என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கருணாநிதி பெயரை வைத்தால் மக்கள் ஏற்கமாட்டார்கள்: அண்ணாமலை
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 35 ஆயிரம் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டு உள்ளன.
- ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள்தான்.
மதுரை:
மதுரை பாண்டிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பா.ஜனதா இளைஞர் அணி, விவசாய அணி, பட்டியல் அணி, மகளிர் அணி, ஓ.பி.சி. அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். இதனைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போக்குவரத்து துறை தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 35 ஆயிரம் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டு உள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்பாத காரணத்தால் 6 ஆயிரம் பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 800 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தி.மு.க. அரசு போக்குவரத்து கழகத்தை நிர்மூலமாக்கியது என்றுதான் கூறவேண்டும். எனவே, தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவை ஏற்படுத்த வேண்டும்.
மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் கட்டியுள்ளனர். பொதுமக்களும், காளை உரிமையாளர்களும் மைதானத்திற்கு செல்ல தயாராக இல்லை.
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள்தான். இந்த நிலையில் கலைஞர் ஜல்லிக்கட்டு மைதானம் என பெயர் வைக்க இருக்கிறார்கள். அதனை மக்கள் ஏற்கமாட்டார்கள். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமானவர்களின் பெயரை வைக்க, பொதுமக்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலைஞர் பெயர்தான் வைப்பேன் என கூறுவதை தி.மு.க. கைவிட வேண்டும்.
பத்திரப்பதிவுத்துறையில் பணம் கொடுத்தால் 6 மணிக்கு மேலும் பத்திரப்பதிவு நடக்கிறது. பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை கொடுத்த பின்னரும், கூடுதலாக ரூ.5,500 கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் புரோக்கர்களின் ஆதிக்கம் மட்டுமே உள்ளது. பா.ஜனதா சார்பில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களுக்கு முன்பு போராட்டம் நடத்த இருக்கிறோம்.
லஞ்ச ஒழிப்புத்துறையினர், தினசரி பத்திரப்பதிவு அலுவலகங்களிலும், புரோக்கர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தினால் கோடி கோடியாக பணம் சிக்கும். அதன் மூலம் தமிழகத்தின் பாதி கடனை அடைத்துவிடலாம். இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது.
2024 பாராளுமன்ற தேர்தல், மோடிக்கான தேர்தல். மோடியை விட பிரதமர் வேட்பாளருக்கான தகுதி யாருக்கும் இல்லை.
இந்தியாவை போல தமிழகத்திலும் மண்டல வாரியாக வரிக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் பேசுவாரா?.
ஏற்கனவே துபாய், சிங்கப்பூர் சென்று வந்ததன் மூலம் எவ்வளவு முதலீடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை கூற வேண்டும். தேர்தலுக்காக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி நாடகமாடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






