search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்கள்"

    • கூவத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
    • திருவேற்காடு காடுவெட்டி செல்லும் தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது‌

    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி பகுதி வழியாக கூவம் ஆறு சென்னை நோக்கி செல்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கூவம் என்ற இடத்தில் இருந்து தொடங்கும் இந்த ஆறு சென்னையை நெருங்கும் வரை நல்ல தண்ணீர் ஆறாக உள்ளது . இதற்கு பிறகு கழிவுநீர் கலந்து சாக்கடை ஆறாக மாறி விடுகிறது.

    திருவேற்காடு அருகே காடுவெட்டி பகுதியில் இன்று காலை கூவத்தில் செடிகளுக்கு மத்தியில் அதிக அளவில் மீன்கள் செத்து மிதப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை கொண்டு கூவத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த பகுதியில் மட்டும் நான்கு டன்களுக்கு மேலாக மீன்கள் செத்து மிதந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மீனும் அரை கிலோ முதல் ஒரு கிலோ எடை கொண்ட மீன்களாக இருந்தது. மேலும் செடிகளுக்கு மத்தியில் மீன்கள் அதிக அளவில் செத்து மிதப்பதால் செடிகளை அப்புறப்படுத்தி விட்டு செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கூவத்தில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கழிவுநீரை விட்டு செல்வதாகவும் தனியார் நிறுவனங்களில் இருந்து ரசாயனங்கள் கூவத்தில் கலப்பதும் இது போன்று மீன்கள் செத்து மிதக்க காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது வெயிலின் தாக்கம் மற்றும் நீருக்கு அடியில் ஆக்சிஜன் அளவு குறைந்தால் மீன்கள் செத்திருக்கலாம் எனவும், ஆற்றில் நச்சு கலந்த நீர் கலந்து மீன்கள் இறந்ததா என்பதை அறிய மீன்களை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். வேறு ஏதேனும் தனியார் நிறுவனங்களில் இருந்து ரசாயனம் கலந்த கழிவுநீர் கூவத்தில் கலக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் இரவு நேரங்களில் கழிவுநீர் லாரிகள் மூலம் கழிவு நீர் கொட்டப்படுகிறது. மேலும் ஆற்றங்கரை பகுதியில் உள்ள குடியிருப்புகள், தனியார் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை ஆற்றில் கலந்து விடுகின்றனர். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆற்றுப்பகுதியை அதிகாரிகள் சரியாக பராமரிப்பது இல்லை, கண்காணிப்பதும் இல்லை. ஏற்கனவே மழைக்காலத்திற்கு முன்பாகவே மழை நீர் செல்லும் ஆற்றுப்பகுதியை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் அது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆற்றின் மேற்பரப்பு முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் குப்பைகள் நிரம்பி தண்ணீர் செல்ல வழி இன்றி அடைத்து கிடைக்கிறது. தற்போது திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஜாங்கீர் பாஷா, சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் இறந்த மீன்களையும் செடிகளையும் அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது டன் கணக்கில் அங்கு மீன்கள் செத்து மிதப்பதால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் சிரமமடைந்துள்ளனர். மேலும் திருவேற்காடு காடுவெட்டி செல்லும் தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது

    • நீரில் விஷம் கலக்கப்பட்டதா ? போலீசார் விசாரணை
    • ஏரியில் நீர் குறைவாக இருந்ததால் வெப்பம் தங்காமல் மீன்கள் இறந்ததா,

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த ஜூன் மாதம் மழவராயநல்லூர், பள்ளத் தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 75) என்பவர் மீன் வளர்ப்பதற்கு குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்து வந்துள்ளார். 

