search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி விழா"

    • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொலுக்களுக்கு அழைத்து செல்ல வேண்டும்.
    • இறை நம்பிக்கையுடன் நல்ல பண்புகள் வளரவும் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்ளவும் குழந்தைகளுக்கு வாய்ப்பாக அமையும்.

    சென்னை:

    நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி தமிழ்நாடு தனியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொலுக்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். கொலுக்களில் ஆடல், பாடல் மூலம் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளவும், இறை நம்பிக்கையுடன் நல்ல பண்புகள் வளரவும் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்ளவும் குழந்தைகளுக்கு வாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • உற்சவ அம்மன் கொலு வைத்து அலங்காரம்
    • பாரிவேட்டை உற்சவத்துடன் அம்மன் திருவீதி உலா

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. இதைமுன்னிட்டு கோவில் மண்டபத்தில் உற்சவ அம்மன் கொலு வைத்து, 15-ந்தேதி பார்வதி அலங்காரமும், 16-ந்தேதி காமாட்சி அலங்காரமும், 17-ந் தேதி மாவடி சேவை அலங்காரமும், 18-ந் தேதி ஸ்ரீமீனாட்சி அலங்காரமும்,

    19-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 20-ந் தேதி துர்காதேவி அலங்காரமும், 21-ந் தேதி ஸ்ரீஅன்னபூரணி அலங்காரமும், 22-ந் தேதி தனலட்சுமி அலங்காரமும், 23-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 24-ந் தேதி திருஅவதார அலங்காரமும் செய்யப்பட்டு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை யும் நடக்கிறது. பாரிவேட்டை உற்சவத்துடன் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    இந்த விழாவில் கலந்து கொண்டு லட்சார்ச்சனை செய்யும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்ஷன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • மாணவிகள் பலர் வேடம் அணிந்து, மகிஷாசுர வதம், கேரள கதகளி, ராஜஸ்தானி கூமர், குஜராத்தி கர்பா ஆகிய நடன நிகழ்ச்சிகளை நடத்தி ஆடினர்.
    • நவராத்திரி விழாவில் சாகசம் செய்ய முயன்ற போது மாணவியின் முகத்தில் தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே எடப்பள்ளி கிராமத்தில் உள்ள கோவிலில் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதில் துர்க்கை, விநாயகர் உள்பட பல்வேறு சிலைகள் இடம்பெற்று இருந்தன.

    பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி அங்கு ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை, கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    இதில் மாணவிகள் பலர் வேடம் அணிந்து, மகிஷாசுர வதம், கேரள கதகளி, ராஜஸ்தானி கூமர், குஜராத்தி கர்பா ஆகிய நடன நிகழ்ச்சிகளை நடத்தி ஆடினர். இதனை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    அப்போது மேடையில் சாமி வேடமிட்டு ஆடிக்கொண்டிருந்த மாணவி ஒருவர் தனது வாயில், மண்எண்ணையை ஊற்றி அதை கையில் வைத்திருந்த பந்தத்தில் ஊதி சாகசம் செய்ய முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவரது முகத்தில் தீப்பற்றியது. இதைபார்த்ததும் அதிர்ச்சியான அங்கிருந்தவர்கள் ஓடி சென்று விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

    இதில் மாணவிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.

    பின்னர் மாணவியை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் மாணவி, அவரது குடும்பத்தினருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    நவராத்திரி விழாவில் சாகசம் செய்ய முயன்ற போது மாணவியின் முகத்தில் தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிலைகளுக்கு வழி நெடுக பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.
    • 10 நாட்கள் பூஜைக்கு பின்னர் சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு திரும்பி அனுப்பி வைக்கப்படும்.

    குழித்துறை:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு, குமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமார கோவில் முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சுவாமி விக்ரகங்கள் திருவிதாங்கூர் மன்னர் காலம் தொட்டு சரஸ்வதி தேவியம்மனை யானை மீதும், முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன் ஆகிய விக்ரகங்களை, பல்லக்கிலும், சுமந்தும் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த சிலைகளுக்கு வழி நெடுக பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். இந்நிலையில் நேற்று பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியுடன் இந்த சாமி விக்ரகங்கள் வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக-கேரளா போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் யானை மீது சரஸ்வதி தேவியும், பல்லக்குகளில் குமார கோவில் முருகனும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையும் ஊர்வலமாக புறப்பட்டது.

    வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். நேற்று இந்த சாமி விக்ரகங்கள் குழித்துறை சாமுண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில், தங்குகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு அங்கிருந்து அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டு சென்றது. அப்போது பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இன்று மதியம் 12 மணிக்கு குமரி-கேரளா எல்லை பகுதியான களியக்காவிளையில் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி மற்றும் தமிழக இந்து அறநிலைய துறையினர், கேரளா இந்து அறநிலை துறையினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சாமி விக்ரகங்கள் இன்று நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலில் தங்கலும், நாளை திருவனந்தபுரம் சென்றடைகிறது.

    அங்கு கிழக்கு கோட்டை கொலுமண்டபத்தில் சரஸ்வதி தேவியையும், ஆர்யா சாலையில் முருகப்பெருமானையும், வலிய சாலையில் முன்னுதித்த நங்கை அம்மனையும், பூஜைக்கு வைத்து 10 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்வார்கள்.

    பின்னர் 10 நாட்கள் பூஜைக்கு பின்னர் சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு திரும்பி அனுப்பி வைக்கப்படும். அப்போதும் பொதுமக்கள் வழி நெடுக வரவேற்பு அளிப்பார்கள். பின்னர் குமரியில் அந்தந்த கோவில்களில் வைத்து வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். இந்த சாமி விக்ரகங்கள் செல்லும் வழியில் கேரளா போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பக்தர்கள் சாலைகளின் இரு புறங்களிலும் மா, பலா, வாழை, தென்னை ஓலை களாலும் அலங்கரித்து பூஜைகள் செய்து வரவேற்பு அளித்தனர்.

    • ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறும்.
    • அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் காலை 7.45 மணிக்கு அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருள், 8 மணிக்கு பஜனை, மாலை 5 மணிக்கு மங்கள இசை, 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் பவனி வருதல் போன்றவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லுதல் நடக்கிறது. தொடர்ந்து அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வருதல், தொடர்ந்து அம்மன் வெள்ளிபல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வருதல், நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு, பின்னர் ஆண்டுக்கு 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.

    • விழாவை முன்னிட்டு நவராத்திரி மண்டபத்தில் சங்கீத கச்சேரி, கூடியாட்டம், புகைப்பட கண்காட்சி உள்ளிட்டவைகள் நடந்தது.
    • 14-ந்தேதி காலையில் நெய்யாற்றின் கரையிலிருந்து சாமி சிலைகள் புறப்பட்டு அன்று இரவு திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலை சென்றடையும்.

    தக்கலை:

    திருவாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மனாபபுரம் அரண்மனையில் வருடம் தோறும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மன்னர் தலைநகரை திருவனந்தபுரத்திற்கு மாற்றிய பின் நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த விழாவில் கலந்து கொள்ளும் வகையில் குமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனையிலுள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் ஊர்வலமாக திருவனந்தபுரம் சென்று வருகின்றன.

    ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக 3 சாமிகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி தொடக்க நாளில் இருந்து விழா முடியும் வரை திருவனந்தபுரத்தில் வைத்து வழிபாடு செய்யப்படும். அதன்பிறகு 3 சாமிகளும் அங்கிருந்து புறப்பட்டு குமரி மாவட்டம் வந்து சேரும். சுவாமிகள் புறப்பாடு மற்றும் வருகையின் போது ஏராளமான பக்தர்கள் திரண்டு வரவேற்பதும் வழிபடுவதும் உண்டு. இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. விழாவில் பங்கேற்பதற்காக நேற்று சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பட்டது. தமிழக-கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்ட முன்னுதித்த நங்கையம்மன் அம்மனுக்கு வீதிகள் தோறும் பக்தர்கள் திரண்டு பரவசத்துடன் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து முன்னுதித்த நங்கை அம்மன் பத்மனாபபுரம் அரண்மனையை வந்தடைந்து. இன்று காலை அங்கு வேளிமலை முருகனும் பக்தர்கள் புடைசூழ வந்தார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு அரண்மனை உப்பரிகை மாளிகையின் மேல் மாடியில் உள்ள பூஜை அறையில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் உடைவாளை ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது. உடைவாளை அரண்மனை கண்காணிப்பாளர் ஸது எடுத்து தொல்பொருள் துறை இயக்குனர் தினேஷிடம் ஒப்படைத்தார்.

