search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்"

    • கவர்னர் தமிழிசை, கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.
    • அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் 70 பேர் தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது அறிவித்தார்.

    அதன்மூலம் ஆண்டு தோறும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக் கல்லுரிகளில் அதிக அளவில் இடங்களை பெற்று வருகின்றனர்.

    இதேபோல் புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) படிப்பதற்கு உள் இடஒதுக்கீடு வழங்க முதலமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

    இதைத்தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். மேலும் முதலமைச்சர் ரங்கசாமியிடமும் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கிடு வழங்க அனுமதிக்குமாறு முதலமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பரிந்துரை செய்து அதற்கான கோப்பை அனுப்பி வைத்துள்ளார்.

    அதே போல் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி, அதை உடனடியாக நடைமுறைப்படுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் இந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த இடஒதுக்கீட்டு முறை அமலுக்கு வந்தால் இந்த ஆண்டில் இருந்தே அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 37 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பிலும், 14 பேர் பல் மருத்துவ படிப்பிலும் சேர்ந்து பயனடையும் வாய்ப்பு உள்ளது. அரசுப்பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் 70 பேர் தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ந் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நம் அனைவரது வாழ்விலும் மருத்துவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை கொரோனா வெளிப்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய மருத்துவர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் முதல் நிலை களப்பணியாளர்களாக பணியாற்றி பெருந்தொற்றின் கோரப்பிடியில் இருந்து மனித உயிர்களை காப்பாற்றியதற்காக மருத்துவர்களுக்கு நன்றி சொல்வதற்கு ஏற்ற தருணம் இது.

    தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றி மருத்துவர்களின் கடமை உணர்வை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறார்கள். நம் அனைவரது வாழ்விலும் மருத்துவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை கொரோனா வெளிப்படுத்தி இருக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ந் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தன்னலமற்ற, ஈடு இணையில்லாத சேவையைப் போற்றுகின்ற, மதிக்கின்ற அதே வேளை நம்முடைய உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களையும் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கவர்னர் தமிழிசை கிராமப்புற பகுதியான கூனிச்சம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • மாணவர்களுக்கு வகுப்பறை போல கழிவறையும் சுத்தமாக மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

    புதுச்சேரி:

    கவர்னர் தமிழிசை கிராமப்புற பகுதியான கூனிச்சம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது 'நான் யார்' என மாணவர்களிடம் கேட்டபோது கவர்னர் என்று சில மாணவர்கள் கூறினர். வேறு சிலர் "தமிழிசை" என்றும் இன்னும் சிலர் "தமிழிசை சவுந்தரராஜன்" என்றும் கூறினார்கள். இதற்காக மாணவர்களை தட்டிக் கொடுத்து அவர் வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு வகுப்பறை போல கழிவறையும் சுத்தமாக மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இதற்காக சமூக பொறுப்புணர்வு திட்டத்திற்கு தனியார் மூலம் கழிவறைகளை புதுப்பித்து தரவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

    நடிகர் விஜய் மாணவர்களை சந்திப்பது குறித்தும் தேச தலைவர்களின் வாழ்க்கை வரலாறை அவர் படிக்க சொன்னது குறித்தும் கேட்டதற்கு கவர்னர் தமிழிசை பதில் அளிக்காமல் தவிர்த்து புறப்பட்டு சென்றார்.

    ஏற்கனவே, கவர்னர் தமிழிசை நகர பகுதியில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்ய சென்றபோது நிருபர்கள் விஜய் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்காமல் புறப்பட்டார். 2-வது முறையாக நடிகர் விஜய் குறித்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவிகள் வழக்கம்போல் இன்று ஆட்டோவில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.
    • பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் விபத்துக்குள்ளான சிறுமிகளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையையொட்டி ஓய்ட் டவுன் பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளிக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் ஆட்டோக்கள் மூலம் சென்று வருகின்றனர். 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மூலக்குளம் மற்றும் அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த மாணவிகள் வழக்கம்போல் இன்று ஆட்டோவில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.

