என் மலர்
நீங்கள் தேடியது "நிதி நிறுவன அதிபர்"
- குனியமுத்தூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கஞ்சா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
கோவை:
கோவை மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை மருந்துகள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
போலீசார் அடிக்கடி சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா, போதை மருந்து விற்பவர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் கோவைக்கு வந்து போதை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் அதுபோன்று வருபவர்களையும், அவர்கள் தங்கி இருக்கும் இடங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குனியமுத்தூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.
கஞ்சா மற்றும் போதை மாத்திரையுடன் சிக்கியவர் திண்டுக்கல் மாவட்டம் துப்பச்சம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது37) என்பது தெரியவந்தது. இவர் அங்கு நிதி நிறுவனம் வைத்து தொழில் செய்து வந்தார்.
அப்போது போதைப்பொருள் விற்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்த சதீஷ்குமார், அதன்பிறகு கஞ்சா மற்றும் போதை மாத்திரை மற்றும் போதைப்பொருட்களை வாங்கியும் விற்பனை செய்து வந்துள்ளார்.
கோவையில் இவருக்கு உறவினர்கள் இருந்துள்ளனர். இதனால் அடிக்கடி இங்கு அவர்களை பார்க்க வருவது போல வந்து, கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை விற்று வந்ததும் தெரியவந்தது.
பின்னர் கோவைப்புதூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அங்கு கஞ்சா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
மெத்தபெட்டமைன் எனப்படும் உயர்ரக போதைப்பொருள் ஒரு கிராம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் விற்பனையாவதால், அதனையும் வாங்கி சதீஷ்குமார் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் போதைப்பொருள் விற்ற பணத்தை கொண்டு சதீஷ்குமார் பிரெஸ்லெட், மோதிரங்கள் என தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சதீஷ்குமார் தங்கி இருந்த கோவைப்புதூர் பகுதியில் உள்ள அறைக்கு சென்று சோதனை நடத்தி அங்கிருந்த 525 கிராம் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் என்ற உயர் ரக போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து நகைகள் மற்றும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
நிதிநிறுவன அதிபர் என கூறிக்கொண்டு, போதைப்பொருள் விற்று, அதில் சம்பாதித்த பணத்தில் நகைகளை அணிந்து கொண்டு காரில் வலம் வந்த சதீஷ்குமார், போலீசாரின் சோதனையில் சிக்கி கொண்டார்.
- 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
- சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள கீழ குஞ்சன்விளை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (61). இவர் என்.ஜி.ஓ. காலனியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். முருகேசன் தினமும் காலையில் நிதி நிறுவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு பின்னர் இரவு 8 மணிக்கு வீட்டிற்கு செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று முருகே சன் இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை 3 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து வந்தனர். முருகேசன் வீட்டிற்கு வந்ததும் மோட்டார் சைக்கி ளை நிறுத்தி விட்டு வீட்டிற்கு செல்ல முயன்றார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 3 பேர் கும்பலில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி அவதூறாக பேசி முருகேசனை சரமா ரியாக தாக்கினர். இதில் காயமடைந்த முருகேசன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனால் அங்கிருந்து 3 பேரும் தப்பி சென்றனர். காயமடைந்த முருகேசனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து முருகேசன் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயி லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நண்பர்களுடன் சென்ற நிதி நிறுவன அதிபரை தாக்கி வழிப்பறி செய்த 5 பேருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
- ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் பாலராஜேஷ் (வயது33). இவர் ஜவஹர் மைதானம் அருகே நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நண்பர்கள் வருண் சுக்ரீத், அபி ஆகியோருடன் சாய்பாபா கோவில் அருகே உள்ள நண்பரின் தோப்புக்கு காரில் சென்றார். சோமையாபுரம் சோதனை சாவடி அருகே அடையாளம் தெரியாத வாலிபர்கள் காரை வழிமறித்து சேதப்படுத்தி பாலராஜேஷ் மற்றும் நண்பர்களை தாக்கி செல்போனை பறித்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் போலீசார் ரோந்து வருவதைக் கண்டதும் அவர்கள் தப்பி விட்டனர். இதுபற்றிய புகாரின்பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் சோமையாபுரத்தைச் சேர்ந்த முத்தையா, ராம்குமார், மாரி செல்வம், வைரமுத்து, கபாலி, கோபாலகிருஷ்ணன் என்ற பீமன் என தெரிய வந்தது. அவர்கள் மீது ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- நாகர். விரைவு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
- வாலிபர் கொலை வழக்கு
நாகர்கோவில் :
நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் டேவிட் (வயது 26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்ற பரம ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திடீரென டேவிட் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இதையடுத்து ராஜனும், ரமேசும், டேவிட்டை பார்த்து வேலைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி வைத்தியநாதபுரம் பகுதியில் கோவில் முன்பு டேவிட் படுகொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து அவரது தாயார் சாந்தி, கோட்டார் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் வைத்தியநாத புரத்தைச் சேர்ந்த ராஜன் என்ற பரம ராஜன் (37), ரமேஷ் (38), கண்ணன் (40),வில்சன்(37) உள்பட 7 பேர் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கைது செய் யப்பட்ட 7 பேரும் ஜாமீனில் விடுதலையான நிலையில் நாகர்கோவில் கூடுதல் விரைவு அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய கண்ணன் பலியானார். இந்த வழக்கு தொடர்பாக 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கில் தொடர்புடைய ராஜன், ரமேஷ், வில்சன் உள்பட 6 பேரும் கோர்ட்டில் ஆஜரா னார்கள்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜன் என்ற பரமராஜன், ரமேஷ், வில்சன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தும் தீர்ப்பில் அவர் கூறி உள்ளார். பரம ராஜன், ரமேஷ், வில்சனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜரானார்.
- சோதனையில் வெவ்வேறு அறைகளில் 4 கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பல லட்ச ரூபாய் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
- தேர்தல் நேரத்தில் நிதி நிறுவனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும் இடங்களில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் பணம், நகைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன்படி வருமான வரித்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கி உள்ளனர். முறையாக வரி செலுத்தாதவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பவர்கள் பட்டியலை சேகரித்து அவர்களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் புகார் தெரிவிக்கப்படும் இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி தேர்தல் பறக்கும் படையில் ரூ.10 லட்சத்திற்கு மேல் சிக்கினால் அது குறித்தும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் நாமக்கல் ஈ.பி.காலனியில் வசித்து வருபவர் செல்லப்பன் (வயது 60). தனியார் நிதி நிறுவன அதிபரான இவர், டேங்கர் லாரியும் வைத்துள்ளார். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இதனிடையே நேற்று வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான பணத்தை நிதிநிறுவன அதிபர் செல்லப்பன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கலைச்செல்வன், அயாஸ்கான் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசாரும் தொழில் அதிபர் செல்லப்பன் வீட்டிற்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வெவ்வேறு அறைகளில் 4 கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பல லட்ச ரூபாய் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த 7 பேர் கொண்ட நாமக்கல் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் 4 பைகளில் இருந்த ரூபாய் நோட்டுகளை எந்திரம் மூலம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.80 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளும் தங்களுடைய பங்களிப்பாக வீடு முழுவதும் தங்களுக்குரிய பாணியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். வீட்டின் குடிநீர் தொட்டி, பூஜை அறையை திறந்து பார்த்தனர். காலி சிலிண்டரை ஆய்வு செய்தனர். மேலும் வீட்டின் கீழ் தளம், மேல் தளத்தில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் பீரோ, கட்டில், மெத்தை, பாத்திரங்கள், சமையல் அறையில் உள்ள பொருட்கள், அரிசி பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றை திறந்து பார்த்தனர். இதில் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் ரூ.45 லட்சம் கட்டுகட்டாக இருந்தது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டனர். அதற்கு எந்த ஆவணங்களும் இல்லை என தெரிவிக்கவே அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சோதனையின்போது பீரோவில் நிறைய சொத்து ஆவணங்கள் இருந்தன. அவற்றை எடுத்து ஆய்வு செய்தபோது அவை ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் என தெரியவந்தது. இதற்கு உரிய வருமான வரி செலுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் கேட்டனர். இதையடுத்து அந்த சொத்து ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் செல்லப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இதைத்தவிர வேறு இடங்களில் சொத்து, நிறுவனங்கள், கடைகள் உள்ளதா? என வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டனர். அப்போது அவர்கள் கொடுத்த தகவல்களை பதிவு செய்து கொண்டு பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். உரிய ஆவணம் சமர்பிக்கப்பட்ட பிறகு பணம் திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனை இரவு முழுவதும் விடிய, விடிய நடைபெற்றது. இன்று அதிகாலையில் தான் அவர்கள் சோதனையை நிறைவு செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
தொடர்ந்து செல்லப்பன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? பரிமாற்றம் எந்த அளவிற்கு மேற்கொள்ளப் பட்டுள்ளது? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தேர்தல் நேரத்தில் நிதி நிறுவனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
- திருப்பூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் ராய பண்டாரம் வீதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன். நிதி நிறுவன அதிபர். இவரது வீட்டுக்குள் கடந்த மாதம் 12-ந் தேதி மதியம் முககவசம் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் சங்கமேஸ்வரன், அவரது மனைவி, மகள் ஆகியோரை கட்டி போட்டு பணம், நகையை கொள்ளையடித்து தப்பினர்.
