search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுங்கச்சாவடி"

    • சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு அறிவித்தது.
    • மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி தொடர்ந்து வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் அடிக்கடி சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக வியாபாரிகள், டிரைவர்கள், பொதுமக்கள், போராட்டம், மறியல், கடையடைப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடமும், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி மனுவும் அளிக்கப்பட்டது.

    இந்தநிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத்தலைவர் சிங்காரவேலன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினர். முற்றுகை காரணமாக சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பலனில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் ஓ.பி.எஸ். தலைமையில் போராட்டம் நடத்தப்படும்.
    • வருகிற 3-ந்தேதி காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ். பயணத்தை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பயணியர் விடுதியில் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் ஓ.பி.எஸ். அணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பூலித்தேவன் நினைவு நாள், மூக்கையா நினைவு நாள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

    ஓ.பி.எஸ். தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் 40 40 பேரை நிறுத்தி வெற்றி பெறுவோம். இதுதான் ஓ.பி.எஸ். நிலைப்பாடு. வருகிற 3-ந்தேதி காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ். பயணத்தை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

    கப்பலூர் சுங்கச்சாவடி மேலக்கோட்டையை கடந்து தான் அமைக்க வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற போராட்டம் நடத்துபவர்கள் யாரும் இல்லை. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த சுங்கச்சாவடியை அகற்றா விட்டால் ஓ.பி.எஸ். தலைமையில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரவி, நகரச் செயலாளர் ராஜா மணி, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் கருத்தராஜ், நகர துணை செயலாளர் விஜய் பாண்டி, முன்னாள் கவுன்சிலர் அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
    • இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.470-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 54 சுங்கச்சாவடிகளுடன் புதிதாக சில சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இவற்றில், குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதியும் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

    நடப்பாண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதி (இன்று நள்ளிரவு) முதல் அமல்படுத்தப்படுகிறது.

    அதன்படி, திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

    குறிப்பாக, மதுரை-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர பழைய கட்டணம் ரூ.85-ல் இருந்து ரூ.90 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.125-ல் இருந்து ரூ.135 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2 ஆயிரத்து 505-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 740 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.145-ல் இருந்து ரூ.160 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.220-ல் இருந்து ரூ.240 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.4 ஆயிரத்து 385-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோல் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர கட்டணம் ரூ.290-ல் இருந்து ரூ.320 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.440-ல் இருந்து ரூ.480 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.8 ஆயிரத்து 770-ல் இருந்து ரூ.9 ஆயிரத்து 595 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோல் இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.470-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருமுறை சென்றுவர கட்டணம் ரூ.705-ல் இருந்து ரூ.770 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.14 ஆயிரத்து 95-ல் இருந்து ரூ.15 ஆயிரத்து 420 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோன்று பிற சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் தூரத்துக்கு தகுந்தவாறு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • சுங்கச்சாவடியில் எப்போதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.
    • சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது.

    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களும், சென்னை நகருக்குள் செல்லும் வாகனங்களுக்கும் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி முக்கிய இடமாக உள்ளது. இதனால் இந்த சுங்கச்சாவடியில் எப்போதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.

    சுங்கச்சாவடிகளில் போதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    இந்த நிலையில் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது.

    இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க வரியை வசூலிப்பதில் உள்ள வீடுகளை முறையாக கடைபிடிக்காமல் வாகன ஓட்டிகளிடம் அதிகப்படியான கட்டணங்களைச் வசூல் செய்து இருப்பது தெரிந்தது.

    நான்கு வழிச்சாலையை மேம்படுத்தும் போது கட்டணத்தை மாற்றி அமைக்காமல் கட்டணத்தில் 75 சதவீதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    ஆனால் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 5 சுங்கச்சாவடிகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    பரனூர் சுங்கச்சாவடியில் நான்கு வழிச்சாலையை 8 வழிச்சாலையாக இரண்டு பிரிவுகளாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. இதில் முதல் திட்டப்பணி இரும்புலியூர் முதல் வண்டலூர்வரை 2.3 கி.மீட்டர் வரையும், இரண்டாம் திட்டப்பணி கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் முதல் வண்டலூர் முதல் கூடுவாஞ்சேரி வரை 5.3 கி.மீ வரையும் நடைபெற்றது.

