search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை ஐகோர்ட்"

    • ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
    • 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முதல் அம்பத்தூர் தாசில்தாராக பதவி வகித்த 16 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

    சென்னை:

    சென்னை அம்பத்தூரில் உள்ள மோலி அலெக்சாண்டர் என்பவரது நிலத்துக்கு பட்டா வழங்கும் படி, அம்பத்தூர் வட்டாட்சியருக்கு கடந்த 2010-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக ஐகோர்ட் உத்தரவு அதிகாரிகளால் வேண்டுமென்று அவமதிக்கப்பட்டுள்ளதாக கூறி, 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முதல் அம்பத்தூர் தாசில்தாராக பதவி வகித்த 16 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

    இதனை எதிர்த்து மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் தாசில்தார்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

    • சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.
    • இதனால் பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானது.

    சென்னை:

    சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்ற பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.

    இதனால் பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியும் காலியாகி விட்டது. அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நடவடிக்கைகளை தமிழக சட்டசபை செயலகம் மேற்கொண்டது.

    இதற்கிடையே, திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

    இந்நிலையில், திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலகம் தெரிவித்துள்ளது.

    • கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
    • ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.

    ஆனால் அந்த பெண்ணுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவான அவர்களை ஆந்திராவில் கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

    ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்தநிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி,

    2 வாரங்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகளுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 16 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • வக்கீல் அஜ்மல் கான் ஆஜராகி பாராளுமன்ற தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்பதால் வைகோவின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
    • தேர்தல் ஆணையம் தரப்பில் வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், ம.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், "1996-ம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ம.தி.மு.க. போட்டியிட்டு வருகிறது.

    இந்த தேர்தல்களில் எங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

    கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக கூறி, எங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

    அதன்பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி உள்ளேன்.

    பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை. வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தை கேட்கவில்லை. எங்கள் மனுவை பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வைகோ தரப்பில் மூத்த வக்கீல் அஜ்மல் கான் ஆஜராகி பாராளுமன்ற தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்பதால் வைகோவின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

    தேர்தல் ஆணையம் தரப்பில் வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

    இதையடுத்து, ம.தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பிரிவின் கீழ் விண்ணப்பிக்க மதிமுகவுக்கு அனுமதி அளித்தனர்.

    மேலும், அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • ஏ.வி.ராஜூவிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சத்தை மான நஷ்ட ஈடாக கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார்.
    • வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலத்தையும், நடிகை திரிஷாவையும் தொடர்புபடுத்தி அ.தி.மு.க.வில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட சேலம் மாவட்ட நிர்வாகி ஏ.வி.ராஜூ சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதையடுத்து, ஏ.வி.ராஜூவிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சத்தை மான நஷ்ட ஈடாக கேட்டும், தன்னைப் பற்றி மேலும் அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கிற்கு பதில் அளிக்கும்படி ஏ.வி.ராஜூவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், வெங்கடாசலம் குறித்து அவதூறாக பேசவும் அவருக்கு இடைக்கால தடை விதித்தார்.

    • சிறப்பு கோர்ட்டு விசாரணையை மீண்டும் தொடங்கி நடத்த வேண்டும்.
    • தமிழக அமைச்சர்களில் கோர்ட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி இருக்கும் 3-வது அமைச்சராக ஐ.பெரியசாமி உள்ளார்.

    சென்னை:

    தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கடந்த 2008-ம் ஆண்டு அமைச்சராக பதவி வகித்தபோது, வீட்டுவசதி வாரிய வீடு ஒன்றை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியாற்றிய கணேசனுக்கு ஒதுக்கீடு செய்தார்.

    அதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றம், அந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

    இதையடுத்து நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பளித்தார்.

    வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது என்று இந்த கோர்ட்டு கருதுகிறது. எனவே அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    சிறப்பு கோர்ட்டு அந்த விசாரணையை மீண்டும் தொடங்கி நடத்த வேண்டும். ஐ.பெரியசாமி கோர்ட்டில் நேரில் ஆஜராகி ரூ.1 லட்சம் பிணை செலுத்தி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு அளித்தார்.

