search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழமை மாறாத பாரம்பரியம்:கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்- விரைவில் திறந்து வைக்கும் முதலமைச்சர்
    X

    பழமை மாறாத பாரம்பரியம்:'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்'- விரைவில் திறந்து வைக்கும் முதலமைச்சர்

    • சட்ட மன்ற கூட்டத்தொடரில் விதி என் 110-ன் கீழ் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
    • பழமை மாறாமல் மன்னர் காலத்து அரண்மனை போல் இந்த ஏறுதழுவுதல் அரங்க முகப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நினைவு கூறும் வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.

    ஜல்லிக்கட்டு போட்டிக்கு புகழ்பெற்ற இடமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் திகழ்கிறது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒட்டுமொத்த தமிழர்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு பின் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவது அதிகரித்து வருகிறது.

    இதற்காக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு நிரந்தர கேலரியும் அமைக்கப்பட்டது. இருப்பி னும் போதிய இடவசதி இல்லாமல் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வெளிநாட்டு பார்வையாளர்கள் முழுமையாக ஜல்லிக்கட்டு போட்டியை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில்தான், சட்ட மன்ற கூட்டத்தொடரில் விதி என் 110-ன் கீழ் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


    அதன்படி 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்று திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. தற்போது இந்த மைதான அரங்கிற்கு 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' என தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பழமை மாறாமல் மன்னர் காலத்து அரண்மனை போல் இந்த ஏறுதழுவுதல் அரங்க முகப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஜல்லிக்கட்டு அரங்கில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவமனை, காத்திருப்பு கூடம், சுகாதார நிலையம், வாடி வாசல், அலுவலகம், தற்காலிக விற்பனை கூடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் வசதி, 50 ஆயி ரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தண்ணீர் தொட்டி, மருந்தகம், கால்நடை மருத்துவ வசதி, கழிப்பறை, பத்திரிகையாளர் அறை, அலுவலர்கள் ஓய்வு அறை, என அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது.

    இந்த பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் சுமார் 10, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை கண்டு ரசிக்கும் வகையில் பிரம்மாண்டமான முறையில் சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் அமர்ந்து பார்க்கும் வகையில் கண் கவர் வேலைப்பாடுகளுடன் அரங்கம் அமைக்கப்பட்டது. மேலும் இந்த அரங்கின் இரண்டு பகுதிகளில் மிகப் பெரிய எல்.இ.டி. திரை மூலம் ஜல்லிக்கட்டை நேரடியாக பார்க்கும் வகையில் அகன்ற திரை அமைக்கப்பட்டுள்ளது.

    பழமை மாறாமல் அலங்காநல்லூர், பாலமேடு போன்ற உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு வாடிவாசல் எவ்வாறு அக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளதோ அதேபோன்று இந்த அரங்கில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிவாசல் மேலிருந்து விழா குழுவினர், வர்ணனையாளர் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு பரிசு பொருட்கள், அறிவிக்கும் வகையிலும் ஜல்லிக் கட்டை வர்ணனை செய்யும் வகையிலும் அமர்ந்து பேசுவதற்கு ஏதுவாக மேல் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

    வாடிவாசல் பின்புறமாக ஜல்லிக்கட்டு காளைகள் வரிசையாக வருவதற்கு ஏதுவாக பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்று வரும் வகையில் நீண்ட தொலைவில் இரும்பு கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றின் மீது மற்றொன்று மோதிக் கொள்ளாமலும் இருக்கும். காளை உரிமையாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக காளைகளை வாடிவாசலில் அவிழ்த்து விட இந்த கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வெளிப்புறத்தில் அரண்மனை முகப்பு தோற்றம் போலவும் உட்புறத்தில் கிரிக்கெட் அரங்கம் போலவும் இந்த ஏறு தழுவுதல் அரங்கம் வடிவமைக்கப்பட் டுள்ளது. அரங்கம் முன்பாக ஜல்லிக்கட்டு காளை ஒன்று பாய்வது போன்றும், அதனை மாடுபிடி வீரர் ஒருவர் அடக்குவது போன்றும் கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த அரங்கில் செய்யப்பட்டுள்ளன.


    தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், பரிசுப் பொருட்கள் வைப்பு அறை, மாடுபிடி வீரர்களுக்கான இடம், ஓய்வு அறை, காளைகள் பரிசோதனைக் கூடம், முதலுதவி கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யப்ப டும் இடம், ஜல்லிக்கட்டு அருங்காட்சியகம், பொருட்கள் பாதுகாப்பு அறைகள் இடம்பெற்றுள்ளன.

    முதல் தளத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு தனித்தனியே அறைகள், உணவு அறை, அனைத்து வசதியுடன் கூடிய தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் பொருட்கள் வைப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    போட்டியைக் காண மதுரை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக மூன்று வழித்தடங்களில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்திற்கு விரைந்து வர புதிதாக தார்ச் சாலை அமைக்கபட்டுள்ளது.

    இதற்காக ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அலங்காநல்லூர்-வாடிப் பட்டி தேசிய நெடுஞ்சாலை யில் இருந்து ஜல்லிக்கட்டு அரங்கிற்கு விரைந்து வர சின்ன இலந்தைகுளம், இடைகரை பாலம் முதல் அரங்கிற்கு 3.3 கிலோ மீட்டர் தூரம் வரை தனியாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை நடுவே பூச்செடிகள், அரங்கம் முன்பாக பசுமையான புல் தோட்டம், பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழர்களின் வீர விளையாட்டை பறைசாற்றும் வகையிலே இந்த மைதானத்தை தமிழக முதல்வர் இந்த மாத இறுதியில் திறந்து வைக்கிறார். திறப்பு விழா நாளில் உலகத் தரத்தில் மிக பிரமாண்டமாக இந்த அரங்கில் ஜல்லிக்கட்டு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×