search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளம்"

    • சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது
    • கடலரிப்பு ஏற்பட்டு கொட்டப்பட்ட மணல்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் ராட்சத அலைகள் எழுந்து கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி விழுந்தது.

    இதில் ஆலயத்தின் அருகில் ஏற்பட்ட கடல ரிப்பில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் கிழக்கு பகுதியில் 2 இடங்களில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கடலில் விழுந்தது. தொடர்ந்து ஏற்படும் கடலரிப்பிலிருந்து வீடுகளை பாதுகாக்க அங்கு தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.

    இதையடுத்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. முயற்சியால் மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் சார்பில் கடலரிப்பில் ஏற்பட்ட பள்ளத்தில் மணல் கொட்டப்பட்டது. அங்கு கடலரிப்பு காலங்களில் வீடுகளை பாதுகாக்க நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குளச்சல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. கொட்டில்பாட்டில் மணல் கொட்டப்பட்ட பகுதியில் மீண்டும் கடலரிப்பு ஏற்பட்டு கொட்டப்பட்ட மணல்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொட்டில்பாட்டில் ஏற்பட்ட மீண்டும் கடலரிப்பு பகுதிகளை நேற்று பிரின்ஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் பங்குத்தந்தை ராஜ், மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணை தலைவர் முனாப் மற்றும் நிர்வாகிகள் அந்தோணி தாசன், ஜார்ஜ், மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஸ்டார்வின் உள்பட ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.

    கடலரிப்பு பகுதியை பார்வையிட்ட பின்னர் பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆண்டுதோறும் நடக்கும் கடலரிப்பில் கொட்டி ல்பாட்டில் மீனவர் கிரா மத்தை பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்து வேன் என உறுதி அளித்தார்.

    • இருவழிச்சாலைகளாக மாற்ற முயற்சி மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
    • 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதை குறைக்கும் வகையில் ஒரு சில சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மாநகராட்சி மேயராக மகேஷ் பொறுப்பேற்றதும் பல்வேறு சாலைகளை இருவழிச்சாலைகளாக மாற்ற முயற்சி மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

    முதல் கட்டமாக கோட்டார் நாராயண குரு மண்டபத்திலிருந்து சவேரியார் ஆலயம் வரும் சாலை இருவழி பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. காலை நேரங்களில் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

    சாலை விசாலமாக காட்சி அளிப்பதால் போக்குவரத்து நெருக்கடி இன்றி வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டார் டெக்சி ஸ்டாண்ட் பகுதியில் உள்ள நிழற்கூடையின் முன்பகுதியில் குடிநீர் பைப்பில் சரி செய்வதற்காக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளம் தோண்டப்பட்டது.

    10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று பணிகள் நடைபெறவில்லை. அந்த சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் போலீசார் அந்த பகுதியில் தடுப்பு வேலிகளை வைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இரு புறங்களில் இருந்தும் வாகனங்கள் வர முடியாமல் சிரமப்பட்டனர்.

    இதையடுத்து இருபுறமும் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு அதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகவே காணப்பட்டது.

    எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக அந்த பணியை துரிதமாக முடித்து சாலையில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தை மணல் நிரப்பி மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டி களும் கோரிக்கை வைத்துள்ள னர்.

    இதில் மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    • நேற்று இரவு இந்த கார் மாம்பழப்பட்டு அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்தது.
    • காரை அங்கேயே நிறுத்திவிட்டு, பஸ் ஏறி சென்று விட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் சென்றுள்ளனர். நேற்று இரவு இந்த கார் மாம்பழப்பட்டு அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசாமாக யாருக்கும் காயமோ, உயிரழப்போ இல்லை. விபத்துக்குள்ளான காரில் வந்தவர்கள், காரை அங்கேயே நிறுத்திவிட்டு, பஸ் ஏறி சென்று விட்டனர். இது தொடர்பாக காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்கு மூடப்படாமல் இருந்த 8 அடி ஆழ பள்ளத்தில் திடீரென பசு மாடு தவறி விழுந்தது.
    • 30 நிமிடம் போராட்டத்திற்கு பின்னர் பசுமாட்டை பத்திரமாக வெளியே மீட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கொண்டி ராஜபாளையம் பகுதியில் பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு மூடப்படாமல் இருந்த 8 அடி ஆழ பள்ளத்தில் திடீரென பசு மாடு தவறி விழுந்தது.

    மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

    இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் உதவி மாவட்ட அலுவலர் பழ. தியாகராஜ், சிறப்பு நிலைய அலுவலர் ரவி, தீயணைப்பு வீரர் பிரபாகரன் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் பசுமாடு மீது கயிறை போட்டு கட்டினர்.

    30 நிமிடம் போராட்டத்திற்கு பின்னர் பசுமாட்டை பத்திரமாக வெளியே மீட்டனர். 

    • வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்திற்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • சாலையின் இருபுறமும் அரை அடியில் பள்ளம் உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை எனும் கிராமம் உள்ளது.

    இங்குள்ள வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், இங்குள்ள ராமர் பாதம் முதல் கோடியக்கரை வரை உள்ள சாலையின் இருபுறமும் அரை அடியில் பள்ளம் உள்ளது.

    இதனால் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    மேலும், அந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் பயணம் செல்பவர்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

    இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும், அப்பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற குழகர்கோவிலில் வைகாசி விசாக திருவிழா இந்த மாதம் நடைபெற உள்ளது.

    இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலைகளில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
    • சாலைகளில் பள்ளம் தோண்டுவது பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்று மாலை கருமேகங்கள் திரண்டன. 5 மணிக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த இந்த மழை காரணமாக சங்கரன் கோவில் முக்கு, காந்தி கலைமன்றம், சத்திரப்பட்டி ரோடு, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    மாலை நேரத்தில் பெய்த மழையால் கல்லூரி மற்றும் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றவர்கள் கடும் அவதியடைந்தனர். நேற்று பெய்த ஒரு மணி நேர பலத்த மழையால் ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

    இங்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் இந்த பணிகள் தற்போது வரை முடியவில்லை. இதன் காரணமாக ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. நேற்று பெய்த கனமழையால் இந்தப்பகுதியில் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்துசெல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர்.

    இதேபோல் சத்திரப்பட்டி, ஆலங்குளம், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கணபதியாபுரம் ரெயில்வே தரைபாலத்திலும், மலையடிப்பட்டி சாலையிலும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியது. இதனால் அந்த வழியே சென்ற கனரக வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் கடந்து சென்றன.

    ராஜபாளையம் நகரில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி திட்டப்பணிகள் என்ற பெயரில் சாலைகளில் பள்ளம் தோண்டுவது பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது. இதனால் நகரில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.

    மழை நேரத்தில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கிவிடுவதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

    • இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    • ரெயில் தண்டவாளம் அருகில் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.

    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம்- மல்லிப்பட்டிணம் சாலையில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகில் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை இயக்க முடியாமல் மாற்றுப்பாதையில் செல்லும்போது வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே, உடனடியாக குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திடீர் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நேரில் ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
    • ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு ஆராய்ச்சிக்கு பின்னர்தான் முழு தகவல் தெரியவரும் என தெரவித்தனர்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கூவல்குட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. மலையடிவாரம் இவரது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.

    வழக்கம் போல் கடந்த 20-ந் தேதி காலை தண்ணீர் பாய்ச்சுவதற்காக முருகேசன் சென்றுள்ளார்.

    அப்போது, நிலத்தின் நடுப்பகுதியில் திடீர் சத்தத்துடன் 15 அடி 40 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு, விவசாய நிலம் உள்வாங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான முருகேசன் மற்றும் 100 நாள் திட்ட பணியாளர்கள் அருகில் யாரும் செல்லாதவாறு 100 மீட்டர் தொலைவுக்கு கயிறு கட்டி பாதுகாப்பு செய்யப்பட்டி ருந்தது.

    பள்ளத்தின் அடியில் தண்ணீர் செல்வது போல சலசலப்பு சத்தம் கேட்டது.

