என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்
    • தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்

    இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில், இன்று பெரம்பலூர் தொகுதியில் உள்ள அரணாரை பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன். இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயில் எனது பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன்.

    குறிப்பாக இந்த தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. பெண்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தார்கள். அதனால் அரசுப்பள்ளிகளுக்கு 42 வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். எந்தெந்த ஊருக்கு சமுதாய கூட்டங்கள் கேட்டீர்களா அங்கெல்லாம் சமுதாய கூடங்கள் கட்டி கொடுத்துள்ளேன்.

    இதேபோல் நியாயவிலை கடைகள், நீர்த்தேக்க தொட்டிகள், கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளேன்.

    தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்திற்கு சென்ற 38 எம்.பிக்களின் 75% பேர் மத்திய அரசு கொடுத்த 17 கோடியை முழுமையாக செலவு செய்யவில்லை. அப்படியென்றால் அவர்களுக்கும் மக்களின் மீது அக்கறை இல்லை என்ற அர்த்தம். எம்.பி.க்கள் செலவு செய்யாத தொகை மீண்டும் மத்திய அரசுக்கே சென்று விடும். இதுதான் திமுக எம்.பி.க்களின் நிலைமை.

    நான் மட்டும் தான் மத்திய அரசு கொடுத்த ஒட்டுமொத்த நிதியையும் செலவு செய்துள்ளேன்.

    பெரம்பலூர் தொகுதியில் ஏழை மாணவர்களால் உயர்கல்வி பெற முடியாமல் தவித்தனர். அதனால் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். அவர்களுக்கு வேலையும் வாங்கி கொடுத்துள்ளேன். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .

    இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாக்குறுதிகள்.

    ஒருகாலத்தில் சென்னை - திருச்சி செல்வதற்கு 5 மணிநேரம் ஆகும். இப்போது மூணரை மணிநேரத்தில் செல்வதற்கு சிறப்பான சாலைகள் போடப்பட்டதற்கு மோடி அரசு தான் காரணம். நாட்டின் அடிப்படை கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர் மோடி.

    கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார். பாஜக ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை. அந்த வகையில் ஊழல் இல்லா ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார்.

    மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக மக்கள் வாக்களிக்க போகிறார்கள். வட மாநிலங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பாக நாம் எம்.பிக்களை அனுப்ப வேண்டும்.

    இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லிக்கு அனுப்பாதீர்கள்.திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம். ஆகவே ஊழல் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.

    மற்றவர்கள் சம்பாதிக்க வந்தவர்கள், ஊழல்வாதிகள், மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்கள். மக்களிடம் கொள்ளையடித்த அந்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது.

    என்னை எதிர்த்து போட்டியிடுபவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள். மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பவர்களின் குடும்பம், அவர்கள் கொள்ளையடித்தது போதாது என்று அவர்களின் மகனை வேட்பளராக நிறுத்தியுள்ளார்கள். ஆகவே மக்கள் ஊழல் செய்யும் திமுகவை ஆதரிக்க கூடாது.

    யார் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பதை பார்த்து அவர்களுக்கு வாக்களியுங்கள் . ஆகவே தாமரையில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

    • தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது
    • பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தென்சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருடன் ஜூம் மீட்டிங் மூலம் வாக்கு சேகரித்தார்.

    தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தென்சென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், பா.ஜ.க சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில் தான் இன்று பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தென்சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருடன் ஜூம் மீட்டிங் மூலம் வாக்கு சேகரித்தார். இந்த மீட்டிங்கின் போது ஆபாசமான படங்களை சிலர் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து அந்த மீட்டிங் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் வருத்தமடைந்த தமிழிசை சவுந்தரராஜன் இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "இன்று ஜூம் மீட்டிங்கில் மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசமான படங்களை ஜூம் மீட்டிங்கில் பரவ விட்டு உடனே நான் அவர்களோடு பேசுவதை தடுத்துவிட்டார்கள்," என்று பதிவிட்டுள்ளார்.

    • கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது
    • நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் சோதனையும் நடந்தது

    கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என தகவல் பரவியது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் மேலாளர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருகம்பாக்கத்தைச் சேர்ந்த முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கம் ஓட்டலில் பணத்தை வைத்து விட்டு சென்றதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இதையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் சோதனையும் நடந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தாம்பரம் போலீசாரும் இந்த பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    • பிற்பகல் 1.30 மணிக்கு, குழந்தை கடத்தப்பட்ட நிலையில், 4 மணி நேரத்தில் மீட்பு.
    • வடகிழக்கு மாநில தம்பதியின் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.

    எண்ணூர் பகுதியில் குழந்தையை விற்பதற்கு விலை பேசியபோது போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக, கார்த்திக், செல்வம் என்ற இருவரை எண்ணூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்று பிற்பகல் 1.30 மணிக்கு, குழந்தை கடத்தப்பட்ட நிலையில், 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வடகிழக்கு மாநில தம்பதியின் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மின் கட்டணத்தை குறைக்க கோரி போராடி விவசாயிகளை திமுக அரசு சுட்டு வீழ்த்தியது.
    • ஏழை மாணவர்களை மருத்துவராக்கி பார்க்கும் கட்சி அதிமுக.

    சேலம் ஆத்தூர் ராணிப்பேட்டை திடலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தெய்வ சக்தி படைத்த கட்சி அதிமுக. அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பிரசார கூட்டம், அதிமுக மாநில மாநாடு போல் காட்சியளிக்கிறது.

    பிரசார கூட்டம், அதிமுக மாநில மாநாடு போல் காட்சியளிக்கிறது. அதிமுகவை விமர்சிக்கிறார்கள், இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள்.

    அதிமுகவை அழிக்க இந்த பூமியில் யாரும் இன்னும் பிறக்கவில்லை. அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.

    அதிமுகவை விமர்சிக்கிறார்கள், இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள். மக்கள் செல்வாக்கு மிக்க கட்சி அதிமுக.

    பொய் வழக்குகள் போட்டு கட்சி பணியை முடக்க பார்க்கிறார்கள். திமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. மின் கட்டணத்தை குறைக்க கோரி போராடி விவசாயிகளை திமுக அரசு சுட்டு வீழ்த்தியது.

    திமுக ஆட்சியில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றன. நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் பொய் பிரசாரம் செய்கிறார்.

    காங்கிரசும், திமுகவும் நீட் தேர்வை கொண்டு வந்தது. முதலமைச்சர் திரும்ப திரும்ப பொய்யை பேசி, உண்மையாக மாற்ற முயற்சிக்கிறார்.

    அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வந்தேன். முதலமைச்சர் திரும்ப திரும்ப பொய்யை பேசி, உண்மையாக மாற்ற முயற்சிக்கிறார்.

    தமிழகத்தில் 4 முதல்வர்கள் ஆட்சி செய்கின்றனர். ஏழை மாணவர்களை மருத்துவராக்கி பார்க்கும் கட்சி அதிமுக. ஏழை மாணவர்களை மருத்துவராக்கி பார்க்கும் கட்சி அதிமுக. மதுரை எய்ம்ஸ் குறித்து திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அழுத்தம் தரவில்லை.

    அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கால்நடை பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. ஒற்றை செங்கல்லை தூக்கி கொண்டு அமைச்சர் உதயநிதி விளம்பரம் செய்கிறார். விவசாயிகளுக்கான திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது.

    விவசாயிகளுக்கான திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், முடக்கப்பட்ட திட்டங்கள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
    • மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு ஏப்ரல் 19ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, பாஜகவில் சேர்ந்ததை அடுத்து அவர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விளவங்கோடு இடைத்தேர்தல், தமிழகத்தில் நடைபெறும் மக்களவை தேர்தல் அன்றே நடைபெறுகிறது.

    இந்நிலையில், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிர்வாகிகளை நியமித்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்த அறிக்கையில், " நடைபெறவுள்ள 2024 விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பொறுப்பாளர்களாக கீழ்கண்டவர்கள் கூடுதலாக நியமிக்கப்படுகிறார்கள்.

