search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்"

    • காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது.
    • சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்து விட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

    என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சராக சந்திர பிரியங்கா இருந்து வந்தார். அவரை கடந்த அக்டோபர் 8-ந் தேதி டிஸ்மிஸ் செய்ய கவர்னர் தமிழிசையிடம் முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் அளித்தார்.

    இதை அறிந்த சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சந்திரபிரியங்கா நீக்கத்துக்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளிக்காததால் இந்த விவகாரம் புதுவை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 13 நாட்களுக்கு பிறகு சந்திரபிரியங்கா நீக்கத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

    இதனிடையே காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது.

    ஆனால் அமைச்சர் நீக்கத்துக்கு காலதாமதம், சர்ச்சை எழுந்ததால் புதிய அமைச்சர் உடனடியாக நியமிக்கப்படவில்லை.

    தற்போது சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்து விட்டது. ஆனால் இதுவரை புதிய அமைச்சர் நியமனத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லை.

    புதுவை அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா சார்பில் தலா ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.

    தற்போது சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு விட்டதால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அமைச்சர் இல்லை. தாழ்த்தப்பட்டோர், காரைக்கால் பிராந்தியம், பெண் என்ற 3 அம்சங்களும் பொருந்தும் வகையில்தான் சந்திரபிரியங்காவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    அவர் பதவி நீக்கத்தால் சட்டசபையில் இடம் பெற்றிருந்த ஒரே பெண், காரைக்காலுக்கான முக்கியத்துவம் இழந்துள்ளது. இதனால் பாராளுமன்ற தேர்தலுக்கு 6 மாதமே உள்ளதால் புதிய அமைச்சரை நியமிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

    தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை அமைச்சராக நியமித்தால் காரைக்கால் பிராந்தியத்துக்கு முக்கியத்துவம் கிடைக்காது. காரைக்காலுக்கு முக்கியத்துவம் அளித்தால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் பிரதிநிதித்துவம் இல்லை என்ற நிலை ஏற்படும்.

    இதனை பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் பிரசார யுக்தியாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கலாம் என என்.ஆர்.காங்கிரசார் முதலமைச்சர் ரங்கசாமியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    இதனாலேயே புதிய அமைச்சர் நியமனத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் என என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே 2011-ம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்த கல்யாணசுந்தரம் பதவியை ராஜினாமா செய்தார். அப்போதும் முதலமைச்சர் ரங்கசாமி புதிய அமைச்சரை உடனடியாக நியமிக்கவில்லை. அமைச்சர் பதவிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு சட்டமன்ற தேர்தலுக்கு நெருக்கத்தில்தான் புதிய அமைச்சரை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளிகளில் மாணவர்கள் தரையில் அமரக்கூடாது என்பதற்காக எனது சொந்த செலவில் நாற்காலிகளை வாங்கி கொடுத்துள்ளேன்.
    • இணையதள பயன்பாட்டாளர்கள் நாகரிகமாக எழுதுவது அவசியம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் நடந்த பழங்குடியினர் விழாவில் பழங்குடியினர் தரையில் அமர வைக்கப்பட்டது குறித்து 2 துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு தெரிந்துதான் பழங்குடியினர் தரையில் அமர வைக்கப்பட்டது போல் செய்திகள் வருகிறது. அது தவறானது.

    நான் ஆந்திராவில் 6 பழங்குடியின கிராமங்களை தத்து எடுத்துள்ளேன். அங்குள்ள பள்ளிகளில் மாணவர்கள் தரையில் அமரக்கூடாது என்பதற்காக எனது சொந்த செலவில் நாற்காலிகளை வாங்கி கொடுத்துள்ளேன். இப்படி இருக்கையில் நான் எப்படி பழங்குடியினரை அரசு விழாவில் தரையில் அமர வைத்ததற்கு காரணமாக இருக்க முடியும்?

