search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்கள்"

    • தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாது. வருகிற 14-ந் தேதி தடைகாலம் முடிகிறது.
    • மீன்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள்.

    சென்னை:

    சென்னையில் மீன்கள் விலை அதிகரித்தாலும் மீன்கள் வாங்க இன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    தமிழகத்தில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 -ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாது. வருகிற 14-ந் தேதி தடைகாலம் முடிகிறது.

    சென்னை திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க செல்ல வில்லை. சென்னை காசி மேடு துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்கும் பணியிலும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் தமிழகத்து மார்க்கெட்டுகளுக்கு வருகின்றன. இதனால் மீன்விலை அதிகரித்து உள்ளது.

    சென்னை சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று விற்பனை செய்யப்பட்ட மீன் விலை வருமாறு:-

    சங்கரா கிலோ-ரூ.300, நெத்திலி- ரூ.250, வஞ்சிரம்-ரூ.1000,இறால்-ரூ.350,நண்டு -ரூ.400,சீலா-ரூ.400, வவ்வால் -ரூ.700, கட்லா-ரூ.300, சுறா -ரூ.450, மத்தி-ரூ.200 மீன்பிடி தடையால் அனைத்து மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது.

    பொதுமக்கள் சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன்கள் வாங்க ஆயிரக் கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மீன்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதேபோல நொச்சிக் குப்பம், பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டிலும் மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் இன்று திரண்டனர். இதனால் அங்கு மீன் விற்பனை களைகட்டியது.

    • தமிழ்நாட்டில் மீன் குஞ்சு தேவைக்கு இன்னமும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது.
    • எங்கேயாவது ரசாயன பொருட்களை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தையில் உள்ள அரசு மீன் குஞ்சு உற்பத்தி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் மீன் குஞ்சுகளை பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகளை மீன்வளம், மீனவர் நலத்துைறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மீன் குஞ்சு தேவைக்கு இன்னமும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. உள்நாட்டு மீன் உற்பத்தியை தமிழ்நாட்டில் உள்ள மீன் குஞ்சு பண்ணைகளை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரித்து மக்களுக்கு வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது 75 சதவீத மீன் குஞ்சுகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் கடல் மீன்களும் சேர்த்து ரூ.6500 கோடி அளவிற்கு வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி தடை காலத்தில் மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.5000 நிவாரணம் தரக்கூடிய திட்டத்தை முதலமைச்சர் கொடுத்துக் கொண்டுள்ளார். இன்னும் அதிகரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார்.

    எங்கேயாவது ரசாயன பொருட்களை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .

    தஞ்சையில் கடல் பசு பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. அதற்கான நிதி பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகங்கை வாரச்சந்தையில் கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை பஸ் நிலையப் பகுதியில் தடை செய்யப் பட்ட பாலித்தீன் பை, கப்கள் பயன்படுத்துவ தாகவும் அதே போல் உணவ கங்களில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்வதாகவும், நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து அதிகாரி கள் மேற்கண்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு உணவகங்களில் ரசாயன பொடிகளை பயன் படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப் பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

    அரண்மனை வாசல் பகுதியில் மளிகை குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் பாலித்தீன் பைகள், டீ கப்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் வாரச்சந்தை யில் ஒரு இறைச்சி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கெட்டுப்போன மீன்கள், 50 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • ஒன்றியம் சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேவூர் ஏரி உள்ளது.
    • சேலம் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாகி ஏரி நிரம்பிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேவூர் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சேலம் மற்றும் சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர், திருமணிமுத்தாறு வழியாக வந்தடைகிறது.

    சமீபத்தில் பெய்த கன மழையால் சேலம் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாகி ஏரி நிரம்பிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    சேலத்தில் இருந்து வந்த தண்ணீரில் சாயக் கழிவு அதிக அளவில் வந்ததால் மீன்கள் செத்தனவா? அல்லது மர்ம நபர்கள் யாராவது ஏரி தண்ணீரில் விஷம் கலந்தனரா? என்று தெரியவில்லை. எப்படி மீன்கள் செத்தென என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை

    விடுத்துள்ளனர். 

    • மீன்பிடித்தடை காலத்தில் பெரிய விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது கிடையாது என்பதால் காசிமேடு மார்க்கெட்டில் பெரியவகை மீன்கள் விற்பனை குறைந்து உள்ளது.
    • பைபர் படகுகளில் பிடிக்கப்படும் சிறியவகை மீன்கள் மட்டுமே தற்போது விற்பனைக்கு வருகிறது.