    இதில் முதல் திட்டப்பணி கடந்த 2020-ம் ஆண்டு முடிந்தது. 2-ம் திட்டப்பணி மார்ச் 2021-ம் ஆண்டும் தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் இந்த பாதையில் சுங்கக்கட்டணத்தை 75 சதவீதமாகக் சுங்ச்சாவடி குறைக்கவில்லை.

    இதனால் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.6.54 கோடி அளவுக்கு அதிகமான சுங்கச் வசூல் செய்து உள்ளது.

    இதேபோல் 1956-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்திற்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விதியில் உள்ளது. ஆனால் பரனூர் சுங்கச்சாவடியி 1954 -ம் ஆண்டு கட்டப்பட்ட பாலத்திற்கும் கூடுதலாக கட்டணம் வசூலித்து இருக்கிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021 வரை பரனூர் சுங்கச்சாடியில் விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் ரூ. 22 கோடி கூடுதல் சுங்கக் கட்டணத்தை வசூலித்து இருப்பது மத்திய தணிக்கை அறிக்கையில் தெரியவந்து உள்ளது.

    இதேபோல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இருபுறங்களிலும் கழிவறை கட்டப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால் 41 சுங்கச்சாவடிகளில் பரனூர், கொடைரோடு உள்ளிட்ட 13 சுங்கச்சாவடிகளில் ஒரு புறத்தில் மட்டும் கழிவறை கட்டப்பட்டு உள்ளது. மேலும் 3 சுங்கச்சாவடிகளில் கழிவறைகள் கட்டப்பட்டு இருந்தாலும் அவை முறையாக பராமரிக்கப்பட வில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
    • மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் தென்பகுதி நுழைவாயிலாக திருமங்க லம் உள்ளது. குறிப்பாக எடப்பாடியார் திருமங்கலம் தொகுதிக்கு, பல்வேறு நலத்திட்டங்களை செய்தார். கள்ளிக்குடியில் புதிய வட்டம், திருமங்க லத்தில் புதிய கோட்டம், அதனைத் தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில் உள்ள 324 கிராமங்கள், 116 ஊராட்சிகள், திருமங்கலம் நகரில் உள்ள 27 வார்டுகள், இரண்டு பேரூராட்சியில் உள்ள 30 வார்டுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சாலைகள், புதிய கிராம இணைப்பு சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை எடப்பாடியார் செய்து கொடுத்தார்.

    மேலும் எடப்பாடியார் ஆட்சியில் தான் திருமங்கலம் யூனியன் சிறப்பாக செயல்பட்டு மத்திய அரசு விருது பெற்று இதற்காக 25 லட்சம் ரூபாயை பரிசாக பெற்றது. அதேபோல் கல்லுப்பட்டி பேரூராட்சியும் சிறப்பு விருதினை பெற்றது. திருமங்கலம் நகராட்சிக்கு புதிய கட்டிடங்கள், கல்லூரி களுக்கு புதிய கட்டிடங்கள் உருவாக்கி தரப்பட்டது.

    அதேபோல் திருமங்க லத்தில் ரெயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டது. அது கிடப்பில் போடப் பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை சட்டமன்றத்தில் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    மேலும் மக்களின் பிரதானமாக கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது. மத்திய அமைச்சர் நிதி கட்காரி 6 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுங்க சாவடி அகற்றப்படும் எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கப்பலூர் சுங்க சாவடியை அகற்றுவோம் என்று முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தி ருந்தார்.

    எடப்பாடியார் ஆட்சி காலத்தில் உள்ளூர் வானங்களை முறையாக கையாளும் வகையில் பல்வேறு சலுகைகள் பெற்று தரப்பட்டது. ஏற்கனவே உங்கள் தொகுதி முதல்-அமைச்சர் என்ற திட்டத்தில் 10 கோரிக்கையில் இதுவும் பிரதான கோரிக்கையாக நான் கொடுத்துள்ளேன்.

