search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நேருவின் வாரிசுகள் அவரது பெயரை ஏன் குடும்ப பெயராக வைக்கவில்லை? - பிரதமர் மோடி கேள்வி
    X

    பிரதமர் மோடி

    நேருவின் வாரிசுகள் அவரது பெயரை ஏன் குடும்ப பெயராக வைக்கவில்லை? - பிரதமர் மோடி கேள்வி

    • ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.
    • நீங்கள் சேற்றை அள்ளி வீசினாலும் தாமரை அதிகமாக மலரும் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக கடந்த 31-ம் தேதி பேசினார். இந்த உரைக்கு மரபுப்படி நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விவாதம் நடந்தது.

    மக்களவையில் விவாதம் முடிந்த நிலையில் அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். மாநிலங்களவையில் நேற்று விவாதம் முடிந்த நிலையில் பிரதமர் மோடி பதிலளித்து பேச எழுந்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு, பிரதமருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதுடன், அதானி மீது அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து அமளியில் ஈடுபட்டனர்.

    எதிர்க்கட்சிகள் அவ்வப்போது கோஷங்கள் போட்டு, அமளியில் ஈடுபட்டபோதும், அதற்கு மத்தியில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    600 திட்டங்களுக்கு நேரு-காந்தி குடும்ப பெயரை சூட்டி உள்ளனர். முதல் பிரதமர் நேரு மாபெரும் தலைவர் என்றால், அவரது வாரிசுகள் ஏன் அவரது பெயரை தங்களது பெயர்களின் பின்னால் சேர்ப்பதில்லை?

    காங்கிரஸ் கட்சி தனது அரசியல் அபிலாஷைகளைப் பற்றியே கவலைப்பட்டது. நாட்டின் நலன் குறித்து அல்ல. ஆனால் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். நாங்கள் நாட்டை முன்னோக்கி அழைத்துச்செல்வதில் கடினமாக உழைக்கிற பாதையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம். இந்த பணியில் தொழில்நுட்பம் உதவியாக உள்ளது.

    அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவைத் தவறாகப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை 90 முறை கலைத்து, மாநிலங்கள் மற்றும் மாநிலக் கட்சிகளின் உரிமைகளை காங்கிரஸ் கட்சி மிதித்துப்போட்டது. யார் அதைச் செய்தது? இந்திரா காந்தி மட்டுமே அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி, மாநில அரசுகளை 50 முறை கலைத்தார். ஆனால் இப்போது அவர்கள் எல்லாம் காங்கிரசுடன் அமர்ந்திருக்கிறார்கள். நான் அவர்களை அம்பலப்படுத்த விரும்புகிறேன். (காங்கிரசால் கேரளாவில் இடதுசாரிஅரசு, ஆந்திராவில் என்.டி.ராமாராவ் அரசு, மராட்டியத்தில் சரத் பவார் அரசு, தமிழ்நாட்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் அரசு, கருணாநிதி அரசு கலைக்கப்பட்டதாக பட்டியலிட்டார்.)

    கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி குழி பறித்தது. அது அதன் நோக்கமாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் குழி பறித்திருக்கிறது. அவர்கள் 60 ஆண்டு காலத்தை வீணாக்கி விட்டனர்.

    மாநிலங்களில் உள்ள பல கட்சிகள் இலவசங்களைத் தருவதாக வாக்குறுதிகள் அளிக்கின்றன. தேர்தல்களுக்காக பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற பெரும் பணப்புழக்கத் திட்டத்துக்கு திரும்புகின்றன. இப்படி நிதி ஆரோக்கியத்துடன், பொருளாதாரக் கொள்கைகளுடன் விளையாடக் கூடாது. அடுத்த தலைமுறைக்கு சுமையாக அமையத்தக்க விதத்தில் எந்த பாவமும் செய்யாதீர்கள்.

    எனது அரசு எல்லா நலத்திட்டங்களின் பலன்களும் எல்லா மக்களையும் சென்றடைவதை நோக்கமாக கொண்டுள்ளது. 100 சதவீதம் நிறைவைக் காண விரும்புகிறது. சாதி, மதத்தின் பெயரால் திருப்திப்படுத்தும் எந்தவொரு நோக்கத்துக்கும் முடிவு கட்ட விரும்புகிறது என தெரிவித்தார்.

    தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின்மூலம் நிறைவேறியது.

    Next Story
    ×