search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து புறப்பட்ட 3 சாமி விக்ரகங்கள் ஊர்வலம்

    • விழாவை முன்னிட்டு நவராத்திரி மண்டபத்தில் சங்கீத கச்சேரி, கூடியாட்டம், புகைப்பட கண்காட்சி உள்ளிட்டவைகள் நடந்தது.
    • 14-ந்தேதி காலையில் நெய்யாற்றின் கரையிலிருந்து சாமி சிலைகள் புறப்பட்டு அன்று இரவு திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலை சென்றடையும்.

    தக்கலை:

    திருவாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மனாபபுரம் அரண்மனையில் வருடம் தோறும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மன்னர் தலைநகரை திருவனந்தபுரத்திற்கு மாற்றிய பின் நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த விழாவில் கலந்து கொள்ளும் வகையில் குமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனையிலுள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் ஊர்வலமாக திருவனந்தபுரம் சென்று வருகின்றன.

    ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக 3 சாமிகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி தொடக்க நாளில் இருந்து விழா முடியும் வரை திருவனந்தபுரத்தில் வைத்து வழிபாடு செய்யப்படும். அதன்பிறகு 3 சாமிகளும் அங்கிருந்து புறப்பட்டு குமரி மாவட்டம் வந்து சேரும். சுவாமிகள் புறப்பாடு மற்றும் வருகையின் போது ஏராளமான பக்தர்கள் திரண்டு வரவேற்பதும் வழிபடுவதும் உண்டு. இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. விழாவில் பங்கேற்பதற்காக நேற்று சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பட்டது. தமிழக-கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்ட முன்னுதித்த நங்கையம்மன் அம்மனுக்கு வீதிகள் தோறும் பக்தர்கள் திரண்டு பரவசத்துடன் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து முன்னுதித்த நங்கை அம்மன் பத்மனாபபுரம் அரண்மனையை வந்தடைந்து. இன்று காலை அங்கு வேளிமலை முருகனும் பக்தர்கள் புடைசூழ வந்தார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு அரண்மனை உப்பரிகை மாளிகையின் மேல் மாடியில் உள்ள பூஜை அறையில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் உடைவாளை ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது. உடைவாளை அரண்மனை கண்காணிப்பாளர் ஸது எடுத்து தொல்பொருள் துறை இயக்குனர் தினேஷிடம் ஒப்படைத்தார்.

    அதனை அவர், கேரள தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அவரிடம் இருந்து இதனை குமரி மாவட்ட தேவசம்போர்டு இணை ஆணையாளர் ரத்தினவேல் பாண்டியன் பெற்றுக்கொண்டார். விழாவில் மத்திய மந்திரி முரளிதரன், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன். கேரள எம்.எல்.ஏ.க்கள் வின்சென்ட், ஹரீந்திரன், ஆன்சலன், மற்றும் நகர் மன்ற ஆணையாளர் லெனின், தலைவர் அருள் சோபன், துணை தலைவர் உண்ணி கிருஷ்ணன், நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர் அரண்மனை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு நவராத்திரி மண்டபத்தில் சங்கீத கச்சேரி, கூடியாட்டம், புகைப்பட கண்காட்சி உள்ளிட்டவைகள் நடந்தது. தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் முன்னே செல்ல வேளிமலை முருகன் பல்லக்கிலும், சரஸ்வதி அம்மன் யானை மீதும் அமர்ந்து பவனி சென்றனர்.

    இந்த சாமி ஊர்வலத்தில் தமிழக-கேரள போலீசார் மற்றும் திரளான பக்தர்கள் நடந்து சென்றார்கள். 3 சாமி சிலைகளும் இரவில் குழித்துறையில் தங்கிவிட்டு, நாளை (13-ந்தேதி) காலையில் அங்கிருந்து புறப்பட்டு நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவிலை சென்றடையும். அங்கு மூன்று சாமி சிலைகளுக்கும் கேரள அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படும்.

    14-ந்தேதி காலையில் நெய்யாற்றின் கரையிலிருந்து சாமி சிலைகள் புறப்பட்டு அன்று இரவு திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலை சென்றடையும். தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மனை பூஜை புரை என்ற இடத்தில் பூஜைக்காக வைப்பார்கள். வேளிமலை முருகன் சிலை ஆரியசாலையில் உள்ள சிவன் கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை அம்மன் கோவிலிலும் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

    இதை தொடர்ந்து நவராத்திரி கொலு மண்டபத்தில் 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் சாமி சிலைகள் ஊர்வலமாக குமரி மாவட்டத்தை நோக்கி புறப்படும்.

    Next Story
    ×