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏரியில் இருந்து வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் நேற்று காலை 7 மணியளவில் ஏரிக்கு சென்று பார்த்தார். அப்போது ஏரியில் ஏராளமான ஜிலேபி, கட்லா மற்றும் இதர கெண்டை வகை என சுமார் 1.5 டன் மதிப்பிலான மீன்கள் நீரில் இறந்தும், கரை ஒதுங்கியும் கிடந்தது. வேறுசில வகை மீன்கள் நல்ல நிலையில் ஏரியில் உள்ளது. இது சம்பந்தமாக ஏரியின் குத்தகைதாரர் நாராயணசாமி திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று யாரேனும் நீரில் விஷம் கலந்தனரா, அல்லது ஏரியில் நீர் குறைவாக இருந்ததால் வெப்பம் தங்காமல் மீன்கள் இறந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். ஏரியில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதற்காக தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2-ம் தர நண்டு ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • மீன்களின் விலை அதிகரித்ததால் மீன் பிரியர்கள் கவலை அடைந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீன்பிரியர்கள் குவிந்ததால் மீன்பிடி துறைமுகம் நிரம்பி வழிந்தது. ஆனால் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் கிடைக்காத காரணத்தால் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். மீன் வரத்து குறைந்த காரணத்தால் கடந்த வாரத்தை விட மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டதால் மீன் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    குறிப்பாக கடந்த வாரம் 450 ரூபாய்க்கு விற்பனையான பாறை மீன் 500 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்பனையான வஞ்சரம் மீன் 750 ரூபாய்க்கும், 450 ரூபாய்க்கு விற்பனையான சீலா மீன் 480 ரூபாய்க்கும், கரட்டை மீன் 370, கிளி மீன் 350 ரூபாய், கடல் விறால் 600, என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல இறால் 700 ரூபாய்க்கும், முதல் ரக நண்டு நண்டு 700 ரூபாய்க்கும், இரண்டாம் தர நண்டு 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    4 ஆயிரம் லிட்டர் முதல் டீசல் செலவு செய்து, ஐஸ், மீன்பிடிக்க தேவையான தளவாட பொருட்கள் , ஆட்கள் கூலி என 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள் தொழில் நஸ்டம் ஏற்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக ஒரு விசைப்படகில் 10 நபருக்கு மேல் தொழிலுக்கு செல்வதால் படகு உரிமையாளர் மட்டுமின்றி வேலையாட்கள் மற்றும் அவர்களின் குடும்பம் என 40 குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்கள். இருந்தபோதிலும் மீன்களின் விலையை பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே நாகை துறைமுகத்தில் குவிந்த மீன்பிரியர்கள் மீன்களை வாங்கி சென்றனர்.

    • மீன்களை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிகாலையிலேயே அதிகளவில் திரண்டனர்.
    • கடந்த வாரம் ரூ.500-க்கு விற்ற சங்கரா மீன் ரூ.400 விற்பனையாகி உள்ளது.

    நாகப்பட்டினம் : 

    நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, காமேஸ்வரம் புஷ்பவனம், கோடியக்கரை, உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசை படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீன்வர்கள் இன்று ஞாயிற்று கிழமை என்பதால் அதிகாலை கரை திரும்பினர். மீன்களை வாங்குவதற்கு மீன்பிரி யர்கள், மீன் வியாபாரிகள் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் நாகை துறைமுகத்தில் திரண்டனர்.

    ஒரு சில விசை படகுகளில் அதிக அளவில் கனவா மீன்களும் ஏற்றுமதிக்காக இறால் நண்டுகள் என கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் கூட, நாளை ஆடி அமாவாசை என்பதால் விற்பனை சற்று மந்தமாக இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    அதாவது கடந்த வாரம் ரூ500 விற்ற சங்கரா 400 க்கு விற்பனையாகி உள்ளது.

    கேரள மாநிலத்தில் ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இரண்டு மாதம் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் அதிக அளவில் கேரள மீன் வியாபாரிகள் மீன்கள் வாங்குவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக முகாமிட்டு இன்று மீன்களை அதிக அளவில் வாங்கி கொண்டு கனரக வாகன மூலம் கேரளாவுக்கு செல்கின்றனர்.இதே போல் திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன் வியாபாரிகள் மீன்கள் வாங்க வந்துள்ள நிலையில் நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மீன் பிரியர்கள் ஏராளமானோர் துறைமுகத்தில் குவிந்துள்ளதால் நாகை மீன்பிடித் துறைமுகம் களைக்கட்டி உள்ளது.

