என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு, இன்னும் 3 நாட்கள் இடைவெளி தான் உள்ளன.
- தமிழ்நாட்டிற்கு ஒரு வார கால இடைவெளி கூட தராமல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனால்தான் தேர்தல் ஆணையம், தேர்தல் தேதிகளை தாமதமாக அறிவித்திருக்கிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு, இன்னும் 3 நாட்கள் இடைவெளி தான் உள்ளன.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் அவர்களின் கூட்டணிகளையே இன்னும் முடிவு செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு ஒரு வார கால இடைவெளி கூட தராமல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் 7 கட்டங்கள், 5 கட்டங்களாக தேர்தல்கள் நடக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக, ஒரே நாளில் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பில், ஏதோ அரசியல் தலையீடு இருப்பதாக தெரிகிறது. தமிழ் நாட்டை குறி வைத்து தான், இந்தத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒப்புகைச் சீட்டுகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்ட பின்பு தான், தேர்தல் முடிவு அறிவிக்க வேண்டும் என்று, அனைத்து எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்தது. ஆனால் தேர்தல் ஆணையம், அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும், இடையே 45 நாட்கள் இடைவெளிகள் உள்ளன.
இவ்வளவு நாட்கள் இடைவெளி எதற்காக? நாடு முழுவதும் 3 கட்டங்களாக தேர்தலை நடத்தி முடிக்க முடியும். கடந்த காலங்களில் ஒரே நாளில், நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் இரண்டையும் சேர்த்து நடத்திய நாடு இந்தியா. அதைப்போன்ற உட்கட்டமைப்பு வசதிகள், நமது நாட்டில் உள்ளன.
தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்த இரண்டு நாட்களில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீடியோக்கள் பல லட்சம் பயனர்களால் பார்க்கப்பட்டு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி யூ-டியூபர் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் பாலா (வயது 23).
யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் தயாரித்து பதிவிட்டு லைக்குகளையும், ஷேர்களையும் குவிப்பதற்காக சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அதன்மூலம் லட்சங்களை சம்பாதித்து வருகிறார். இவருக்கு யூ-டியூபில் 22 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இவர் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவை குளத்தின் அருகே உள்ள முத்துலிங்கம் (75) என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், தற்போது மழை வெள்ளத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.
ரஞ்சித் பாலா தனது நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் மோகத்தில் அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் சென்று ஒரு கட்டிடத்தின் மேலே நின்று கீழே நண்பர்களை நிற்க வைத்து, குளத்திற்குள் பெட்ரோலை ஊற்றி அதில் தீ வைத்து அந்த தீயில் குதிப்பது போல சாகச வீடியோ பதிவிட்டு அதை யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவிட்டு உள்ளார்.
அதில் அருகில் நின்ற நண்பர்கள் மீது இந்த தீ பரவுகிறது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது சமூக வலைதள பக்கங்களில் தேரிக்காட்டில் மண்ணுக்குள் தலைகீழாக புதைந்து நின்று சில மணி நேரம் கழித்து வெளியே வரும் வீடியோக்கள் என பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் பல லட்சம் பயனர்களால் பார்க்கப்பட்டு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் இந்த வீடியோவில் இருக்கும் நபர்களை தேடிப்பிடித்து விசாரணை நடத்தி ரஞ்சித் பாலா, சிவக்குமார், இசக்கி ராஜா ஆகிய 3 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 277-தண்ணீரை மாசுபடுத்துதல், 278-சுற்றுச்சூழலை மாசுபடுத்துதல், 430-நீர்ப்பாசன பணிகளில் காயம் ஏற்படுத்துதல், 285-பிற நபருக்கு காயம் ஏற்படுத்துதல், 308-மரணத்தை விளைவிக்கும் என தெரிந்தே முயற்சி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி யூ-டியூபர் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
- தேர்தல் பத்திரங்களில் அரசியல் கட்சிகள் பெற்ற நிதிகள் குறித்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று போராட்டம் நடத்தியது காங்கிரஸ் கட்சிதான்.
