search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்லிக்கட்டு"

    • பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 ஜல்லிக்கட்டு காளைகளும் 550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
    • ஜல்லிக்கட்டு போட்டியில் டி.எஸ்.பி. தலைமையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    திருவெறும்பூர்:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2-ந் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

    இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 ஜல்லிக்கட்டு காளைகளும் 550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

    போட்டி காலை 7 மணிக்கு தொடங்கியது இந்த ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் மாடு முதலில் அவிழ்த்து விடப்பட்டது அதன் பிறகு முறையாக ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது இந்த போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் டிவி, மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.


    முன்னதாக கால்நடை இணை இயக்குனர் மும்மூர்த்தியை தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா ஜல்லிக்கட்டு போட்டிக்கு கலந்து கொள்வதற்கு உரிய தகுதி உள்ளதா என்பதை மருத்துவ ஆய்வு செய்தனர். அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.

    அதேபோல் திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி தலைமையிலான மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் போதை பொருட்கள் உட்கொண்டு உள்ளார்களா என்பதை பரிசோதனையும் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைபவர்களுக்கு முதல் கட்ட சிகிச்சையும் அளிக்கின்றனர்.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருவெறும்பூர் டி.எஸ்.பி. தலைமையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சூரியூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டுகளிக்கும் விதமாக கேலரிகள் மற்றும் தடுப்பு வேலியை அருகில் வாகனங்களை பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளது.

    • 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார்.
    • 10 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

    உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 10 சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார். இவருக்கு, தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கினார்.

    இதற்கிடையே, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 51 பேர் காயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த , 10 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    25 காளை உரிமையாளர்கள், 22 மாடுபிடி வீரர்கள், 2 பார்வையாளர்களை, 2 போலீசார் என 51 பேர் காயமடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாலமேடு, அலங்கநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றதாகும்.
    • மதுரை மாவட்டத்தில் மதுக்கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

    மதுரை:

    தமிழர்கள் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறும்.

    மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றதாகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே வருகிற 15,16,17-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் 15, 16, 17 தேதிகளில் மதுக்கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • சட்ட மன்ற கூட்டத்தொடரில் விதி என் 110-ன் கீழ் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
    • பழமை மாறாமல் மன்னர் காலத்து அரண்மனை போல் இந்த ஏறுதழுவுதல் அரங்க முகப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நினைவு கூறும் வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.

    ஜல்லிக்கட்டு போட்டிக்கு புகழ்பெற்ற இடமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் திகழ்கிறது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒட்டுமொத்த தமிழர்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு பின் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவது அதிகரித்து வருகிறது.

    இதற்காக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு நிரந்தர கேலரியும் அமைக்கப்பட்டது. இருப்பி னும் போதிய இடவசதி இல்லாமல் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வெளிநாட்டு பார்வையாளர்கள் முழுமையாக ஜல்லிக்கட்டு போட்டியை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில்தான், சட்ட மன்ற கூட்டத்தொடரில் விதி என் 110-ன் கீழ் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


    அதன்படி 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்று திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. தற்போது இந்த மைதான அரங்கிற்கு 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' என தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பழமை மாறாமல் மன்னர் காலத்து அரண்மனை போல் இந்த ஏறுதழுவுதல் அரங்க முகப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஜல்லிக்கட்டு அரங்கில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவமனை, காத்திருப்பு கூடம், சுகாதார நிலையம், வாடி வாசல், அலுவலகம், தற்காலிக விற்பனை கூடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் வசதி, 50 ஆயி ரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தண்ணீர் தொட்டி, மருந்தகம், கால்நடை மருத்துவ வசதி, கழிப்பறை, பத்திரிகையாளர் அறை, அலுவலர்கள் ஓய்வு அறை, என அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது.

    இந்த பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் சுமார் 10, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை கண்டு ரசிக்கும் வகையில் பிரம்மாண்டமான முறையில் சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் அமர்ந்து பார்க்கும் வகையில் கண் கவர் வேலைப்பாடுகளுடன் அரங்கம் அமைக்கப்பட்டது. மேலும் இந்த அரங்கின் இரண்டு பகுதிகளில் மிகப் பெரிய எல்.இ.டி. திரை மூலம் ஜல்லிக்கட்டை நேரடியாக பார்க்கும் வகையில் அகன்ற திரை அமைக்கப்பட்டுள்ளது.