    எனது ஆளுமைக்குட்பட்ட புதுவையில் இத்தகைய நிகழ்வு நடந்திருக்கவே கூடாது. அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். இது குறித்து இணையதள பயன்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவர்கள் நாகரிகமாக எழுதுவது அவசியம்.

    நாங்கள் மேடையின் கீழ் அமர்ந்திருந்ததால் எங்களுக்கு பின்னால் அவர்கள் அமர்ந்திருந்ததை பார்க்க முடியவில்லை. மக்களுக்கு தவறான தகவல்கள் சென்று விடக்கூடாது.

    புதுவையில் நான் சூப்பர் முதல்வர் என செய்திகள் வருகிறது. நான் சூப்பர் முதல்வர் இல்லை. ரங்கசாமி தான் சூப்பர் முதல்வர். நான் தினமும் என்னை பற்றி என்ன செய்தி வந்திருக்கிறது என பார்ப்பதில்லை. குறைகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தால் துறை அதிகாரிகளிடம் பேசி, புதுவைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைதான் பார்ப்பேன்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

    • புதுவையில் ஆரோக்கியமான சூழல் வேண்டும். தடுப்புகள் இல்லாததால் பெட்ரோல் குண்டு போட்டுவிடாதீர்கள்.
    • கருத்து வேறுபாடுகளோடு இருக்கும்போது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் உதயநாள் விழா இன்று நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்து மாநில நாட்களையும் கவர்னர் மாளிகையில் கொண்டாடும்போது தேச ஒற்றுமை ஏற்படும்.

    பல மொழி பேசினாலும், பல மாநிலமாக இருந்தாலும் கலாச்சாரத்தால் நாம் ஒன்றிணைந்துள்ளோம். எனக்கு யாராலும் பாதுகாப்பற்ற நிலை வராது.

    புதுவையில் பதவியேற்றவுடன் 3 அடுக்கு பாதுகாப்பு இருந்தது. அனைத்தையும் எடுக்கும்படி கூறினேன். இதனால் பாதுகாப்புக்கு இருந்த மத்திய பாதுகாப்பு படை சென்றது.

    ஓரடுக்கு பாதுகாப்பு மட்டும் இருந்தது. என் பாதுகாப்பை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்.

    கவர்னர் மாளிகை எதிரே உள்ளது பொதுமக்களுக்கான சாலை. அதனால் தான் திறந்துள்ளோம். எதிர்க்கட்சியினர் பாதுகாப்பு தடுப்புகளை எடுக்கும்படி கூறிவிட்டு, இங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என கோரிக்கை வைக்கிறேன்.

    பிரச்சனை என்றால் என்னிடம் நேரில் வந்து பேசுங்கள். புதுவையில் ஆரோக்கியமான சூழல் வேண்டும். தடுப்புகள் இல்லாததால் பெட்ரோல் குண்டு போட்டுவிடாதீர்கள்.

    தெலுங்கானாவில் மசோதாவுக்கு கையெழுத்து போடாததால் நீதிமன்றம் சென்றார்கள்.

    இது அந்தந்த மாநில பிரச்சனை. தமிழக மசோதாவை அந்த கவர்னர் எதிர்கொள்கிறார். அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை.

    புதுவையில் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர், முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் என்ற இணைப்பு சரியாக இருக்க வேண்டும்.

    எங்கு குறை இருந்தாலும் சரி செய்யலாம். அதிகாரிகளால் முதலமைச்சருக்கும், எனக்கும் சங்கடங்கள் இருக்கலாம். அது சரி செய்யப்பட்டு மாநிலத்தில் மக்கள் பலன் அடைய வேண்டும்.

    அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் அதிகாரிகளுக்கு சில கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அதை களைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். புதுவை தலைமைச் செயலரை அழைத்து பேசினேன். முதலமைச்சரிடமும் பேசியுள்ளேன்.

    அதிகாரிகள் தாமதம் செய்வது கவலை அளிக்கக்கூடியதாக இருந்தது.