- எங்கள் மடியில் கனமில்லை. எனவே எங்களுக்கு பயமில்லை.
ஆலந்தூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று காலை சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார்.
முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல் காந்தி தமிழ்நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் ராகுல் காந்தி பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் இருக்கிறது. இன்று மும்பையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து அதற்கான சுற்றுப்பயணத் திட்டங்கள் வகுக்கப்படும்.
தேர்தல் பத்திரங்களில் அரசியல் கட்சிகள் பெற்ற நிதிகள் குறித்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று போராட்டம் நடத்தியது காங்கிரஸ் கட்சிதான். எங்கள் மடியில் கனமில்லை. எனவே எங்களுக்கு பயமில்லை. இதனால்தான் நாங்கள் தைரியமாக அதை வெளியிடச் சொல்லி வலியுறுத்தினோம். இப்போது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. வருமானவரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை, சி.பி.ஐ. சோதனை ஆகியவற்றுக்கு பின்னர் நிதிகளைப் பெறுகின்றனர். இதில் பெருமளவு உள்நோக்கங்கள் உள்ளன. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மோடி இதற்கெல்லாம் பதில் சொல்வாரா?

முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடக்கப்போகிறது என்பது, மோடிக்கு எப்படி முதலாவது தெரிந்தது? அதனால் தான் அவர் தமிழ்நாட்டை மையமாக வைத்து முதலில் தொடர்ந்து பிரசாரம் செய்து கொண்டு இருந்தாரா?. இதையெல்லாம் பார்க்கும் போது பாராளுமன்ற தேர்தலை, தேர்தல் ஆணையம் சுதந்திரமாக சுயமாக நடத்துகிறதா? இல்லையேல் மோடிக்கு ஆதரவாகவா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
- கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது தூதரக அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீன்பிடிக்கச் சென்ற 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கடந்த இரு மாதங்களில் 80-க்கும் கூடுதலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது தூதரக அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மற்றொருபுறம் தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா-இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 58 மீனவர்களை விடுதலை செய்யவும், தமிழக மீனவர்களின் அனைத்துப் படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கூட்டத்தின் தலைவன் மதுசூதனன் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி உள்ளான்.
- கொள்ளையர்கள் கடந்த சில நாட்களில் ராஜ்கோட், ஜாம்நகர், அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் 11 இடங்களில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டு உள்ளனர்.
ராம்ஜிநகர்:
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப், பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக குஜராத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மீண்டும் ராஜ்கோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் ரூபாய் மற்றும் லேப்டாப் திருடப்பட்டதாக புகார் வந்தது. இதனால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கண்ணாடி உடைத்து திருடப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் உள்ள அனைத்து கேமராக்களின் பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். குற்றவாளிகளின் படங்கள் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையம் மட்டும் அல்லாமல், அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது.
இதன் பலனாக டெல்லியில் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் ஜெகன், தீபக், குணசேகர், முரளி, ஏகாம்பரம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருச்சி ராம்ஜிநகரை சேர்ந்தவர்கள். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையர்கள் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் உள்ளே புகுந்து கொள்ளையடிக்கும் நோக்கில் வந்தது தெரியவந்தது. இதற்காக திருச்சியில் இருந்து புறப்பட்டு ஜாம்நகர் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால், இவர்கள் பல திட்டங்கள் போட்டும் உள்ளே போக முடியவில்லை. இதனால் ஜாம்நகர் வந்து திருட்டில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து ராஜ்கோட் போலீஸ் சூப்பிரெண்டு ராஜு பார்கவ் கூறும்போது:-
இக்கூட்டத்தின் தலைவன் மதுசூதனன் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி உள்ளான். மதுசூதனன்தான் தலைவனாக இருந்து கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டி தருபவன். இந்த கொள்ளையர்கள் கடந்த சில நாட்களில் ராஜ்கோட், ஜாம்நகர், அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் 11 இடங்களில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- செல்போன்களில் இருந்து வாட்ஸ்அப் வழியாக ஜாபர் சாதிக் யார்-யாருக்கு என்னென்ன தகவல்களை அனுப்பி உள்ளார் என்பது பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
- ஜாபர் சாதிக்கின் காவல் முடிவடைந்ததும் போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
சென்னை:
தி.மு.க. அயலக அணியில் பொறுப்பு வகித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை முதலில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை முடிந்து நேற்று ஜாபர் சாதிக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் மேலும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி கிடைத்தது.