    மீன்களின் விலையை பொருத்தவரை வஞ்சரம் ஒரு கிலோ 650- 900, பாறை 350 முதல் 450,சீலா 400 முதல் 450,கண்ணாடி பாறை 400 முதல் 450,இறால் 400 முதல் 500 க்கும் விற்பனையாகிறது

    • இறால் மற்றும் கெண்டை மீன்கள் கடந்த 27-ந் தேதி மர்மநபர்களால் திருடப்பட்டது.
    • 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி உப்பனாற்று கரையில் தமிழக அரசு மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள நவீன மீன் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது.

    இந்த விற்பனை நிலையத்திற்கு அருகே உள்ள மீன் தொட்டியில் விற்பனை போக மீதம் இருந்த ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள இறால் மட்டும் கெண்டை மீன்கள் கடந்த 27 தேதி மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கடை உரிமையாளர் சிவகுமார் (வயது 47) என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் சீர்காழி போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் சீர்காழிஅருகே சட்டநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்வகுமார் (வயது 31) ஈசானிய தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 56) ஆகிய இருவரும் மீன்களை திருடியது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து சீர்காழி போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

    • செவ்வாய் சந்தை செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டார பகுதி மக்களிடம் பெயர் பெற்று வந்தது.
    • வெளியூர் வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் எம்.என்.குப்பம் பகுதியில் 50 ஆண்டிற்கு முன்பு துவங்கப்பட்ட பாரம்பரிய "செவ்வாய் சந்தை", செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டார பகுதி மக்களிடம் பெயர் பெற்று வந்தது. இன்று அது பெயரளவில் மட்டுமே இயங்கி வருகிறது.

    முன்பு போல் மாடுகள் ஏலம், கோழி விற்பனை, கிராமத்து விளையாட்டு பொருட்கள், மளிகை, காய்கறி, பழங்கள், தின்பண்டங்கள் என பலவகை பொருட்கள் வருவதில்லை., தற்போது இங்கு மீன் கருவாடுகள், மாடுகள் மட்டுமே குறைந்த அளவில் விற்கப்படுகிறது. அதுவும் போதிய அளவில் லாபத்தை தருவதில்லை என வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்த பாரம்பரிய சந்தை மீண்டும் பிரபலமாக, அதை விரிவாக்கம் செய்து, வியாபாரிகள் வெயில், மழையில் பொருட்களை பாதுகாக்க கூறை, கழிப்பறை, வாகனம் நிறுத்தும் இடம், உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி கொடுத்தால் இங்கு இன்னும் கூடுதலாக வெளியூர் வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    • புதுவையில் கடல் அரிப்பை தடுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • இந்தியாவிலேயே முதல் முறையாக புதுவை அரசு நீல புரட்சிக்காக கையெழுத்திட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கம்பன் கலையரங்கத்தில் மீன்வளத்துறை சார்பில் விழா நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    புதுவையில் கடல் அரிப்பை தடுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக பகுதியில் கற்கள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இருமாநில அரசுகளும் பேச்சு வார்த்தை மூலம் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக புதுவை அரசு நீல புரட்சிக்காக கையெழுத்திட்டுள்ளது.

    42 கி.மீ. கடற்கரையை நீல பொருளாதார மண்டலமாக மாற்ற புதுவையை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. அந்தளவு மத்திய அரசு புதுவை மீது அக்கறையும், பாசமும் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கவர்னர் தமிழிசை பேசும்போது, முட்டை அசைவமா? சைவமா? என்ற சர்ச்சை நீடித்து வருகிறது.

    அதேபோல மீனை சாப்பிடாதோர் அசைவம் என்றும், சாப்பிடுவோர் சைவம் என்றும் சொல்கின்றனர். எனக்கு பிடித்த உணவு மீன். என்னை பொருத்த வரை மீனை சைவத்தில் சேர்க்கலாம். இதனால் மீனவர்களின் வாழ்வு மேம்படும் என்றார்.