    போரூர்:

    தமிழகத்தில் மீன்படி தடைகாலம் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இது வருகிற ஜுன்14-ந்தேதிவரை 61 நாட்கள் அமலில் இருக்கும். மீன்பிடித்தடை காலத்தில் பெரிய விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது கிடையாது என்பதால் காசிமேடு மார்க்கெட்டில் பெரியவகை மீன்கள் விற்பனை குறைந்து உள்ளது. பைபர் படகுகளில் பிடிக்கப்படும் சிறியவகை மீன்கள் மட்டுமே தற்போது விற்பனைக்கு வருகிறது. இதனால் மீன்விலை உயர்ந்து உள்ளது.

    இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் என்பதால் தற்போது வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து மீன் வரத்து அதிகரித்து உள்ளது. பெரியவகை மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு வருவதால் இப்போது வானகரம் மீன்மார்க்கெட்டுக்கு மக்கள் படையெடுத்து வருகிறார்கள். இதனால் மீன்விலை கடுமையாக அதிகரித்து உள்ளது. எனினும் பிடித்தமான பெரியவகை மீன்கள் உள்ளதால் விலையை பற்றி கவலைப்படாமல் போட்டி போட்டி வாங்கிச்செல்கிறார்கள்.

    வானகரம் மீன்மார்க் கெட்டுக்கு சாதாரண நாட்களில் தினசரி 25 வாகனங்கள் மூலம் சுமார் 125 டன் மீன்கள் விற்ப னைக்கு வருவது வழக்கம். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளான நேற்று மீன்கள் வரத்து 2 மடங்காக அதிகரித்தது. மேலும் மீன் வாங்கி செல்ல வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக ளவில் குவிந்தனர். இதனால் பெரும்பாலான மீன்களும் விற்று தீர்ந்துவிட்டது.

    இன்று மே தினம் விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே மீன் வாங்க வானகரம் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. மீன்விற்பனை சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து மீன் வியாபாரிகள் கூறும்போது,

    மீன்பிடி தடை காலம் தொடங்கிவிட்டதால் காசிமேடு மார்க்கெட்டில் பெரியவகை மீன்கள் விற்பனை குறைந்து உள்ளது. ஆனால் வானகரம் சந்தைக்கு தற்போது ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து அதிகளவில் மீன்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் சில்லரை வியாபாரிகள் வானகரம் சந்தையில் இருந்து மீன்களை வாங்கி செல்கின்றனர் என்றனர்.

    மீன்பிரியர்கள் கூறும்போது, காசிமேட்டில் வாங்கும் மீன்கள் நல்ல சுவையாக இருக்கும். ஆனால் வானகரம் மார்க்கெட்டிற்கு வரும் ஆந்திரா, கேரளா மீன்களில் அந்த அளவுக்கு சுவை இருக்காது. ஆனாலும் தற்போது பெரிய வகை மீன்கள் காசிமேட்டில் கிடைக்காது என்பதால் வானகரம் மார்க்கெட்டில் மீன்கள் வாங்குகிறோம் என்றனர். வானகரம் மார்க்கெட்டில் மீன்விலை (கிலோவில்) வருமாறு:-

    வஞ்சிரம்- ரூ.750 முதல் ரூ.1000 வரை, சங்கரா-ரூ.300, வளர்ப்பு வவ்வால் மீன்-ரூ.150, கடல் வவ்வால் மீன்ரூ-800, இறால்- ரூ.300, நண்டு-ரூ.400.

    • 20 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.
    • கேரை மீன்கள் தலா ஒரு மீன்கள் 40 கிலோ முதல் 90 கிலோ வரை எடையிருந்தது

    கன்னியாகுமரி :

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.

    பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும். கடந்த வாரம் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற படகுகளில் 20 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.

    இவற்றுள் சூரை, புல்லன், வாளை, ஆயில் சுறா, கேரை ஆகிய மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் இம்மீன்களை துறைமுக ஏலக்கூடத்தில் கரையேற்றி விற்பனை செய்தனர்.ஒரு கிலோ புல்லன் தலா கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விலை போனது.

    கேரை மீன்கள் தலா ஒரு மீன்கள் 40 கிலோ முதல் 90 கிலோ வரை எடையிருந்தது. இது கிலோ தலா ரூ.230 வரை விலைபோனது. இது கடந்த வாரத்தை விடவும் ரூ.20 விலை குறைவு. வாளை மீன்கள் தலா கிலோ ரூ.100 வரை விலைபோனது.