ஜாபர் சாதிக்கின் இமெயிலில் உள்ள விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தப்பட இருப்பதாக கூறிய அதிகாரிகள் மேலும் 3 நாட்கள் விசாரணைக்கு அனுமதி கேட்டிருந்தனர்.
இதன்படி ஜாபர் சாதிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 7 செல்போன்களை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. அந்த செல்போன்களில் இருந்து இ-மெயில் மூலமாக ஜாபர் சாதிக் பல்வேறு தகவல்களை வெளிநபர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.
அதுதொடர்பான தகவல்களை செல்போன்களில் இருந்து அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள். இதன் மூலமாக ஜாபர் சாதிக்குடன் போதைப்பொருள் கடத்தலில் யார்-யாருக்கு தொடர்புள்ளது என்பதை கண்டறிய டெல்லி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
செல்போன்களில் இருந்து வாட்ஸ்அப் வழியாக ஜாபர் சாதிக் யார்-யாருக்கு என்னென்ன தகவல்களை அனுப்பி உள்ளார் என்பது பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த சினிமா பிரபலங்கள், அரசி யல் பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்தி வரும் இந்த செல்போன் தகவல்கள் சேகரிப்பு போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனால் ஜாபர் சாதிக்கின் காவல் முடிவடைந்ததும் போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
- பாரத ஸ்டேட் வங்கி. சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் இதில் வங்கி கணக்குகள் வைத்துள்ளன.
- சேதாரத்தின் மதிப்பு குறித்து வங்கி உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் கணக்கீடு செய்து தான் சொல்ல முடியும்.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சிட்கோ பகுதியில் அமைந்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் இதில் வங்கி கணக்குகள் வைத்துள்ளன. அது மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களும் சேமிப்பு கணக்குகள் வைத்துள்ளனர்.
எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் வங்கி இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் வங்கிக்குள் புகை வருவதை கண்ட வாட்ச்மேன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
மேலும் துவாக்குடி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து திரு வெறும்பூர், பெல், நவல்பட்டு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.
இதில் வங்கியிலிருந்து அனைத்து கம்ப்யூட்டர்களும் எரிந்து சேதமாகிவிட்டது. இதுகுறித்து வங்கி மேலாளர் பிரசாந்த் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சேதாரத்தின் மதிப்பு குறித்து வங்கி உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் கணக்கீடு செய்து தான் சொல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தெரிய வரவும் ஒவ்வொருத்தரும் தங்களது கணக்கின் நிலை தங்கள் நகை அடகு வைத்ததுடன் நிலை கண்டு அச்சம் தெரிவித்துள்ளனர்.
- மலைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வேடப்பட்டி பகுதி உள்ளது.
- யானை நடமாட்டம் வந்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளளனர்.
வடவள்ளி:
கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகமாக உள்ளது. இந்த யானைகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி உணவு, தண்ணீர் தேடி வனத்தையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது.
கோவை பேரூர் அடுத்துள்ளது வேடப்பட்டி பகுதி. இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த பகுதிக்கு ஒற்றை காட்டு யானை ஒன்று வந்தது. இந்த யானை அந்த பகுதிகளில் சிறிது நேரம் சுற்றி திரிந்தது.