    முதலமைச்சர், அமைச்சர்களை கலந்து ஆலோசித்து சுமூகமாக செயலாற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன்.

    தமிழகத்தில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்

    தமிழகத்திலும் முதலமைச்சரும், கவர்னரும் அமர்ந்து பேசி தீர்வு காணலாம். சும்மா சண்டையே போடவேண்டியதில்லை. தெலுங்கானாவிலும் இதே கருத்தையே சொல்கிறேன். கருத்து வேறுபாடுகளோடு இருக்கும்போது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. கருத்து ஒற்றுமை தேவை. அது புதுவையில் இருக்க வேண்டும்.

    அது இருப்பதுபோல் நான் பார்த்து கொள்வேன். பயங்கரவாதத்துக்கு எங்கேயும் இடம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 8-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி, ராஜ்நிவாசில் கவர்னர் தமிழிசையை சந்தித்தார்.
    • பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு மரியாதை தருவதில் யாரும் குறை வைக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திரபிரியங்கா கடந்த 10-ந் தேதி திடீரென ராஜினாமா செய்தார்.

    சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதால் பதவி விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில் 11-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் புதுவை கவர்னர் தமிழிசை பேட்டியளித்தார்.

    அப்போது புதுவை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின்பேரில் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    துறைரீதியான செயல்பாடுகளில் திருப்தியளிக்காததாலும், அதிருப்தியாலும் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    கடந்த 8-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி, ராஜ்நிவாசில் கவர்னர் தமிழிசையை சந்தித்தார். அப்போது அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்க கடிதம் அளித்தார்.

    இந்த கடிதத்தின்பேரில் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

    ஆனாலும் இதுவரை சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை. இதனால் சந்திர பிரியங்கா நீக்கமா? ராஜினாமாவா? என குழப்பமான நிலை நீடித்து வந்தது. அரசாணை வெளி வராதது பல்வேறு சர்ச்சைகளையும், சமூகவலைதளங்களில் விவாதங்களையும் ஏற்படுத்தியது.

    தெலுங்கானா சென்ற கவர்னர் தமிழிசை ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று புதுவை திரும்பினார். கவர்னர் மாளிகையில் நடந்த பள்ளி மாணவர்களின் திறன் தேடல் நிகழ்ச்சிக்கு பிறகு கவர்னர் தமிழிசை நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது, நிருபர்கள் கவர்னர் தமிழிசையிடம், சந்திர பிரியங்கா நீக்கமா? ராஜினாமாவா? அரசாணை வெளிவராதது ஏன்.? என பல கேள்விகளை எழுப்பினர்.

    அதற்கு தமிழிசை, நான் இதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சரை சேர்க்கவோ, நீக்கவோ, அமைச்சர்களின் பணியை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் முதலமைச்சருக்கு உரிமை உள்ளது. சுயநலனால் நல்ல வாய்ப்பை சந்திர பிரியங்கா இழந்துள்ளார் என்று கூறினார்.

    அதோடு, அரசாணை வெளிவராததற்கு நிர்வாக ரீதியாக சில சட்டதிட்டங்கள் உள்ளது என்றும், உரிய அறிவிப்பு வெளியாகும்போது பல உண்மைகள் தெரியும் என்றும் குறிப்பிட்டார்.

    மேலும், பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு மரியாதை தருவதில் யாரும் குறை வைக்கவில்லை. முதலமைச்சர் தந்தை போலவும், பிற அமைச்சர்கள் சகோதரர்கள் போலவும் சந்திர பிரியங்காவை பார்த்துக்கொண்டனர்.

    அவர் சாதி, பாலின ரீதியில் குற்றம் சாட்டியிருக்கக்கூடாது. நானும் சந்திர பிரியங்காவுக்கு உறுதுணையாகவே இருந்தேன் என்றும், இது என்.ஆர். காங்கிரஸ் முதலமைச்சர், அமைச்சர் இடையிலான பிரச்சினை என்றும் தெரிவித்தார்.

