search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு
    X

    அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

    • புற நோயாளிகள் பிரிவில் முதியவர் ஒருவர் கையில் ஒரு துண்டுச்சீட்டுடன் நின்று கொண்டிருந்தார்.
    • மருத்துவமனை வளாகத்தில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் 30 படுக்கை வசதி கொண்ட கட்டிடம் மற்றும் ஆய்வு அறையை அமைச்சர் திறக்க சொல்லி ஆய்வு செய்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மதுரையில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கார் மூலம் நேற்று வந்தார். வரும் வழியில் சின்னாளப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, புற நோயாளிகள் பிரிவில் முதியவர் ஒருவர் கையில் ஒரு துண்டுச்சீட்டுடன் நின்று கொண்டிருந்தார். இதனைக்கண்ட அமைச்சர், அவரிடம் இருந்த துண்டுச்சீட்டை வாங்கி பார்த்து அது என்ன என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், இது ஓ.பி. (புறநோயாளிகள்) பதிவு சீட்டு என்றார். அவரது பதிலை கேட்ட அமைச்சர், அங்கிருந்த டாக்டரை கண்டித்தார். நோயாளிகளுக்கு அச்சடித்து ஓ.பி.பதிவு சீட்டு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து அருகே உள்ள மருந்து குடோனை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது தரையில் மருந்துகள் சிதறி கிடந்தது. இதனை பார்த்த அமைச்சர், பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை வாங்கி கொடுத்தால் அதனை பாதுகாப்பாக வைக்க கூட முடியாதா? என்று மருத்துவமனை ஊழியர்களை கடிந்து கொண்டார்.

    இதேபோல் மருத்துவமனை வளாகத்தில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் 30 படுக்கை வசதி கொண்ட கட்டிடம் மற்றும் ஆய்வு அறையை அமைச்சர் திறக்க சொல்லி ஆய்வு செய்தார்.

    பின்னர் அங்கிருந்தபடியே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த உயர் மருத்துவ அதிகாரியிடம் செல்போனில் பேசிய அமைச்சர், சின்னாளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வருவதே இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் மருத்துவமனையை சரியாக பராமரிப்பு செய்யாததால், டாக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் (மெமோ) வழங்க அமைச்சர் உத்தரவிட்டார்.

    Next Story
    ×