என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்து முதன்மை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வீரப்பன்சத்திரத்தில் இருந்து பவானி நோக்கி சென்று கொண்டிருந்த ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து ஓட்டுனரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் இன்று ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் நிரப்ப ரூ.67 லட்சம் கொண்டு சென்றதாகவும், அதில் ரூ.64 லட்சம் ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அவர் கொடுத்த ஆவணங்களின்படி ரூ.3 லட்சம் மட்டுமே மீதம் இருக்க வேண்டிய நிலையில் ரூ.10 லட்சம் இருந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்து முதன்மை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    • 18 சட்டசபை தொகுதிகளில் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
    • வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள், பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார் யார்-யார்? என்ற பட்டியலும் இப்போதே தயார் செய்யப்பட்டு உள்ளது.

     சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறு கிறது. இதையொட்டி வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்களை மையங்களுக்கு ஒதுக்குவது, வாக்குச் சாவடி அலுவர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னையில் 16 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது.

    இதில் வடசென்னையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சட்டசபை தொகுதியும், தென்சென்னை தொகுதியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதியும் கூடுதலாக வருகிறது.

    இதை சேர்த்து பார்க்கும் போது 18 சட்டசபை தொகுதிகளில் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 4,680 வாக்குச் சாவடி மையங்களில் 14,891 ஒட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    வடசென்னைக்கு ராணி மேரி கல்லூரியிலும் மத்திய சென்னைக்கு லயோலா கல்லூரியிலும், தென்சென்னைக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும் பதிவாகும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    ஓட்டு எண்ணப்படும் கல்லூரிகளில் இதற்காக 2 பெரிய அறைகள் ஒதுக்கப்பட்டு பெட்டிகளை வைக்க வரிசைப்படி நம்பர் எழுதப்பட்டுள்ளது. இதே போல் ஓட்டு எண்ணுவதற்கு 2,500 முதல் 5 ஆயிரம் சதுர அடி பரப்பில் அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

    அங்கு சவுக்கு தடுப்பு கம்புகள், கம்பி வலைகள் கட்டப்பட்டு ஓட்டு எண்ணும் அலுவலர்கள், பொது பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் அமர வசதி செய்யப்பட்டு வருகிறது. பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்படும் போது அதை வைப்பதற்கான அறை தயார் செய்யப்பட்டுள்ளதால் அந்த அறைக்கு யார்-யார் பொறுப்பு அதிகாரிகள் என்று பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.


    இதே போல் அந்த அறையை பூட்டி யார் சீல் வைக்க வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க எந்தெந்த போலீசார் நிறுத்தப்பட வேண்டும் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.

    இதோடு ஓட்டு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் வளாகம் முழுவதும் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க இப்போதே ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இவற்றை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அங்குள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கான அறிவுரைகளை வழங்கினார். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள், பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார் யார்-யார்? என்ற பட்டியலும் இப்போதே தயார் செய்யப்பட்டு உள்ளது.

    • சமூகம் சார்ந்த பிரசாரங்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் மக்கள் பார்த்து தான் வாக்களிப்பார்கள்.
    • தேனி தொகுதியில் உள்ள எந்த கிராமத்துக்கு சென்றாலும் மக்கள் நலனுக்காக நான் என்னென்ன செய்துள்ளேன் என்பது தெரியும்.

    சென்னை:

    பா.ஜனதா ஆதரவுடன் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் பா.ஜனதாவை ஆதரிப்பதற்கான காரணம் பற்றி விளக்கினார்.

    கேள்வி:-1999-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் வெற்றி பெற்றீர்கள். 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரும்பி வந்து மக்களை சந்திக்கிறீர்கள். மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது?

    பதில்:-1999-2004 கால கட்டத்தில் நான் பெரிய குளம் தொகுதி எம்.பி.யாக இருந்து நிறைய பணிகள் செய்து இருக்கிறேன். அரசியல் சூழ்நிலையால் அதன் பிறகு வெற்றி வாய்ப்பை இழந்தேன். நான் 21,155 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தேன். இது மற்ற வேட்பாளர்களின் வாக்கு சதவீதத்துடன் ஒப்பிடும் போது நன்றாகவே இருந்தது. அதனால் என்னை அம்மா ஜெயலலிதா மேல்சபை எம்.பி. ஆக்கினார். தேனி தொகுதியில் உள்ள எந்த கிராமத்துக்கு சென்றாலும் மக்கள் நலனுக்காக நான் என்னென்ன செய்துள்ளேன் என்பது தெரியும்.