    கப்பலூர் டோல்கேட் குறித்து நான் மக்களிடம் மனுககளை வாங்கும் பொழுது ஒரு நாள் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்து என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கும் நிலுவையில் தான் உள்ளது. தொடர்ந்து எதிர்கட்சி தொகுதிகளை பாராபட்சம் காட்டி வஞ்சிக்க கூடாது இது ஜனநாயகத்திற்கு அழகல்ல

    கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற நடவடிக்கை எடுக்க விட்டால் எடப்பாடியார் அனுமதியை பெற்று தமிழக அரசுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
    • பழைய மாமல்லபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    திருப்போரூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை நாவலூரில் சுங்கச்சாவடி உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் பணிக்காக அரசு சார்பில் சென்னையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் நான்கு சுங்கச்சாவடிகள் மூடப்பட்டன. நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பழைய மாமல்லபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாவலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஓ.எம்.ஆர். சாலையில் சுமார் 3 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் அனைவரும் நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    தற்போது பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கம், காரப்பாக்கம் சோழிங்கநல்லூர், நாவலூர் பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையின் நடுவில் ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    ஆனால் நாவலூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • கொடைரோடு சுங்கச்சாவடியில் வந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்துமாறு கூறினர்.

    கொடைரோடு:

    தூத்துக்குடியில் புதூர் பாண்டியாபுரம் விளக்கு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சீமான் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அக்கட்சி நிர்வாகிகள் வாகனங்களில் தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரு தனியார் பஸ்சில் தூத்துக்குடிக்கு சென்றனர். அவர்கள் இன்று காலை திண்டுக்கல் அடுத்துள்ள கொடைரோடு சுங்கச்சாவடியில் வந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்துமாறு கூறினர்.

    அதற்கு எங்கள் கட்சி கொடியை பார்த்ததும் கட்டணம் கேட்பீர்களா என அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். கட்டணம் செலுத்தாமல் செல்ல முடியாது எனக்கூறி அவர்கள் வந்த வாகனத்தை நிறுத்தினர். இதனால் அக்கட்சி நிர்வாகிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் பணிக்கு செல்லும் ஊழியர்களும், மற்ற வாகனங்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின.

    • சாத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சமரச கூட்டத்தில் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் எட்டூர் வட்டம் பகுதியில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியின் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூய்மைப் படுத்தப்படாமல் உள்ளது. மேலும் அவ்வப்போது இந்த வாய்க்காலில் கால்நடைகள் விழுந்து இறந்து பெரும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

    இந்த கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் கால்வாயை சுத்தப்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடனான சமரச கூட்டம் வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ஐயப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மேலும் அரசு அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பங்கேற்றனர். அப்போது வாய்க்காலை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வால் வாகன உரிமையாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
    • இதனால் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளது. நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கப்பலூர் சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் உள்ள சுங்கசாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தனியார் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள கப்பலூர் உள்ளிட்ட 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதன்படி கப்பலூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்கள் ஒருமுறை சுங்கச்சாவடியினை கடந்து செல்ல 100ரூபாயும், 24மணி நேர பயன்பாட்டிற்கு 150 ரூபாயும், 50தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.3280 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இலகுரக வணிக வாகனம் ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூ.160-ம் 24மணி நேர பயன்பாட்டிற்கு ரூ.240-ம், 50தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.5 ஆயிரத்து 295 ஆகவும், 2 அச்சு கனரக வாகனம், பஸ்கள் ஒரு முறை பயன்பாட்டிற்கு ரூ.335, 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கு ரூ.500, 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.11095 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    3 அச்சு கனரக வாகனங்க ளுக்கு ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.365-ம், 24 மணி நேர பயன்பாட்டு கட்டணம் ரூ.545-ம், 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.12,105 ஆகவும், 4 முதல் 6 அச்சு வரையிலான கனரக வாகனங்கள் ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூ.520-ம், 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கு ரூ.785-ம், 50 தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.17 ஆயிரத்து 400 ஆகவும் உயர்த்த ப்பட்டுள்ளது.

    7 மற்றும் அதற்கு மேல் அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கு ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.635-ம், 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.955-ம், 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.21 ஆயிரத்து 180 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வால் வாகன உரிமையாளர்களும், வாடகை வாகன ஓட்டிகளும், கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே பெட்ேரால், டீசல் விலை அதிகமாக உள்ள நிலையில் சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால் ேபாக்குவரத்து செலவு கடுமையாக அதிகரிக்கும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். இதனால் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று வாகன ஓட்டுனர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாத கட்டணம் ரூ.240 ஆகும்.
    • பள்ளிப் பேருந்துகளுக்கு மாத கட்டணம் ரூ.1900 ஆகும்.

    சென்னை:

    சென்னை-புதுச்சேரி நெடுஞ்சாலையில் உத்தண்டி, மாமல்லபுரம், அனுமந்தை உள்ளிட்ட பகுதிகளில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும்.

