என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆண்டுதோறும் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பராமரிப்பு பணிகள் குறித்து இக்குழு ஆலோசனை வழங்கும்.
- பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக உள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பற்காக உச்சநீதிமன்றம் பரிந்துரையின் பேரில் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜய் சரண் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழகம் மற்றும் கேரள அரசு சார்பில் தலா 2 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆண்டுதோறும் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பராமரிப்பு பணிகள் குறித்து இக்குழு ஆலோசனை வழங்கும். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டு மார்ச் 27-ந் தேதி இந்த குழு ஆய்வு நடத்தியது. இந்நிலையில் இந்த ஆண்டு இன்று ஆய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக நீர்வளத்துறையினர் செய்திருந்தனர்.
ஆனால் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இன்று நடைபெற இருந்த ஆய்வு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 64.60 அடியாக உள்ளது. 363 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 110.70 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- இந்து சமுதாயமே அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
- தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. தலையை எண்ணுவது தான் ஜனநாயகத்தின் வேலை. எண்ணிக்கையை வைத்து தான் தெருவில், ஊரில், அரசியலில், பாராளுமன்றத்தில் மரியாதை. நம்பர் இருந்தால் தான் ஜெயிக்க முடியும். நான் சமூகத்தைச் சார்ந்து சொல்லவில்லை, மதத்தையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டேபோகிறது. இந்து சமுதாயமே அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் சமநிலை இருக்காது என்பதால் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என கூறுகிறேன்.
பாராளுமன்ற தேர்தல் வருகிறது, நல்லவருக்கு வாக்களியுங்கள். தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வார்கள் என நம்பி பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள். ஓட்டு போட ரெட்டியார் சமூகம் தயங்க கூடாது. பணம் வாங்காமல் வாக்களியுங்கள். நாங்கள் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என எழுதி கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்களில் உறுதிமொழி பதாகைகள் வைக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்தால் நிச்சயம் பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி இரு தினங்களில் தமிழக பயணத்தை மேற்கொண்டு முடிக்க உள்ளார். அதற்குள் இந்தியாவினுடைய பா.ஜ.க. வேட்பாளர்கள் முழு பட்டியல் வெளியிடப்படும். பா.ஜ.க.வும், கூட்டணி கட்சியும் 39 தொகுதியிலும் பிரதமர் மோடி வேட்பாளராக நிற்கிறார் என எண்ணிதான் நாங்கள் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ளோம். மீண்டும் மூன்றாம் முறையாக மோடி 3.0, அதில் வெற்றி பெறுவோம்.
தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க.வின் வாக்குகள் பா.ஜ.க.விற்கு நல்ல பலன்களாக வந்தடையும். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' பற்றி அடிப்படை அறிவு இல்லாமல் தி.மு.க. கட்சி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்துவது. இது ஏற்கனவே இருந்த நடைமுறைதான். இடையில் இந்த நடைமுறை மாறி விட்டது.

கப்பலூர் சுங்கச்சாவடி யாருடைய ஆட்சியில் வந்தது என மத்திய நெடுஞ் சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கேள்வி கேட்டதற்கு, கனிமொழி மற்றும் மாணிக்கம் தாகூர் இருவரும் வாயை பொத்திக் கொண்டனர். சுங்கச்சாவடி நடைமுறையே வரும் காலத்தில் மாற உள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் ஆங்காங்கே சென்சார் மூலம் பயணம் முறையில் மாற்றப்பட்டு எவ்வளவு தூரம் பயணம் செய்கிறோமோ அதற்கு ஏற்ப வரி வசூல் செய்யப்படும்.
இதற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் கப்பலூர் சுங்கச்சாவடி இருக்காது. இந்தப் பகுதி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்லும் பொழுது கப்பலூர் சுங்கச்சாவடி இருக்காது. ஜனநாயகத்தை தி.மு.க. கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே நோட்டுக்கு வாக்களிக்க வேண்டாம் என பா.ஜ.க. சார்பில் வீடு, வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்வதுடன், ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று பதாகைகளை வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சேலம் வரும் பிரதமர் மோடிக்கு சேலம், நாமக்கல் , கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- பொதுக்கூட்ட மைதானத்திற்குள் செல்பவர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் மூலம் அனுமதிக்கப்படுவார்கள்.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை நந்தனம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
இந்தநிலையில் இன்று மாலை கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ (வாகன பேரணி) செல்கிறார். கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் இந்த வாகன பேரணி ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் இருந்து விமானம் மூலம் மாலை 5.30 மணிக்கு கோவை வருகிறார். பின்னர் சாய்பாபா காலனிக்கு சென்று வாகன அணி வகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி இரவு கோவையில் தங்குகிறார்.
பின்னர் நாளை (19-ந் தேதி) கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 11.40 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான பிரசாரக்கூட்டம் சேலத்தில் நாளை மதியம் 1.30 மணியளவில் நடக்கிறது. இதற்காக சேலம் அருகே உள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாலக்காட்டில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதியம் 1.30 மணியளவில் மேடை அமைக்கப்பட்டுள்ள சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி மைதானத்திற்கு வருகிறார். இதற்காக அங்கு 3 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் வரும் பிரதமர் மோடிக்கு சேலம், நாமக்கல் , கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டும் வகையில் சிறப்புரையாற்றுகிறார். அப்போது மக்களையும் சந்திக்கிறார்.
இந்த கூட்டத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள். மோடியின் வருகையையொட்டி அவரை வரவேற்று அந்த பகுதியில் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளதுடன் பிரமாண்ட பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது. மோடி வருகையையொட்டி பா.ஜனதாவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். சேலத்தில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்பதால் அவர்கள் வரும் வாகனங்கள் நிறுத்தவும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க சாலையில் கட்டப்பட்டுள்ள கட்சி கொடிகள் - பொதுக்கூட்ட மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டர் நுழைவாயில்.
பொதுக்கூட்ட மைதானத்திற்குள் செல்பவர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் மூலம் அனுமதிக்கப்படுவார்கள். சேலம் பொதுக்கூட்டம் முடிந்ததும் இங்கிருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளரும், மாநில துணைதலைவருமான கே.பி.ராமலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி வருகையையொட்டி சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., அருண், டி.ஐ.ஜி.க்கள், 12 போலீஸ் சூப்பிரண்டுகள், 18 கூடுதல் சூப்பிரண்டுகள், 32 துணை சூப்பிரண்டுகள், 60 இன்ஸ்பெக்டர்கள், 208 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 2 ஆயிரத்து 700 போலீசார் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
மேலும் பிரதமரின் தனி பாதுகாப்பு படையினரும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் மைதானம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நேற்று மாலை முதல் மைதானம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.
பிரதமர் சேலம் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் 2 நாட்கள் டிரோன்கள் மற்றும் ஆள் இல்லாத விமானங்கள் பறக்க தடை விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார்.
- முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.
- வருகிற 23-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
பழனி:
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருவது சிறப்பு அம்சமாகும்.
கோடை காலமான பங்குனி, சித்திரை மாதங்களில் பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா, பழனி முருகன் கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
முன்னதாக நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடந்தது. பின்னர் சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
மேலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கொடியேற்றத்தைக் காண முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வந்து சப்பரத்தில் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர், விநாயகர் சிலை முன்பு மயூர யாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 9.10 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா' என சரண கோஷம் எழுப்பினர்.
பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முதல் நாளான பல்வேறு ஊர்களில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்த பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அடுத்த நாள் 24-ந்தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடக்கிறது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்து வருகின்றனர். விழாவின் பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் உள்ளிட்ட குருக்கள்கள் செய்து வருகின்றனர்.
- தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலை குறைந்துள்ளது.
சென்னை:
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரன் 48 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 48 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.80,000-க்கு விற்பனையாகிறது.
- அ.தி.மு.க.வின் கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
- உலக மக்கள் நலம் பெற சுவாமி தரிசனம் செய்ததாக பதிலளித்தார்.
திருச்செந்தூர்:
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று இரவு வந்தார்.
திருச்செந்தூரில் தனியார் விடுதியில் தங்கிய அவர் இன்று அதிகாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் தீர்த்தம் எடுத்துகொண்டு நேராக கோவிலுக்கு சென்று காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் சத்ரு சம்கார மூர்த்தி சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து காலை 6 மணிக்கு மூலவருக்கு நடத்த அபிஷேகத்தில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
தீர்ப்பு இன்று வரவுள்ள நிலையில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தது அரசியல் வட்டாரத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுவாமி தரிசனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், உலக மக்கள் நலம் பெற சுவாமி தரிசனம் செய்ததாக பதிலளித்தார். மேலும் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்ய வந்தபோது எடுத்த படம்.
- பிரதமர் மோடி கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்கிறார்.
- பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
கோவை:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் மற்றும் கேரளாவில் கணிசமான இடங்களை பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி அடிக்கடி இந்த பகுதிகளுக்கு வந்து பொதுமக்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று (திங்கட்கிழமை) தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார்.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் வாகன அணிவகுப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5.30 மணிக்கு கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும் சாய்பாபாகாலனிக்கு செல்கிறார். தொடர்ந்து வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மேலும் வாகன அணிவகுப்பு நடைபெறும் பகுதியில் சாலையின் இருபுறத்திலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
- ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம்:
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 3.15 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் கொடிப்படம் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுடன் காலை 5.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நம்பெருமாள் காலை 6.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.
11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள், தாயார் சன்னதியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோரதத்துக்கு (தேருக்கு) வருகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- ராஜேந்திரன் டீக்கடை அருகில் உள்ள ஒரு தனியார் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக வெங்கடேசன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
- டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை வெங்கடேசன் உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கிமேட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47). இவர் செஞ்சி நகர அ.தி.மு.க. செயலாளராக இருந்தார். இவருக்கும், செஞ்சியில் உள்ள திருவண்ணாமலை சாலையில் டீக்கடை நடத்தி வரும் காரை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(44), மனைவி கல்பனா(36) தம்பதிக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் ராஜேந்திரன் டீக்கடை அருகில் உள்ள ஒரு தனியார் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக வெங்கடேசன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
இதைப்பார்த்த ராஜேந்திரன், வெங்கடேசனை வழிமறித்து மோட்டாா் சைக்கிளில் இருந்து அவரை கீழே தள்ளினார். பின்னர், அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதற்கு கல்பனாவும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வெங்கடேசனின் உறவினர் நாராயணன் செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தார். தலைமறைவான கல்பனாவை தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட வெங்கடேசனுக்கு நித்யா (38) என்ற மனைவியும், கீர்த்தனா (15), தனுஸ்ரீ (10) ஆகிய 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தெரிவித்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
நீதிமன்ற தீர்ப்பின் நகல் வந்தவுடன் திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தெரிவித்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.
இதையடுத்து, அமைச்சரவையில் மீண்டும் பொன்முடியை சேர்க்க பரிந்துரைத்து ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், திமுக எம்எல்ஏ பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பொன்முடி மீதான வழக்கு நிலுவையில் உள்ளதால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
- ஈஷா யோக மையத்தில் மார்ச் 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- முதல்கட்டமாக 200 மீட்டர் பந்தயப் போட்டி நடைபெற்றது.
'தமிழ் தெம்பு' திருவிழாவின் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோக மையத்தில் ரேக்ளா பந்தயப் போட்டி இன்று (மார்ச் 17) விறுவிறுப்பாக நடைபெற்றது.
200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் முதல் இடம் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றி கொண்டாடும் 'தமிழ் தெம்பு' என்னும் 9 நாள் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

நிறைவு நாளான இன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக திகழும் மாட்டு வண்டிப் போட்டி (ரேக்ளா பந்தயம்) ஆதியோகி முன்பு நடத்தப்பட்டது. ஈஷாவில் முதல்முறையாக நடந்த ரேக்ளா போட்டியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
இதற்காக, கோவை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவே ஈஷாவிற்கு வருகை தந்தனர்.
முதல்கட்டமாக 200 மீட்டர் பந்தயப் போட்டி நடைபெற்றது. தொடக்க புள்ளியில் இருந்து கொடி அசைத்த உடன் 2 நாட்டு மாடுகளுடன் கூடிய ரேக்ளா வண்டி மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்தது. ஒரு வண்டி பந்தய கோட்டை அடைந்த பின்னர் அடுத்த வண்டி அனுமதிக்கப்பட்டது.

ஒவ்வொரு நாட்டு மாடுகளும் காண்போரை அசர வைக்கும் வகையில் எல்லை கோட்டை நோக்கி சீறி பாய்ந்தன. 200 மீட்டர் போட்டி நிறைவு பெற்ற பின்னர் 300 மீட்டர் போட்டி நடத்தப்பட்டது. இவ்விழாவை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.
இரண்டு பிரிவிலும், முதல் இடம் பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.
2-ம் பரிசாக ரூ.50,000, 3-ம் பரிசாக ரூ.25,000, 4-ம் பரிசாக ரூ.15,000 வழங்கப்பட்டது. இதுதவிர 5 முதல் 15 வரையிலான இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.3,000-ம், 16 முதல் 30 வரையிலான இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.2,000-ம் பரிசு தொகையாக வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
- பெரியாண்டவர், பெரியாயி மயான கொள்ளை நிறைவு விழா.
- சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் பெரியாண்டவர், பெரியாயி மயான கொள்ளை நிறைவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அங்காள பரமேஸ்வரி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அமர்ந்து மாடவீதி, குளத்து தெரு, புதிய தெரு உள்ளிட்ட கிராமத்தில் முக்கிய வீதியின் வழியாக உலா வந்தது. இறுதியாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியாயி சிலையை வலம் வந்து பக்தர்கள் கொண்டு வந்த காய்கனிகள், தானியங்கள் மற்றும் பொறிகளை சூறையாடி பெரியாயி சிலையை சுற்றி இறைத்து ஆக்ரோஷமாக பக்தர்கள் அரிவாளுடன் வலம் வருவர்.

மேலும் வேண்டுதல் உள்ள பக்தர்கள் பெரியாண்டவர், பெரியாயி உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.
இந்நிகழ்வைக் காண போளூர், சேத்துப்பட்டு, அவனியாபுரம், கொழப்பலூர், பெரணமல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