    அதனை அவர், கேரள தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அவரிடம் இருந்து இதனை குமரி மாவட்ட தேவசம்போர்டு இணை ஆணையாளர் ரத்தினவேல் பாண்டியன் பெற்றுக்கொண்டார். விழாவில் மத்திய மந்திரி முரளிதரன், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன். கேரள எம்.எல்.ஏ.க்கள் வின்சென்ட், ஹரீந்திரன், ஆன்சலன், மற்றும் நகர் மன்ற ஆணையாளர் லெனின், தலைவர் அருள் சோபன், துணை தலைவர் உண்ணி கிருஷ்ணன், நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர் அரண்மனை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு நவராத்திரி மண்டபத்தில் சங்கீத கச்சேரி, கூடியாட்டம், புகைப்பட கண்காட்சி உள்ளிட்டவைகள் நடந்தது. தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் முன்னே செல்ல வேளிமலை முருகன் பல்லக்கிலும், சரஸ்வதி அம்மன் யானை மீதும் அமர்ந்து பவனி சென்றனர்.

    இந்த சாமி ஊர்வலத்தில் தமிழக-கேரள போலீசார் மற்றும் திரளான பக்தர்கள் நடந்து சென்றார்கள். 3 சாமி சிலைகளும் இரவில் குழித்துறையில் தங்கிவிட்டு, நாளை (13-ந்தேதி) காலையில் அங்கிருந்து புறப்பட்டு நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவிலை சென்றடையும். அங்கு மூன்று சாமி சிலைகளுக்கும் கேரள அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படும்.

    14-ந்தேதி காலையில் நெய்யாற்றின் கரையிலிருந்து சாமி சிலைகள் புறப்பட்டு அன்று இரவு திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலை சென்றடையும். தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மனை பூஜை புரை என்ற இடத்தில் பூஜைக்காக வைப்பார்கள். வேளிமலை முருகன் சிலை ஆரியசாலையில் உள்ள சிவன் கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை அம்மன் கோவிலிலும் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

    இதை தொடர்ந்து நவராத்திரி கொலு மண்டபத்தில் 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் சாமி சிலைகள் ஊர்வலமாக குமரி மாவட்டத்தை நோக்கி புறப்படும்.

    • நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
    • வெளிநாட்டு பிரஜைகளும் நவராத்திரி விழா கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம்.

    சென்னை:

    சென்னை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கவர்னர் மாளிகையில், 'நவராத்திரி கொலு-2023' அக்டோபர் 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. கவர்னர் ஆர்.என். ரவி சென்னை கவர்னர் மாளிகையில் வருகிற 15 -ந்தேதி நவராத்திரி கொலு விழாவை தொடங்கி வைக்கிறார்.

    கவர்னர் மாளிகையில் அக்டோபர் 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் 'நவராத்திரி கொலு' கொண்டாட்டங்களில் பங்கேற்க பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்படஅனைவரும் மனதார வரவேற்கப்படுகிறார்கள்.

    நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயர், வயது, பாலினம், முகவரி, தொடர்பு எண், புகைப்பட அடையாள சான்று மற்றும் வருகைக்கான தேதி உள்ளிட்ட விவரங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

    ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் பிற விவரங்களுடன் அனுப்பப்படும் உறுதிப்படுத்தும் மின்னஞ்சல், விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டதற்கான சான்றாக அமையும்.

    பார்வையாளர்கள், சென்னை கவர்னர் மாளிகையின் வாயில் எண். 2-ல் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் அசல் புகைப்பட அடையாள சான்று (விண்ணப்பிக்கும்போது மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்யப்பட்ட) ஆவணத்துடன் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் வர வேண்டும்.

    வெளிநாட்டு பிரஜைகளும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். அவர்களின் அசல் பாஸ்போர்ட் மட்டுமே அடையாள சான்றாக கருதப்படும். சென்னை கவர்னர் மாளிகை வளாகத்திற்குள் செல்பேசி மற்றும் புகைப்பட கருவிகள் அனுமதிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா பழனி முருகன் கோவிலில் வருகிற 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
    • மதியம் 3 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்தி வேல் புறப்பட்டு பெரிய நாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே போல் திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, நவராத்திரி ஆகிய விழாக்களும் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா பழனி முருகன் கோவிலில் வருகிற 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் கோவிலில் முருகப்பெருமான், துவாரபாலகர்கள் மற்றும் கோவில் தெய்வங்களுக்கு காப்புகட்டுதல் நடைபெறும்.

