என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை
    • சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பட்வாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் காமாட்சி தம்பதியின் மகளான ஸ்பூர்த்தி (வயது 16) பாகலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர்களது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இந்நிலையில் 15-ம் தேதி பட்டவாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் சிறுமி சடலமாக மிதந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிறுமி அந்த வாலிபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாணவியை மீட்டு மீண்டும் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை யாரோ துண்டை போட்டு மூடியுள்ளனர். இதனையடுத்து நடந்த விசாரணையில் அந்த சிறுமியின் பெற்றோரே அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மகளை கண்டித்துள்ளனர். ஆனால் மாணவி காதலை கைவிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மகளை தாக்கி, ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது.

    தொடர்ந்து மாணவியின் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கருத்தரங்கில் ஆரோக்கியமான உணவு சமையல் குறித்த கேள்வி, பதில் அமர்வும் இடம்பெற்றது.
    • இதில் பங்கேற்றவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    ஆரோக்கியமான மனம், உடல் மற்றும் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு நீடித்த மற்றும் ஆக்கப்பூர்வமான ஆன்லைன் வணிகத் தளத்தை 'நேச்சுரலே' நிறுவனம் நடத்தி வருகிறது.

    இதேபோல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் நிலையான வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் இந்த நிறுவனம் தன்னை அர்ப்பணித்து அதுதொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.

    அந்த வரிசையில் ஆரோக்கியமான மற்றும் சத்துகள் நிறைந்த சுவையான உணவுகளை சமைப்பது எப்படி? என்பது குறித்த கருத்தரங்கத்தை சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பேரோஸ் ஓட்டலின் 'அலெக்சாண்ட்ரியா டாவெர்ன்' உணவு விடுதியில் நேற்று நடத்தியது. 

    இந்த கருத்தரங்கத்துக்கு நேச்சுரலே நிறுவனத்தின் நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன் தலைமை தாங்கினார். இதில் நடிகர் அரவிந்த்சாமியின் மகளும், புகழ்பெற்ற உணவு ஆலோசகரும், சமையல் கலை நிபுணருமான அதிரா முன்னிலை வகித்தார்.

    சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் மிகவும் கவனம் செலுத்துவதோடு, சுவை மற்றும் நேரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல், ஆரோக்கியமான உணவுகளை சமைப்பது குறித்த செயல்முறையை சுவாரஸ்யமாகவும், அழகாகவும் எடுத்துரைப்பதுதான் இந்த கருத்தரங்கின் நோக்கமாக இருந்தது.

    அதன்படி, சமையல் கலை நிபுணர் அதிரா, ஆரோக்கியமான, சத்துகள் நிறைந்த சுவையான உணவுகள் தயாரிப்பு குறித்த சமையல் விளக்கத்தை கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு கூறியதோடு, சமைத்தும் காட்டினார். 

    பின்னர், அலெக்சாண்ட்ரியா டாவெர்ன் உணவு விடுதி சமையல் கலைஞர்கள் மற்றும் உணவு ஆலோசகரும், சமையல் கலை நிபுணருமான அதிரா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் கருத்தரங்கில் உள்ளவர்களுக்கு பகிரப்பட்டன. அதனை அவர்கள் அனைவரும் ருசி பார்த்து, உணவின் சுவைக்காக பாராட்டும் தெரிவித்தனர்.

    மேலும், கருத்தரங்கில் ஆரோக்கியமான உணவு சமையல் குறித்த கேள்வி, பதில் அமர்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற ஆர்வலர்களுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சில நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. அதுமட்டுமல்லாமல், இதில் பங்கேற்றவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    • பாமக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல்.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் பாமக எம்எல்ஏ அருள் சந்தித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக- பாமக இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    பாமக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    அன்புமணி மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கரைக்கு முட்டையிடும் ஆமைகள் படகு மற்றும் வலையில் சிக்கி இறப்பது கடந்த சில நாட்களாக அதிகரித்தது.
    • ஆமை குஞ்சுகளை மீண்டும் கடலில் விடும் பணியில் வனத்துறையினர் மற்றும் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு கடற்கரை பகுதியில் டிசம்பர் மாதம் முதல் ஆமைகள் முட்டையிட கரைக்கு வருகின்றன. இவை ஏப்ரல் மாதம் வரை முட்டையிடும்.