    • கருப்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பின் இந்த கண்மாயில் மீன்களை விட்டுச்செல்வது வழக்கம்.
    • பெரும்பாலானோருக்கு பல்வேறு ரக மீன்கள் கிலோ கணக்கில் கிடைத்தன.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள முதலைக்குளம் கருப்பு கோவில் அருகே முதலைக்குளம் கண்மாய் உள்ளது. 487 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாய் மூலம் இந்தப்பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது.

    கருப்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பின் இந்த கண்மாயில் மீன்களை விட்டுச்செல்வது வழக்கம்.

    இந்த கண்மாயை ஏலம் விடும் நடைமுறை இல்லை. ஆனால் வருடந்தோறும் முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா உற்சாகமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது.

    மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று இரவு முதல் முதலைக்குளம் கண்மாயை முற்றுகையிட்டனர். இன்று அதிகாலை 5 மணிக்கு கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி, பெரியாறு பாசன கூட்டமைப்பு தலைவர் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜை முடிந்தபின் 3 முறை வெடிகள் வெடிக்கப்பட்டு மீன்பிடி திருவிழா தொடங்கியது. வெடி வெடித்து முடித்தவுடன் கரையில் நின்றிருந்த சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் முதலைக்குளம் கண்மாயில் திபுதிபுவென இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்பிடித்தனர்.

    இதில் பெரும்பாலானோருக்கு பல்வேறு ரக மீன்கள் கிலோ கணக்கில் கிடைத்தன. அவர்கள் மகிழ்ச்சியுடன் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

    • வாரச்சந்தையில் கெட்டுப்போன 100 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி சாலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வாரச்சந்தையை தேவகோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள 100-க் கும் மேற்பட்ட கிராமங் களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, தேனி மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் இச்சந்தையில் வியாபாரம் செய்து வருகிறார்கள். சமீப காலமாக தரம் குறைந்த மீன்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பிரபாவதி ஆேலாசனையின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் தலைமையில் மாணிக்கம், நகராட்சி பணியாளர்கள் வாரச்சந்தையில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது 100 கிலோ கெட்டுப்போன மீன்கள், 50 கிலோ தரம் குறைந்த கருவாடு, 50 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மீன், கருவாடு, மாம்பழங் களை நகராட்சி பணி யாளர்கள் அழித்தனர்.

    மேலும் வியாபாரிகளிடம் உள்ள தராசு, எடைக்கற்கள் ஆகியவற்றையும் அதிகாரி கள் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரசாயன கழிவுகள் ஏரியில் கலக்கப்படுவதால் டன் கணக்கான மீன்கள் செத்து நீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் துர்நாற்றதால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சி ரயில்வே இருப்புப் பாதை அருகே புட்லூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி 6 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரியும் நீரை கொண்டு 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது

    இந்த புட்லூர் ஏரிக்கு அருகே காக்களூர் தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து ரசாயன கழிவுகள் முறையாக வெளியேற்றப்படாமல் சேமித்து வைக்கப்பட்டு மழைக் காலங்களில் மழை நீருடன் கலந்துவிடுவதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக ஆண்டுதோறும் கனமழை பெய்யும் வேலைகளில் ரசாயன கழிவுகள் தொழிற்சாலைகளில் இருந்து திறந்து விடப்பட்டு ஏரியில் கலக்கப்படுவதால் டன் கணக்கான மீன்கள் செத்து நீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக மழை நீருடன் ரசாயனக் கலவையையும் புட்லூர் ஏரியில் விடப்பட்டதால் சுமார் 5 டன்னுக்கும் மேலான மீன்கள் ஏரியில் செத்துமிடந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

    இதனால் புட்லூர் ஏரியைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் துர்நாற்றதால் அவதிப்பட்டு வருகின்றனர். மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சின்னமுட்டம் மீனவர்கள் மகிழ்ச்சி
    • 2 மாதங்களுக்கு பிறகு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று முதல் களைகட்ட தொடங்கி விட்டது

    கன்னியாகுமரி :

    மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந்தேதி நள்ளிர வுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

    ஆனால் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின் காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கசெல்ல மீன்வளத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து விசைப்படகுமீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சில அனுமதி கேட்டு கடந்த 4 நாட்களாக சின்னமுட்டத் தில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முற்றுகை யிட்டு வலியுறுத்தி வந்தனர். ஆனால் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அவர்களுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி அளிக்க வில்லை.

