search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரம்பூர் பேரக்ஸ் சாலை"

    • கடந்த 26-ந்தேதி அதிகாலையில் உருவான இந்த பள்ளத்தை உடனடியாக பொதுமக்கள் பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலையில் இருந்து பஸ் போக்குவரத்து தொடங்கியது.

    சென்னை:

    சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் அஷ்டபூஜம் தெருவிற்கு செல்லக்கூடிய பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. 20 அடி ஆழம் அளவிற்கு ஏற்பட்ட பள்ளத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    கடந்த 26-ந்தேதி அதிகாலையில் உருவான இந்த பள்ளத்தை உடனடியாக பொதுமக்கள் பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    கழிவுநீர் குழாய் உடைந்து அதில் இருந்து நீர் வெளியேறி மண் அரிப்பு ஏற்பட்டதே திடீர் பள்ளம் உருவாவதற்கு காரணம். இதையடுத்து போர்க்கால அடிப்படையில் பள்ளத்தை சீரமைக்கும் பணி அங்கு நடைபெற்றது.

    இதனால் அந்த பகுதியில் பஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இதற்கிடையில் பள்ளத்தில் சரிந்து விழுந்த மண் வெளியே எடுக்கப்பட்டு மீண்டும் மண் சரிவு ஏற்படாமல் பாதுகாப்புடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    சேதமடைந்த 1000 மில்லி மீட்டர் அகலமுள்ள கழிவு நீர் குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் போடப்பட்டது. மீண்டும் கழிவுநீர் கசிவு ஏற்படாத வகையில் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளத்தை நிரப்பி சிமெண்ட் கலவையால் மூடப்பட்டது.

    அந்த பகுதியில் மீண்டும் பள்ளம் ஏற்படாத வகையில் பணிகள் செய்து முடிக்கப்பட்டன. இதையடுத்து பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலையில் இருந்து பஸ் போக்குவரத்து தொடங்கியது.

    அனைத்து வாகனங்களும் இந்த சாலையில் சென்றன. நேற்று இரவு முதல் 2 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் வடசென்னை பகுதி வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கடந்த சில வருடத்திற்கு முன்பு தற்போது பள்ளம் விழுந்த பகுதிக்கு அருகில் பள்ளம் ஏற்பட்டது.
    • பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னையில் பெரம்பூர் பேரக்ஸ் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதில் இரவு-பகலாக வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த சாலையில் அதிகாலை 1 மணியளவில் டவுட்டன் பாலம்-பட்டாளம் சந்திப்புக்கு இடையே பழைய புவனேஸ்வரி தியேட்டர் பகுதியில் 'திடீர்' பள்ளம் ஏற்பட்டது.

    20 அடி ஆழத்திற்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டு மண் சரிந்துள்ளது. வாகன போக்குவரத்து இல்லாத நேரத்தில் பள்ளம் ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பகலிலோ அல்லது இரவு நேரத்திலோ பள்ளம் ஏற்பட்டு இருந்தால் உயிர் சேதம் கூட ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.

    பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மாநகர பஸ்கள் மட்டுமின்றி ஷேர் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. வடசென்னை பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகளில் இந்த சாலை முக்கியமானதாக உள்ளது.

    சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை அந்த பகுதியில் உள்ள மக்கள் பார்த்து விட்டதால் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கினர். பள்ளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைத்து அந்த இடம் அருகில் பாதுகாப்பை மேற்கொண்டனர்.

    அதிகாலை நேரம் என்பதால் ஒன்று, இரண்டு வாகனங்கள் மட்டுமே சென்றன.

    கடந்த சில வருடத்திற்கு முன்பு தற்போது பள்ளம் விழுந்த பகுதிக்கு அருகில் பள்ளம் ஏற்பட்டது. ஏற்கனவே 2 முறை அடுத்தடுத்து அந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டு உள்ள நிலையில் தற்போது 3-வது முறையாக இன்று பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அந்த பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர். தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டுள்ளனர்.

    புரசைவாக்கத்தில் இருந்து வியாசர்பாடி, பெரம்பூர், அயனாவரம், மூலக்கடை, மாதவரம், செங்குன்றம், கொளத்தூர், பெரியார் நகர், விநாயகபுரம், குமரன் நகர், ரெட்டேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் பெரம்பூர்-பேரக்ஸ் சாலையில் செல்ல அனுமதி இல்லை. இதே போல மறுமார்க்கத்தில் இருந்து வரும் பஸ்களும் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    காலையில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட பிற வாகனங்கள் அஷ்டபுஜ சாலை உள்ளிட்ட பிற சாலைகள், தெருக்கள் வழியாக செல்கின்றன.

    இதற்கிடையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது சென்னை கழிவுநீர் பிரதான குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகதான் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகி இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.

    பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அடியில் 1000 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட பிரதான கழிவுநீர் குழாய் செல்கிறது. அதில் இருந்து தான் நீர் வெளியேறி பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதா? இணைப்பு பகுதியில் இருந்து நீர் வெளியேறுகிறதா? என்பது பள்ளத்தில் இருந்த மண்ணை வெளியே எடுத்த பிறகுதான் தெரிய வரும்.

    எந்த அளவிற்கு குழாயில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனை எப்படி சரி செய்வது என்பது குறித்து குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கழவுநீர் குழாய் உடைப்பை சரி செய்த பிறகுதான் பள்ளத்தை மூட முடியும். அதனால் அங்கு குடிநீர் வாரிய ஊழியர்கள், காலையில் இருந்து பணியை தொடங்கி உள்ளனர்.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கழிவுநீர் குழாயில் இருந்து நீர் வெளியேறியதன் மூலம் மண் அரிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதனால்தான் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    சமீபத்தில் பெய்த மழையின்போது அடைப்புகளை சரி செய்ய எந்திரம் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. அதிகளவில் இந்த குழாயில் இருந்து அழுத்தம் கொடுத்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டதால் பைப்பில் கசிவு ஏற்பட்டு இருக்கலாம். குழாயின் மீதுள்ள மண்ணை அகற்றினால்தான் பாதிப்பு குறித்து முழுமையாக தெரிய வரும்.

    ஆனாலும் போர்க்கால அடிப்படையில் இரவு பகலாக இந்த பணி நடைபெறும். குழாய் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை மாற்றுவதற்கு தயாராக மாற்று குழாய் உள்ளது.

    இந்த பணி நிறைவடைய 3 நாட்கள் ஆகலாம். அது வரையில் அந்த சாலையில் போக்குவரத்து நடைபெறாது. குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பள்ளத்தை சரி செய்யும் பணி மும்முரமாக நடைபெறுவதால் அந்த பகுதியில் போலீசார் நிறுத்தப்பட்டு போக்குவரத்தை திருப்பி விடுகின்றனர்.

    ×