    1. டாக்டர் சாமுவேல் ஜார்ஜ்

    2. கே.ஜி. ரமேஷ் குமார்

    3. எஸ். சதீஷ்

    4. எஸ். ஷாஜி

    5. எபினேசர்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நான் 25 ஆண்டுகள் முடிசூடா மன்னனாக ராயபுரத்தில் இருந்து வந்தேன். பா.ஜ.க-வால்தான் தோற்றேன் - ஜெயக்குமார்
    • 2019-லும் சரி 2021-லும் சரி நாங்கள் நாங்கள் தோற்றது பா.ஜ.க-வால்தான் பா.ஜ.க-வால்தான் - ஜெயக்குமார்

    சென்னையில் இன்று அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்று பாஜகவினர் கூறுகிறார்களே என்று செய்தியாளர் ஒருவர் கேட்க அதற்கு ஜெயக்குமார் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

    "பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்களுடைய ஆட்சியே போனது. இல்லையென்றால் நான் ஜெயித்திருப்பேன், ராயபுரத்தில் நான் எல்லாம் தோற்க்கிற ஆளா, நான் மனம் திறந்து சொல்கிறேன், இதுவரை சொல்லவில்லை. நான் 25 ஆண்டுகள் முடிசூடா மன்னனாக ராயபுரத்தில் இருந்து வந்தேன். தோல்வி என்பதையே அறியாதவனாக இருந்தேன்; நான் யாரால் தோற்றேன், பா.ஜ.க-வால்தான் தோற்றேன்.

    பா.ஜ.க இல்லை என்றால் நான் எல்லாம் இந்நேரம் சட்டமன்றத்திற்கு போயிருக்க வேண்டிய ஆள். பா.ஜ.க இருந்ததனால் என் தொகுதி ராயபுரத்தில் 40,000 சிறுபான்மை இன மக்கள் ஓட்டு போனது. இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் ஓட்டு போனது; அவர்களுக்கு என் மேல் கோபம் கிடையாது. அப்போதே அவர்கள் என்னிடம் சொன்னார்கள். பா.ஜ.க-வை கழட்டி விடுங்கள் என்று சொன்னார்கள். நான் சொன்னேன் வீண் சுமைதான் என்று சொன்னேன். சமயம் வரும்போது கழட்டி விட்டுவிடுவோம், நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று சொன்னேன். அதே மாதிரி நேரம் வந்தது கழட்டி விட்டுவிட்டோம்.

    பா.ஜ.க இல்லை என்றால் நான் எல்லாம் ஜெயித்து இருக்க வேண்டிய ஆள். 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருப்பேன்; பாஜக இருந்ததால் இப்பொழுது நான் ஜீரோவில் இருந்து ஓடுகிறேன். தி.மு.க நாற்பதில் இருந்து ஓடுகிறார்கள் அப்படி என்றால் யார் முன்னாடி செல்வார்கள், இதுதான் காரணம். தமிழ்நாடு முழுக்க பார்த்தீர்கள் என்றால் 2019-லும் சரி 2021-லும் சரி நாங்கள் நாங்கள் தோற்றது பா.ஜ.க-வால்தான் பா.ஜ.க-வால்தான்" என்று கூறினார்.

    பாஜக குறித்து ஜெயக்குமார் பேசியது தொடர்பாக வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ்-யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தற்கு பதில் அளித்த அவர், "கடந்த தேர்தலில் பா.ஜ.க-வால்தான் கொஞ்ச ஓட்டாவது ஜெயக்குமார் வாங்குனாரு, இல்லைனா சுத்தமா அவுட் ஆகியிருப்பாரு." என்று பதிலடி கொடுத்துள்ளார்.

    • தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் நடைபெறவுள்ளது
    • 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குச்சாவடிக்குச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து பொது மக்களிடம் பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