இது குறித்து வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அபினவ் குமார் மேற்பார்வையில் கொங்கு நகர் உதவி கமிஷனர் அணில் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கில் கொள்ளைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்த திருப்பூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி மருகல் குறிச்சியை சேர்ந்த வானமாமலை (வயது 22), நல்லகண்ணு (21) ஆகியோரை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 24). கலெக்டர் அலுவலகம் அருகே சர்வீஸ் சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று அலுவலகத்துக்கு சென்று தனது வழக்கமான பணிகளை கவனத்து கொண்டிருந்தார். மதியம் 2 மணியளவில் இரண்டு பைக்குளில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்தனர்.
அவர்களில் 2 பேர் வெளியில் நின்றனர். மற்றவர்கள் உள்ளே அமர்ந்திருந்த நந்தகுமாரை கழுத்தை பிடித்து வெளியே இழுத்து வந்தனர். அவர் வர மறுத்து வாக்குவாத்தில் ஈடுபட்டார். இருப்பினும் விடாமல் நந்தகுமாரை இழுத்துச் சென்ற கும்பல், அவரை பைக்கில் தூக்கி அமரவைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் கடத்தி சென்றனர்.
இதில் நந்தகுமார் அமர்ந்திருந்த பைக்கில் அவருடன் 2 பேரும், இவர்களை பின் தொடர்ந்தவாறு மற்றொரு பைக்கில் உடன் வந்த 3 பேரும் சென்றனர்.
நந்தகுமார் கடத்தி செல்லப்பட்ட சிறிது நேரத்தில் அவரது மனைவிக்கு கடத்தல்காரர்கள் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அப்போது அவரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.
உடனடியாக இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அலுவலகத்தில் இருந்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் 2 பைக்குகளில் வருவதும் நிதி நிறுவன அதிபரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது பைக்கில் ஏற்றி கடத்திச்செல்வதும் பதிவாகி உள்ளது.
இதைவைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு நிதிநிறுவன அதிபரையும், கடத்தல் கும்பலையும் தேடி வந்தனர்.
கடத்தல் கும்பலின் செல்போன் எண்களை வைத்து சைபர் கிரைம் குழுவினர் கண்காணிக்க தொடங்கினர். அதில் பள்ளிகொண்டா, குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதியில் கடத்தல் கும்பல் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. அங்குள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆனாலும் கடத்தல் கும்பல் சிக்கவில்லை. இதனையடுத்து கும்பலை பொறி வைத்து பிடிக்க போலீசார் முடிவுசெய்தனர்.
நந்தகுமார் மனைவியை கடத்தல் கும்பலிடம் போனில் பேச செய்தனர். அவர் பேசிய போது கும்பல் ரூ. 3 லட்சம் கொடுத்தால் நந்தகுமாரை விடுவிப்பதாக தெரிவித்தனர். பணத்தை வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் உள்ள ஓட்டல் அருகே கொண்டுவருமாறு கூறினர்.