பின்னர், பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலைக்கு ஒற்றை யானை வந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள நிர்மல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் யானை புகுந்தது. அங்கு சுற்றி திரிந்த யானை, தோட்டத்தில் இருந்த மாமரத்தை பார்த்ததும் குஷியானது. மரத்தின் அருகே சென்று, மரத்தில் கால்வைத்து தனது துதிக்கையால் மாங்காய்களை ஒவ்வொன்றாக பறித்து, ருசித்து சாப்பிட்டது. பின்னர் அங்கிருந்து மீண்டும் வேடபட்டி சாலைக்கு சென்றது. தொடர்ந்து அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது.
மலைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வேடப்பட்டி பகுதி உள்ளது. இந்த இடத்திற்கு எப்படி யானை வந்தது என்பது மக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.
யானை நடமாட்டம் வந்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளளனர். தோட்ட வேலைக்கு செல்வோரும் தனியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே வனத்துறையினர் இந்த பகுதிகளில், யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
- தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது.
- ஜனநாயகம் முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இன்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திற்கு முதல் கட்ட தேர்தலாக நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டு மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்தியா நாடு வல்லரசாக வேண்டும். தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது. தேர்தல் ஆணையம் திராவிட மாடல் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க.வினரின் சுவர் விளம்பரங்கள் குறி வைத்து அகற்றப்படுகிறது. ஆனால் தி.மு.க.வினரின் விளம்பரங்களை அகற்றவில்லை. ஆளும் கட்சிக்கு துணையாக இருக்கும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

ஜனநாயகம் முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். தமிழகத்தில் அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியல் உள்ளது. அமைச்சர் பொன்முடிக்கு கோர்ட்டு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து எம்.எல்.ஏ. பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தற்பொழுது மேல்முறையீடு செய்து அதன் அடிப்படையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பொன்முடியை அமைச்சராக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. அரசு ஜனநாயகத்தை அழித்து பணநாயகமாக மாற்ற முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
போலீஸ் துறை தி.மு.க.வின் ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது. எனவே துணை ராணுவம் மற்றும் ராணுவத்தை கொண்டு தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. தேர்தல் ஆணையம் சட்டசபையை சஸ்பெண்டு செய்து கவர்னர் கட்டுப்பாட்டில் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் நியாயமான முறையில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் மோடி அலைவீச தொடங்கியுள்ளது. 40 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெரும். மத அடிப்படையில் வாக்கு சேகரிப்பு நடத்தி வருகிறார்கள். இதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதியை விட பா.ஜ.க. அரசு கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளது. வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி இருப்பதாக கூறுகிறார்கள்.
கடந்த முறை நடந்த பாராளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த ஒரு குளறுபடியும் அவர்களுக்கு தெரியவில்லையா. பாரத் ஜோடா யாத்திரையின் நிறைவு விழா நிகழ்ச்சி மும்பையில் நடந்து. தற்போது அந்த கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ் மட்டுமே உள்ளது. கேரளா வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணி ஒரு மூழ்கிய கப்பல்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் தேதி அறிவித்தால் அதில் கூட அரசியல் செய்கிறார்கள்.
- சொத்துவரி, பத்திரப்பதிவு வரி உயர்வு என மக்கள் தாங்க முடியாத சுமையை மக்கள் மீது திணித்துள்ளது.
கோவை:
கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் கோவை வருகையை பா.ஜ.க.வினரும், பொதுமக்களும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். பிரதமரும் நம்மை பார்க்க ஆவலாக இருக்கிறார். பிரதமரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கோவை மக்களுக்கு கிடைத்துள்ளது.
எதிர்கட்சியினர் எல்லாவற்றையும் அரசியல் செய்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவித்தால் அதில் கூட அரசியல் செய்கிறார்கள்.
பிரதமர், தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோடுவதை எதிர்கட்சிகளின் முன்தோல்வியாக தான் பார்க்கிறோம். பா.ஜ.க ஆளும் மாநிலங்களை விட தமிழகத்திற்கு அதிகமான நிதியை மத்திய அரசு கொடுத்துள்ளது.