    இச்சம்பவம் அப்பகுதியில் வேகமாக பரவியது. சுற்றுப்பகுதியிலிருந்து ஏராளமா னோர் வந்தனர். தீயணைப்பு, போலீஸ் மற்றும் வருவாய்த்து றையினர் வந்து பார்த்தனர். இது சம்மந்தமாக மாவட்டம் நிர்வாகம் மூலம் இந்திய புவியியல் ஆய்வு மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சென்னையில் உள்ள புவியியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் ஹிஜாஸ்பஷீர் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் அசரார் அஹமத் மற்றும் ஜெயபால் ஆகியோர் கூவல்குட்டை கிராமத்துக்கு சென்று நிலத்தில் ஏற்பட்ட பள்ளத்தையும், சுற்றியுள்ள பகுதிகளையும் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் இருந்து மண் மற்றும் பாறை துண்டுகளை சேகரித்து பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு ஆராய்ச்சிக்கு பின்னர்தான் முழு தகவல் தெரியவரும் என தெரவித்தனர்.

    இது குறித்து திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

    "திடீர் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நேரில் ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

    ஒரு வாரத்தில் மற்றொரு குழு ஆய்வுக்கு வரும் என்றார். மேலும், அருகில் நீரூற்று உள்ளதா அல்லது சமீப காலங்களில் அந்த பகுதியில் வேறு ஏதேனும் பணிகள் நடந்துள்ளதா என உள்ளூர் அதிகாரிகளிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். 

    • மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • நேற்று முன்தினம் வேலைக்கு வந்தவர் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வடக்கம்பட்டியை சேர்ந்தவர் மணி(50). கள்ளிக்குடியில் உள்ள ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்தார். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு வந்த மணி, பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.

    இந்தநிலையில் கள்ளிக்குடி-டி.கல்லுப்பட்டி மெயின்ரோட்டில் அகத்தாபட்டி கண்மாய் கரையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் தவறி விழுந்து இறந்து கிடப்பதாக பொதுமக்கள் கள்ளிக்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சென்று பார்த்த போது இறந்து கிடந்தது மணி என்பது தெரியவந்தது.

    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    பள்ளம் கடற்கரை பகுதியில் இன்று காலை பெண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. இதை பார்த்த பொதுமக்கள் சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    கடற்கரை பகுதியில் பெண் பிணமாக கிடந்ததால் இது குறித்து கன்னியாகுமரி கடலோர காவல் படை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா தலைமையிலான போலீசாரும் அங்கு வந்தனர். பிணமாக கிடந்தவர் 65 வயது மதிக்கத்தக்க பெண் என்பது தெரியவந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

    அவர் இன்று காலை கடலில் குளிக்கும் போது தவறி விழுந்தாரா? இல்லை தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணமாக கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • கடந்த சில வருடத்திற்கு முன்பு தற்போது பள்ளம் விழுந்த பகுதிக்கு அருகில் பள்ளம் ஏற்பட்டது.
    • பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னையில் பெரம்பூர் பேரக்ஸ் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதில் இரவு-பகலாக வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த சாலையில் அதிகாலை 1 மணியளவில் டவுட்டன் பாலம்-பட்டாளம் சந்திப்புக்கு இடையே பழைய புவனேஸ்வரி தியேட்டர் பகுதியில் 'திடீர்' பள்ளம் ஏற்பட்டது.

    20 அடி ஆழத்திற்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டு மண் சரிந்துள்ளது. வாகன போக்குவரத்து இல்லாத நேரத்தில் பள்ளம் ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பகலிலோ அல்லது இரவு நேரத்திலோ பள்ளம் ஏற்பட்டு இருந்தால் உயிர் சேதம் கூட ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.

    பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மாநகர பஸ்கள் மட்டுமின்றி ஷேர் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. வடசென்னை பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகளில் இந்த சாலை முக்கியமானதாக உள்ளது.

    சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை அந்த பகுதியில் உள்ள மக்கள் பார்த்து விட்டதால் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கினர். பள்ளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைத்து அந்த இடம் அருகில் பாதுகாப்பை மேற்கொண்டனர்.

    அதிகாலை நேரம் என்பதால் ஒன்று, இரண்டு வாகனங்கள் மட்டுமே சென்றன.

    கடந்த சில வருடத்திற்கு முன்பு தற்போது பள்ளம் விழுந்த பகுதிக்கு அருகில் பள்ளம் ஏற்பட்டது. ஏற்கனவே 2 முறை அடுத்தடுத்து அந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டு உள்ள நிலையில் தற்போது 3-வது முறையாக இன்று பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அந்த பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர். தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டுள்ளனர்.

