என் மலர்
புதுச்சேரி

10 சதவீத இடஒதுக்கீடு- புதுச்சேரியில் 51 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு
- கவர்னர் தமிழிசை, கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.
- அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் 70 பேர் தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது அறிவித்தார்.
அதன்மூலம் ஆண்டு தோறும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக் கல்லுரிகளில் அதிக அளவில் இடங்களை பெற்று வருகின்றனர்.
இதேபோல் புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) படிப்பதற்கு உள் இடஒதுக்கீடு வழங்க முதலமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இதைத்தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். மேலும் முதலமைச்சர் ரங்கசாமியிடமும் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கிடு வழங்க அனுமதிக்குமாறு முதலமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பரிந்துரை செய்து அதற்கான கோப்பை அனுப்பி வைத்துள்ளார்.
அதே போல் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி, அதை உடனடியாக நடைமுறைப்படுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் இந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த இடஒதுக்கீட்டு முறை அமலுக்கு வந்தால் இந்த ஆண்டில் இருந்தே அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 37 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பிலும், 14 பேர் பல் மருத்துவ படிப்பிலும் சேர்ந்து பயனடையும் வாய்ப்பு உள்ளது. அரசுப்பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் 70 பேர் தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