    கரைக்கு முட்டையிடும் ஆமைகள் படகு மற்றும் வலையில் சிக்கி இறப்பது கடந்த சில நாட்களாக அதிகரித்தது. மேலும் ஆமையின் முட்டைகளை விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து பாதுகாக்க வனத்து றையினருடன் இணைந்து ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினரும் களத்தில் இறங்கினர்.

    அவர்கள் பழவேற்காடு கடற்கரையோரத்தில் ஆமைகளின் முட்டைகளை சேகரித்து ஆமைக்குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாத்தனர்.

    கடந்த மாதத்தில் இருந்து இதுவரை 9,700 முட்டை சேகரிக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் இந்த முட்டைகள் தற்போது குஞ்சு பொரிக்கத்தொடங்கி உள்ளன. இந்த ஆமை குஞ்சுகளை மீண்டும் கட லில் விடும் பணியில் வனத்துறையினர் மற்றும் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் புதிதாக பிறந்த 1,121 ஆமைக்குஞ்சு களை வனச்சரகர் அலுவலர் ரூஸப் லெஸ்லி தலைமையில் அதிகாரிகள் பழவேற்காடு கடலில் விட்டனர்.

    • அரசின் சாதனைகள் குறித்த தகவல்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர்.
    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளி்ல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 83 ஆயிரத்து 710.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு 3687 வாக்குச்சாவடிகளும், 1301 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இவற்றில் 281 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை. 6 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சா வடிகளில் தேர்தல் நாளன்று நடக்கும் அனைத்து நடைமுறைகளும் சி.சி.டி.வி. மூலம் நேரடியாக மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்காக மொத்தம் 9119 வாக்குப்பதிவு கருவிகளும் 4821 கட்டுப்பாட்டுக் கருவிகளும் 5333 யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவியும் பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்துவதற்காக 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் 90 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 90 நிலை கண்காணிப்பு குழுக்கள், 20 காணொலி கண்காணிப்பு குழுக்களும், 10 காணொலி பார்வையாளர் குழுக்களும், வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்கும் பொருட்டு 10 உதவி செலவின குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.


    மாவட்டத்தில் 87 துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் தங்களது துப்பாக்கிகளை உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். வேட்பாளர்களாக இருப்பவர்கள் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் போன்றவற்றிற்கு அனுமதி பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் சுவிதா 'Suvidha' என்ற இணையதளம் வழியில் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இந்த இணையத்தின் முகவரி 'http:\\suvidha.eci.gov.in' ஆகும். வேட்பாளர்கள் மேற்கண்ட இணைய தளத்தின் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

    இந்த இணையத்தின் மூலம் அனுமதி பெற 48 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் இந்த சுவிதா இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். அதேபோல் சி.விஜில் என்னும் கைபேசி செயலி இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை புகார் அளிக்க வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க பொது மக்களுக்காக 044-2766 0642, 044-2766 0643, 044-2766 0644 மற்றும் இலவச தொலைபேசி எண் 1800 425 8515-ல் தங்கள் புகார்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமன்ற தலைவர் அறை மற்றும் கூட்ட அரங்கம் ஆகியவற்றை பூட்டி சீல் வைத்தனர். இதேபோல் அரசின் சாதனைகள் குறித்த தகவல்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர். நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மாற்றப்பட்டிருந்த தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டது. இரவு முதலே வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.

    • மாவட்ட எல்லைகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-7088, 044-27427412, 044-27427414 ஆகிய தொலை பேசி எண்களில் புகார்கள் பற்றி தெரிவிக்கலாம்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து உள்ளன.

    காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 123 தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1417 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 178 வாக்குச் சாடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 12 பறக்கும் படை குழுக்களும், 12 கண்காணிப்பு குழுக்களும், 4 காணொலி கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட எல்லைகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் விதிமுறைகளால் காஞ்சிபுரத்திற்கு பட்டு புடவைகள் வாங்குவதற்கு அதிக அளவில் பணம் எடுத்து வருபவர்கள் சிரமம் அடைந்து உள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 21 பறக்கும் படைகள், 21 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 14 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத் தப்பட்டு உள்ளன. 24 மணிநேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-7088, 044-27427412, 044-27427414 ஆகிய தொலை பேசி எண்களில் புகார்கள் பற்றி தெரிவிக்கலாம்.

