search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னிமலை அருகே அதிகாரி என கூறி மளிகை கடைக்காரரிடம் பணம் பறித்து கைதான வாலிபர்
    X

    சென்னிமலை அருகே அதிகாரி என கூறி மளிகை கடைக்காரரிடம் பணம் பறித்து கைதான வாலிபர்

    • மளிகை கடையை சீல் வைக்காமலும் இருக்க பணம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
    • கருப்புசாமியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர் மோசடி நபர் என தெரிய வந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள பனியம்பள்ளி ஊராட்சி துலுக்கம் பாளைத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (38). இவர் வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கருப்புசாமி நேற்று வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். தொடர்ந்து அவர் நான் உணவு பாதுகாப்பு அலுவலர் என்றும் உங்கள் கடையில் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எனக்கு தகவல் வந்ததால் உங்கள் கடையை சோதனை செய்ய வந்துள்ளேன் என கூறியுள்ளார்.

    இதை தொடர்ந்து அந்த வாலிர் உங்கள் மீது வழக்கு போடாமலும், மளிகை கடையை சீல் வைக்காமலும் இருக்க பணம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.

    இதனால் பயந்து போன கருப்புசாமி கடையில் இருந்த பணத்தை எடுத்து அந்த வாலிபரிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது அந்த வாலிபரிடம் அடையாள அட்டையை காட்டுங்கள் என கருப்புசாமி கூறியுள்ளார். அதையெல்லாம் காட்ட முடியாது எனக்கூறி அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த கருப்புசாமி அந்த பகுதியில் இருந்தவர்களிடம் இது பற்றி தகவல் தெரிவித்துள்ளார். அப்போது கருப்புசாமியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர் மோசடி நபர் என தெரிய வந்தது.

    அதனைத்தொடர்ந்து கருப்புசாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது உணவு பாதுகாப்பு அலுவலராக நடித்து பணத்தை பறித்து சென்றவர் ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு வீதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரின் மகன் நவீன்குமார் (29) என தெரிய வந்தது. பின்னர் நவீன்குமாரை போலீசார் கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அவரை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×