என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. எத்தனை தொகுதி போட்டியிடும்? அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை முதல் ஆளாக வெளியிடுவார்.
- தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முக்கிய தொகுதிகளில் யார்-யாரை நிறுத்துவது என்பதை ஏற்கனவே டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து விட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்பதை ஏற்கனவே அறிந்து இருந்த தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதை 90 சதவீதம் தீர்மானித்து விட்டனர்.
அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் கடந்த வாரமே தேர்வு செய்து முடித்து விட்டனர்.
காங்கிரசில் 2 தொகுதிகளில் மட்டுமே இழுபறி உள்ளது. அதுவும் நாளை காலை தீர்க்கப்பட்டு விடும். அதன் பிறகு நாளையே தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் மட்டும்தான் தமிழகத்தில் அந்த கட்சி போட்டியிடும் 9 வேட்பாளர்கள் யார்-யார் என்பதை முடிவு செய்வதில் கடும் சவால் நிலவுகிறது. அந்த 9 தொகுதிகளில் 6 தொகுதி வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியிட்டு எம்.பி. ஆனவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
திருநாவுக்கரசர், ஜோதிமணி ஆகிய இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மனுதாக்கல் நிறைவுபெறும் 27-ந்தேதி வரை காங்கிரசில் இழுபறி நீடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. சேருமா? என்பதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் உள்ளது. ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. எத்தனை தொகுதி போட்டியிடும்? அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை முதல் ஆளாக வெளியிடுவார்.
தற்போது அந்த சூழ்நிலை இல்லாத நிலையில் பா.ம.க., தே.மு.தி.க. வந்தால் எந்த தொகுதிகள் கொடுப்பது என்பது பற்றி அ.தி.மு.க.வில் ஒருமித்த கருத்து முடிவாகாத நிலை உள்ளது. என்றாலும் அ.தி.மு.க. வேட்பாளர்களும் 90 சதவீதம் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் தயாராக உள்ளது.
பா.ம.க., தே.மு.தி.க. தொகுதி பங்கீடு சுமூகமாக தீர்க்கப்பட்டால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலையும் நாளை அல்லது நாளை மறுநாள் எடப்பாடி பழனிசாமி வெளியிட வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.
பாரதிய ஜனதா கூட்டணியிலும் இதே நிலைதான் நிலவுகிறது. பா.ம.க., தே.மு.தி.க. தலைவர்களுடன் பாரதிய ஜனதா தலைவர்கள் தொடர்ந்து ரகசியமாக பேசி வருவதால் தொகுதி பங்கீடு முடிவாகவில்லை. என்றாலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முக்கிய தொகுதிகளில் யார்-யாரை நிறுத்துவது என்பதை ஏற்கனவே டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து விட்டனர்.
எனவே பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களும் இன்னும் 2 நாட்களில் தெரிய வாய்ப்பு உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் 39 வேட்பாளர்களும் ஒரே நாளில் அறிவிக்கப்படுவார்கள் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதன் மூலம் தி.மு.க. கூட்டணியிலும், அ.தி.மு.க. கூட்டணியிலும், பாரதிய ஜனதா கூட்டணியிலும் 80 சதவீத வேட்பாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. தொகுதி பங்கீடு நிறைவு பெற்றதும் வேட்பாளர் பட்டியல் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிகிறது.
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டால் தமிழக தேர்தல் மேலும் சூடு பிடிக்கும்.
- பல்நோக்கு கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
- நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி கோவளம் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 3.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.

இதேபோல் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் ஒதுக்கி கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது.
- மின்சார ரெயில் செல்லும் வழித்தடங்களான தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன.
சென்னை:
சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே கடந்த சில வாரங்களாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது. இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பணிகள் பிற்பகல் 3.15 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக அந்த நேரத்தில் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து அவர்கள் மெட்ரோ ரெயில்கள் மற்றும் மாநகர பஸ்களில் பயணம் செய்தனர். இதன் காரணமாக மெட்ரோ ரெயில்கள் மற்றும் மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்ப ட்டது. 44 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன. மின்சார ரெயில் செல்லும் வழித்தடங்களான தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் அந்த பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்தனர். மெட்ரோ ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் இன்று கூடுதலாக மெட்ரோ ரெயில்களும் இயக்கப்பட்டன. காலை 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. அதன் பிறகு காலை 10 மணி முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்தனர். இன்று இரவு 8 மணி வரை கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. பின்னர் இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
- டாஸ்மாக் கடையை ஊழியர்கள் திறந்து திருஷ்டி பூசணிக் காயை சுற்றி உடைத்தனர்.
- மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அம்பத்தூர்:
முகப்பேர் மேற்கு, ரெட்டி பாளையம் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. பள்ளி, குடியிருப்பு அருகே மதுக்கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று புதிய மதுக்கடை திறக்கபட இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் கிரி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை ஊழியர்கள் திறந்து திருஷ்டி பூசணிக் காயை சுற்றி உடைத்தனர். இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் மதுக் கடைக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது. அந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
- தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில் போட்டியிடுவது பற்றி ஓ.பி.எஸ். ஆலோசித்து வருகிறார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளார்.
பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட ஓ.பி.எஸ். விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினரோ தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்து வருகிறார்கள்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஓ.பி.எஸ். தவித்து வருகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருவதாக கூறிவரும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரையில் போட்டியிட்டால் நமது தனித்தன்மையை இழந்து விடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதனை ஆமோதித்துள்ள ஓ.பி.எஸ். அடுத்த கட்டமாக என்ன செய்வது? என்பது பற்றி ஆலோசித்து வருகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளரான புகழேந்தி டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இது ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தேர்தல் நேரத்தில் சிக்கலை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. இதனால் தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில் போட்டியிடுவது பற்றி ஓ.பி.எஸ். ஆலோசித்து வருகிறார்.

ஆனால் அவரது இந்த முடிவை பாரதிய ஜனதா கட்சியினர் விரும்பவில்லை. பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், "நீங்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால்தான் சரியாக இருக்கும். புதிதாக ஒரு சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் மக்களிடம் அதனை எளிதாக கொண்டு போய் சேர்க்க முடியாது" என்று கூறி வருகிறார்கள்.
இது ஓ.பி.எஸ்.சுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாரதிய ஜனதா கட்சியினர் சொல்வதை கேட்பதா? ஆதரவாளர்களின் கருத்துபடி செயல்படுவதா? என்று முடிவெடுக்க முடியாமல் ஓ.பி.எஸ். திணறி வருகிறார்.
- தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்ட 2 கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
- அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது தொடர்பாக தே.மு.தி.க. இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. கடந்த 1-ந் தேதி அன்று அ.தி.மு.க. குழுவினர் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் தே.மு.தி.க. நிர்வாகிகள் கடந்த 6-ந் தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று பேச்சு நடத்தினார்கள். இப்படி 2 கட்ட பேச்சு வார்த்தைகள் அடுத்தடுத்து நடைபெற்ற நிலையில் 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறாமல் இழுபறி நீடித்துக் கொண்டே செல்கிறது. 10 நாட்களாக அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நேரடியாக நடைபெறாத நிலையில் இரு தரப்பினரும் ரகசியமாக சந்தித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வருகிற 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்ட 2 கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக நேற்றே இரு தரப்பிலும் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தனர். ஆனால் நேற்று சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை. இந்த நிலையில் 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் இன்று நேரில் சந்தித்து பேசி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, அ.தி.மு.க. தரப்பில் இன்று தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பதாக கூறியுள்ளனர். எனவே இன்று தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்று நம்புகிறோம் என்றார்.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தே.மு.தி.க.வும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
அதே நேரத்தில் மேல்சபை எம்.பி. பதவி கண்டிப்பாக வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இதில் தான் இழுபறி நீடிக்கிறது.
இதனால் தே.மு.தி.க.வுக்கு மேல்சபை எம்.பி. பதவி கிடைக்குமா? என்பது கேள்விக் குறியாக மாறி உள்ளது.
- கட்சித் தலைவர்களின் பெயர் பலகை-சிலைகளை துணியால் மூடும் வேலை தொடங்கி உள்ளது.
- கூட்டத்துக்கு வர இயலாத கலெக்டர்கள் காணொலி வாயிலாக கூட்டத்தில் இணைந்து கொள்வார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டனர். எந்த கோப்புகள் மீது முடிவெடுத்தாலும் அதற்கு தலைமை தேர்தல் அதிகாரியின் அனுமதியை பெற வேண்டும்.
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிட்ட காரணத்தால் தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்கள் அலுவலகத்தையும், 39 எம்.பி.க்கள் அலுவலகங்களையும் காலி செய்யுமாறு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதன்படி எம்.எல்.ஏ.க் களும், எம்.பி.க்களும் தங்களது சொந்த பொருட்களை எடுத்துக் கொண்டு அலுவலகங்களை காலி செய்துவிட்டனர்.