    பழமை மாறாமல் அலங்காநல்லூர், பாலமேடு போன்ற உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு வாடிவாசல் எவ்வாறு அக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளதோ அதேபோன்று இந்த அரங்கில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிவாசல் மேலிருந்து விழா குழுவினர், வர்ணனையாளர் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு பரிசு பொருட்கள், அறிவிக்கும் வகையிலும் ஜல்லிக் கட்டை வர்ணனை செய்யும் வகையிலும் அமர்ந்து பேசுவதற்கு ஏதுவாக மேல் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

    வாடிவாசல் பின்புறமாக ஜல்லிக்கட்டு காளைகள் வரிசையாக வருவதற்கு ஏதுவாக பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்று வரும் வகையில் நீண்ட தொலைவில் இரும்பு கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றின் மீது மற்றொன்று மோதிக் கொள்ளாமலும் இருக்கும். காளை உரிமையாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக காளைகளை வாடிவாசலில் அவிழ்த்து விட இந்த கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வெளிப்புறத்தில் அரண்மனை முகப்பு தோற்றம் போலவும் உட்புறத்தில் கிரிக்கெட் அரங்கம் போலவும் இந்த ஏறு தழுவுதல் அரங்கம் வடிவமைக்கப்பட் டுள்ளது. அரங்கம் முன்பாக ஜல்லிக்கட்டு காளை ஒன்று பாய்வது போன்றும், அதனை மாடுபிடி வீரர் ஒருவர் அடக்குவது போன்றும் கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த அரங்கில் செய்யப்பட்டுள்ளன.


    தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், பரிசுப் பொருட்கள் வைப்பு அறை, மாடுபிடி வீரர்களுக்கான இடம், ஓய்வு அறை, காளைகள் பரிசோதனைக் கூடம், முதலுதவி கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யப்ப டும் இடம், ஜல்லிக்கட்டு அருங்காட்சியகம், பொருட்கள் பாதுகாப்பு அறைகள் இடம்பெற்றுள்ளன.

    முதல் தளத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு தனித்தனியே அறைகள், உணவு அறை, அனைத்து வசதியுடன் கூடிய தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் பொருட்கள் வைப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    போட்டியைக் காண மதுரை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக மூன்று வழித்தடங்களில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்திற்கு விரைந்து வர புதிதாக தார்ச் சாலை அமைக்கபட்டுள்ளது.

    இதற்காக ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அலங்காநல்லூர்-வாடிப் பட்டி தேசிய நெடுஞ்சாலை யில் இருந்து ஜல்லிக்கட்டு அரங்கிற்கு விரைந்து வர சின்ன இலந்தைகுளம், இடைகரை பாலம் முதல் அரங்கிற்கு 3.3 கிலோ மீட்டர் தூரம் வரை தனியாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை நடுவே பூச்செடிகள், அரங்கம் முன்பாக பசுமையான புல் தோட்டம், பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழர்களின் வீர விளையாட்டை பறைசாற்றும் வகையிலே இந்த மைதானத்தை தமிழக முதல்வர் இந்த மாத இறுதியில் திறந்து வைக்கிறார். திறப்பு விழா நாளில் உலகத் தரத்தில் மிக பிரமாண்டமாக இந்த அரங்கில் ஜல்லிக்கட்டு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • ஆன்லைன் மூலமாக முன்பதிவு நடைபெற்று காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் 12,176 காளைகள், 4,514 மாடுபிடி வீரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

    மதுரை:

    தமிழர்களின் பாரம்பரியமிக்க பண்பாட்டையும், வீரத்தையும் பறைசாற்றும் வகையில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை காண இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகை தருவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டும், பொங்கலை வரவேற்கும் விதமாகவும் நாளை முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குகிறது. நாளை (15-ந்தேதி) அவனியாபுரத்திலும், நாளை மறுநாள் (16-ந்தேதி) பாலமேட்டிலும், 17-ந்தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது.

    இதில் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ஜல்லிக்கட்டு நடக்கும் இந்த 3 இடங்களிலும் கடந்த வாரம் முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து முடிந்துள்ளது.