    புஸ்ஸி வீதியில் வந்த ஆட்டோவும் அரசு மருத்துவ மனையிலிருந்து எதிரே வந்த தனியார் பஸ்சும் எதிர்பாராத விதமாக வேகமாக மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் விக்னேஷ்(22), பள்ளி குழந்தைகள் கோபாலன் கடையை சேர்ந்த தக்கிதா(9), மூலக்குளத்தை சேர்ந்த ஹர்ஷீதா(7), அரும்பார்த்த புரத்தை சேர்ந்த தீக்க்ஷா(6), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த கிரண்யா(10), மூலக்குளத்தை சேர்ந்த பூர்ணிகா (7), நிக்கிஷா (10), அவந்திகா (10), திஷா (10) ஆகிய 8 சிறுமிகளுக்கு தலை, கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. பள்ளி குழந்தைகள் விபத்தில் சிக்கியதால் அலறி கூச்சலிட்டனர்.

    அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் விபத்துக்குள்ளான சிறுமிகளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் நிக்கிஷா(10), அவந்திகா (10) ஆகியோர் தலையில் படுகாயமடைந்திருந்தனர்.

    இதையடுத்து அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற சிறுமிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்து அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்டு கண்ணீர் விட்டு கதறியழுதனர்.

    இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தகவலறிந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்- அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக வந்தனர். குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    • வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு பெண்கள் பள்ளியை மாற்றியது சவாலான சூழ்நிலைதான்.
    • அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் மிக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்.

    புதுச்சேரி:

    புதுவை பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வந்த சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி கட்டடம் சிதிலமடைந்துள்ளது.

    இதனால் பள்ளியை கடந்த ஆண்டு குருசுகுப்பம் என்.கே.சி. பள்ளியில் இணைத்தனர். அப்போது அங்கு படித்து வந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களை சமாதானப்படுத்தி பள்ளி கடந்த கல்வியாண்டில் அங்கேயே இயங்கியது. பாரதியார் பள்ளி கட்டடம் புதுப்பிக்கப்படவில்லை.

    நடப்பு கல்வியாண்டில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளியை கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர். இதற்கு பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாணவிகளை பள்ளிக்குள் விடமால் கேட்டை மூடி போராட்டம் நடத்தினர். வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளியை திரு.வி.க. பள்ளியில் இணைக்க சம்மதிக்கமாட்டோம், ஷிப்ட் முறையில் இயங்கவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் மறைமலை அடிகள் சாலையில் அமர்ந்து மறியல் நடத்தினர். அமைச்சர் நமச்சிவாயம் மறியல் செய்த மாணவிகளை சமாதானப்படுத்தினார். தொடர்ந்து பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக ஓராண்டு மட்டும் பள்ளியை இடமாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார்.

    இதன்பிறகு இன்று முதல் வீராமுனிவர் ஆண்கள் பள்ளி கட்டடத்தில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி இயங்குகிறது. வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளி மாணவர்கள், திரு.வி.க. பள்ளியோடு இணைத்து ஒரே ஷிப்ட் முறையில் பாடம் படிக்கின்றனர்.

    இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் போராட்டம், இடமாற்றம் குறித்து கேள்விப்பட்ட கவர்னர் தமிழிசை, இன்று வீரமாமுனிவர் பள்ளிக்கு சென்று சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாணவிகளை சந்தித்தார். பள்ளி துணை முதல்வர் கவுரி தலைமையில் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

    அப்போது தங்கள் பள்ளி முழு நேரம் இயங்கவும், கட்டடத்தை இடமாற்றம் செய்ய உதவிய கல்வித்துறை அதிகாரிகளுக்கும், கவர்னருக்கும் மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை முதல்தளத்தில் உள்ள பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பறைகளுக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த மாணவிகளோடு அமர்ந்து பேசினார். பின்னர் பரிசோதனை கூடத்துக்கு சென்றார். அது பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக பார்வையிட்டு பின் கீழே வந்தார்.

    பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு பெண்கள் பள்ளியை மாற்றியது சவாலான சூழ்நிலைதான். அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் மிக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். குழந்தைகள் படிக்க வேண்டும் என போராடியதை பாராட்ட வந்தேன். பெண்கள் தங்களின் தேவையை உரக்க சொல்லியுள்ளனர். அதற்கான வழியை அரசும், சமுதாயமும் பெற்றுத் தந்துள்ளது.

    அதற்காக அனைத்திற்கும் போராட வேண்டும் என்பது இல்லை.

    பள்ளி கல்வித்துறையிடம் பரிசோதனைக்கூடம் அமைக்க அறிவுறுத்தியுள்ளேன். அரசு அனைத்து கல்வி நிலையங்களையும் போதிய வசதிகளோடு அமைத்துத்தர வேண்டும்.

    சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டு வந்துள்ளோம். டிஜிட்டல் வகுப்பறை ஏற்படுத்த போகிறோம். இவற்றை முன்பே இருந்த ஆட்சியாளர்கள் சரி செய்திருக்கவேண்டும்.

    போதிய வசதிகள் இல்லாதது வருத்தம் தரக்கூடியதுதான். இருப்பினும் அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் செய்துதர தனி கவனம் செலுத்தவுள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து தமிழக கவர்னர் குறித்து தி.மு.க.வின் முரசொலியில் வெளியான கருத்து, நடிகர் விஜய் மாணவர்களுக்கு பரிசு வழங்கியது தொடர்பான கேள்விகளுக்கு கவர்னர் தமிழிசை பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டு கிளம்பிச் சென்றார்.

    இதன்பின் சுப்பிரமணிய பாரதியார் பள்ளியையும் கவர்னர் தமிழிசை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தங்கள் பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கேட்டு சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாணவிகள் மறைமலை அடிகள் சாலையில் தரையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

    இந்த மறியல் போராட்டத்தின்போது பிளஸ்-2 மாணவி சகானா கடுமையாக கோஷம் எழுப்பினார். அமைச்சர் நமச்சிவாயத்திடமும், 2 ஆண்டாக அலைக்கழிக்கப்படுவதை எடுத்துக்கூறி ஆவேசமாக பேசினார். இன்று கவர்னர் தமிழிசை மாணவிகளை சந்தித்தபோது, பிளஸ்-2 வகுப்பறையில் இருந்த மாணவி சகானாவை அடையாளம் காட்டினர். அவரை கவர்னர் அழைத்தார்.

    அவரை அழைத்து, உங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தியது நியாயமானது, விரைவில் நிரந்தர கட்டிடம் கிடைக்கும் என அவரின் தோளில் தட்டி பாராட்டினார்.

    அப்போது சக மாணவிகளும் கை தட்டி வரவேற்றனர்.

    • கவர்னர் மாளிகையில் உள்ள பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த கவர்னர் தமிழிசை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மத்தியில் கேக் வெட்டினார்.
    • கவர்னருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது உருவம் கோலத்தில் வரையப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    புதுச்சேரி:

    கவர்னர் தமிழிசை பிறந்த நாள் விழா புதுவை கவர்னர் மாளிகையில் கொண்டாடப்பட்டது.

    கவர்னர் மாளிகையில் உள்ள பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த கவர்னர் தமிழிசை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மத்தியில் கேக் வெட்டினார். கவர்னருக்கு புதுவை தலைமை செயலாளர் ராஜுவர்மா மற்றும் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் உதய நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை கவர்னர் தமிழிசை ரசித்து பார்த்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய செல்போன் காலர் டியூன் பாடலான ''எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு'' என்ற பாடலை எடுத்து தெலுங்கானா மாணவர்கள் நடனமாடினர்.

    ''ஆடுவோமே பள்ளு பாடுவோமே'' என்ற பாரதியார் பாடலை எடுத்தும் பாடினர்.

    தெலுங்கானா ராஜ்பவனில் தமிழ் ஒலித்தது. இதனைத்தான் பிரதமர் விரும்புகிறார். தெலுங்கானா மாநில உதய தினம் எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது.

    எல்லா மாநில கவர்னர்களும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படி தெலங்கானா உதய தினமும், உங்களுடைய பிறந்த தினமும் ஒன்றாக அமைந்தது என்று கேட்டனர். அது இறைவனின் சித்தம் என்று நான் சொன்னேன்.

