search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க.வில் வேட்பாளர் பட்டியல் தயார்
    X

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க.வில் வேட்பாளர் பட்டியல் தயார்

    • ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. எத்தனை தொகுதி போட்டியிடும்? அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை முதல் ஆளாக வெளியிடுவார்.
    • தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முக்கிய தொகுதிகளில் யார்-யாரை நிறுத்துவது என்பதை ஏற்கனவே டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து விட்டனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்பதை ஏற்கனவே அறிந்து இருந்த தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதை 90 சதவீதம் தீர்மானித்து விட்டனர்.

    அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் கடந்த வாரமே தேர்வு செய்து முடித்து விட்டனர்.

    காங்கிரசில் 2 தொகுதிகளில் மட்டுமே இழுபறி உள்ளது. அதுவும் நாளை காலை தீர்க்கப்பட்டு விடும். அதன் பிறகு நாளையே தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியில் மட்டும்தான் தமிழகத்தில் அந்த கட்சி போட்டியிடும் 9 வேட்பாளர்கள் யார்-யார் என்பதை முடிவு செய்வதில் கடும் சவால் நிலவுகிறது. அந்த 9 தொகுதிகளில் 6 தொகுதி வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியிட்டு எம்.பி. ஆனவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    திருநாவுக்கரசர், ஜோதிமணி ஆகிய இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மனுதாக்கல் நிறைவுபெறும் 27-ந்தேதி வரை காங்கிரசில் இழுபறி நீடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. சேருமா? என்பதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் உள்ளது. ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. எத்தனை தொகுதி போட்டியிடும்? அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை முதல் ஆளாக வெளியிடுவார்.

    தற்போது அந்த சூழ்நிலை இல்லாத நிலையில் பா.ம.க., தே.மு.தி.க. வந்தால் எந்த தொகுதிகள் கொடுப்பது என்பது பற்றி அ.தி.மு.க.வில் ஒருமித்த கருத்து முடிவாகாத நிலை உள்ளது. என்றாலும் அ.தி.மு.க. வேட்பாளர்களும் 90 சதவீதம் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் தயாராக உள்ளது.

    பா.ம.க., தே.மு.தி.க. தொகுதி பங்கீடு சுமூகமாக தீர்க்கப்பட்டால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலையும் நாளை அல்லது நாளை மறுநாள் எடப்பாடி பழனிசாமி வெளியிட வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.

    பாரதிய ஜனதா கூட்டணியிலும் இதே நிலைதான் நிலவுகிறது. பா.ம.க., தே.மு.தி.க. தலைவர்களுடன் பாரதிய ஜனதா தலைவர்கள் தொடர்ந்து ரகசியமாக பேசி வருவதால் தொகுதி பங்கீடு முடிவாகவில்லை. என்றாலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முக்கிய தொகுதிகளில் யார்-யாரை நிறுத்துவது என்பதை ஏற்கனவே டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து விட்டனர்.

    எனவே பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களும் இன்னும் 2 நாட்களில் தெரிய வாய்ப்பு உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் 39 வேட்பாளர்களும் ஒரே நாளில் அறிவிக்கப்படுவார்கள் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

    இதன் மூலம் தி.மு.க. கூட்டணியிலும், அ.தி.மு.க. கூட்டணியிலும், பாரதிய ஜனதா கூட்டணியிலும் 80 சதவீத வேட்பாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. தொகுதி பங்கீடு நிறைவு பெற்றதும் வேட்பாளர் பட்டியல் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிகிறது.

    வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டால் தமிழக தேர்தல் மேலும் சூடு பிடிக்கும்.

    Next Story
    ×