search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theerthakkavadi"

    • கொடுமுடி தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வருவார்கள்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா என்பது பழனியில் `தீர்த்தக்காவடி' என அழைக்கப்படுகிறது.

    அதாவது கோடை வெயில் உக்கிரமாக உள்ள பங்குனி, சித்திரை மாதங்களில் நவபாஷாணத்தால் ஆன பழனி முருகப்பெருமானை குளிர்விக்க பக்தர்கள் கொடுமுடி தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு ஆகும். குறிப்பாக பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வருவார்கள்.

    பல்வேறு சிறப்புக்கு சொந்தமான பங்குனி உத்திர திருவிழா, கடந்த 18-ந்தேதி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து வழிபட்டு வருகின்றனர். விழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது.

    இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இதில் பெரும்பாலான பக்தர்கள், தீர்த்தக்காவடி எடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    பங்குனி உத்திர நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பின்னர் 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் தந்தப்பல்லக்கில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. மதியம் 11.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வடக்கு கிரிவீதியில் இருந்த திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு தனித்தனி தேர்களில் எழுந்தருளிய விநாயகர், அஸ்திர தேவருக்கு தீபாராதனை நடைபெற்று தேர் இழுக்கப்பட்டது.

    தொடர்ந்து பெரிய தேரில் எழுந்தருளி இருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    தேரோட்டம்

    பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது. அதையடுத்து திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அலுவலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதனையடுத்து 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா', 'வீரவேல் முருகனுக்கு அரோகரா' என்ற சரண கோஷம் விண்ணை பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரிவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வலம் வந்தது. அப்போது தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையை பக்தர்கள் பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.
    • வருகிற 23-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    பழனி:

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருவது சிறப்பு அம்சமாகும்.

    கோடை காலமான பங்குனி, சித்திரை மாதங்களில் பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா, பழனி முருகன் கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    முன்னதாக நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடந்தது. பின்னர் சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

    மேலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கொடியேற்றத்தைக் காண முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வந்து சப்பரத்தில் எழுந்தருளினார்.

    அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர், விநாயகர் சிலை முன்பு மயூர யாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 9.10 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா' என சரண கோஷம் எழுப்பினர்.

    பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முதல் நாளான பல்வேறு ஊர்களில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்த பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அடுத்த நாள் 24-ந்தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்து வருகின்றனர். விழாவின் பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் உள்ளிட்ட குருக்கள்கள் செய்து வருகின்றனர்.

    ×