இப்போது கட்சித் தலைவர்களின் பெயர் பலகை-சிலைகளை துணியால் மூடும் வேலை தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சென்னையில் நாளை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்துக்கு வர இயலாத கலெக்டர்கள் காணொலி வாயிலாக கூட்டத்தில் இணைந்து கொள்வார்கள்.

இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேர்தல் அதிகாரிகளின் பணிகள் குறித்தும், வேட்பு மனு தாக்கலின் போது என்னென்ன நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது பற்றியும் தலைமை தேர்தல் அதிகாரி எடுத்துரைப்பார். அது மட்டுமின்றி வாக்குச் சாவடிகள் அமைப்பது, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு போதிய பயிற்சி கொடுப்பது உள்பட பல்வேறு பணிகள் குறித்தும் அவர் விவாதிக்கிறார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள் என்பதால் முகவரி மாறியவர்கள் 18 வயது நிரம்பியவர்கள் இன்று ஏராளமானோர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். தேர்தல் அலுவலகங்களுக்கு சென்றும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
இவற்றை முறையாக பரிசீலித்து துணை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது பற்றியும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவு பிறப்பிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வாகனங்களில் அரசியல் கட்சி சார்ந்த கொடிகள் கட்டப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது.
- காவல்துறை தரப்பில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து உரிய அறிவுரைகள் பிறப்பிக்கப்பட்டு விதிகளை மீறி ஆவணங்கள் இன்றி பொருட்கள் எடுத்துவந்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை:
பாராளுமன்ற தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு முதல் மதுரை மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படையினர் மற்றும் 3 நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு ஆகியோருடன் இணைந்து ஒவ்வொரு பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த வாகன தணிக்கையின்போது காவல் துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படையினர் 49 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து வந்தால் உடனடியாக பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மேலும் 49 ஆயிரத்திற்கு அதிகமான பணம் எடுத்துவந்தால் உரிய ஆவணங்களை காண்பித்து பின்பு பணத்தினை பெற்று செல்வதற்கான சிறப்பு குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வாகனங்களில் அரசியல் கட்சி சார்ந்த கொடிகள் கட்டப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது. சரக்கு வாகனங்களில் வாக்காளர்களுக்கு ஏதேனும் பரிசுப் பொருட்கள் எடுத்துசெல்லப்படுகிறதா? எனவும் சோதனை நடத்தி வருகின்றனர். காவல்துறை தரப்பில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து உரிய அறிவுரைகள் பிறப்பிக்கப்பட்டு விதிகளை மீறி ஆவணங்கள் இன்றி பொருட்கள் எடுத்துவந்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ரெயில் நிலையத்தில் பச்சிளங்குழந்தைகளுடன் இருந்த தாய்மார்களிடம் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என கேட்டபோது அவர்கள் குழந்தைக்கு பால் புகட்ட மறுத்தனர்.
- தொடர்ந்து அழுததால் குழந்தையின் தொண்டை வறண்டு போனது.
மதுரை:
சென்னையில் அருந்து மதுரை வரை இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை ரெயில் நிலையத்தில் 3 மாத கைக்குழந்தையுடன் ஆண் பயணி ஒருவர் ஏறினார். நீண்ட நேரமாக கைக்குழந்தை பசியால் அழுவதை பார்த்த சக பயணிகள் குழந்தையை வைத்திருந்த நபரை சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கினர்.
இதனையடுத்து மதுரை ரெயில் நிலையத்தில் குழந்தையுடன் அந்த நபர் இறங்கியவுடன் அவரை பின்தொடர்ந்து சில பயணிகள் சென்றனர். ஒரு கட்டத்தில் குழந்தை கடத்தலோ என்ற அச்சத்தில் அவரை தாக்க முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் குழந்தையுடன் வந்த பயணியை பிடித்து சக ரெயில் பயணிகள் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதம் காரணமாக குழந்தையை தூக்கி வந்தது தெரிந்தது.
இதனையடுத்து அவருடைய மனைவிக்கு தகவல் கொடுத்து மனைவியிடம் குழந்தையை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனிடையே நள்ளிரவு 2 மணி முதல் பச்சிளங்குழந்தை பசியால் அழுது கொண்டிருந்தது. பலர் பாட்டில் மூலமாக பால் கொடுத்தபோதும் குழந்தை பால் அருந்தவில்லை. தொடர்ந்து அழுததால் குழந்தையின் தொண்டை வறண்டு போனது.
