search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநிலங்களவை"

    • இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதும் நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
    • சத்தீஸ்கரில் உள்ள 72,000 பேர் இந்த சட்டத்தின்மூலம் பயனடைவார்கள் என மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா கூறினார்.

    சத்தீஸ்கரில் உள்ள தனுஹர், தனுவர், கிசான், சான்ரா, சவோன்ரா மற்றும் பிஞ்சியா சமூகங்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.

    பாராளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருகின்றனர்.  மாநிலங்களவையில் அமளிக்கு மத்தியில் அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) சட்டம் (ஐந்தாவது திருத்தம்) மசோதா-2022 விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்திற்கு பின் குரல் வாக்கெடுப்பின்மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.  எதிர்க்கட்சி எம்பி.க்கள் ஏற்கனவே வெளிநடப்பு செய்ததால் அவர்கள் இல்லாமலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    முன்னதாக விவாதத்திற்கு பதிலளித்த மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா, சத்தீஸ்கரில் உள்ள 72,000 பேர் இந்த சட்டத்தின்மூலம் பயனடைவார்கள் என்றார். இது ஒரு சிறிய எண்ணிக்கைதான், ஆனால் இது பழங்குடியினர் நலனில் அரசின் அக்கறையை எடுத்துரைக்கிறது என்றும் அவர் கூறினார்.

    தனுஹர், தனுவர், கிசான், சான்ரா, சவோன்ரா மற்றும் பிஞ்சியா சமூகங்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்க்க இந்த சட்டத்திருத்தம் வகை செய்கிறது. புயின்யா, புய்யான் மற்றும் புயான் ஆகிய சமூகங்களை பரியா பூமியா சமூகத்தின் ஒத்த வார்த்தைகளாக முறைப்படுத்தவும் இந்த சட்டத்தில் உள்ளது. மேலும் இந்த மசோதாவில் பாண்டோ சமூக பெயரின் மூன்று தேவநாகரி பிரிவுகளும் அடங்கும்.

    இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதும் நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த மசோதா 2022 டிசம்பரில் மக்களவையில் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய இணை மந்திரி அஷ்வினி குமார் சவுபே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
    • விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிடுவார்கள்.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் பருவமழையால் ஏற்பட்ட சரக்கு போக்குவரத்து பாதிப்பு, விளைச்சல் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானிய விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. எனினும் இது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைப்பதால், பெரிய அளவில் பலன் கொடுக்கவில்லை.

    இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை மந்திரி அஷ்வினி குமார் சவுபே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறிருப்பதாவது:-

    மகாராஷ்டிராவின் நாசிக், நரியங்கான் மற்றும் அவுரங்காபாத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்கும்போது தக்காளி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது தக்காளி விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிடுவார்கள். எனவே வரும் மாதங்களில் தக்காளி வரத்து அதிகரித்து விலை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பருவகால விலை ஏற்ற இறக்கம், கோலாரில் வெள்ளை ஈ நோய் தாக்குதல், நாட்டின் வடக்குப் பகுதியில் திடீர் பருவ மழையின் தாக்கம் ஆகியவை அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தக்காளி பயிர்களை மோசமாகப் பாதித்துள்ளது. மழையால் சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்றத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து அமளியில் ஈடுபட்டனர்.
    • உறுப்பினர்கள் அமளியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், அவை தலைவர் தன்கார் அவையை மீண்டும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளியால் அவை நடவடிக்கைகள் இன்று 12வது நாளாக முடங்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோன்று, பாராளுமன்ற மேலவையும், மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்றத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதன்பின்னர் மேலவை கூடியது. அப்போது அதானி விவகாரம் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதில், வன பாதுகாப்பு திருத்த மசோதா, 2023 பற்றிய கூட்டு குழுவுக்கான நியமனம் பற்றிய தீர்மானம் அவையில் எடுத்து கொள்ளப்பட்டது, சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் சார்பில், உறுப்பினர்களை நியமிப்பது பற்றிய தீர்மானம் கொண்டு வரப்பட்டதும், குரல் வாக்கெடுப்பு வழியே அது நிறைவேற்றப்பட்டது.