    ஆண்டிப்பட்டி மற்றும் சேடப்பட்டியில் என்னால் உருவான அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் ஆகியவற்றால் 14 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வந்த எனக்கு மக்கள் மிக சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள்.

    கேள்வி:- உங்களை எதிர்த்து போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் (தி.மு.க.), நாராயணசாமி (அ.தி.மு.க.) ஆகியோர் உங்களோடு அ.தி.மு.க.வில் இருந்தவர்கள்தான். இதனால் வாக்குகள் பிரிய வாய்ப்பு இருக்கிறதா?

    பதில்:-ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரிஜினல் அ.தி.மு.க. என்பது இல்லை. இப்போது இருப்பது எடப்பாடி பழனிசாமியின் கட்சி. இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகள் போய் விடாமல் தடுக்கலாம் என்று நினைக்கிறார். தி.மு.க. மக்கள் விரோத கட்சியாக உள்ளது. எனவே அவர்கள் கனவு நிறைவேறப் போவதில்லை.


    கேள்வி:-தங்க தமிழ்செல்வனும், நீங்களும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் போது சமூக ரீதியான வாக்குகள் அதிக அளவில் யாருக்கு கிடைக்கும்?

    பதில்:-தேனி ஒரு காஸ்மோபாலிடன் தொகுதி. 1952-ம் ஆண்டு முதல் முஸ்லீம்கள் உள்பட அனைத்து சமூகங்களின் வேட்பாளர்களும் இங்கிருந்து தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    சமூகம் சார்ந்த பிரசாரங்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் மக்கள் பார்த்து தான் வாக்களிப்பார்கள்.

    கேள்வி:-அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகும் பா.ஜனதா கூட்டணியால் வாக்குகளை அதிக அளவு பெற முடியும் என்று நினைக்கிறீர்களா?

    பதில்:-நான் அ.ம.மு.க.வை தொடங்கிய போது பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கவில்லை. ஆனால் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்பியதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம்.

    இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பிரதமரின் ஒத்துழைப்போடு பல திட்டங்களை தொகுதியில் நிறைவேற்றுவேன்.

    கேள்வி:-உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா?

    பதில்:-அந்த நேரத்தில் என் அத்தை சசிகலா ஜெயிலில் இருந்தார். நானும் கைது செய்யப்பட்டிருந்தேன். ஒரு காவலாளி மட்டும்தான் இருந்தார். பங்களாவுக்குள் நுழைந்தவர்கள் அம்மாவின் பாதுகாப்பில் ஊழல் அமைச்சர்கள் பற்றிய பதிவுகள் இருப்பதாக நம்பினார்கள்.

    எனவே இந்த கொலை மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது மக்களுக்கு தெரியும்.

    கேள்வி:-ஜெயலலிதாவின் கொள்கைகளை பின் பற்றுவதாக கூறுகிறீர்கள். ஆனால் அவர் பா.ஜனதாவுக்கு எதிரானவர். நீங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்திருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

    பதில்:-அம்மா உயிருடன் இருந்திருந்தால் அவரது நிலைப்பாட்டை நாங்கள் பின்பற்றி இருப்போம். தற்போது தேசத்துக்கு தேவை சிறந்த பிரதமர். மோடிக்கு நிகரானவர்கள் இல்லை. எனவே உலகம் முழுவதும் உள்ள தலைவர்களால் பாராட்டப்படும் மோடிக்கு ஆதரவாக இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.

    கேள்வி:-எடப்பாடி பழனிசாமிக்கான வாய்ப்புகள் மற்றும் உங்களைப் பற்றிய அவரது விமர்சனங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:-எடப்பாடி பழனிசாமி யாரால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். என் அத்தை சசிகலா ஜெயிலில் இருந்த போது அவரை கட்சியை விட்டு நீக்கினார். எனவே மற்றவர்களை விமர்சிக்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை. அவரது வேட்பாளர்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்து பாடம் புகட்டுவார்கள்.

    கேள்வி:-உங்களால்தான் அ.தி.மு.க. பிளவு பட்டதாக தங்க தமிழ்செல்வன் கூறுகிறாரே?

    பதில்:-அவருக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் 2½ ஆண்டுகள் என்னுடன் இருந்தார். ஏன் அப்படி செய்தார் என்பது என் கேள்வி.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சறற் நினைக்கிறது பாஜக அரசு.
    • ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி.

    கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.10.76 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பாஜக கூறுவது அப்பட்டமான பொய்க்கணக்கு எனக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜ.க. அரசு.

    இது அப்பட்டமான பொய்க்கணக்கு!