இதற்கிடையே ரெயில் நிலையத்தில் பச்சிளங்குழந்தைகளுடன் இருந்த தாய்மார்களிடம் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என கேட்டபோது அவர்கள் குழந்தைக்கு பால் புகட்ட மறுத்தனர். அப்போது அங்கு வந்து கோவை செல்வதற்காக மதுரை ரெயில் நிலையத்திற்கு வருகை தந்த பெண் ஒருவர் குழந்தைக்கு பால் புகட்ட முன்வந்தார்.
கோவை செல்லும் ரெயில் புறப்பட 15 நிமிடங்களே இருந்த நிலையில் குழந்தையின் அழுகையை உணர்ந்து தாயுள்ளத்தோடு வந்து பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி குழந்தையின் பசியாற்றினார். பசியால் பல மணிநேரம் அழுத குழந்தைக்கு கருணையோடு தாய்ப்பால் புகட்டிய பெண்ணை பலரும் பாராட்டினர். மேலும் பயணிகள் சிலரும், ரெயில்வே போலீசாரும் அவருக்கு இனிப்புகளை வாங்கிக் கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.
- வீட்டை விட்டு வெளியே வராதவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
- பிரதமர் வருகையால் தி.மு.க. கூட்டணியினர் தோல்வி பயத்தில் உள்ளனர்.
திருப்பூர்:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று திருப்பூரில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமியை நேரில் சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கேட்டதுடன், சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
வீட்டை விட்டு வெளியே வராதவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பிரதமர் கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகத்திற்கு வருகை தருகிறார். அவையெல்லாம் தேர்தலை மனதில் வைத்து அல்ல. பிரதமர் வருகையால் தி.மு.க. கூட்டணியினர் தோல்வி பயத்தில் உள்ளனர்.
கோவையில் பிரதமரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு திமு.க. தடை விதிக்க நினைத்தது. எல்லா மாநிலத்திலும் பிரதமர் மக்களை சந்திக்கிறார்

பி.எம்ஸ்ரீ., பள்ளி திட்டத்திற்கு கையெழுத்து போடுவார்கள். ஆனால் புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என சொல்வது ஏற்கத்தக்கதல்ல. தேர்தல் முடிந்ததும் வேறு காரணம் சொல்லி ஏற்றுக்கொள்வர்.
ஆ. ராசா 2 ஜி வழக்கில் ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தீர்ப்பு வரலாம். தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் மோடி வருகை புரிய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். தேதி கொடுக்க பிரதமரும் தயாராக இருக்கிறார். இந்தியா கூட்டணிக்கு எங்கேயும் எழுச்சி இல்லை. நாடு முழுவதும் ஜெய்ஸ்ரீராம் கோஷம்தான் எழுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.
- தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 34). கணவரை பிரிந்த இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.
சமீபத்தில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள அந்தோணியார் ஆலயம் அருகே யாசகம் எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டி ருந்த சந்தியா அந்த பகுதியில் இரவில் குழந்தையுடன் தூங்கினார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி தன் பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். குழந்தையை திருடிய மர்ம நபர்கள் யார் என்பதை அறிய 150-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது குழந்தையை கடத்திச் சென்ற 2 நபர்களின் புகைப்படங்களை தூத்துக்குடி மாவட்ட போலீ சார் வெளியிட்டுள்ளனர்.
போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணியன் பாலச்சந்தர் தலைமையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை யினர் புகைப் படத்தை அடிப்படையாகக் கொண்டு 2 பேரையும் தேடி வருகின்றனர்.
மேலும் புகைப்படத்தில் உள்ள நபர்களை யாரேனும் பார்த்தால் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பொது இடங்களில் செய்யப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- சாலையோரமாக உள்ள கட்டிட சுவர்களில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுமே தங்களது கட்சி சார்ந்த பேனர்களை சுவர்களில் ஒட்டியிருந்தனர்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் நேற்று மாலையில் இருந்து உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அடங்கிய புகைப்படங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன.
அதே நேரத்தில் பொது இடங்களில் செய்யப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுவர்களில் பொறுத்தப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பர பேனர்களை தேர்தல் பணியாளர்கள் கிழித்து அப்புறப்படுத்தினார்கள். சென்னை மாநகரம் முழுவதும் அரசியல் கட்சிகளின் விளம்பர பேனர்களை அகற்றும் பணியில் நூற்றுக்கணக்கான தேர்தல் பணியாளர்கள் இன்று ஈடுபட்டனர். சாலையோரமாக உள்ள கட்டிட சுவர்களில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுமே தங்களது கட்சி சார்ந்த பேனர்களை சுவர்களில் ஒட்டியிருந்தனர். இது போன்ற பேனர்கள் அனைத்தும் இன்று அகற்றப்பட்டன.