    மேலும் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா அன்றே தொடங்கும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் மாலை 6 மணிக்கு பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெறும்.

    மேலும் கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவின் 9ம் நாளான 23-ந் தேதி விஜயதசமியன்று பழனி முருகன் கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மதியம் 3 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்தி வேல் புறப்பட்டு பெரிய நாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதைத் தொடர்ந்து பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா மாலை 5 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் கோதை மங்கலம் சென்று வில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் முத்துக்குமாரசாமி கோவிலுக்கு திரும்பி வரும் நிகழ்ச்சியும், அர்த்தஜாம பூஜையும் நடைபெறும். இதனையடுத்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வந்தடையும்.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 9 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நடைபெறாது. 24-ந் தேதி முதல் தொடர்ந்து வழக்கம் போல் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பவனி
    • வருகிற 12-ந்தேதி நடக்கிறது

    நாகர்கோவில் :

    தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலை நகராக பத்மனாபபுரம் இருந்தபோது அரண்மனை யில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் நவராத்திரி விழா நடந்து வந்தது. பின்னர் தலைநகர் திரு வனந்தபுரத்திற்கு மாற்றப் பட்டது. அப்போது சில ஆண்டுகள் மட்டுமே இங்கு விழா நடந்தது. பின்னர் விழா திருவனந்த புரம் அரண்ம னைக்கு மாற்றப் பட்டது. இதற்காக குமரியில் இருந்து சுசீந்திரம் முன்னு தித்த நங்கை, வேளிமலை குமாரசாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய விக்ரகங்கள் திருவனந்தபுரம் சென்று வருவது ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது.இந்த ஆண்டு நவராத்திரி விழா தொடங்குவதை யொட்டி சாமி விக்ரகங்கள் வருகிற 12-ந்தேதி கேரளாவிற்கு புறப்பட்டு செல்கின்றன. விழாவில் பங்கேற்க 11-ம் தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் புறப்பட்டு பத்மநாபபுரம் வந்தடைகிறது.

    12-ந்தேதி காலையில் வேளிமலை குமாரசாமி, பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடையும்.

    அங்கிருந்து பவனி கேரள போலீசாரின் அணி வகுப்பு மரியாதையுடன் தொடங்கும். முன்னதாக பவனியின் முன்னே கொண்டு செல்லும் பூஜை யில் வைக்கப்பட்டிருக்கும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்ம னையில் உள்ள உப்பரிகை மாளிகையில் 12-ந்தேதி காலை 7 முதல் 8 மணிக்குள் நடைபெறும் என தெரி விக்கட்டுள்ளது. நிகழ்வு களில் இருமாநில அமைச்சர் கள், உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

    உடைவாள் கைமாறியதும் அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதியம்மன் ஆலயம் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்யப்படும். அங்கிருந்து அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி யானை மீது அமர, பல்லக்குகளில் சுசீந்திரம் முன்னுதித்தநங்கை, வேளிமலை முருகன் ஆகி யோர் வீற்றிருக்க பெண் களின் தாலப்பொலியுடன் பவனி தொடங்கும். அப்பவ னியானது கேரளபுரம், ராஜபாதை, பழையபள்ளி வழியாக திருவிதாங்கோடு சென்று அழகியமண்டபம் சென்று இரவு குழித்துறை சென்றடைகிறது. 13-ந்தேதி அங்கிருந்து புறப்பட்டு நெய்யாற்றின்கரை சென்றடையும். 14-ந்தேதி திருவனந்தபுரம் சென்றடை கிறது.

    அங்கு தொடங்கும் நவ ராத்திரி பூஜையில் சரஸ்வதி தேவி கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், வேளிமலை முருகன் ஆரிய சாலை கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோவிலிலும் பங்கேற்கின்ற னர். பின்னர் விஜயதசமிக்கு முடிந்து நல்லிருப்பை அடுத்து புறப்பட்டு 28-ந்தேதி பத்மனாபபுரம் வந்தடைகின்றன.

