என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பரோலில் வெளியே வந்து மனைவியை கொன்று புதைத்த ரவுடி கைது
    X

    பரோலில் வெளியே வந்து மனைவியை கொன்று புதைத்த ரவுடி கைது

    • சிறையில் இருந்த பாஸ்கருக்கு தனது மனைவி எழிலரசியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
    • எழிலரசியின் உடலை புதைத்த இடத்துக்கு சென்று எலும்பு கூட்டை தோண்டி எடுத்து உழந்தை ஏரியில் வீசியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை பிரபல தாதா கருணா. ஆயுள் தண்டனை கைதியாக உள்ள இவரது தம்பி பாஸ்கர் (வயது 48) ரவுடி. இவர் ஒரு கொலை வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டு கைதாகி தண்டனை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். பாஸ்கர் மனைவி எழிலரசி. இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இதுகுறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் உறவினர்கள் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து எழிலரசியை தேடி வந்தனர். ஆனால் அவரை பற்றி கடந்த 9 ஆண்டுகளாக எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது.

    இந்த நிலையில் முதலியார் பேட்டை உழந்தை ஏரியில் எலும்பு கூட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் வீசி சென்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சிறப்பு அதிரடி படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த எலும்பு கூட்டை வீசியது ரவுடி பாஸ்கர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

    சிறையில் இருந்த பாஸ்கருக்கு தனது மனைவி எழிலரசியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கடந்த 2013-ம் ஆண்டு பாஸ்கர் பரோலில் வெளியே வந்தார். அப்போது மனைவி எழிலரசி கிருமாம்பாக்கத்தில் உள்ள அவரது தங்கை வீட்டில் இருந்தார். அங்கு தனது கூட்டாளிகளான ரவுடிகள் மனோகர், சரவணன் என்ற கருப்பு சரவணன், வேல் முருகன் என்ற தடிவேலு ஆகியோருடன் பாஸ்கர் சென்றார்.

    பின்னர் மனைவி எழிலரசியை காரில் ஏற்றி வந்துள்ளார். அதன்பிறகு காரிலேயே சேலையால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் உழந்தை ஏரி அருகே ஏற்கனவே தயாராக தோண்டி வைத்துள்ள குழியில் எழிலரசி உடலை புதைத்துள்ளார். உடல் சீக்கிரம் மக்குவதற்காக யூரியா உரம் தெளித்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக உழந்தை ஏரியை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதை அறிந்த பாஸ்கர் பள்ளம் தோண்டினால் எலும்பு கூடு கிடைத்து சிக்கிக்கொள்வோம் என பீதி அடைந்தார்.

    இதனால் எழிலரசியின் உடலை புதைத்த இடத்துக்கு சென்று எலும்பு கூட்டை தோண்டி எடுத்து உழந்தை ஏரியில் வீசியுள்ளார். ஆனால் எலும்பு கூட்டின் ஒரு சில பகுதிகளை மட்டும் அவசரத்தில் எடுத்து தூக்கி வீசியுள்ளார். மீதி உள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அப்புறப்படுத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்குள் போலீசாரின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து பாஸ்கர் அவரது கூட்டாளிகளான ரவுடிகள் மனோகர், சரவணன் என்ற கருப்பு சரவணன், வேல் முருகன் என்ற தடிவேலு ஆகிய 4 பேரையும் முதலியார் பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    மேலும் எழிலரசி புதைத்த இடத்தில் மீதமுள்ள எலும்பு கூட்டை தேடிவருகின்றனர். புதுவையில் 9 ஆண்டுகளுக்கு முன் பரோலில் வந்து மனைவியை கொன்று புதைத்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதும், இது தொடர்பாக ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×