    ஆன்லைன் மூலமாக முன்பதிவு நடைபெற்று காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் 12,176 காளைகள், 4,514 மாடுபிடி வீரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

    குறிப்பாக, அவனியாபுரத்தில் 2,400 காளைகள், 1,318 மாடுபிடி வீரர்கள், பாலமேட்டில் 3,677 காளைகள், 1,412 மாடுபிடி வீரர்கள், அலங்காநல்லூரில் 6,099 காளைகள், 1,784 மாடுபிடி வீரர்கள் என விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு அங்கு ரூ.26½ லட்சம் செலவில் கேலரி, தடுப்பு கட்டைகள் கட்டும் பணி, வாடிவாசல் அமைக்கும் பணி, காளைகள் அழைத்து வரும் இடம், பார்வையாளர்கள் கேலரி மற்றும் கலெக்சன் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பாடுகள் முடியும் நிலையில் உள்ளது. இன்று மாலைக்குள் அவை நிறைவுபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் முதல் நிகழ்வாக நாளை (திங்கட்கிழமை) பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் பயிற்சி பெற்ற காளைகளும், மாடுபிடி வீரர்களும் களம் இறங்க தயார் நிலையில் இருக்கிறார்கள். காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது.

    நாளை மறுநாள் (16-ந்தேதி) மாட்டுப்பொங்கல் அன்று பாலமேடு ஜல்லிக்கட்டு நடக்கிறது. அங்கும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்படி வழக்கத்தை போலவே இந்த ஆண்டும் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா அரசு வழிகாட்டுதலுடன் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி நடைபெறும் என்றும், சிறந்த காளைக்கு முதல் பரிசாக தமிழக முதலமைச்சர் வழங்கும் ஒரு கார் மற்றும் 2-ம் பரிசாக ரூ.1½ லட்சம் மதிப்பில் கன்று குட்டியுடன் நாட்டு பசுமாடும் வழங்க உள்ளோம். சிறந்த மாடுபிடி வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் முதல் பரிசாக ஒரு கார் மற்றும் 2-ம் பரிசாக ரூ.1½ லட்சம் மதிப்பில் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதனை கலெக்டர் சங்கீதா தொடங்கி வைக்கிறார். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவுசெய்து தகுதிபெற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். பாலமேடு பேரூராட்சியின் ஒத்துழைப்போடு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி அரசு வழிகாட்டுதல் படி 17-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அலங்காநல்லூருக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தர உள்ளனர். அவர்களுக்கு தனியாக மேடை வசதி செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதாரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை அலங்காநல்லூர் பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது.

    • ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த அனுமதிச்சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதி.
    • காளைகளுடன் வரும் உரிமையாளரும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக்கூடாது.

    மதுரை:

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தை பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மதுரையில் நாளை நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * ஜல்லிக்கட்டில் பங்கேற்க வெள்ளக்கல் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு மற்றும் முத்துப்பட்டி ரோடு வழியாக காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வரை மட்டுமே அனுமதி.

    * காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள், அவனியாபுரம் முத்துப்பட்டி சந்திப்பில் நிறுத்த அனுமதிக்க இன்று நள்ளிரவு 12 மணி முதல் காளைகள் மற்றும் உரிமையாளர்கள், அவருக்கு உதவியாக ஒருநபர் மட்டும் வரிசையில் நிற்க அனுமதி.

    * ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த அனுமதிச்சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதி.

    * காளைகளுடன் வரும் உரிமையாளரும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக்கூடாது.

    * காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிறை அறுப்பதற்காக கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களோ கொண்டுவரக்கூடாது.

    * ஜல்லிக்கட்டு காளைகளின் மூக்கணாங்கயிறுகளை நீக்குவதற்கு உரிய பயிற்சிபெற்ற அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் மாவட்ட நிர்வாகத்தால் நியமனம்.

    * ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதிசீட்டு மற்றும் உரிய மருத்துவ தகுதிச்சான்றும் கொண்டுவரவேண்டும்.

    * ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மது போதையில் இருக்கக்கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

    * ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்புறம் மற்றும் அருகில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் குடியிருக்கும் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு எந்த நபர்களையும் வீட்டில் இருந்தோ அல்லது மேல் மாடியில் இருந்தோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கும்போது, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை.