    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 90 பறக்கும் படையினர் மற்றும் 90 நிலை கண்காணிப்பு குழுக்கள், 20 காணொலி கண்காணிப்பு குழுக்கள், 10 காணொலி பார்வையாளர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க 10 உதவி செலவின குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.

    • அலமேலு, அலெக்ஸிடம் இருந்த பணம் மற்றும் கை செயினை மீட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர்.

    சமயபுரம்:

    மலேசியாவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 52). இவர் தனது மனைவி வனிதா, மகள் பிரிதிகா. சந்திரன் மகள் பிரிதிகாவின் சிகிச்சைக்காக உறவினர்கள் 3 பேருடன் பாண்டிச்சேரி செல்ல திட்டமிட்டார். இதற்காக நேற்று அதிகாலை அவர்கள் திருச்சி வந்தனர்.

    காலை 6 மணியளவில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு பின் சமயபுரம் அருகே உள்ள அக்கரைபட்டி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்ய சென்றனர். பின்னர் சமயபுரம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிரபல தனியார் ஓட்டலில் சாப்பிட சென்றனர்.

    அப்போது சந்திரன் கையில் இருந்த பையை மறந்து ஓட்டலில் விட்டு சென்றார். சந்திரன் குடும்பத்தினர் காரைக்குடி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது கையில் இருந்த பையை காணதால் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அவர்கள் காரைக்குடியில் இருந்து மீண்டும் சமயபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு வந்து விசாரித்தனர். அப்போது இந்த உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் அந்த உணவகத்தில் துப்புரவு பணியாளர் அலமேலு(34) என்பவர் சந்திரனின் கைப்பையை எடுத்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    இதனை அடுத்து சமயபுரம் போலீசார் அலமேலுவிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அலமேலு கைபையை எடுத்து தன் கணவர் அலெக்சிடம் கொடுத்து அதில் உள்ள வெளிநாட்டு பணம் மற்றும் நகையினை எடுத்ததை ஒப்புக் கொண்டார்.

    இதை தொடர்ந்து அலமேலு, அலெக்ஸிடம் இருந்த பணம் மற்றும் கை செயினை மீட்டனர். பாஸ்போர்ட்டுகளை தான் எரித்து விட்டதாக போலீ சாரிடம் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர்.

    • தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செட்டியப்பனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி ஜோலார்பேட்டை தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெயசித்ரா தலைமையிலான அதிகாரிகள் செட்டியப்பனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம், அணைக்கட்டை சேர்ந்த விஜயன் (வயது 41), முட்டை வியாபாரி என்பதும், இவர் உரிய ஆவணம் இன்றி ரூ.2,01,900 நாமக்கல்லுக்கு எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்து, நாட்டறம்பள்ளி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜராஜனிடம் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஏஜெண்டுகளின் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கம்.
    • ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கில் இதுவரை 22 நபர்கள் கைது.

    ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கு தொடர்பாக, 400 ஏஜெண்டுகளின் 86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    7000 ஏஜெண்டுகளை கண்டறிந்து, மோசடி செய்யும் நோக்கில் பொதுமக்களை ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்த 500 ஏஜெண்டுகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    500 ஏஜெண்டுகளில் 400 பேருக்கு சம்மன் அனுப்பி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் கமிஷனாக பெற்று சேர்த்த 86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியது.

    ஏஜெண்டுகளின் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    ரூ.2,438 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கில் இதுவரை 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரூ.96 கோடி வங்கி கணக்கு மற்றும் 103 அசையா சொத்துக்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • கைதான மீத்லேக்குமாரை போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பேரிகை காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாசன்புரம் கிராமத்தில் அமைந்த தனியார் கல்குவாரி கிரசர் தொழிற் சாலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒம்கார் மண்டேல் மகன் மீத்லேக்குமார் (வயது 24) என்பவர் லாரி டிரைவராக வேலைக்கு சேர்ந்தார்.