    இதில் இரண்டு கூறுகள் உள்ளன:

    1) மத்திய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி.

    மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது.

    இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே! 

    2) மத்திய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு.

    இதில் பாஜக காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா?

    இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி,

    ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி,

    சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று, ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு.

    இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?

    இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது!

    தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது மத்திய பாஜக அரசு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்?

    எங்கள் காதுகள் பாவமில்லையா!

    • வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது.
    • இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக மீன்விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.

    ராயபுரம்:

    தமிழக கடல் பகுதியில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படும். இந்த காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். விசை படகுகள், மீன்வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங் களை சீரமைக்கும் பணியில மீனவர்கள் ஈடுபடுவார்கள்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இது வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது.

    மீன்பிடி தடைகாலம் தொடங்கும் நிலையில் இன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற அனைத்து விசைப்படகுகளும் கரைக்கு திரும்பின.

    இதனால் கடந்த வாரத்தை விட வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக மீன்விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.

    கடந்த வாரத்தில் ரூ.1300 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.800-க்கு விற்கப்பட்டது. கடமா எப்போதும் விற்கப்படும் விலையை விட ரூ.200 வரை குறைத்து விற்கப்பட்டும் அதனை வாங்க ஆட்கள் இல்லை.

    இதனால் வார இறுதி நாட்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காசிமேடு மார்க்கெட் இன்று வழக்கமான உற்சாகம் இன்றி காணப்பட்டது. இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்குவதால் இன்னும் 2 மாதத்திற்கு இதே நிலைதான் இருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.


    காசிமேடு மார்க்கெட்டில் மீன்விலை(கிலோவில்)வருமாறு:-

    வஞ்சிரம் - ரூ.800, வவ்வால் - ரூ.700, வெள்ளை வவ்வால் - ரூ.1200, சங்கரா - ரூ.300, கடமா - ரூ.100, நெத்திலி - ரூ.300, நண்டு - ரூ.300, இறால் பெரியது (டைகர்) - ரூ.1200, இறால் சிறியது - ரூ.600. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, மீன்பிடி தடைகால் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பிவிட்டனர். மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய பின்னர் இங்குள்ள மீன் விற்பனை கூடம் இனி 1 ½ மாதத்திற்கு வெறிச்சோடி கிடக்கும். அதே நேரம் கடலுக்கு செல்ல கட்டுமரங்கள், பைபர் படகுகளுக்கு தடை இல்லை என்பதால் அவர்கள் கடற் கரை யோரத்தில் மீன் பிடித்து திரும்பி விடுவார்கள். இதனால் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விலை அதிகமாகும் என்றனர்.

    • கடந்த 10 ஆண்டுகாலம் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல், அப்பழுக்கற்ற ஆட்சியை பிரதமர் மோடி தந்துள்ளார்.
    • தங்களிடம் எந்த ஒரு திட்டமும் இல்லாததன் காரணமாகவே, உதயநிதி மற்றும் தி.மு.க, கூட்டணி கட்சியனர் பிரதமரை விமர்சித்து வருகிறார்கள்.

    கோவை:

    கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நடிகர் சரத்குமார் கோவை மணியகாரம்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

    பா.ஜனதா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மோடி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை. பொதுவாக எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதில் தலைவன் என்று ஒருவன் இருக்க வேண்டும். தலைவன் இல்லை என்றால் அதனை ஒரு போட்டியாகவே கருதமுடியாது.

    அதுபோன்று தான் எதிர்கட்சிகளில் யார் பிரதமர் வேட்பாளர் என்றே தெரியாமல் பயனித்து கொண்டிருக்கிறார்கள். எதிர் கட்சிகளில் யார் தலைவர், பிரதமர் வேட்பாளர் என்று தெரியாத சூழ்நிலையில் அவர்களால் என்ன செய்ய முடியும் என்ற சூழலில் தான் இந்த தேர்தலை சந்திக்கிறோம்.

    நல்லவர்கள், வல்லவர்கள், தொலைநோக்கு திட்டங்களுடன் செயல்படுவது தான் மோடியின் அரசு. கடந்த 10 ஆண்டுகாலம் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல், அப்பழுக்கற்ற ஆட்சியை பிரதமர் மோடி தந்துள்ளார்.