    இந்த சூழலில், உறுப்பினர்கள் அமளியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், அவை தலைவர் தன்கார் அவையை மீண்டும் ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதன்படி வருகிற திங்கட்கிழமை காலை 11 மணி வரை (ஏப்ரல் 3) ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதற்கு முன், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளியால் மக்களவை வருகிற ஏப்ரல் 3ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    • அவை நடவடிக்கைகளை தடுத்ததற்காக உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.
    • குற்றம்சாட்டப்பட்டவர்களில் 9 எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து அடிக்கடி முழக்கங்கள் எழுப்பியதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளை தடுத்ததற்காக உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். உரிமை மீறல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கும்படி பாராளுமன்ற உரிமைக் குழுவை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.

    குற்றம்சாட்டப்பட்டவர்களில் 9 எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், 3 பேர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் மாநிலங்களவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.
    • நீங்கள் சேற்றை அள்ளி வீசினாலும் தாமரை அதிகமாக மலரும் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக கடந்த 31-ம் தேதி பேசினார். இந்த உரைக்கு மரபுப்படி நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விவாதம் நடந்தது.

    மக்களவையில் விவாதம் முடிந்த நிலையில் அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். மாநிலங்களவையில் நேற்று விவாதம் முடிந்த நிலையில் பிரதமர் மோடி பதிலளித்து பேச எழுந்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு, பிரதமருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதுடன், அதானி மீது அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து அமளியில் ஈடுபட்டனர்.

    எதிர்க்கட்சிகள் அவ்வப்போது கோஷங்கள் போட்டு, அமளியில் ஈடுபட்டபோதும், அதற்கு மத்தியில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    600 திட்டங்களுக்கு நேரு-காந்தி குடும்ப பெயரை சூட்டி உள்ளனர். முதல் பிரதமர் நேரு மாபெரும் தலைவர் என்றால், அவரது வாரிசுகள் ஏன் அவரது பெயரை தங்களது பெயர்களின் பின்னால் சேர்ப்பதில்லை?

    காங்கிரஸ் கட்சி தனது அரசியல் அபிலாஷைகளைப் பற்றியே கவலைப்பட்டது. நாட்டின் நலன் குறித்து அல்ல. ஆனால் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். நாங்கள் நாட்டை முன்னோக்கி அழைத்துச்செல்வதில் கடினமாக உழைக்கிற பாதையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம். இந்த பணியில் தொழில்நுட்பம் உதவியாக உள்ளது.

    அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவைத் தவறாகப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை 90 முறை கலைத்து, மாநிலங்கள் மற்றும் மாநிலக் கட்சிகளின் உரிமைகளை காங்கிரஸ் கட்சி மிதித்துப்போட்டது. யார் அதைச் செய்தது? இந்திரா காந்தி மட்டுமே அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி, மாநில அரசுகளை 50 முறை கலைத்தார். ஆனால் இப்போது அவர்கள் எல்லாம் காங்கிரசுடன் அமர்ந்திருக்கிறார்கள். நான் அவர்களை அம்பலப்படுத்த விரும்புகிறேன். (காங்கிரசால் கேரளாவில் இடதுசாரிஅரசு, ஆந்திராவில் என்.டி.ராமாராவ் அரசு, மராட்டியத்தில் சரத் பவார் அரசு, தமிழ்நாட்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் அரசு, கருணாநிதி அரசு கலைக்கப்பட்டதாக பட்டியலிட்டார்.)

    கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி குழி பறித்தது. அது அதன் நோக்கமாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் குழி பறித்திருக்கிறது. அவர்கள் 60 ஆண்டு காலத்தை வீணாக்கி விட்டனர்.

    மாநிலங்களில் உள்ள பல கட்சிகள் இலவசங்களைத் தருவதாக வாக்குறுதிகள் அளிக்கின்றன. தேர்தல்களுக்காக பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற பெரும் பணப்புழக்கத் திட்டத்துக்கு திரும்புகின்றன. இப்படி நிதி ஆரோக்கியத்துடன், பொருளாதாரக் கொள்கைகளுடன் விளையாடக் கூடாது. அடுத்த தலைமுறைக்கு சுமையாக அமையத்தக்க விதத்தில் எந்த பாவமும் செய்யாதீர்கள்.