    இவருக்கு திருமணமாகி ராஜில்குமாரிஸ் (22) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் காமன் தொட்டியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பமாக இருந்து கொண்டு மீத்லேக்குமார் தினமும் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் அவரது மனைவி வீட்டின் அருகே உள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபரிடம் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்த தகவல் மீத்லேக்குமாருக்கு தெரிய வந்து, தனது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை கண்டித்து வந்தார். அதை பொருட்படுத்தாத ராஜில்குமாரிஸ் மீண்டும் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தனது மனைவியை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்த மீத்லேக்குமார் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியிடம் அன்பாக பேசி தான் வேலை செய்யும் கிரசர் தொழிற்சாலைக்கு லாரியில் அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு கணவன், மனைவியும் இருவரும் லாரியை விட்டு இறங்கி பேசிகொண்டே சென்றனர். அப்போது மீத்லேக்குமார் வண்டியில் இருந்து இரும்பு கம்பியை எடுத்து மனைவி நெத்தியிலும் தலையிலும் அடித்து கொலை செய்தார்.

    இறந்த தனது மனைவியின் உடலை தரதரவென இழுத்து சென்று தொழிற்சாலையில் உள்ள 400 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் போட்டு விட்டு அங்கிருந்து எதுவும் நடக்காதது போல் சாதாரணமாக வீட்டிற்கு வந்துள்ளார்.

    பின்னர் அவர் மறுநாள் காலை தனது நண்பரிடம் தனது மனைவியை காணவில்லை என்று கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மீத்லேக்குமார் தனது நண்பருடன் சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் செய்தனர். அப்போது போலீசார் மாயமான ராஜில்குமாரிஸ் குறித்து அவரது கணவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரித்தனர்.

    இதில் மீத்லேக்குமார் தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கொலை செய்து விட்டு தொழிற்சாலையில் உள்ள பள்ளத்தில் உடலை போட்டு விட்டதாக கூறினார்.

    உடனே போலீசார் மீத்லேக்குமாரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு ராஜில்குமாரிசின் உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கைதான மீத்லேக்குமாரை போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
    • குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மேற்குமாம்பலம் பகுதியில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் டேங்கர் லாரி குடிநீரையே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டேங்கர் லாரிகளில் குடிநீரை பெறுதற்காக பொதுமக்கள் மாதம் ரூ.10 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டிய அவலநிலை இருப்பதாக வேதனைப்படுகின்றனர்.

    மேற்கு மாம்பலம் விவேகானந்தபுரம் 1-வது தெரு, பாலகிருஷ்ண முதலி தெரு, பாலகிருஷ்ண நாயக்கர் தெரு, சீனிவாச பிள்ளை தெரு, சீனிவாச அய்யங்கார் தெரு, வேலு தெரு, கணபதி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி கடந்த ஒரு மாதமாக வறண்டு கிடப்பதால், அந்த பகுதி மக்கள் தண்ணீர் லாரிகளையே நம்பியுள்ளனர்.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் பகுதிகளுக்கு தினமும் சுமார் 17 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குகிறோம். சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக 150 மில்லியன் லிட்டர் குடிநீரை நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை, செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் வீராணம் ஏரியை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறுகிறோம்.

    கடந்த ஜனவரி மாதத்தில், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஆற்காடு சாலையில் உள்ள குடிநீர் குழாய் மெட்ரோ ரெயில் பணியின் போது சேதமடைந்தது. அந்த குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டு, குடிநீர் பிரச்சினையை சரி செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'சென்னை குடிநீர் வாரியம், சேதம் அடைந்த குழாய்களை சரி செய்தாலும், தண்ணீரின் அழுத்தம் மற்றும் அளவு ஆகியவை கணிசமாக குறைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான குடிநீர் குழாயை பெரியதாக மாற்றுமாறு சென்னை குடிநீர் வாரியத்துக்கு கடிதம் எழுதினோம். வெறும் 35 வீடுகள் இருந்த இடத்தில், இப்போது கிட்டத்தட்ட 200 வீடுகள் உள்ளன. இதனால் தண்ணீர் போதவில்லை.

    சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதி மக்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை சரியாக செலுத்துவதால், குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×