search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை ஐகோர்ட் அதிரடி
    X

    அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை ஐகோர்ட் அதிரடி

    • சிறப்பு கோர்ட்டு விசாரணையை மீண்டும் தொடங்கி நடத்த வேண்டும்.
    • தமிழக அமைச்சர்களில் கோர்ட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி இருக்கும் 3-வது அமைச்சராக ஐ.பெரியசாமி உள்ளார்.

    சென்னை:

    தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கடந்த 2008-ம் ஆண்டு அமைச்சராக பதவி வகித்தபோது, வீட்டுவசதி வாரிய வீடு ஒன்றை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியாற்றிய கணேசனுக்கு ஒதுக்கீடு செய்தார்.

    அதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றம், அந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

    இதையடுத்து நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பளித்தார்.

    வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது என்று இந்த கோர்ட்டு கருதுகிறது. எனவே அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    சிறப்பு கோர்ட்டு அந்த விசாரணையை மீண்டும் தொடங்கி நடத்த வேண்டும். ஐ.பெரியசாமி கோர்ட்டில் நேரில் ஆஜராகி ரூ.1 லட்சம் பிணை செலுத்தி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு அளித்தார்.

    தமிழக அமைச்சர்களில் கோர்ட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி இருக்கும் 3-வது அமைச்சராக ஐ.பெரியசாமி உள்ளார். இதற்கு முன்பு செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் மீது கோர்ட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதனால் அவர்கள் இருவரும் அமைச்சர் பதவியை இழந்தனர். இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான குற்றச்சாட்டு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட இருப்பது அவருக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது.

    இதேபோல அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராகவும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறார்.

    இதில் பா.வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலத்தடை விதித்துள்ளது.

    Next Story
    ×