    எனது அரசு எல்லா நலத்திட்டங்களின் பலன்களும் எல்லா மக்களையும் சென்றடைவதை நோக்கமாக கொண்டுள்ளது. 100 சதவீதம் நிறைவைக் காண விரும்புகிறது. சாதி, மதத்தின் பெயரால் திருப்திப்படுத்தும் எந்தவொரு நோக்கத்துக்கும் முடிவு கட்ட விரும்புகிறது என தெரிவித்தார்.

    தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின்மூலம் நிறைவேறியது.

    • பொது சிவில் சட்டத்துக்கான சாத்தியக் கூறுகள் குறித்து 21வது சட்ட ஆணையம் ஆராய்ந்தது.
    • மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கிரிமினல் குற்றங்களுக்கு மட்டுமே ஒரே விதமான சட்டம் இருக்கிறது. சிவில் என்று சொல்லப்படக்கூடிய திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நாடு முழுவதும் வெவ்வேறு விதமான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் மாற்றி விட்டு பொது சிவில் சட்டம் என்று ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை நீண்ட நாட்களாக பல்வேறு தரப்பினர் கோரிக்கையாக வைத்து வருகின்றனர். பொது சிவில் சட்டத்துக்கான சாத்தியக் கூறுகள் குறித்து 21வது சட்ட ஆணையம் ஆராய்ந்தது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் பதில் அளித்துள்ளார்.

    பொது சிவில் சட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அது தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குமாறு 21வது சட்ட ஆணையத்திடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. 21வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று முடிவடைந்துவிட்டது. சட்ட ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, பொது சிவில் சட்டம் தொடர்பான விஷயத்தை 22வது சட்ட ஆணையம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்' என்றும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    • சீன அத்துமீறல் பிரச்சினை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை.
    • அவை நடவடிக்கையை ஒத்தி வைத்து விவாதிக்க கோரி நோட்டீஸ்

    அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு கட்சிகள் சார்பில் வழங்கப்பட்ட ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ்கள் அவைத் தலைவரின் பரிசீலனையில் இருந்தன. 

    இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியதும், மாநிலங்களவையில் சீன பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது 267 விதியின் கீழ் எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ்கள் சரியான முறையில் இல்லை என்று கூறிய அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவற்றை நிராகரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் வெளிநடப்புச் செய்தனர்.

    • கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன.
    • இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின் செயற்கைக்கோள்களும் அடங்கும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.

    இஸ்ரோவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி-எம்கே3 ராக்கெட்டுகள் மூலம் கடந்த 2018 முதல் 2022 வரை என 5 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின் 177 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

    இதுபோன்ற வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் மூலம் 94 மில்லியன் அமெரிக்க டாலரும், 46 மில்லியன் யூரோவும் அந்நியச் செலாவணியாக இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

    • அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க அரசுக்கு கோரிக்கை.
    • தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையை விவாதிக்க அரசு மறுப்பதாக புகார்.

    அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டர் பகுதியில் அத்து மீறிய சீனா ராணுவ வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து கடந்த 13ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்தார். இந்நிலையில் மாநிலங்களவையில் சீன விவகாரம் தொடர்பாக விவாதிக்க, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    விதி எண் 267 இன் கீழ் சீன விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மேலும் பல காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று நோட்டீஸ் அளித்திருந்தனர். மாநிலங்களவை நிகழ்ச்சி தொடங்கியதும், அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. ஆனால் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்த ஹரிவன்ஷ் அதை அனுமதிக்கவில்லை. இதனால் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை  சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

    பின்னர் அவை கூடியபோது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய பாதுகாப்பு தொடர்பான மிகக் கடுமையான இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் கோரும் விவாதங்களுக்கு அரசு அனுமதி வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டினார். அப்போது குறுக்கிட்ட ஹரிவன்ஷ், விதி எண் 267ன் கீழ் விவாதம் நடத்த கோருவதை ஏற்க இயலாது என்று மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார்.