    தெலுங்கானாவில் இன்னும் அரசியல் இருக்கிறது. அங்கு உதய தினத்தை பெரிய விழாவாக கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் கவர்னரை அழைப்பதில்லை. அதைப்பற்றி நானும் கவலைப்படுவதில்லை.

    கவர்னரை அழைக்கமாட்டார்கள், ஆனால் அதே கட்சி தான் ஜனாதிபதியை ஏன் அழைப்பதில்லை என்று கேள்வி கேட்பார்கள்.

    அப்படியானால் இதில் எவ்வளவு மாறுபாடுகள், அரசியல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவுக்கு அரசியலமைப்பு தலைவரை அழைக்கவில்லை. ஆகவே விழாவுக்கு வரவில்லை என்பார்கள். ஆனால் அவர்கள் அரசியலமைப்பு தலைவரை எந்த நிகழ்வுக்கும் அழைக்கமாட்டார்கள்.

    இதில் அரசியல் இருக்க கூடாது. எல்லாவற்றிலும் பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும். அதில் எனக்கு ஒரு சதவீதம் கூட கவலையில்லை. தெலுங்கானாவில் 2 அரசு நடைபெறவில்லை.

    மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்பதை நாம் பார்க்கின்றோம். புதுவையை பொருத்தவரையில் நமக்கான தண்ணீர் எந்தவித்திலும் குறைய கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். எதிர்கட்சியாக இருக்கும்போது ஒருவகையாகவும், ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு வகையாகவும் அவர்கள் பணியாற்றுகின்றனர்.

    ஒருவேலை மாற்று கட்சியினரிடம் இருந்து அணை கட்டுவது தொடர்பான அறிவிப்பு வந்திருந்தால் தமிழக அரசு பெரிய எதிர்ப்பை தெரிவித்திருப்பார்கள்.

    ஆனால் அதைப்பற்றி இப்போது வெளிக்காட்டாமல் இருக்கின்றனர். நமக்கென்று வரும்போது ஒரு அரசியலும், பிறருக்கென்று வரும்போது ஒரு அரசியலும் இல்லாமல் எப்போதும் ஒரே தன்மையான நிலைபாட்டில் இருக்க வேண்டும்.

    தெலுங்கானா முதலமைச்சருக்கு நான் கருத்து சொல்லும் அளவுக்கு இல்லை. மக்களுக்கு, நான் சொல்வது உங்களுக்கு நான், எனக்காக நீங்கள் என்று ஏற்கனவே பேசியுள்ளேன். ஆகவே அவர்கள் என்னோடு அன்போடு பயணிக்கிறார்கள். அவர்களின் மேம்பாட்டில் என்னுடைய பயணம் எப்போதும் தொடரும்.

    இவ்வாறு தமிழிசை கூறினார்.

    கவர்னருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது உருவம் கோலத்தில் வரையப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    • 2023 ஐ.பி.எல். தொடரில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    2023 ஐ.பி.எல். தொடரில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வீரர் மகேந்திர சிங் டோனி தலைமையில் மிகச் சிறப்பாக விளையாடி குறிப்பாக நேற்றைய போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 6-ரன்கள் மற்றும் 4-ரன்கள் அடித்து வெற்றி பெற காரணமாக இருந்த வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மத்திய அரசு புதுச்சேரிக்கு 1,250 கோடி அதிகம் தந்துள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது.
    • புதுவையில் பொதுப்பணித்துறையில் 20 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் அமைச்சர் முதலமைச்சர் ரங்கசாமிதான். அவர் உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து மாணவர் சேர்க்கை நடைபெற ஏற்பாடு செய்யவேண்டும். இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    மத்திய அரசு புதுச்சேரிக்கு 1,250 கோடி அதிகம் தந்துள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது. அதில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை, ரூ.200 கோடி 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக வழங்கப்பட்டது. உண்மையில் நமக்கு கிடைத்தது ரூ.350 கோடிதான்.

    புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவில்லை. அதேபோல் தமிழ் கட்டாயம் என்று அறிவிக்கப்படவிலை. தமிழ் மண்ணில் தமிழ் புறக்கணிக்கப்படுவது வேதனையாக உள்ளது.

    புதுவையில் பொதுப்பணித்துறையில் 20 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள். கலால்துறை முறைகேடு தொடர்பாக நிதித்துறை செயலாளர் ராஜூ, கலால்துறை துணை ஆணையர் சுதாகர் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர் என நினைக்கிறோம்.

    ஆனால் உண்மையில் நகரப்பகுதியில் அமைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைக்கும் கண்ட்ரோல் ரூம் ரூ.170 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை மத்திய அரசு நிறுவனமான ரெயில்டெல்லுக்கு அல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் வகையில் அவர்கள் இருவரும் சாதகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசு செயலாளராக இருந்த அருண் தலைமை செயலாளருக்கு புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில் முகாந்திரம் இருந்ததால் அதனை தலைமை செயலாளர் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளார். உள்துறைதான் அவர்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர் தான் இருவரும் மாற்றப்பட்டு உள்ளனர். தலைமை செயலாளர் இதில் நடவடிக்கை எடுக்காதிருந்தால் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கும்.

    முதலமைச்சரின் உத்தரவு இல்லாமல் அவர்கள் இவ்வாறு நடந்திருக்க மாட்டார்கள். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளேன். ஆனால் அவர்கள் பதில் சொல்வதில்லை. எனக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டும் பதில் சொல்கிறார். விரைவில் கவர்னர் மீதான ஊழல் புகாரையும் வெளியிடுவேன்.

    இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து குறித்து எதுவும் பேசவில்லை.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    • அடிப்படை வசதிகள், கல்வி கற்பித்தல், நோயாளிகளை கவனத்தில் எதிலும் பிரச்சனை இல்லை.
    • புதுவையின் பெருமை குலைய கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு திடீரென அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனை அறிந்த புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டு மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    மருத்துவக் கல்லூரிக்கான உரிமம் புதுப்பிக்கத் தவறியமைக்கான காரணங்களை கேட்டறிந்தார்.

    அப்போது அவர் அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

    இதை தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய மருத்துவ கழகத்திற்கு பல கல்லூரிகளில் டாக்டர்கள் சரியாக வருவதில்லை என்றும் மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லி கொடுப்பதில்லை என்றும் புகார்கள் சென்றுள்ளது. இதனால் வருகை பதிவேடு மற்றும் சி.சி.டி.வி கேமரா பதிவு மருத்துவ கழகத்தின் இணையதளத்துடன் இணைக்க அறிவுறுத்தி யுள்ளனர்.

    இதனை ஏற்பாடு செய்த புதுவை அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் இணைப்பு தராமல் விட்டு விட்டார்கள். பெற்றோர்களும் மாணவர்களும் கவலைப்பட வேண்டாம். மிக விரைவில் இந்த குறைபாடுகள் சரி செய்யப்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த குறைபாட்டிற்கு அதிகாரிகள் காரணம். அவர்கள் அதை முறைப்படுத்தி இருக்க வேண்டும்.

    மருத்துவ மாணவர்களின் படிப்பில் யாரும் விளையாட கூடாது. இதற்கு காரணமானவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கையில் ஒரு பிரச்சனையும் கூடாது என்பதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அடிப்படை வசதிகள், கல்வி கற்பித்தல், நோயாளிகளை கவனத்தில் எதிலும் பிரச்சனை இல்லை.

    இது தான் அடிப்படையானது. இவைதான் மருத்துவக் கல்லூரிக்கு மிக முக்கியமானது.

    மற்ற யூனியன் பிரதேசங்களில் மருத்துவக் கல்லூரி இல்லை. புதுவையில் மட்டும்தான் நடத்தப்படுகிறது. அதனால் புதுவையின் பெருமை குலைய கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரும் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
    • வாழ்க்கைப் பணி மற்றும் கடலோர விழிப்புணர்வை மேம்படுத்தும் தெரு நாடகம் நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாடு குழும நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்துடன் இணைந்து கடற்கரையை தூய்மை படுத்தி, தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    புதுவை காந்தி திடலில் ஜி20 கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அவர்களுடன் இணைந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரும் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் வாழ்க்கை நோக்கம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை, மற்றும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் விழிப்புணர்வு நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர் .