    இருப்பினும் சின்ன முட்டம் விசைப்படகு மீனவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை மீறி மீன் பிடிக்க செல்ல முடிவு செய்தனர்.அதன்படி நேற்று அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

    முதல் நாளான நேற்று ஒரே நாளில் 295 விசைப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இந்த விசைப்ப டகுகள் இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினார்கள்.

    தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கொ ழுவை, நெடுவா, முட்டி, கணவாய், நவரை, அயிலை போன்ற உயர் ரக மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் பிடித்துக் கொண்டு வந்த உயர் ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர்.

    இதனால் 2 மாதங்களுக்கு பிறகு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று முதல் களைகட்ட தொடங்கி விட்டது. தடை நீங்கி கடலுக்கு சென்றமுதல் நாளே ரூ.2கோடி மதிப்புள்ள மீன்கள் சிக்கின. இதனால் சின்னமுட்டம் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூண்டில் மற்றும் வலைவீசியும் மீன் பிடித்து வருகின்றனர்.
    • கொசஸ்தலை ஆற்றில் காணப்படும் மீன்கள் நன்கு வளர்ச்சியடைந்து 5 கிலோவுக்கும் மேல் சிக்குகிறது.

    பொன்னேரி:

    தமிழகத்தில் இன்னும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. பல இடங்களில் 105 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. பருவமழையின் போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பாய்ந்தது. தற்போது கோடைகாலம் என்பதால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து உள்ளது.

    இந்த நிலையில் மீஞ்சூரை அடுத்த நாப்பாளையம் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர்குறைந்து காணப்படுவதால் மீன்பிடித் தொழில் அதிகமாக நடைபெறுகிறது. ஏராளமான மீனவர்கள் வலை வீசி மீன்பிடித்து வருகிறார்கள். மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூண்டில் மற்றும் வலைவீசியும் மீன் பிடித்து வருகின்றனர்.

    மீனவர்களின் வலையில் ஜிலேபி, சொட்டைவாளை, கெழுத்தி கெண்டை, விரால், இறால் உள்ளிட்ட மீன்கள் அதிக எடையுடன் கிடைத்து வருகிறது. சுமார் ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை மீன்கள் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இவை கிலோ ரூ.500 வரை விற்கப்படுகிறது.

    சாதாரண வகை மீன்கள் கிலோ ரூ.200 முதல் ரூ.300-க்கும், விரால் மீன் கிலோ ரூ.500-க்கும், நன்னீர் இறால் ரூ. 800 முதல் ரூ.1000 வரையும் விற்பனை ஆகிறது. ஆற்றுமீனை ஏராளமனோர் போட்டிபோட்டு வாங்கி செல்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் கொசஸ்தலை ஆற்றின் கரையில் மீன்வியபாரம் களை கட்டி வருகிறது.

    இதுகுறித்து மதூர் கிராமத்தைச் சேர்ந்த மீன்வியாபாரி புலிமணி கூறும்போது, நான் கடந்த 10 வருடத்திற்கு மேலாக ஆறு, ஏரி குளங்களில் மீன் பிடித்து வருகிறேன். தற்போது கொசஸ்தலை ஆறு, நாப்பாளையம், சிம்மாவரம், காரனோடை, பகுதிகளில் வலை போட்டு மீன் பிடிக்கிறேன். கொசஸ்தலை ஆற்றில் காணப்படும் மீன்கள் நன்கு வளர்ச்சியடைந்து 5 கிலோவுக்கும் மேல் சிக்குகிறது. விரால் மற்றும் இறால், மீனுக்கென்று தனி மவுசு உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் மீன் விற்பனை ஆகிறது. ஏராளமானோர் ஆற்று மீன்களை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்றார்.

    ×