    * அனுமதி பெற்ற காளைகள், உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளையும் மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

    • 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.
    • தமிழர்களின் வீர விளையாட்டை பறை சாற்றும் வகையிலே இந்த மைதானத்தை தமிழக முதலமைச்சர் திறந்து வைப்பார்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங் காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதான பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆய்விக்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர்களின் வீர விளையாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு மைதானம் அமைய வேண்டும் என முதலமைச்சர் சட்ட சபையில் அறிவித்தபடி 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.

    இந்த மாத இறுதியில் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழா அன்று மிக பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

    அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக் கட்டுக்கு அடுத்த படியாக 4-வது ஜல்லிக்கட்டு போட் டியாக நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு உலக தரத்தில் இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலேயே ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் கட்டப்பட்டுள்ளது. நமது தமிழ் நாட்டில்தான் கால்நடை மருந்தகம், காத்திருப்பு கூடம், சுகாதார நிலையம், வாடிவாசல், அலுவலகம், தற்காலிக விற்பனை கூடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் வசதி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி, மருத்துவ வசதி, கால்நடை மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகள் உள்ளது. தென்னக மக்கள் பாராட்டும் வகையில் இந்த மைதானம் திறப்பு விழா நடைபெறும். தமிழர்களின் வீர விளையாட்டை பறை சாற்றும் வகையிலே இந்த மைதானத்தை தமிழக முதலமைச்சர் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், தளபதி, மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்படாத வகையில் சட்டம் நிறைவேற்றம்.
    • உச்சநீதிமன்றத்தின் சாசன அமர்வு சட்டம் செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

    பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.

    இதனால் தமிழக அரசு விலங்குகள் கொடுமைப்படுத்துதலை தடுக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சட்டசபையில் சட்டம் நிறைவேற்றியது. பின்னர், ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதனால் சட்டமானது.

    இதன் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த இருந்த தடை நீங்கியது. இருந்த போதிலும் பீட்டா போன்ற அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் சட்டம் நிறைவேற்றப்பட்டது செல்லும். ஜல்லிக்கட்டை நடத்த தடையில்லை என ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

    தற்போது பொங்கல் பண்டிகையொட்டி அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட பிரபலமான இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மூத்த வழக்கிறஞர் அபிஷேக் சிங்வி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லும் என ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனுவை பட்டிலியடுவது குறித்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

    ஒருவேளை பட்டியலிட முடிவு செய்யப்பட்டால், பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் தேதி அறிவிக்கப்படும்.

    மகாராஷ்டிரா மாநில அரசு, கர்நாடகா மாநில அரசு ஆகியவையும் முறையே தங்களது மாநிலங்களிலம் நடைபெறும் மாட்டு வண்டி பந்தயம், கம்பாலா போட்டிக்காக சட்டம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

    • காளைகளுக்கும் தற்போது மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட உள்ளது.
    • அரசின் வழிகாட்டுதல்படி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும்.

    அலங்காநல்லூர்:

    தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகிற 17-ந்தேதி அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் சங்கீதா, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அலுவலர்கள், விழா குழுவினர், கிராம பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கால்கோள் நடும் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான் பானு, தி.மு.க. அவைத் தலைவர் பாலசுப் பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணை தலைவர் சுவாமிநாதன், டி.எஸ்.பி. பாலசுந்தரம், யூனியன் ஆணையாளர் பிரேமராஜன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வழக்கத்தை போலவே இந்த ஆண்டும் உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 17-ந்தேதி அரசு வழிகாட்டுதல் படி சீரும் சிறப்புமாக நடைபெறும். சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படும்.


    கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தமிழக முதலமைச்சர் சார்பில் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் பரிசாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இருசக்கர வாகனம் வழங்கப்படும். மேலும் மாடு பிடிக்கும் அனைத்து மாடு பிடி வீரர்களுக்கும் தங்க நாணயம் வழங்கப்படும்.

    கன்றுடன் கூடிய நாட்டு பசு மாடு, தங்க நாணயம், கட்டில் பீரோ, உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் மாடு பிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம்.