    50 ஆண்டுகாலமாக இந்தியாவில் ஆட்சி செய்த காங்கிரசிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா? என்று கேட்டால் ஒன்றும் கிடையாது. ஆனால் பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

    அடுத்து 3-வது முறையும் பிரதமராக மோடி தான் வருவார். பிரதமராக வந்ததும், அடுத்த 25 ஆண்டுக்கான திட்டங்களை இப்போதே தனது கையில் வைத்திருக்கிறார். அந்த திட்டங்களை நோக்கி அவரது பயணம் உள்ளது. இப்படி ஆட்சிக்கு வரும் முன்பே திட்டங்களை வகுத்து அதற்கு ஏற்ப செயல்படுகிறது பா.ஜ.க அரசு.

    தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை. அதனால் தான் அவர்கள் எப்போது பார்த்தாலும் மோடியை விமர்சித்து வருகின்றனர். விமர்சிப்பவர்களுக்கு தனது செயல்கள் மூலம் அவர் பதிலடி கொடுத்து வருகிறார்.

    தி.மு.க.வினர் மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம் உள்ளிட்டவற்றை கொடுப்பதாக கூறுகிறார்கள். அதனை அந்த கட்சியில் உள்ள அமைச்சர் மற்றும் எம்.பி ஒருவர் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகிறார்கள்.

    தி.மு.கவினர் மக்களுக்கு கொடுப்பது உரிமைக்காக அல்ல. உங்களுடைய வாக்குக்காக தான். அதனை கொடுத்து விட்டு ஏளனம் செய்வது தான் தி.மு.க.வின் வாடிக்கையாக உள்ளது.

    தங்களிடம் எந்த ஒரு திட்டமும் இல்லாததன் காரணமாகவே, உதயநிதி மற்றும் தி.மு.க, கூட்டணி கட்சியனர் பிரதமரை விமர்சித்து வருகிறார்கள்.

    அண்ணாமலை எந்த விவகாரமாக இருந்தாலும் புள்ளி விவரத்துடன் பேசுகிறார். அதனால் எதிர்கட்சிகள் அவரை பார்த்து பயப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது.
    • வருகிற 21-ந்தேதி தெய்வயானை திருக்கல்யாணம்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. தினந்தோறும் வள்ளி தெய்வ யானை சமேதராய் உற்சவர் முருகன் காலை, மாலை என இருவேளைகளிலும் புலி வாகனம், சிங்க வாகனம், வெள்ளி நாக வாகனம், ஆட்டுக்கிடாவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேர்வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந்தேதி தெய்வயானை திருக்கல்யாணம் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சித்திரை பிரம்மோற்சவ தொடக்க விழாவையொட்டி இன்று அதிகாலையில் மூலவர் முருகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மூலவருக்கு தங்க கவசம், பச்சைக்கல் மரகத மாலை. அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. நந்தி ஆற்றங்கரையில் உள்ள கோட்டா ஆறுமுகசாமி கோவிலில் இருந்து 1008 பால்குடங்கள் எடுத்து வந்தனர். இதில் கோவில் இணைஆணையர் ரமணி,அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதர், அறங்காவலர்கள் உஷாரவி,மோகனன். சுரேஷ் பாபு, நாகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக புறப்பட்டு படிக்கட்டுகள் வழியாக மலைக் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து காவடி மண்டபத்தில் சண்முகர் கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பழைய மார்க்கெட் அருகே ஜின்னா வீதியை சேர்ந்தவர் சிராஜூ தீன் (வயது 70). இவரது மனைவி லைலா பானு. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள்.

    மூத்த மகள் மட்டும் தந்தை வீட்டு அருகே திருமணமாகி வசித்து வருகிறார். சிராஜூதீன் டெக்கரேஷன் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை சிராஜூதீன் மற்றும் குடும்பத்தினர் விடுமுறையை கழிக்கும் வகையில் ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டனர்.

    இதையடுத்து நள்ளிரவு 12:30 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். வீட்டின் கதவை திறந்து அனைவரும் உள்ளே சென்றனர். அப்போது நடுவீட்டில் ஓடு பிரிந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோ இருக்கும் அறையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.20 லட்சம் ரொக்க பணம் மற்றும் 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. சிராஜூதீன் சொந்தமாக நிலம் வாங்குவதற்காக ரூ.20 லட்சம் பணத்தை பீரோவில் வைத்திருந்தார்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆட்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சோதனையில் வெவ்வேறு அறைகளில் 4 கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பல லட்ச ரூபாய் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
    • தேர்தல் நேரத்தில் நிதி நிறுவனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும் இடங்களில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் பணம், நகைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன்படி வருமான வரித்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கி உள்ளனர். முறையாக வரி செலுத்தாதவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பவர்கள் பட்டியலை சேகரித்து அவர்களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் புகார் தெரிவிக்கப்படும் இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி தேர்தல் பறக்கும் படையில் ரூ.10 லட்சத்திற்கு மேல் சிக்கினால் அது குறித்தும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