    தமிழக அமைச்சர்களில் கோர்ட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி இருக்கும் 3-வது அமைச்சராக ஐ.பெரியசாமி உள்ளார். இதற்கு முன்பு செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் மீது கோர்ட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதனால் அவர்கள் இருவரும் அமைச்சர் பதவியை இழந்தனர். இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான குற்றச்சாட்டு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட இருப்பது அவருக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது.

    இதேபோல அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராகவும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறார்.

    இதில் பா.வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலத்தடை விதித்துள்ளது.

    • கரூர் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்தது.
    • இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்கை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்துசெய்யுமாறு சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.

    • திங்கட்கிழமைக்கு பதிலாக புதன்கிழமை விசாரிக்க வேண்டுமென மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் முறையீடு செய்தார்.
    • செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கில் ஜனவரி 22-ந்தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை தொடங்க கூடாது என்றும், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்றபோது செந்தில் பாலாஜி சார்பில், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட் சத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாததாகிவிடும். அதனால், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

    இதை ஏற்காத நீதிபதி மனுவை தள்ளுபடி செய்ததுடன், இன்று (வெள்ளிக்கிழமை) குற்றச்சாட்டு பதிவு செய்ய செந்தில்பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சந்திரமோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் பிரபாகரன் ஆஜராகி முறையிட்டார்.

    மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை தாக்கல் செய்யும் பட்சத்தில் வழக்கமான முறைப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர்.

    இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பில் வாதாட விசாரணை திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம் ஆஜராகி ஜாமீன் மனு புதன்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும்.

    திங்கட்கிழமை தன்னால் ஆஜராக இயலாது என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    • வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
    • டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை திருத்தியுள்ளது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க கோரி 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணைக்கு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் சி. ஆர்யமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார். தன் வாதத்தில், "செந்தில் பாலாஜி தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார், இதனால் வழக்கில் சூழ்நிலைகள் மாறிவிட்டன."

     


    "மேலும் செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை திருத்தியுள்ளது. இதனை விசாரணையின் போது தான் நீரூபிக்க முடியும்," என்று தெரிவித்து இருந்தார்.

    இவர் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் தனது வாதத்தில், "இந்த வழக்கில் எந்த டிஜிட்டல் ஆதாரங்களையும் அமலாக்கத்துறை திருத்தவில்லை. அனைத்து ஆதாரங்களும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்டவை," என்று தெரிவித்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் தொடர் வாதத்துக்காக இன்று விசாரிப்பதாக உத்தரவிட்டிருந்தார். 

    • செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார்.
    • பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்க தயாராக உள்ளோம்.

    சென்னை:

    செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை மனுவில்,

    * செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக்கூடும்.

    * செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார்.

    * ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு.

    * பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்க தயாராக உள்ளோம்.

    * செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    * செந்தில் பாலாஜி தான் வழக்கின் விசாரணையை தொடங்க விடாமல் தாமதப்படுத்தி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் ஜாமின் மனு விசாரணைக்கு வருகிறது.

    • வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து முறையீடு செய்யாதது ஏன்?
    • அமைச்சராக இருப்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும் என ஐகோர்ட் சுட்டிக்காட்டியது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். தற்போது இவர் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

    கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த போலீஸ் அதிகாரி கணேசனுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2012-ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணையை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நேற்று முன்தினம் தொடங்கினார்.

    அப்போது, வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கியபின், ஐ.பெரியசாமி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது ஏன் என்பது உள்பட பல கேள்விகளை கேட்டார்.

    அதற்கு பதிலளித்து அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித்குமார் கூறுகையில், பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர கவர்னரிடம்தான் போலீசார் ஒப்புதல் பெற்று இருக்கவேண்டும். அதற்கு பதில் சபாநாயகரிடம் ஒப்புதல் பெற்றுள்ளனர். இது சட்டப்படி தவறு. அதனால் சாட்சி விசாரணை தொடங்கியபின், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஐ.பெரியசாமி மனுத்தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சபாநாயகர் அனுமதி வழங்க முடியாது. அனுமதி வழங்க அவருக்கு அதிகாரமே கிடையாது.