    மேலும் எதிர்க்கட்சிகள் அளித்துள்ள நோட்டீஸ்கள் அவை தலைவரின் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். மேலும் அவையின் மையப் பகுதிக்கு சென்று அவர்கள் முற்றுகையிட்டதால் நண்பகல் 12 மணிவரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

    • வன விலங்குகள் பாதுகாப்பு திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
    • காப்புக் காடுகளை சிறப்பாக பராமரித்து, வன விலங்குகளைப் பாதுகாக்க இந்த மசோதா வகை செய்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் வன விலங்குகள் பாதுகாப்பு திருத்த மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. காப்புக் காடுகளை சிறப்பாக பராமரித்து, வன விலங்குகளைப் பாதுகாக்கவும், அந்தப் பகுதிகளில் கால்நடைகளை மேய்த்தல், குடிநீர் வசதி போன்ற குறிப்பிட்ட செயல்பாடுகளை அனுமதிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

    இந்நிலையில், நேற்று இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டதால், இரு அவைகளின் ஒப்புதலை பெற்று விட்டது.

    மேலும், மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

    நைஜீரிய கடல் பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு வர்த்தக கப்பல் சிறைபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 16 இந்திய மாலுமிகள் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். அவர் கினியாவில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் மீது சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்களை மீட்க நைஜீரியா மற்றும் கினியா அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். கொேரானா பரவல் காரணமாக, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்ல இந்தியர்கள் விசா பெறுவதில் சவால்களை சந்தித்து வருவது மத்திய அரசுக்கு தெரியும். விசா வழங்குவதை எளிமைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அரசுகளை வலியுறுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

    • குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    • மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியுடன் யாத்திரையைத் தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. குஜராத் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டத்தொடர் ஒரு மாதம் தாமதமாக தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில், பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்புணர்வை அதிகரிக்கவும், தேர்தல் செயல்முறையை சீர்திருத்தவும் வகை செய்யும் மசோதா உள்ளிட்ட 16 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஜெய்ராம் ரமேஷ், திக்விஜய் சிங் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தலைவர்கள் அனைவரும் தற்போது ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் தொடர்ந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாத யாத்திரையில் இருந்து வேறு நிகழ்ச்சியில் கவனம் செலுத்துவதை கட்சித் தலைமை விரும்பவில்லை என்றும் அதனால்தான் மூத்த தலைவர்கள் குளிர்கால கூட்டத்தொடரைத் தவிர்த்துவிட்டு ராகுல் காந்தியுடன் யாத்திரையைத் தொடர முடிவு செய்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கே, கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையின்படி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். சோனியா காந்தி தலைமையில் இன்று மாலையில் நடைபெற உள்ள கூட்டத்தில், மாநிலங்களவையின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரசின் செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    அதேசமயம் காங்கிரஸ் தலைவர் கார்கேவையே மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக தொடர அனுமதிக்கலாமா? என்று கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது. இது குறித்து சோனியா காந்தி, கட்சியின் மற்ற மூத்த தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து இன்று இறுதி முடிவு எடுக்கலாம்.

    ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை கடைப்பிடிக்க முடிவு செய்தால், ப.சிதம்பரமும், திக்விஜய சிங்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யப்படலாம். 

    • அந்த பதவி கிடைக்காததால் நான் அதிருப்தி அடையவில்லை.
    • பதவியில் அமர்ந்த நாள் முதல் யார் மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை.

    கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் 13-வது குடியரசு துணைத் தலைவராக பணியாற்றிய வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் 10ந் தேதியுடன் நிறைவு பெற்றதையொட்டி, பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது

    அப்போது பேசிய மாநிலங்களவைத் தலைவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளதாவது:

    நாட்டின் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதில்லை, அந்த பதவி கிடைக்காததால் நான் அதிருப்தி அடையவில்லை. இந்த பதவியில் அமர்ந்த நாள் முதல் யார் மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. நான் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன், அவர்களுடன் தொடர்ந்து பழகுவேன்.

    பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதிக்கவும், விவாதிப்பதற்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்.

    அரசியல்வாதிகளைப் பற்றிய இயல்பான உணர்வு எல்லா இடங்களிலும் குறைந்து வருகிறது, அவர்களை பற்றி மதிப்பு குறைந்து வருவதே இதற்குக் காரணம். அதை மனதில் வைத்து உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.

    பாராளுமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். இப்போது மாணவர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் பிற பகுதி மக்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளைப் பார்க்கிறார்கள். அதனால்தான் சில நேரங்களில் நான் கண்டிப்புடன் இருக்கி வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×