    சென்னை-மாமல்லபுரம் இடையே சுற்றுலா போக்குவரத்து அதிகரித்ததால் 2018-ம் ஆண்டு அக்கரை-மாமல்லபுரம் இடையேயான சாலை 4 வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்டது. மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் காரணமாக மாமல்லபுரம், புதுச்சேரி இடையே கடந்த ஆகஸ்டு மாதம் முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அனைத்து வாகனங்களுக்கும் அக்கரை-மாமல்லபுரம் வரையிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

    தற்போது இந்த பகுதியில் சுங்க கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி சுங்கச்சாவடி, திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் சந்திப்பில் உள்ள கோவளம் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும்.

    சென்னை அக்கரை-மாமல்லபுரம் இடையே கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.47, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.70, ஒரே நாளில் பலமுறை பயணம் செய்ய ரூ.128, மாதாந்திர கட்டணம் ரூ.2,721 ஆகும். இலகுரக சரக்கு வாகனங்கள், சிற்றுந்துகளுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.75, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.113 கட்டணம் ஆகும்.

    பேருந்து, இருசக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.157, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.236 கட்டணம் ஆகும். 3 சக்கர வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.172, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.258 கட்டணம் ஆகும். 4 சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.247, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.370 கட்டணம். கடும் கனரக கட்டுமான வாகனங்கள், 7 மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.301, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.451 கட்டணம் ஆகும்.

    உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாத கட்டணம் ரூ.240 ஆகும். பள்ளிப் பேருந்துகளுக்கு மாத கட்டணம் ரூ.1900 ஆகும்.

    • தனியார் பஸ்களின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
    • அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.

    சென்னை :

    இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

    அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு மூலம் ஒரு காருக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயரும் என தெரிகிறது.

    சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் உள்ள பரணூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

    இதன்மூலம் சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு கார் போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் செலவு ஏற்படும்.

    இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனியார் பஸ்களின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.

    இந்த கட்டண உயர்வு குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்றும், அதேவேளையில் ஆண்டுதோறும் உயர்த்தப்படும் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சுங்கச்சாவடிகளில் 40 சதவீத கட்டணம் குறைக்கப்படும், 60 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகள், நகர்ப்பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்கரி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதன்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தற்போது சுங்கச்சாவடிகள் அனைத்தும் பணம் வசூலிக்கும் மையங்களாகவே செயல்பட்டு வருகின்றன. சாலைகளை சீரமைப்பது போன்ற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவது இல்லை. சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது வணிகர்கள், வாகன உரிமையாளர்களை மட்டுமல்லாமல் மக்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டால் மதுரவாயல் சுங்கச்சாவடியில் ஏப்ரல் 1-ந்தேதி போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கப்பலூர் சுங்கச்சாவடிைய நீக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    திருமங்கலம்

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கோட்ட  முதல் மாநாடு திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் செயலாளர் கண்ணன் மற்றும் பரமேஸ்வரன் சங்க கொடியேற்றி வைத்தனர்.

    இந்த மாநாட்டிற்கு கோட்ட தலைவர் பாண்டி யன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் தினகரசாமி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சோலைமலை தொடக்க உரையாற்றினார்.கோட்ட செயலாளர் ராஜேந்திரன் அறிக்கை வாசித்தார். 

    இந்த மாநாட்டில் மத்திய-மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை  குறைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். திருமங்கலம்- மதுரை சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    திருமங்கலம் நகரில் உள்ள பஸ் நிலையத்தை  விரிவாக்கம் செய்திட விரைவில் உறுதி செய்திட வேண்டும். ெரயில்வே மேம்பாலம் கட்டிட வரைபடம் உறுதி செய்யப்பட்ட நிலையில் பணிகள் தொடங்க இருப்பதால் உடனடியாக விரைந்து பணிகள் நடைபெற செய்ய வேண்டும். 

     ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டிட அலுவலகத்தின் பின்புறம் உள்ள 42 சென்ட் இடத்தினை விரைவாக பெற்றுக் கட்டுமானப் பணி யினை நிறைவு செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள்   நிறைவேற்றினர்.

    முடிவில் பொருளாளர் சோமசுந்தரம்   நன்றி கூறினார்.
    ×