    காளைகளுக்கும் தற்போது மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட உள்ளது. தகுதி பெறும் காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம். ரூ.44 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் இந்த மாத இறுதியில் திறக்கப்படும். தமிழக முதல்வர் திறந்து வைப்பார். இன்னும் ஓரிரு நாட்களில் அரங்கம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது.
    • அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது.


    ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக் கால் இன்று நடப்பட்டது. அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது.

    இந்நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    இதன்பின் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் 66 ஏக்கரில் ரூ.44 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு கலையரங்கம் 23 அல்லது 24-ந்தேதி திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதனை முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 35 ஆயிரம் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டு உள்ளன.
    • ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள்தான்.

    மதுரை:

    மதுரை பாண்டிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பா.ஜனதா இளைஞர் அணி, விவசாய அணி, பட்டியல் அணி, மகளிர் அணி, ஓ.பி.சி. அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். இதனைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போக்குவரத்து துறை தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 35 ஆயிரம் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டு உள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்பாத காரணத்தால் 6 ஆயிரம் பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 800 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தி.மு.க. அரசு போக்குவரத்து கழகத்தை நிர்மூலமாக்கியது என்றுதான் கூறவேண்டும். எனவே, தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவை ஏற்படுத்த வேண்டும்.

    மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் கட்டியுள்ளனர். பொதுமக்களும், காளை உரிமையாளர்களும் மைதானத்திற்கு செல்ல தயாராக இல்லை.

    ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள்தான். இந்த நிலையில் கலைஞர் ஜல்லிக்கட்டு மைதானம் என பெயர் வைக்க இருக்கிறார்கள். அதனை மக்கள் ஏற்கமாட்டார்கள். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமானவர்களின் பெயரை வைக்க, பொதுமக்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலைஞர் பெயர்தான் வைப்பேன் என கூறுவதை தி.மு.க. கைவிட வேண்டும்.

    பத்திரப்பதிவுத்துறையில் பணம் கொடுத்தால் 6 மணிக்கு மேலும் பத்திரப்பதிவு நடக்கிறது. பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை கொடுத்த பின்னரும், கூடுதலாக ரூ.5,500 கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் புரோக்கர்களின் ஆதிக்கம் மட்டுமே உள்ளது. பா.ஜனதா சார்பில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களுக்கு முன்பு போராட்டம் நடத்த இருக்கிறோம்.

    லஞ்ச ஒழிப்புத்துறையினர், தினசரி பத்திரப்பதிவு அலுவலகங்களிலும், புரோக்கர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தினால் கோடி கோடியாக பணம் சிக்கும். அதன் மூலம் தமிழகத்தின் பாதி கடனை அடைத்துவிடலாம். இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

    2024 பாராளுமன்ற தேர்தல், மோடிக்கான தேர்தல். மோடியை விட பிரதமர் வேட்பாளருக்கான தகுதி யாருக்கும் இல்லை.

    இந்தியாவை போல தமிழகத்திலும் மண்டல வாரியாக வரிக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் பேசுவாரா?.

    ஏற்கனவே துபாய், சிங்கப்பூர் சென்று வந்ததன் மூலம் எவ்வளவு முதலீடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை கூற வேண்டும். தேர்தலுக்காக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி நாடகமாடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 415 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    • காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    பொங்கலை பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் தயாராகி வருகின்றனர். இதற்கிடையே இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டுத்திருவிழா, புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிசாவலில் இருந்து சீறிப் பாய்ந்த வண்ணம் உள்ளன.

    280-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் மாடுகளை பிடிக்க களம் இறங்கியுள்ளனர். மாடு பிடி வீரர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.

    ஆட்சியர் ஐ.எஸ். மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் ஜல்லிக்கட்டை, மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த ஜல்லிக்கட்டுக்காக தச்சங்குறிச்சியில் வாடிவாசல், பார்வையாளர்கள் அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.

    ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை பரிசோதிப்பதற்காக கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்(பொ) ராமச்சந்திரன் தலைமையில் மருத்துவர்கள் குழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    காயம் அடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக ஆம்புலன்ஸ் வசதி, காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஜல்லிக்கட்டையொட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 415 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டை கண்காணிக்க பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    ×