    அதனால், முறையான அனுமதி இல்லாமல் தொடரப்பட்ட வழக்கை சிறப்பு கோர்ட்டு விசாரிக்க முடியாது. அப்படி விசாரிப்பது கோர்ட்டின் நேரத்தையும், பொதுமக்களின் பணத்தையும் வீணடிப்பதாகும். எனவே சபாநாயகரின் ஒப்புதல் சட்டப்படி செல்லாது என்பதால் சிறப்பு கோர்ட்டு தன் மனதை முழுமையாக செலுத்தி, வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு சரியானது. அதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.

    இந்நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஐகோர்ட் சரமாரி கேள்விகள் எழுப்பியது.

    வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யாதது ஏன்?

    அமைச்சராக இருப்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும்.

    அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

    லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடின்மை காரணமாகவே தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டது எனக்கூறிய ஐகோர்ட் இந்த வழக்கின் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

    • கிளாம்பாக்கம் பஸ் நிலையமே, பயணிகளுக்கு அதிக வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டுள்ளது.
    • வண்டலூர் ரெயில் நிலையத்துக்கு 2 ‘ஸ்மால்’ பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையத்தில் இருந்துதான், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பஸ்களும் இயக்கப்பட வேண்டும் என கடந்த ஜனவரி 24-ந்தேதி போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, 'தாம்பரம், போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க ஆம்னி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படும். பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கி விடுவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றார்.

    ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயண், ''அனைத்து ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாகன நிறுத்தும் இடம் உள்ளன. எனவே கோயம்பேட்டில் இருந்தும் பயணிகளை ஏற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும், என்றார்.

    அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் குறுக்கிட்டு, ''ஆம்னி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படும் இடங்களில் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும்'' என்றார்.

    இதையடுத்து நீதிபதி, ''சென்னையில் அனைத்து இடங்களிலும் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி வழங்கினால் கிளாம்பாக்கம் செல்லும் முன்பாகவே பஸ்கள் நிரம்பி விடும். கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தொடங்கப்பட்டதன் நோக்கமே வீணாகி விடும். எனவே எந்தெந்த வழித்தடங்களில் பயணிகளை ஏற்றி இறக்க ஆம்னி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்தும், மாற்று வழித்தடங்களை அடையாளம் கண்டும் வரைபடங்களுடன் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை நாளை (வெள்ளிக்கிழமை) தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு விசாரணையின்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.,) உறுப்பினர் செயலாளர் அன்சூல் மிஸ்ரா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையமே, பயணிகளுக்கு அதிக வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு 2013-ம் ஆண்டு சட்டசபையில் வெளியிடப்பட்டன. முன்பு சென்னை அருகே பிராட்வே பகுதியில் இருந்துதான் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேடுக்கு பஸ்நிலையம் மாற்றப்பட்டபோது, இதுபோலத்தான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    தற்போது மக்கள்தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல் காரணமாக தென்மாவட்டங்கள் செல்லும் பஸ்கள் எல்லாம் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு செல்ல பயணிகள் அவதிப்படக்கூடாது என்பதற்காக கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு 17 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகருக்குள் பல்வேறு பகுதிகளுக்கு 698 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 4,651 நடைகள் (டிரிப்கள்) அடிக்கப்படுகின்றன. இதுபோக வண்டலூர் ரெயில் நிலையத்துக்கு 2 'ஸ்மால்' பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே, மனுதாரர்களின் கோரிக்கையின் அடிப்படையில், ஆம்னி பஸ்களை கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்க அனுமதித்ததால், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உருவாக்கியதற்கான நோக்கமே அடிப்பட்டு விடும்.

    மனுதாரர்கள் தங்கள் நலனுக்காகத்தான் பார்க்கின்றனரே தவிர, பொதுமக்கள் மற்றும் அரசின் நலனை கருத்தில் கொள்ளவில்லை. இதுபோன்ற வழக்குகளை தொடர்ந்து, தென்மாவட்ட பஸ்கள் எங்கிருந்து புறப்படுகிறது என்ற தேவையற்ற குழப்பத்தை பயணிகள் மத்தியில் உருவாக்குகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×