    • மலைக்கோவிலில் இருந்து பாரவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று நவராத்திரி விழா. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. அன்றைய தினம் உச்சிகால பூஜையின்போது காப்பு கட்டப்படும். 9ம் நாளான 23-ந்தேதி மலைக்கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, அதனைத் தொடர்ந்து 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.

    மலைக்கோவிலில் இருந்து பாரவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி கோதை மங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    நவராத்திரி விழாவில் அன்றையதினம் பகல் 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மேல் சம்ரோட்ஷண பூஜைக்கு பின்னர் நடை திறக்கப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
    • கும்பகோணம் பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    சுவாமிமலை:

    ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரி விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.

    விழாவை யொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொலு வைத்து வழிபடுவர்.

    அதேபோல், ஏராள மானோர் தங்கள் வீடுகளில் 5,7,9,11 ஆகிய எண்ணிக்கையிலான படிகள் அமைத்து விதவிதமான கொலு பொம்மைகளை அடுக்கி வைத்து பக்தி பாடல்கள் பாடி, அக்கம் பக்கத்தினர், உறவினர்கனை வீட்டிற்கு கொலு பார்க்க அழைத்து அவர்களுக்கு மங்கல பொருட்கள் வழங்குவர்.

    விழா தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கும்பகோணம் பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து பாபு ராஜபுரத்தில் பொம்மைகள் விற்பனைக்கு வைத்துள்ள தினேஷ் என்பவர் கூறுகையில்:-

    கொலுவிற்கு தேவை யான பலவிதமான மண் பொம்மைகள், மர பொம்மைகள், பேப்பர் பொம்மைகள், 3 இன்ச் முதல் 7 அடி வரை உயரம் கொண்ட 63 நாயன்மார்கள் செட், தசவதார பெருமாள், நவக்கிரக பொம்மைகள், காஞ்சி மகாபெரியவர், கொல்கத்தாகிலே பொம்மைகள், சமயபுரம் மாரியம்மன், சிவன்- பார்வதி, கும்பகர்ணன், கிருஷ்ணர், ராதை, புத்தர் உள்பட பல்வேறு வகையான பொம்மைகள் ரூ.10 முதல் 7 ஆயிரம் வரை விற்பனைக்கு வைத்துள்ளேன்.

    மேலும், இந்த பொம்மைகள் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை க்காக அனுப்பப்படுகிறது.

    இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.

    • ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.
    • பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.

    நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த எழுமிச்சம்பழங்களை வாங்கி அவைகளை இரண்டாக குறுக்கு வசத்தில் அறுத்து சாறு பிழிந்துவிட்டு குப்புறக் கவிழ்த்து கிண்ணம்போல் செய்து கொள்ள வேண்டும்.

    அதில் நெய் ஊற்றி திரிபோட்டு, அத்துடன் அர்ச்சனைப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அம்மனை அர்ச்சனை செய்ய கொண்டு வந்திருக்கும் பூ, பழம், கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி,

    எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனை பூஜை செய்யும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.

    துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சூட்ட விருப்பம் உள்ள பக்தர்கள் எலுமிச்சம்பழத்தை மாலையாகத் தொடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்மாலையை அம்மனுக்கு சாத்துவார்.

    அதன்பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழக் கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும்.

    ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.

    பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று, நூற்றி ஒன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம்.

    திருமணம் ஆகவேண்டிய பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.

    எலுமிச்சம் பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் அந்த ஒளியில் துர்க்காதேவியின் திருமுகத்தை உற்றுப்பாருங்கள்.

    தன்னை மறந்து அன்னையின் மீது உங்கள் மனதை ஐக்கியப்படுத்துங்கள்.

    மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள். உங்களது குறைகள் என்னவாக இருந்தாலும் தீர்த்து வைப்பாள்.

    அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வு பெறுவீர்கள்.

    அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டு சொல்லுங்கள்.

    பக்தி பரவசத்துடன் பாமாலைப் பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள்.

    தீபாராதனை முடித்து அர்ச்சகர் அர்ச்சனைத் தட்டை தரும்போது அம்மனின் பிரசாதமாக குங்குமம், பூ தருவார்.

    அதனால் அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும்.

    பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு,

    அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கிவிட்டு வர வேண்டும்.

    ×