    இதன் மூலம் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதை கவர்னர் தமிழிசை மீண்டும் உறுதி செய்தார். அதோடு அரசாணை வெளிவர நிர்வாக தாமதமே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஓரிரு நாளில் சந்திர பிரியங்கா நீக்கம் குறித்த அரசாணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாராயணசாமி கூறுவதுபோல அரசியலமைப்பு சட்டத்தையோ, ரகசிய காப்பு பிரமாணத்தையோ நான் மீறவும் இல்லை.
    • அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவுக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எப்போதும் கவர்னரோடு சண்டைபோடவே விரும்புகிறார்.

    ஏற்கனவே இருந்த கவர்னரோடும் சண்டையிட்டுள்ளார். இப்போது என்னோடும் சண்டை போடுகிறார். அவருக்கு கவர்னர் என்றாலே பிடிக்கவில்லை.

    அவர் முதலமைச்சராக இருந்தபோது தவறாக மொழி பெயர்த்தது போல நான் எதுவும் செய்யவில்லை. அவர் கூறுவது போல அரசியலமைப்பு சட்டத்தையோ, ரகசிய காப்பு பிரமாணத்தையோ நான் மீறவும் இல்லை.

    அவர்கள் பெண்களுக்கு எவ்வளவு வாய்ப்பு தந்தார்கள்? அவர் ஆட்சிக்காலத்தில் பட்டியலின பெண் எம்.எல்.ஏ.வாக இருந்தும் அமைச்சராக வாய்ப்பு தரவில்லை. இந்த விஷயத்தில் அவர் பேசுவதற்கே உரிமை இல்லை.

    அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவுக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் கூட இதுபோல முக்கிய துறைகள் பெண் அமைச்சர்களுக்கு வழங்கப்படவில்லை. இதைப்பற்றி தெரியாமல் கனிமொழி எம்.பி. பேசி வருகிறார்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார். 

    • மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, பெண்கள் கல்வியில் முன்னேற அடித்தளமிட்டது அண்ணா மற்றும் கருணாநிதி அரசுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
    • காமராஜர் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டார்.

    சென்னை:

    தி.மு.க. சார்பில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் உரையாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டது அண்ணா மற்றும் கருணாநிதி தலைமையிலான அரசுகள் என்று குறிப்பிட்டார்.

    இது தொடர்பாக கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அலுவலகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய சோனியாகாந்தி, பெண்கள் கல்வியில் முன்னேற அடித்தளமிட்டது அண்ணா மற்றும் கருணாநிதி அரசுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அவரது இந்த பேச்சு மிகவும் துரதிருஷ்டவசமானது. அண்ணா, கருணாநிதிக்கு முன்பே தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராஜர் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டார். தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் பள்ளிகளை திறந்தார். கிராமப்புறங்களில் இருக்கும் குழந்தைகள் 3 கிலோ மீட்டருக்கு மேல் நடக்கக்கூடாது என்ற அடிப்படையில் இந்த பள்ளிகளை திறந்து பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பலமான அடித்தளத்தை அமைத்து இருந்தார். அவரை மறந்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமையை வெளிக்கொண்டு வர உதவி செய்வது என் வாழ்க்கையில் மிகப் பெரிய பேராக அமையும்.
    • மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு பயிற்சி வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கான "திறன் அறிதல்" நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் தமிழசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

    பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் 10 பேர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை தனித்தனியாக வெளிப்படுத்தினர்.

    இதில் பரத நாட்டியம், சிலம்பாட்டம், குரலிசை, வாத்திய இசை, கழிவுப் பொருட்களில் இருந்து கலைப்பொருட்கள் செய்வது, அறிவியல் செய்முறைகள் போன்ற திறமைகளை நிகழ்த்திக் காட்டினர்.

    இதனை பார்த்து மகிழ்சியடைந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமையை வெளிக்கொண்டு வர உதவி செய்வது என் வாழ்க்கையில் மிகப் பெரிய பேராக அமையும்.

