search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீன்கள் விலை அதிகரித்தாலும் சென்னையில் மீன் வாங்க திரண்ட பொதுமக்கள் கூட்டம்
    X

    மீன்கள் விலை அதிகரித்தாலும் சென்னையில் மீன் வாங்க திரண்ட பொதுமக்கள் கூட்டம்

    • தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாது. வருகிற 14-ந் தேதி தடைகாலம் முடிகிறது.
    • மீன்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள்.

    சென்னை:

    சென்னையில் மீன்கள் விலை அதிகரித்தாலும் மீன்கள் வாங்க இன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    தமிழகத்தில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 -ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாது. வருகிற 14-ந் தேதி தடைகாலம் முடிகிறது.

    சென்னை திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க செல்ல வில்லை. சென்னை காசி மேடு துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்கும் பணியிலும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் தமிழகத்து மார்க்கெட்டுகளுக்கு வருகின்றன. இதனால் மீன்விலை அதிகரித்து உள்ளது.

    சென்னை சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று விற்பனை செய்யப்பட்ட மீன் விலை வருமாறு:-

    சங்கரா கிலோ-ரூ.300, நெத்திலி- ரூ.250, வஞ்சிரம்-ரூ.1000,இறால்-ரூ.350,நண்டு -ரூ.400,சீலா-ரூ.400, வவ்வால் -ரூ.700, கட்லா-ரூ.300, சுறா -ரூ.450, மத்தி-ரூ.200 மீன்பிடி தடையால் அனைத்து மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது.

    பொதுமக்கள் சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன்கள் வாங்க ஆயிரக் கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மீன்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதேபோல நொச்சிக் குப்பம், பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டிலும் மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் இன்று திரண்டனர். இதனால் அங்கு மீன் விற்பனை களைகட்டியது.

    Next Story
    ×