அங்கு தனிப்படை போலீசார் தயார் நிலையில் இருந்தனர். சிறிது நேரம் கழித்து போனில் தொடர்பு கொண்ட கும்பல் பணத்தை வள்ளலாருக்கு கொண்டுவருமாறு தெரிவித்தனர். பின்னர் ரத்தினகிரி சந்திப்புக்கு வருமாறு தெரிவித்தனர்.
கடத்தல் கும்பல் போலீசாரிடம் சிக்காமல் அலைக்கழித்தனர்.
இதனையடுத்து ஆற்காடு, மேல்விஷாரம் நகர பகுதிக்குள் போலீசார் சென்றனர். மேலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, வேப்பூர் சந்திப்பு அருகே காரில் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே கடத்தல் கும்பல் நந்தகுமாருடன் நின்று கொண்டிருந்தனர்.
இருட்டில் நின்றதால் அவர்கள் யார் என்பது தெரியவில்லை. இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி அவரது டிரைவர் இருவரும் காரை நிறுத்திவிட்டு அவர்கள் அருகே நடந்து சென்றனர்.
போலீசார் வருவதை கண்ட கும்பல் நந்தகுமாரை விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.
அவரை மீட்ட போலீசார் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். பின்னர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் கும்பல் குறித்து விசாரித்தனர்.
நந்தகுமார் அணிந்திருந்த தங்க செயின், பாக்கெட்டில் இருந்த பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் யார் என்பது சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பிரபல நிதி நிறுனத்துக்கு எதிராக பொருளாதார அமலாக்கத்துறை நடத்தி வந்த விசாரணையில் இருந்து காப்பாற்ற அந்த நிதி நிறுவனத்திடம் இருந்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான 57 கிலோ தங்கக் கட்டிகளை லஞ்சமாக பெற்றதாக கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த ஜனார்த்தன ரெட்டி பெங்களூரு சாம்ராஜ் பேட் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். போலீசார் அவரிடம் விடிய,விடிய விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான ஜனார்த்தன ரெட்டியை அதிகாரிகள் கைது செய்தனர்.
இன்று பிற்பகல் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை காவலில் எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #JanardhanReddy #JanardhanReddyArrest
மதுரை வளையங்குளம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 55). இவர் தவிட்டுச் சந்தை தெற்கு வெளிவீதியில் உள்ள நிதி நிறுவனத்தில் ரூ.2¼ லட்சம் முதலீடு செய்தார். இந்த பணத்திற்கு நிதி நிறுவனத்தினர் வட்டி கொடுக்காமல் இழுத்தடித்தனர்.
இதனைத் தொடர்ந்து தான் முதலீடு செய்த பணத்தை திருப்பித்தரும்படி முத்துகிருஷ்ணன் கேட்டுள்ளார். ஆனால் ரூ.70 ஆயிரம் மட்டும் திருப்பிக் கொடுத்த நிதி நிறுவன உரிமையாளர்கள் மீதிப்பணத்தை கொடுப்பதில் கால தாமதம் செய்துள்ளனர்.
இதனால் தான் மோசடி செய்யப்பட்டதாக தெற்குவாசல் போலீசில் முத்துகிருஷ்ணன் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி நிதி நிறுவன அதிபர் ராஜேந்திரன், அவரது மகன் சந்திரபிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
ராஜஸ்தான் மாநிலம் பில்வாடா மாவட்டத்தை சேர்ந்தவர் பர்வந்த் (வயது 35). இவரது மனைவி ரிங்கு (30).
இந்த நிலையில் பர்வந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து நாகை மாவட்டம் பூம்புகார் தர்மகுளத்துக்கு வந்தார். பின்னர் அங்கு நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பர்வந்த் வீட்டில் இருந்தார். அப்போது அவரது மனைவி ரிங்கு வெளியே புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து இரவில் மனைவி ரிங்கு வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் பார்த்த போது அங்கு பர்வந்த் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு திடுக்கிட்டார். கணவரின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். இதைதொடர்ந்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பர்வந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நிதி நிறுவன அதிபர் பர்வந்த் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். தொழிலில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது அவரிடம் பணத்தை பெற்றவர்கள் ஏமாற்றியதால் இந்த முடிவை எடுத்தாரா? குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews






