search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • எல்லாவிதத்திலும் சிறுபான்மையினருக்கு சிறந்த அரசாக பாரதிய ஜனதா அரசு உள்ளது.
    • 25 கோடி மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி.

    கோவை:

    தெலுங்கானா முன்னாள் கவர்னரும், தென்சென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்குமான திட்டம் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் தாரக மந்திரம். பிரதமர் நரேந்திர மோடி அனைத்து தரப்பு மக்களுக்குமான பிரதமராக பணியாற்றி வருகிறார்.

    50 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தை அடித்தட்டிலேயே வைத்துள்ளது. அவர்களை ஒரு வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். மக்களிடம் வேற்றுமையை விதைப்பது காங்கிரஸ் தான்.

    பிரதமர் மோடிக்கு அனைத்து தரப்பு மக்களிடம் ஆதரவு உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி இஸ்லாமிய பெண்கள் மீது மிகுந்த அக்கறை செலுத்தி எண்ணற்ற திட்டங்களையும் நிறைவேற்றி கொடுத்து வருகிறார்.

    பெண்ணுரிமை என்று எதிர்க்கட்சியினர் பேசி வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பேசுகிறார். ஆனால் அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்ல முடியாத நிலை இருந்தது. அதனை மீட்டெடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்க வில்லை.

    ஆனால், இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்ல விசாவில் தளர்வு ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி தான். அதேபோன்று முஸ்லிம் பெண்கள் பாராட்டும் வகையில் முத்தலாக் தடைச் சட்டத்தையும் பாரதிய ஜனதா அரசு தான் கொண்டு வந்தது.

    எல்லாவிதத்திலும் சிறுபான்மையினருக்கு சிறந்த அரசாக பாரதிய ஜனதா அரசு உள்ளது.

    ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஏதோ இவர்கள் தான் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள் போலவும், பிரதமர் மோடி சிறுபான்மை மக்களுக்கு எதிரியாக இருப்பது போல சித்தரித்து இந்த தேர்தலை முன்னெடுத்து செல்ல முயல்கிறார்கள்.

    ஊடுருவல்காரர்களிடம் நமது சொத்து பறிபோய் விடக்கூடாது என்று தான் பிரதமர் சொன்னார். குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து ஏராளமானோர் ஊடுருவி உள்ளனர். மேற்கு வங்கத்தில் 1 கோடி ஊடுருவல்காரர்கள் உள்ளனர். அவர்களுக்கு அந்த அரசு ரேஷன் கார்டு வரை கொடுத்துள்ளது. நம் நாட்டு மக்களின் சொத்துக்கள் பறி போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் பிரதமர் சொன்னாரே தவிர வேறு எதுவும் காரணம் இல்லை.

    ஆனால் காங்கிரஸ் இதனை தேர்தலுக்காக திசை திருப்ப முயற்சிக்கிறது.

    25 கோடி மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு 45 லட்சம் உயிர்களை காப்பாற்றியது பாரதிய ஜனதா அரசு.

    இப்படி எல்லா தரப்பு மக்களுக்குமான அரசாக பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது.

    ஆனால் காங்கிரஸ் வேண்டும் என்றே பாரதிய ஜனதா மீது குறை கூறுகிறார்கள். நாட்டின் முக்கியமான தேர்தல் நடக்கும்போது ராகுல் காந்தி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் வெளிநாடு சென்றுவிட்டாரா என்று தெரியவில்லை.

    வட மாநில தேர்தல் பிரசாரத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லாதது ஏன் என்பது குறித்து தெரியவில்லை.

    ஒருவேளை இந்தி எதிர்ப்பு பிரச்சனை ஏற்படுமோ என்ற காரணத்தினால் இருக்கலாமோ? அல்லது அங்கு சென்றால் எந்த பிரயோஜனம் இருக்காது என்பதாலும் இருக்க வாய்ப்புள்ளது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து பிரச்சனைகளையும் மீறி பா.ஜ.க வெற்றி பெறும்.

    வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் கொத்து கொத்தாக வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் வாக்குகள் விடுபட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தேர்தல் ஆணையம் இதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    சென்னையில் நான் போட்டியிட்ட தொகுதியில் கவுன்சிலர் தேர்தலில் பதிவான வாக்காளர்களின் வாக்குகள் சில மாதங்களில் காணாமல் போய் விட்டது.

    மக்களுக்கான உரிமை மறுக்கப்பட்டதற்கு குரல் கொடுப்பவர்களை பார்த்து தோல்வி பயத்தில் பேசுகிறார்கள் என்று கூறினால், நீங்கள் தான் தோல்வி பயத்தில் அமைதியாக உள்ளீர்கள் என்று சொல்வோம். ஏனென்றால் எங்களுக்கு தோல்வி பயம் இல்லை. நிச்சயமாக நான் உள்பட பா.ஜனதா சார்பில் போட்டியிட்டவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    மாநில உரிமையை பறித்து விட்டார்கள், அதனை மீட்க நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம் என முதலமைச்சர் அடிக்கடி பேசி வருகிறார். ஆனால் இங்கு மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

    சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் முதல் ஆளாக வந்து குரல் கொடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் இதுவரை ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மவுனம் காப்பது ஏன்? அவர்களது கூட்டணி கட்சியினரும் இந்த விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்?.

    இவர்கள் அமைதி காப்பதன் மூலம் இந்த சம்பவங்கள் வேண்டும் என்றே நடந்து போல தோன்றுகிறது. இதற்கு நீங்கள் தான் பதில் கூற வேண்டும்.

    தமிழ்நாட்டில் அரிசியிலும் அடிதடி நடக்கிறது. அரசியலிலும் அடிதடி நடக்கிறது. ரேஷன் அரிசியை கடத்தி அதனை மாவாக்கி விற்கிறார்கள்.

    தமிழகத்தில் கஞ்சா, போதை கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. அதனையெல்லாம் விட்டுவிட்டு, பிரதமரை மட்டுமே குறை கூறுவதிலேயே கவனம் செலுத்தக்கூடாது.

    தே.மு.தி.க. முன்னாள் தலைவர் விஜயகாந்த் மீது எங்களுக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் என்றும் உள்ளது. பத்மவிபூஷன் விருது படிப்படியாக ஒவ்வொருவருக்காக தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    #WATCH | Coimbatore, Tamil Nadu: On PM Modi's statement, BJP candidate from South Chennai, Tamilisai Soundararajan says, "...First of all, our Prime Minister's schemes are of inclusive growth. Sabka Saath Sabka Vikas; nobody has been excluded...For the past 50 years, almost half… pic.twitter.com/oTqbdQlI9T

    • எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார்.
    • ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடவள்ளி:

    திருப்பூர் மாவட்டம் எஸ்.பி.காலனியை சேர்ந்தவர் வீரக்குமார்(வயது31).

    இவர் தனது நண்பர்களுடன் கடந்த 18-ந்தேதி கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு வந்தார்.

    பின்னர் தனது நண்பர்களுடன் மலையேறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து நண்பர்களுடன் கீழே இறங்கி கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு வயிறு, காலில் படுகாயம் ஏற்பட்டது.

    இதை பார்த்த அவரது நண்பர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறையினர் விரைந்து வந்து, மலைவாழ் மக்களுடன் சேர்ந்து வீரக்குமாரை மீட்டு, டோலி கட்டி மலையில் இருந்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.

    அவரை பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வீரக்குமார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மற்ற மூன்று மாவட்டங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
    • ஒரே நாளில் 4 மாவட்டங்களில் ஒவ்வொரு இடத்திலும் நடைபெறுகிறது.

    மாபெரும் கருத்தரங்கம்

    ஒரே நாளில் 4 மாவட்டங்களில் ஒவ்வொரு இடத்திலும் வல்லுனர்கள் பேசுவதை மற்ற மூன்று மாவட்டங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

    பங்கேற்பாளர்கள்

    Dr.பிரசாத் அவர்கள். முதன்மை விஞ்ஞானி.

    ஒருங்கிணைப்பாளர். AICRPS. IISR. கோழிக்கோடு.

    Dr. கண்டி அண்ணன் முதன்மை விஞ்ஞானி

    IISR. கோழிக்கோடு.

    Dr. முகமது பைசல். முதன்மை விஞ்ஞானி

    ICAR-IISR. மடிக்கேரி. கர்நாடகா.

    திரு. சிமந்தா சாய்கியா. துணை இயக்குனர்

    இந்திய நறுமணப் பயிர்கள் வாரியம்.போடிநாயக்கனூர்.

    திரு. கனக திலீபன் அவர்கள். உதவி இயக்குனர்.

    இந்திய நறுமண பயிர்கள் வாரியம். ஈரோடு.

    இடம்: புதுக்கோட்டை, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, கடலூர்.

    நாள்: ஏப்ரல் 28 ஞாயிறு

    முன்பதிவு அவசியம்

    94425 90079, 94425 90081

    பயிற்சி கட்டணம் ₹200

    • பறிமுதல் செய்யப்படும் பணம் கோவை மாவட்ட அரசு கருவூலத்திலும், நகைகள் மற்றும் தங்க கட்டிகள் வருமான வரித்துறை அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.
    • 10 பறக்கும் படையினர் மட்டும் மாவட்டத்தில் உள்ள 11 சோதனை சாவடிகளில் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

    இவர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் வெளியில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.

    வியாபாரிகள் அதிகளவில் பணம் எடுத்துச்செல்லும்போது அதற்குரிய ஆவணங்களை காட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

    அவ்வாறு முறையான ஆவணங்களை காட்டாதவர்களின் பணம் மற்றும் நகைகள் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர்.

    பறிமுதல் செய்யப்படும் பணம் கோவை மாவட்ட அரசு கருவூலத்திலும், நகைகள் மற்றும் தங்க கட்டிகள் வருமான வரித்துறை அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் விதமாகவும், அதனை கண்காணிக்கவும், கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டிருந்தது. இதில் போலீசார், வருவாய்த்துறை, 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.

    கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டதால், பறக்கும் படை எண்ணிக்கையை 90-ல் இருந்து 10 ஆக குறைத்துள்ளனர். இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இதுவரை பறக்கும் படையில் இடம் பிடித்து இருந்த அதிகாரிகள் மீண்டும் தங்கள் பணிக்கு திரும்பி பணியை தொடங்கினர்.

    10 பறக்கும் படையினர் மட்டும் மாவட்டத்தில் உள்ள 11 சோதனை சாவடிகளில் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூன் 4-ந் தேதி வரை இந்த பறக்கும் படையினர் பணியில் இருப்பார்கள் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஜன்னல் வழியாக போலீசார் பார்த்தபோது பாலகுமார் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் பாலகுமார் (வயது 38). இவர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சனிக்கிழமை பாதுகாப்பு பணி முடிந்து கோவை கணபதி மாநகரில் உள்ள வீட்டிற்கு திரும்பினார்.

    இந்த நிலையில் அவரது பெற்றோர் பாலகுமாரை போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் பாலகுமார் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாலகுமாரனின் பெற்றோர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் கணபதி மாநகரில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக போலீசார் பார்த்தபோது பாலகுமார் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். உடனே அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பாலகுமாருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி கோவையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். சில வருடங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று லண்டனில் உள்ள ஓட்டலின் கிளைக்கு பணியாற்ற சென்று விட்டார்.

    பாலகுமார் 2 குழந்தைகளையும் தனது பெற்றோர் பராமரிப்பில் விட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெளிநாட்டில் உள்ள தனது மனைவியிடம் பாலகுமார் போனில் பேசியுள்ளார். அப்போது அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மீண்டும் கணவர் பாலகுமாரை லண்டனில் இருந்து அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் அவர் போனை எடுக்காததால் இதுகுறித்து பாலகுமாரின் பெற்றோருக்கு அவர் தகவல் தெரிவித்து வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளார். அதன்பிறகே பாலகுமார் தற்கொலை செய்த விவரம் தெரியவந்தது.

    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    • சித்ரா பவுர்ணமியன்றும், ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்வது வழக்கம்.
    • கடந்த மாதங்களில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று திரும்பியதில் 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.

    தென் கைலாயம் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

    கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு 5.5 கி.மீ மலைப்பாதையில் செல்ல வேண்டும். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையில் ஏழு மலையை கடந்து சென்று அங்கிருக்கும் சுயம்பு லிங்கத்தை தரிசித்து செல்கின்றனர்.

    சித்ரா பவுர்ணமியன்றும், ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்வது வழக்கம். ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே உள்ளது.

    இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளை வருகிறது. இதனையொட்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர். இவர்கள் மலையேறி சென்று சுயம்பு லிங்கத்தை தரிசக்க உள்ளனர்.

    கடந்த மாதங்களில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று திரும்பியதில் 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வனத்துறை பக்தர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதன்படி பக்தர்கள் மலையேறுவற்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்கள், வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும். மாற்று பாதைகளில் செல்லக்கூடாது.

    பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை வனத்திற்குள் போடக்கூடாது. மலையேறும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவு அளிக்க கூடாது.

    எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. மேலும் வனப்பகுதிக்குள் எங்கும் தீ முட்டக்கூடாது.

    வெள்ளியங்கிரி 6-வது மலை ஆண்டி சுனையில் குளித்து விட்டு ஈர துணிகளை அங்கேயே போட்டு விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் இருதய நோய் சம்பந்தப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயதில் மூத்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள், வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். முழு உடல் பரிசோதனை செய்த பின்னரே மலையேறுவதற்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். மலைக்கு சென்று உயிரிழப்புகள் ஏற்படும் போது அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

    மேலும் உயிரிழப்புகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படும் நபர்களை அடிவாரத்திற்கு கொண்டு வருவதற்கு வனத்துறைக்கும் கடும் சவாலாக உள்ளது. மேலும் அனைவரின் நலன் கருதி மேற்கண்ட அறிவுரைகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 823 ஓட்டுக்கள் நீக்கப்பட்டிருந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியவில்லை.
    • தி.மு.க. தற்போது நல்ல ஓட்டுகளை முறைகேடு செய்து தமிழகம் முழுக்க ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வாக்களிக்கச் சென்ற பலர் ஏமாற்றத்துக்கு ஆளானதாகவும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி விளக்கம் அளித்திருந்தார்.

    ஆனால் கலெக்டரிடம் விளக்கம் திருப்தி அளிப்பதாக இல்லை என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. விவசாயிகள் பிரிவு மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் கூறியிருப்பதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதி கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி எண் 214 அங்கப்பா பள்ளியில் 823 ஓட்டுக்கள் நீக்கப்பட்டிருந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியவில்லை.

    அவர்கள் அனைவரும் 30 ஆண்டுகளாக ஓட்டளித்து வருபவர்கள். சொந்த வீட்டில் வசிப்பவர்கள். நல்லாட்சியை விரும்பி ஓட்டளிக்க கூடிய ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

    அதேபோல் தெப்பக்குளம் பகுதி வாக்குச்சாவடி எண் 158-ல் 40 ஓட்டுகளும், 157-ல் 45 ஓட்டுகளும், 156-ல் 20 ஓட்டுகளும், 155-ல் 40 ஓட்டுகளும், 154-ல் 30 ஓட்டுகளும், 153-ல் 25 ஓட்டுகளும் என 200 ஓட்டுகள் நீக்கப்பட்டிருந்தன.

    இவர்கள் அனைவரும் வடமாநிலத்தவர்கள். பிரதமர் மோடிக்கு ஆதரவாக ஓட்டளிப்பவர்கள். இப்படி கோவையில் மட்டும் 5 சதவீத ஓட்டுகள். அதாவது 21 லட்சம் ஓட்டுகளில் ஏறக்குறைய 1 லட்சம் ஓட்டுகள் எந்த முன்னறிவிப்போ, கள விசாரணையோ இன்றி கலெக்டரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தேர்தல் பிரிவு பணியாளர்கள் பெயர்களை நீக்கி உள்ளனர்.

    இதுதொடர்பாக கலெக்டரை நேரடியாக சந்திக்க அவரது அலுவலகத்துக்கு சென்றோம். அங்கு அவர் இல்லை. போனில் தொடர்பு கொண்டோம். சேலஞ்ச் ஓட்டு போட சட்டத்தில் இடமில்லை என்று கூறினார்.

    அங்கப்பா மேல்நிலைப்பள்ளியில் 1,353 ஓட்டுகள் இருந்த நிலையில் 823 ஓட்டுகள் குறைந்தபோது விழித்திருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் மவுனம் காத்து தி.மு.க.வின் விஞ்ஞான முறைகேட்டுக்கு துணை போய் இருக்கிறது.

    கலெக்டர் உரிய நடை முறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது என்கிறார். ஆனால் வாக்குச்சாவடி எண் 214-ல் ஓட்டுகள் மறுக்கப்பட்டது வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. கலெக்டர் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

    இதுசம்பந்தமாக மனு கொடுத்தோம். அப்போதும் வக்கீல்களை நீண்ட நேரம் காக்க வைத்து தேர்தல் முடிந்தபின்பே மனுவை பெற்றுக் கொண்டார். இது தி.மு.க.வின் முறைகேட்டிற்கு மாவட்ட நிர்வாகம் துணை போவதை காட்டு கிறது.

    தி.மு.க. தற்போது நல்ல ஓட்டுகளை முறைகேடு செய்து தமிழகம் முழுக்க ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது. இதை இத்துடன் பா.ஜ.க. விடாது. ஜனநாயக ரீதியில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமுக்கு வந்தன.
    • வருகிற 26-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    கோவை:

    பாராளுமன்றத்திற்கு ஏப்.19 முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

    முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமுக்கு வந்தன.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கலைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அந்த மாநிலங்களையொட்டிய தமிழக மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்ப பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு செயல்பாட்டில் இருக்கும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கேரளாவில் வருகிற 26-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் கேரள மாநில எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளான வாளையார், கோபாலபுரம் ஆகிய 2 சோதனை சாவடிகளில் தலா ஒரு நிலையான கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட உள்ளதாக கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
    • இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா மாநில தலைவரும், பா.ஜ.க. வேட்பாளருமான அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.

    அவருக்கு விளக்கம் அளிக்கும் வகையில் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல் வெளியிடும் போதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களது முன்னிலையிலேயே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் போது வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் சேர்த்தல், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.

    இந்த பணியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    இப்பணியில் அனைத்து நிலைகளிலும் வாக்கா ளர்கள் தங்களின் ஆட்சேபனையை தெரிவிக்க வழி வகை உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளக் கோரி தேர்தல் ஆணையத்தால் பொது மக்களுக்கு தொடர் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

    எளியமுறையில் வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக தேசிய வாக்காளர் சேவை தளம் மூலமாகவும், 1950 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண் மூலமாகவும் பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்படி உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர்களுக்கு இதில் ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவைப்படின் அவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலைரையோ, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தையோ, மாவட்ட தேர்தல் அலுவலகத்தையோ அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
    • கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதளா கிராமங்களில் உள்ள சில கோழி பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து இறந்தது. இறந்த வாத்துகளை ஆய்வு செய்ததில் எச்5என்1 என்ற பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது.

    இதையடுத்து கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழக கேரள எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்ப கவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 12 சோதனை சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்புத்துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா? என்பதை கண்காணித்து வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழக, கேரள எல்லையான வாளையார் உள்பட 12 சோதனை சாவடிகளிலும் சிறப்பு கால்நடை குழுவினர் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த குழுவில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளனர்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்படும் கறிக்கோழிகள், கோழிகளின் எரு, கோழி முட்டைகள், கோழிக்குஞ்சுகள், வாத்துகள், வாத்து முட்டைகள் உள்ளிட்ட பறவைகள் தொடர்பாக பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை எல்லையிலேயே நிறுத்தி கேரளாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தவிர மாவட்டத்தில் 1252 கோழிப்பண்ணைகள் உள்ளது. இந்த பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக கண்காணித்து வருகிறோம்.

    மேலும் பண்ணைகளில் திடீர் கோழி உயிரிழப்புகள், பறவை காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கால்நடை துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீர் நிலைகளில் உள்ள பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    தவிர கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய 432 மாதிரிகள் எடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் தென்படவில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சூலூர் அருகே ராசிபாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
    • கோவை வடக்கில் 58.74, சிங்காநல்லூரில் 59.33 சதவீத வாக்குகளும் பதிவாகியது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

    காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 9.38 சதவீதம் வாக்குகளும், 11 மணி முதல் 1 மணி வரை 36.10 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

    1 மணி முதல் 3 மணி வரை 47.12 சதவீத வாக்குகளும், 3 மணி முதல் 5 மணி வரை 57.53 சதவீத வாக்குகளும் பதிவாகியது. கோவை மாவட்டத்தில் இறுதி நிலவரப்படி மொத்தம் 64.81 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் அதிகபட்சமாக சூலூரில் 75.33 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    பல்லடம் சட்டசபை தொகுதியில் 67.42 சதவீத வாக்குகளும், கோவை வடக்கில் 58.74, சிங்காநல்லூரில் 59.33 சதவீத வாக்குகளும் பதிவாகியது.

    கோவை தெற்கில் 59.25 கவுண்டம்பாளையத்தில் 66.42 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. கோவை பாராளுமன்ற தொகுதியிலேயே சூலூரில் தான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகி இருந்தது.

    ஆனால் வழக்கம் போல மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

    சூலூர் அருகே ராசிபாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. அதனை தொடர்ந்து மாற்று எந்திரம் வைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடந்தது.

    அங்கும் வாக்குப்பதிவு முடிந்த பிறகும் கூடுதலாக 2 மணி நேரம் அனுமதிக்கப்பட்டு இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

    • வெளிநாடுகளில் இருந்து வந்த பலரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.
    • பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை.

    ராம்நகர்:

    கோவை ராம்நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை.

    * ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை.

    * கணவருக்கு ஒரு வாக்குச்சாவடியிலும், மனைவிக்கு ஒரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது.

    * வெளிநாடுகளில் இருந்து வந்த பலரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.

    * பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை.

    * பெயர்கள் நீக்கத்தில் அரசியல் இருக்குமோ என சந்தேகம் எழுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×