என் மலர்
நீங்கள் தேடியது "நகர செயலாளர் கொலை"
- ராஜேந்திரன் டீக்கடை அருகில் உள்ள ஒரு தனியார் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக வெங்கடேசன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
- டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை வெங்கடேசன் உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கிமேட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47). இவர் செஞ்சி நகர அ.தி.மு.க. செயலாளராக இருந்தார். இவருக்கும், செஞ்சியில் உள்ள திருவண்ணாமலை சாலையில் டீக்கடை நடத்தி வரும் காரை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(44), மனைவி கல்பனா(36) தம்பதிக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் ராஜேந்திரன் டீக்கடை அருகில் உள்ள ஒரு தனியார் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக வெங்கடேசன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
இதைப்பார்த்த ராஜேந்திரன், வெங்கடேசனை வழிமறித்து மோட்டாா் சைக்கிளில் இருந்து அவரை கீழே தள்ளினார். பின்னர், அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதற்கு கல்பனாவும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வெங்கடேசனின் உறவினர் நாராயணன் செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தார். தலைமறைவான கல்பனாவை தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட வெங்கடேசனுக்கு நித்யா (38) என்ற மனைவியும், கீர்த்தனா (15), தனுஸ்ரீ (10) ஆகிய 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