    வாழ்க்கைப் பணி மற்றும் கடலோர விழிப்புணர்வை மேம்படுத்தும் தெரு நாடகம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் முத்தம்மா, உள்ளாட்சி துறை, நகராட்சி மற்றும் இத்துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தேசிய சேவை திட்டம், தேசிய மாணவர் படை பள்ளி கல்லூரி மாணவர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் தூய்மை நிகழ்ச்சி நடந்தது.

    • பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது.
    • முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவையில் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு பகுதிதான். வாழ்க்கை இன்னும் நிறைய இருக்கிறது. தேர்வு எழுதாதவர் பல பேர் வாழ்க்கையில் முன்னுக்கு வந்துள்ளனர். மாணவர்கள் எந்த ஒரு தவறான முடிவு எடுக்க வேண்டாம்.

    தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வைக்க வேண்டும், தன்னம்பிக்கை வைக்க மாரல் கிளாசஸ் நடத்த வேண்டும், தற்காப்பு கலைக்கான வகுப்புகள் வைக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    கவர்னருக்கு அதிகாரம் என்பதில் புதுவையில் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் எந்த வகையிலாவது கருத்து வேறுபாடு வருமா? என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காத்துக்கொண்டிருக்கிறார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வராது. டெல்லி நிலை வேறு, புதுவை நிலை வேறு, மற்ற யூனியன் பிரதேசங்களுக்கான நிலை வேறு.

    மக்கள் சார்ந்த விஷயங்கள் புதுவையில் சிறப்பாக நடைபெறுவதுதான் நாராயணசாமிக்கு கவலையாக இருக்கிறது என தெரிவித்தார்.

    அப்போது அவரிடம், மத்திய அரசின் ரூ.2 ஆயிரம் நோட்டு தடை குறித்து கேள்வி எழுப்பியபோது, இந்த தடை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட். ரூ.2 ஆயிரம் நோட்டு தடை பற்றி இன்னும் அறியவில்லை. விபரங்களை அறிந்து பதிலளிக்கிறேன் என்றார்.

    கவர்னர் தமிழிசை டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளச்சாராயம் உடம்புக்கு எவ்வளவு கேடு என்பதை, தயாரிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
    • புதுவையில் போதை பொருட்களாக இருந்தாலும், கள்ளச்சாராயமாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் சிக்கிம் மாநில விழா நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தம் தரக்கூடிய விஷயம். இது விழுப்புரத்தில் நடந்த ஒரு கரும்புள்ளி என்றே சொல்ல வேண்டும். முதலில் இத்தகைய கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    கள்ளச்சாராயம் உடம்புக்கு எவ்வளவு கேடு என்பதை, தயாரிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உயிர்வாழ்ந்தால்கூட கண்பார்வை போய்விடும். எவ்வளவு உயர்தர சிகிச்சை கொடுத்தாலும் சிலரை காப்பாற்ற முடியாத சூழ்நிலை மனதுக்கு வருத்தமான ஒன்று. எனவே கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    புதுவையில் போதை பொருட்களாக இருந்தாலும், கள்ளச்சாராயமாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இங்கிருந்து சென்றது, அங்கிருந்து சென்றது என சொல்லி நமது கடமை, பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது. கள்ளச்சாராயம் எந்த பகுதியிலிருந்து வந்தாலும், அதை கட்டுப்படுத்த வேண்டும்.

    கள்ளச்சாராயம் புதுவையில் இருந்து வந்தது என்று சொல்லி, சில பொறுப்புகள் எங்களுக்கு இல்லை என எந்த பகுதியை சேர்ந்தவர்களும் சொல்லிவிட முடியாது.

    இந்த நிகழ்வுக்கு அப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும், அது கட்டுப்படுத்தப்படும். தவறான வழியில் தயாரிக்கப்படும் இத்தகைய போதை பொருட்கள் புதுவையில் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×