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 28 பைசா மோடி என தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்குடன் பழக்கம் உள்ள உங்களை டிரக் உதயநிதி என்று அழைக்கலாமா?.
தி.மு.க அரசானது மக்களுக்கு விரோதமான அரசாக உள்ளது. சொத்துவரி, பத்திரப்பதிவு வரி உயர்வு என மக்கள் தாங்க முடியாத சுமையை மக்கள் மீது திணித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விளக்கம் கொடுக்க தயார் என மத்திய மந்திரி சொல்லியுள்ளார். இங்குள்ளவர்கள் 3 ஆண்டுகள் ஆட்சியில் எவ்வளவு வாங்கினீர்கள் என்று சொல்ல முடியுமா?
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பா.ஜ.கவை கேள்வி கேட்கும் எதிர்கட்சிகளிடம், அது குறித்து விளக்கம் கேட்டால் பதில் இல்லை. பா.ஜ.க வெளிப்படை தன்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நிறைய வதந்திகள் வருகிறது. பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுவது வதந்தியாக இருக்கும். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொடுக்க முடியும்.
அதானி, அம்பானி அரசை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு சொல்லி வந்த நிலையில், அந்த நிறுவனங்கள் இல்லாதது அவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மளிகை கடையை சீல் வைக்காமலும் இருக்க பணம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
- கருப்புசாமியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர் மோசடி நபர் என தெரிய வந்தது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள பனியம்பள்ளி ஊராட்சி துலுக்கம் பாளைத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (38). இவர் வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
கருப்புசாமி நேற்று வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். தொடர்ந்து அவர் நான் உணவு பாதுகாப்பு அலுவலர் என்றும் உங்கள் கடையில் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எனக்கு தகவல் வந்ததால் உங்கள் கடையை சோதனை செய்ய வந்துள்ளேன் என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அந்த வாலிர் உங்கள் மீது வழக்கு போடாமலும், மளிகை கடையை சீல் வைக்காமலும் இருக்க பணம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
இதனால் பயந்து போன கருப்புசாமி கடையில் இருந்த பணத்தை எடுத்து அந்த வாலிபரிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது அந்த வாலிபரிடம் அடையாள அட்டையை காட்டுங்கள் என கருப்புசாமி கூறியுள்ளார். அதையெல்லாம் காட்ட முடியாது எனக்கூறி அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த கருப்புசாமி அந்த பகுதியில் இருந்தவர்களிடம் இது பற்றி தகவல் தெரிவித்துள்ளார். அப்போது கருப்புசாமியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர் மோசடி நபர் என தெரிய வந்தது.
அதனைத்தொடர்ந்து கருப்புசாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது உணவு பாதுகாப்பு அலுவலராக நடித்து பணத்தை பறித்து சென்றவர் ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு வீதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரின் மகன் நவீன்குமார் (29) என தெரிய வந்தது. பின்னர் நவீன்குமாரை போலீசார் கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அவரை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
- மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள்பாலிக்கிறார்.
- பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.
நாகர்கோவில் புறநகர் பகுதியில் உள்ளது. இக்கோயிலின் பெயரிலேயே ஊர் நாகர்கோவில் என்றழைக்கப்படுகிறது. இது கேரள பாரம்பரியக் கோவில் ஆகும். இங்கு மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலைச் சுற்றி ஏராளமான பாம்பு சிலைகள் உள்ளன. பொதுமக்கள் இந்த சிலைகளுக்குப் பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.
இக்கோவிலின் கருவறையின் மேல் ஓலை வேயப்பட்டு உள்ளது. இது வேறு எந்தக் கோவிலிலும் பார்க்கமுடியாத சிறப்பு அம்சமாகும். அது மட்டுமல்ல இந்தக் கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் கருப்பாகவும் ஆறு மாதம் வெண்மையாகவும் காணப்படுகிறது.
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாகர் சிலைக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.