    "ஏப்ரல் 19ம் தேதி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும்போது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்ரல் 20ம் தேதி சாப்பிடச் செல்லும்போது காண்பித்தால் உணவு விலையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும், என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 5-வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டியின் 'பி' பிரிவில் இந்த சீசனில் 12 அணிகள் பங்கேற்றன.
    • சிங்கம் புலி அணி 42.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களது திறமையை வளர்ப்பதற்காக 6 வகையான டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் 5-வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டியின் 'பி' பிரிவில் இந்த சீசனில் 12 அணிகள் பங்கேற்றன. இதன் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் சென்னை மேக்னா கல்லூரி மைதானத்தில் நடந்த ஆட்டம் ஒன்றில் சிங்கம் புலி கிரிக்கெட் கிளப்-கிராண்ட் பிரிக்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த கிராண்ட் பிரிக்ஸ் அணி, சிங்கம் புலி கிளப் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.2 ஓவர்களில் 177 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ராம்குமார் 55 ரன்னும், நவீன் 36 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். சிங்கம் புலி கிளப் தரப்பில் ஜெப செல்வின் 4 விக்கெட்டும், சந்தான சேகர், தர்ஷன் தலா 2 விக்கெட்டும், ராஜலிங்கம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதைத்தொடர்ந்து ஆடிய சந்தான சேகர் தலைமையிலான சிங்கம் புலி அணி 42.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஜோபின் ராஜ் 47 ரன்னும், ஆனந்த் 31 ரன்னும், திவாகர் 30 ரன்னும் சேர்த்தனர். தனிஷ் குமார் 19 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    கிராண்ட் பிரிக்ஸ் கிளப் தரப்பில் குமரேசன் 3 விக்கெட்டும், நவீன் 2 விக்கெட்டும், கிருஷ்ண குமார், அர்விந்த் சாமி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். லீக் முடிவில் இந்த டிவிசனில் அனைத்து (11) ஆட்டங்களிலும் வெற்றி கண்டு அசத்திய சிங்கம் புலி அணி 44 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து வி.பி.ராகவன் கேடயத்தை தனதாக்கியது. அத்துடன் சிங்கம் புலி அணி 4-வது டிவிசன் போட்டிக்கு முன்னேறியது.

    • ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
    • தமிழ்நாட்டிற்கு அடுத்து கர்நாடகம் இரண்டாம் இடத்தில் 4.52 பில்லியன் அமெரிக்க டாலர்.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    நடைபெறக்கூடிய பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. காணாமல் போய்விடும் என்று கூறிய பிரதமர் மோடி தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் சில நாட்களுக்குமுன் தமிழ் நாட்டிற்கு வருகைபுரிந்து வாய் ஜாலம் காட்டினார். அவர் தலைமையில் இதுவரை இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் ஆய்வு அமைப்புகள் தமிழ் நாட்டின் உண்மை நிலையினை விளக்கி ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டு உள்ளது.

    அதில் சில நாட்களுக்கு முன் 7 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலம் என்பதை ஒன்றிய அரசின் ஆய்வு அமைப்புகள் வெளியிட்டன.

    தற்போது, மேலும் 3 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலம் என்பதை தம்முடைய ஆய்வு அறிக்கைகளின் மூலம், அறிந்தும் அறியாமல் புரிந்தும் புரியாமல் இழித்தும் பழித்தும் தி.மு.க.வை பற்றிப் பேசிக் கொண்டிருக்கக் கூடிய "பெரிய பதவியில்" உள்ளவர்களுக்கு மீண்டும் எடுத்துச் சொல்லிப் புரியவைத்துள்ளன.

    ஜவுளித் துணிகள் ஏற்றுமதி குறித்து 2022-2023-ம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசின் நிர்யாத் நிறுவனம் அண்மையில் வெளியிட்டு உள்ளது. அதில் தேசிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஜவுளித் துணிகளின் மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 22.58 சதவிகிதம் என அறிவித்து ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

    அதாவது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 35.38 பில்லியன் அமெரிக்க டாலர் இதில் முதலிடம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 7.990 பில்லியன் அமெரிக்க டாலர். அடுத்து இரண்டாம் இடத்தில் குஜராத் மாநிலம் 4.378 பில்லியன் அமெரிக்க டாலர். மூன்றாம் இடத்தில் மகாராஷ்ட்ரா 3.784 பில்லியன் அமெரிக்க டாலர் என்று குறிப்பிட்டு ஜவுளிப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

    2022-2023-ம் ஆண்டுக்கான தேசிய இறக்குமதி ஏற்றுமதி வர்த்தக ஆண்டாய்வு பதிவுகள் குறித்த அறிக்கையில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறித்து அறிவித்துள்ள புள்ளி விவரங்களில் இந்தியாவிலிருந்து ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு மிக அதிகமாக ஏற்றுமதி செய்து உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளின் மொத்த மதிப்பு 16.19 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில் 5.30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலம் என்று அறிவித்துள்ளது.