    இந்த நிலையில் நாமக்கல் ஈ.பி.காலனியில் வசித்து வருபவர் செல்லப்பன் (வயது 60). தனியார் நிதி நிறுவன அதிபரான இவர், டேங்கர் லாரியும் வைத்துள்ளார். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இதனிடையே நேற்று வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான பணத்தை நிதிநிறுவன அதிபர் செல்லப்பன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கலைச்செல்வன், அயாஸ்கான் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசாரும் தொழில் அதிபர் செல்லப்பன் வீட்டிற்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் வெவ்வேறு அறைகளில் 4 கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பல லட்ச ரூபாய் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த 7 பேர் கொண்ட நாமக்கல் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் 4 பைகளில் இருந்த ரூபாய் நோட்டுகளை எந்திரம் மூலம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.80 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளும் தங்களுடைய பங்களிப்பாக வீடு முழுவதும் தங்களுக்குரிய பாணியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். வீட்டின் குடிநீர் தொட்டி, பூஜை அறையை திறந்து பார்த்தனர். காலி சிலிண்டரை ஆய்வு செய்தனர். மேலும் வீட்டின் கீழ் தளம், மேல் தளத்தில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் பீரோ, கட்டில், மெத்தை, பாத்திரங்கள், சமையல் அறையில் உள்ள பொருட்கள், அரிசி பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றை திறந்து பார்த்தனர். இதில் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் ரூ.45 லட்சம் கட்டுகட்டாக இருந்தது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டனர். அதற்கு எந்த ஆவணங்களும் இல்லை என தெரிவிக்கவே அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சோதனையின்போது பீரோவில் நிறைய சொத்து ஆவணங்கள் இருந்தன. அவற்றை எடுத்து ஆய்வு செய்தபோது அவை ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் என தெரியவந்தது. இதற்கு உரிய வருமான வரி செலுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் கேட்டனர். இதையடுத்து அந்த சொத்து ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் செல்லப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இதைத்தவிர வேறு இடங்களில் சொத்து, நிறுவனங்கள், கடைகள் உள்ளதா? என வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டனர். அப்போது அவர்கள் கொடுத்த தகவல்களை பதிவு செய்து கொண்டு பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். உரிய ஆவணம் சமர்பிக்கப்பட்ட பிறகு பணம் திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சோதனை இரவு முழுவதும் விடிய, விடிய நடைபெற்றது. இன்று அதிகாலையில் தான் அவர்கள் சோதனையை நிறைவு செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    தொடர்ந்து செல்லப்பன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? பரிமாற்றம் எந்த அளவிற்கு மேற்கொள்ளப் பட்டுள்ளது? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தேர்தல் நேரத்தில் நிதி நிறுவனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.

    காலை 10.30 மணிக்கு 'சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது.

    கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு, காலை 10.30 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

     தமிழ் புத்தாண்டு மற்றும் விடுமுறை தினம் என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

     அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் சுமார் 5 மணிநேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் மற்றும் வாகன மிகுதியால் போக்குவரத்து ஸ்தம்பித்து.

    • நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் சோதனையும் நடந்தது.
    • ஓட்டலில் தேர்தல் நடக்கும் படையினர் மற்றும் தாம்பரம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி இந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    தாம்பரம்:

    கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என தகவல் பரவியது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் மேலாளர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

    விருகம்பாக்கத்தைச் சேர்ந்த முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கம் ஓட்டலில் பணத்தை வைத்து விட்டு சென்றதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இதையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் சோதனையும் நடந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தாம்பரம் போலீசாரும் இந்த பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜ.க. தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன், கிரீன்வேஸ் சாலையில் நடத்திவரும் ஓட்டலிலும் ரூ. ஒரு கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு பா.ஜ.க. தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன் நடத்திவரும் ஓட்டலில் தேர்தல் நடக்கும் படையினர் மற்றும் தாம்பரம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி இந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதனையடுத்து பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன் நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    அவர் தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது மகன் கிஷோர் இன்று ஆஜராக வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • புதிய பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
    • சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கம் வாசித்தனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    அருணசலேஸ்வரர் உண்ணாமுலை அம்மன் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாளித்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் புதிய பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    பின்னர் சம்பந்த விநாயகர் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கம் வாசித்தனர். இதில் அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் உறுப்பினர்கள் கோமதி குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். ஏராளமான பக்த்ர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் இன்று காலை முதல் கிரிவலம் சென்றனர்.

    ×