    புரசைவாக்கத்தில் இருந்து வியாசர்பாடி, பெரம்பூர், அயனாவரம், மூலக்கடை, மாதவரம், செங்குன்றம், கொளத்தூர், பெரியார் நகர், விநாயகபுரம், குமரன் நகர், ரெட்டேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் பெரம்பூர்-பேரக்ஸ் சாலையில் செல்ல அனுமதி இல்லை. இதே போல மறுமார்க்கத்தில் இருந்து வரும் பஸ்களும் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    காலையில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட பிற வாகனங்கள் அஷ்டபுஜ சாலை உள்ளிட்ட பிற சாலைகள், தெருக்கள் வழியாக செல்கின்றன.

    இதற்கிடையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது சென்னை கழிவுநீர் பிரதான குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகதான் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகி இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.

    பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அடியில் 1000 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட பிரதான கழிவுநீர் குழாய் செல்கிறது. அதில் இருந்து தான் நீர் வெளியேறி பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதா? இணைப்பு பகுதியில் இருந்து நீர் வெளியேறுகிறதா? என்பது பள்ளத்தில் இருந்த மண்ணை வெளியே எடுத்த பிறகுதான் தெரிய வரும்.

    எந்த அளவிற்கு குழாயில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனை எப்படி சரி செய்வது என்பது குறித்து குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கழவுநீர் குழாய் உடைப்பை சரி செய்த பிறகுதான் பள்ளத்தை மூட முடியும். அதனால் அங்கு குடிநீர் வாரிய ஊழியர்கள், காலையில் இருந்து பணியை தொடங்கி உள்ளனர்.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கழிவுநீர் குழாயில் இருந்து நீர் வெளியேறியதன் மூலம் மண் அரிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதனால்தான் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    சமீபத்தில் பெய்த மழையின்போது அடைப்புகளை சரி செய்ய எந்திரம் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. அதிகளவில் இந்த குழாயில் இருந்து அழுத்தம் கொடுத்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டதால் பைப்பில் கசிவு ஏற்பட்டு இருக்கலாம். குழாயின் மீதுள்ள மண்ணை அகற்றினால்தான் பாதிப்பு குறித்து முழுமையாக தெரிய வரும்.

    ஆனாலும் போர்க்கால அடிப்படையில் இரவு பகலாக இந்த பணி நடைபெறும். குழாய் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை மாற்றுவதற்கு தயாராக மாற்று குழாய் உள்ளது.

    இந்த பணி நிறைவடைய 3 நாட்கள் ஆகலாம். அது வரையில் அந்த சாலையில் போக்குவரத்து நடைபெறாது. குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பள்ளத்தை சரி செய்யும் பணி மும்முரமாக நடைபெறுவதால் அந்த பகுதியில் போலீசார் நிறுத்தப்பட்டு போக்குவரத்தை திருப்பி விடுகின்றனர்.

    • ஒரு ஆண்டுக்கு முன்பே அஞ்சல் நிலையம் அருகே உள்ள தார்சாலையின் 2பக்கமும் உடைப்பு ஏற்பட்டு பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
    • நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநகராட்சி 53 -வது வார்டுக்குட்பட்ட பாலாஜி நகர் செல்லும் சாலையில் வீரபாண்டி துணைஅஞ்சல் நிலையம் உள்ளது. இந்த அஞ்சல் நிலையத்துக்கு சின்னக்கரை,கரைப்புதூர், ஏ.பி.நகர்.வித்தியாலம், நொச்சிப்பாளையம், அவரப்பாளையம்*வ,ரபாண்டி. பலவஞ்சிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் தினந்தோறும் இந்த அஞ்சல் நிலையத்துக்கு வந்து செல்கின்றார்கள்.

    இந்தநிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பே அஞ்சல் நிலையம் அருகே உள்ள தார்சாலையின் 2பக்கமும் உடைப்பு ஏற்பட்டு பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.மேலும் பாதாளச் சாக்கடை சேதமடைந்துள்ளது.அந்த வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் அதற்குள் விழுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் அஞ்சல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே பெரிய விபத்து ஏற்படும் முன்பு மாநகராட்சி உடனடியாக பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

    ×