    வாளை மீன்களுக்கு வெளியூர் மீன் சந்தையில் நல்ல மவுசு உள்ளதால் வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். இந்த மீன்களை கருவாடு மற்றும் மீன் எண்ணைக்காவும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திடீரென மஞ்சள் நிறமாக மாறியது.
    • மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்று தண்ணீரை எடுத்து பரிசோதனை நடத்தினர்.

    திருவொற்றியூர்:

    எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மீன்களும், நண்டு, இறால்களும் கிடைக்கும்.

    இதில் எண்ணூரை சுற்றி உள்ள எண்ணூர் குப்பம், சின்ன குப்பம், பெரியகுப்பம். காட்டுகுப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திடீரென மஞ்சள் நிறமாக மாறியது. தொழிற்சாலை கழிவு நீரை ஆற்றில் கலந்ததால் இந்த மாசு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்று தண்ணீரை எடுத்து பரிசோதனை நடத்தினர்.

    இதற்கிடையே நேற்று மாலை கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதைப் பார்த்த மீனவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    எண்ணூரை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கொசஸ்தலை ஆற்றில் தொடர்ந்து கலக்கப்பட்டு வருவதாகவும், இதனால் மீன்கள் இறப்பதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • படகில் சமையல் செய்யும்போது எதிர்பாராமல் திடீரென ஸ்டவ் டியூபில் தீப்பற்றியது.
    • தீ மளமளவென பரவி ஜி.பி.எஸ்., எக்கோ சவுண்டு, ஒயர்லெஸ் ஆகியவற்றுள் பரவி எரிந்து நாசமானது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்தவர் டொனோட்டஸ் (வயது 38). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற இவரது படகு, நேற்று மாலை கரை திரும்பியது. படகை தொழிலாளர்கள் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தியிருந்தனர்.

    பின்னர் படகின் சமையல் செய்யும் அறையில் தொழிலாளர்கள் கேஸ் ஸ்டவ்வில் சமையல் செய்து கொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராமல் திடீரென ஸ்டவ் டியூபில் தீப்பற்றியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் பீதியில் படகிலிருந்து வெளியேறி வெளியே வந்தனர்.

    அதற்குள் தீ மளமளவென ஜி.பி.எஸ்., எக்கோ சவுண்டு, ஒயர்லெஸ் ஆகியவற்றுள் பரவி எரிந்து நாசமானது. இதில் படகின் மேற்கூரையும் எரிந்து நாசமானது.உடனே மீனவர்கள் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று படகில் பரவிய தீயை அணைத்தனர். அருகில் படகுகளுக்கு டெம்போவில் கொண்டு வரப்பட்ட தண்ணீரையும் மீனவர்கள் பீய்ச்சி அணைத்தனர். படகில் மீன்கள் பதப்படுத்தி வைத்திருந்த அறையில் தீ பரவவில்லை. இதனால் பிடித்து வரப்பட்ட பல லட்சம் மதிப்பிலான மீன்கள் தப்பின. இந்த சம்பவத்தால் நேற்றிரவு குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்களிடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆழ்கடல் பகுதிக்கு முதலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் மீன் பாடு குறித்து கரையில் உள்ள மீனவர்களுக்கு தகவல் கூறுவது வழக்கம்.
    • தற்போது முதலில் சென்ற விசைப்படகுகளிலிருந்து நல்ல தகவல் வரவில்லை.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடி தொழில் செய்து வரு கின்றன.

    இதில் விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.

    பைபர் வள்ளங்கள் காலையில் கடலுக்குச் சென்று அருகில் மீன்பிடித்து விட்டு மதியம் கரை திரும்பி விடும். இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பிய விசைப்படகுகள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்று உள்ளன.

    முதல் கட்டமாக குளச்சல் கடல் பகுதியில் இருந்து சுமார் 50 விசைப்படகுகளே மீன் பிடிக்க சென்றுள்ளன.மீதி படகுகள் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.அவை மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகிறது.

    ஆழ்கடல் பகுதிக்கு முதலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் மீன் பாடு குறித்து கரையில் உள்ள மீனவர்களுக்கு தகவல் கூறுவது வழக்கம். இதன் அடிப்படையில் மற்ற விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லும்.அந்த வகையில் தற்போது முதலில் சென்ற விசைப்படகுகளிலிருந்து நல்ல தகவல் வரவில்லை.

