search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கட்டண உயர்வை கண்டித்து கப்பலூர் சுங்கச்சாவடியில் முற்றுகை போராட்டம்
    X

    கட்டண உயர்வை கண்டித்து கப்பலூர் சுங்கச்சாவடியில் முற்றுகை போராட்டம்

    • சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு அறிவித்தது.
    • மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி தொடர்ந்து வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் அடிக்கடி சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக வியாபாரிகள், டிரைவர்கள், பொதுமக்கள், போராட்டம், மறியல், கடையடைப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடமும், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி மனுவும் அளிக்கப்பட்டது.

    இந்தநிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத்தலைவர் சிங்காரவேலன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினர். முற்றுகை காரணமாக சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பலனில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×