    தமிழ்நாட்டிற்கு அடுத்து கர்நாடகம் இரண்டாம் இடத்தில் 4.52 பில்லியன் அமெரிக்க டாலர். உத்தரபிரதேசம் மூன்றாம் இடத்தில் 2.27 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    2022-2023-ஆம் நிதியாண்டுக்கான தோல் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு குறித்து ஒன்றிய அரசின் நிர்யாத் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 2022-2023-ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள தோல் பொருட்களின் மொத்த மதிப்பு 4.27 பில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறியுள்ளது.

    அதே நேரத்தில், இதில், 43.20 சதவிகித தோல் பொருள்களை அதாவது 2.048 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தோல் பொருள்களை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலம் எனும் பாராட்டு முத்திரையை வெளியிட்டு தமிழ்நாட்டின் பெருமையைத் தரணிக்குப் பறைசாற்றியுள்ளது.

    இப்படி மத்திய அரசின் ஆய்வு அறிக்கைகளே தமிழ்நாடு பெரும்பாலான முக்கிய துறைகளில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

    பா.ஜ.க.ஆளும் மாநிலங்கள் பல்வேறு துறைகளிலும் பின்தங்கியிருப்பது மட்டுமல்லாமல், எவ்வித வளர்ச்சியுமின்றி குன்றி உள்ளதையும் இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் கூட தமிழ்நாடு வளர்ச்சியும் முன்னேற்றமும் இன்றி மிகவும் பின்தங்கி இருந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

    மத்திய அரசின் பிரதமரும் மத்திய அரசின் அமைச்சர்களும், பா.ஜ.க. உடன் கள்ள உறவு வைத்து உள்ள அ.தி.மு.க.வினரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிகளைப்பற்றிக் குறைகூறி வருவது உண்மைக்கு மாறானது மட்டுமல்ல. உண்மைகளை மறைத்து பொய்களைக் கூறி, போலியான விளம்பரம் தேடுபவர்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பொது மக்களுக்கு ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்தையும் தி.மு.க. ஆட்சி நிறுத்தி விட்டது.
    • உலக தமிழர்களுக்காக பாடுபட்டவர் விஜயகாந்த்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாளுக்கு இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கமுதியில் பேசியதாவது:-

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பா.ஜெயபெருமாள் பண்பாளர். மக்களின் பிரச்சனைகளை தீர்க்க ஓடோடி வருவார். கச்சத்தீவை ஒப்படைத்தவர்களும், ஆட்சியில் இருப்பவர்களும் இப்போது கச்சத்தீவை மீட்போம் என்கிறார்கள். மீனவர்களின் பாதுகாப்பு மிக அவசியம், மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் தான் மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்தையும் தி.மு.க. ஆட்சி நிறுத்தி விட்டது.

    உலக தமிழர்களுக்காக பாடுபட்டவர் விஜயகாந்த். தமிழர்களுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தினார். மானாமதுரையிலிருந்து கமுதி, சாயல்குடி வழியாக ரெயில் பாதை அமைக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கப்படும் .

    தமிழக மக்களின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்பட்டவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சிதான். அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். பா.ஜெயபெருமாளுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி, ராமநாதபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் எம்எல்ஏ மலேசியா, எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.பி. எம்.எஸ். நிறைகுலத்தான். மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன். தே.மு.தி.க. சிங்கை சின்னா. எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாலர்கள் பெரியசாமி தேவர், காளி முத்து, ராஜேந்திரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் கர்ணன். எஸ்.டி. செந்தில்குமார். கருப்பசாமி ஆகியோர் வெற்றி கலந்து கொண்டனர்.

    • இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது
    • புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை

    அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளினையொட்டி தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

    இதுதொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அம்பேத்கர் பிறந்தநாளான, சமத்துவ நாளினையொட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை. பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது. நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது. சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

    ×