    இதனால் குளச்சல் கடல் பகுதியில் இருந்து மீதி விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதற்கிடையே பைபர் வள்ளம், கட்டுமரங்களிலும் போதிய மீன்கள் கிடைக்க வில்லை. இதனால் வியா பாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில்கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் விசைப்படகுகளில் இந்த சீசனில் 'கேரை'மீன்கள் பிடிபடும். ஆனால் தற்போது கேரை மீன்கள் கிடைக்க வில்லை.ஓரளவு கிளி மீன்களே கிடைக்கிறது.பிடிபடும் இந்த மீன்களும் விசைப்படகின் டீசல் செலவுக்கு கூட பற்றாக்குறையாக உள்ளது என்றனர்.

    • பணம் அரசு கணக்கில் சேர்ப்பு
    • தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் குளச்சல் அரபிக்கடல் பகுதிக்கு வரும் கர்நாடகா விசைப்படகு மீனவர்கள் தமிழக அரசால் கடலில் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட 'சாவாளை' மீன்களை சட்ட விரோதமாக பிடித்து செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குளச்சல் அரபிக்கடல் பகுதியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளில் வந்த 29 மீனவர்கள் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை பிடித்து வருவதாக குளச்சல் மீன்பிடி துறைமுக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து குளச்சல் விசைப்படகு மீனவர்கள் உதவியுடன் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த கர்நாடகாவை சேர்ந்த 3 விசைப்படகுகளை சுற்றி வளைத்து பிடித்து குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் 3 விசைப்படகுகளில் இருந்த கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த 29 மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சட்ட விரோதமாக, தடை செய்யப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான சாவாளை மீன்களை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அமிர்தேஸ்வரி, அமிர்தா னந்தா, அஜனா ஆகிய மூன்று விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த மீன்களையும் அதிகளவில் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அமிர்தேஸ் வரி படகின் உரிமையாளர் சச்சின், அமிர்தானந்தா படகின் உரிமையாளர் நாகம்மா, அஜனா படகின் உரிமையாளர் அசரப் ஆகியோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதனையடுத்து பறி முதல் செய்யப்பட்ட மீன்கள் நேற்று குளச்சல் துறைமுக ஏலக்கூடத்தில் குவித்து வைக்கப்பட்டு ஏலமிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ரூ.10 லட்சத்திற்கும் மேல் இந்த சாவாளை மீன்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.இந்த மீன்கள் மீன் எண்ணை மற்றும் கோழி தீவனங்கள் தயாரிக்க பயன்படுவதால் மீன் எண்ணை நிறுவனத்தினர் இதனை வாங்கி சென்றனர்.இந்த சாவாளை விற்பனை செய்யப்பட்ட தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • குறுக்குபாளையம் என்ற இடத்தில் குளம் உள்ளது.
    • விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் குழாய் நீர் நிலை உயரும்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள குறுக்குபாளையம் என்ற இடத்தில் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு மழைக்காலங்களில் வெள்ளகோவிலில் இருந்து வரும் மழை நீர் மூலனூர் ரோடு, சின்னக்கரை வழியாக குறுக்குபாளையத்தில் உள்ள குளத்திற்கு வந்து சேரும்.இந்த குளத்தில் தண்ணீர் நிற்பதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் குழாய் நீர் நிலை உயரும். தற்போது குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது.

    இந்தநிலையில் குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீன்கள் இறந்தது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை சிவவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து வந்தனர்.
    • படகு மூலம் நடு கடலுக்கு சென்ற சிவ பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை கடலில் விட்டு பிடித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார்நகர் மீனவ குலத்தில் பிறந்த அதிபத்த நாயனார் சிவபெருமானிடம் பக்தி கொண்டு தான் பிடிக்கும் மீனை தினமும் சுவாமிக்காக கடலில் விடுவது வழக்கம்.

    இவரது பக்தியை சோதித்த சிவபெருமான் இவரது வலையில் தங்கமீன் ஒன்றை கிடைக்கும்படி செய்தார்.

    அதிபத்தநாயனார் அம்மீனையும் சிவபெருமானுக்காக வேண்டிக்கொண்டு கடலில் விட்டார்.

    அதிபத்தநாயனாரின் பக்தியை மெச்சிக்கும் விழா நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நடைபெறுவது வழக்கம்.

    தங்க மீன் படைக்கும் விழா நாகப்பட்டினம் நம்பியார் நகர் கடற்கரையில் நடைபெற்றது.

    நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை சிவவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து வந்தனர்.

    அதனைத் தொடர்ந்து படகு மூலம் நடு கடலுக்கு சென்ற சிவ பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை கடலில் விட்டு பிடித்தனர்.

    மீன்களுடன் கரை திரும்பிய சிவனடியார்கள் கடற்கரையில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு அதிபத்தநாயனார் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை வைத்து படையல் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.

    ×