியின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் இருந்த அவரது செல்போனும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது மாயமான சிறுமி கருப்பாயூரணியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது.

    அந்த செல்போன் சிக்னல் கருப்பாயூரணி பகுதியை காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சிறுமி வாலிபருடன் தங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் சிறுமியை மீட்டு வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் கருப்பாயூரணியைச் சேர்ந்த கரண் (வயது 25) எனவும், இவர் மீது மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மாட்டுத்தாவணி பகுதியில் ரவுடியாக வலம் வந்த கரண் சிறுமி வேலைக்கு செல்லும்போது பின்தொடர்ந்து சென்றுள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

    இதனை சிறுமியின் பெற்றோர் கண்டித்து உள்ளனர். ஆனால் அதனை அவர் கண்டு கொள்ளாமல் குற்ற வழக்குகள் உள்ள கரணை காதலித்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று கரண் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி வீட்டைவிட்டு வெளியேறி கரனுடன் சென்றுள்ளார். வெளியூர் சென்ற இருவரும் அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளனர். அப்போது சிறுமியை கரண் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கரணை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.

    • அரிவாள் வெட்டுப்பட்டு காயமடைந்த கணேசனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • கணேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணேசன் திருப்பூர் 49-வது வார்டு பா.ஜ.க. தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மது பாரின் முன் பகுதியில் நேற்று இரவு கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த யோக நாராயணன் (வயது 25) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த இமாம்(28) என்பவர் யோக நாராயணனிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

    இதுகுறித்து யோக நாராயணன் தனது தந்தை கணேசனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனடியாக கணேசன் விரைந்து வந்து இமாமிடம் தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இமாம் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கணேசனின் கையில் வெட்டினார். இதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது இமாம் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, கொள்ளை, கொலை உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் அரிவாள் வெட்டுப்பட்டு காயமடைந்த கணேசனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணேசன் திருப்பூர் 49-வது வார்டு பா.ஜ.க. தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. பிரமுகரை பிரபல ரவுடி அரிவாளால் வெட்டிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பணம் கொடுக்க மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தார்.
    • ரவுடி மீது ஆபாசமாக பேசுதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போரூர்:

    கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியில் "சூப்பர் மார்க்கெட்" நடத்தி வருகிறார். இவரது கடைக்கு இரவு வந்த வாலிபர் ஒருவர் பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் பணம் கொடுக்க மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தார். மேலும் பெண்ணிடம் அத்துமீறி தகாத முறையில் நடந்து கொண்டார்.

    தகவல் அறிந்ததும் வடபழனி இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி அய்யப்பன் (வயது32) என்பவரை கைது செய்தனர். அவர் மீது ஆபாசமாக பேசுதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அய்யப்பன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×