    குழந்தைகளின் உடல் நலம் போலவே மனநலமும் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தத்தை போக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.

    மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்கு கவர்னர் மாளிகை மாணவர்களுக்கு உதவி செய்யும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களுக்கு சட்டமன்றம், பாராளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் முடிவெடுத்துள்ளார்.
    • தெலுங்கானா கவர்னர் மாளிகையில் கூட அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்க உள்ளது.

    புதுச்சேரி:

    தமிழிசை சவுந்தரராஜன் புதுவை கோரிமேடு அருகே உள்ள ஆலங்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியை பார்வையிட்டார்.

    ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்ட அவர், மாணவர்களோடு கலந்துரையாடி பாடம் நடத்தினார். மேலும் மாணவர்களுக்கு மதிய உணவினையும் பரிமாறினார்.

    அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண்களுக்கு சட்டமன்றம், பாராளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் முடிவெடுத்துள்ளார். இது பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர உதவியாக இருக்கும்.

    இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்போது, புதுவை மாநிலத்தில் 11 பெண் எம்.எல்.ஏ.க்களும், தமிழகத்தில் 77 பெண் எம்.எல்.ஏ.க்களும், 13 பெண் எம்.பி.க்களும் இருப்பார்கள்.

    கவர்னர் உண்மையாக மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று அடிப்படையில் என்னிடம் வரும் கோப்புகள், அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் சிலவற்றை தெரிவிக்கிறேன். அதற்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் நல்ல எண்ணத்தோடு தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மிகவும் கடுமையாக முயற்சித்து மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுள்ளோம். அதற்காக நன்றி தெரிவித்து பிரதமருக்கு மாணவிகள் கடிதமும் எழுதியுள்ளனர்.

    தெலுங்கானா கவர்னர் மாளிகையில் கூட அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்க உள்ளது. கல்வி சாரா செயல்பாடுகளில் விளையாட்டு, கலை, பண்பாடு ஆகியவற்றில் மாணவர்களுடைய திறமையை மேம்படுத்துவதற்காகவும், மற்ற குழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்கும் எல்லா விதத்திலும் உறுதுணையாக இருப்பதற்கும், பொது போட்டிகளில் அவர்கள் கலந்து கொள்ள உதவி செய்யும் நோக்கத்தில் இந்த திட்டத்தை தொடங்குகிறோம்.

    அரசு ஆஸ்பத்திரிகளும், அரசு பள்ளிகளும் சாமானிய மக்களுக்கு பலன் தர வேண்டும் என்பது தான் என்னுடைய அடிப்படையான ஆசை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுத்த தலைமுறைக்கும் பாடுபடும் தலைவர் பாரதப்பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    • உங்கள் பணி தொடர வேண்டும், தேசம் மேலும் வளர வேண்டும், அதற்கு மக்கள் துணை நிற்பார்கள், இறைவனும் அருள்புரிய வேண்டும்.

    சென்னை:

    பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    விண்ணுலகில் சந்திராயன், ஆதித்யா போன்ற விண்கலத்தில் வெற்றி கண்டு மண்ணுலகில் பாரத தேசத்தை டிஜிட்டல் மயமாக்கி சுயசார்பு பாரத தேசத்தை உருவாக்கி உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திய தலைவர், வலிமையான, வளமான பாரதத்தை உருவாக்கிய தலைவர், மகளிர், குழந்தைகள், இளைஞர்கள் அனைவரும் நலம் வாழ திட்டம் தீட்டிய தலைவர், ஏழை, எளிய மக்களின் நலன் காக்கும் தலைவர்.

    அடுத்த தலைமுறைக்கும் பாடுபடும் தலைவர் பாரதப்பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பாரதப்பிரதமர் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் வாழ்ந்து நீண்ட நெடுங்காலம் பாரத தேசத்தையும், பாரத மக்களையும் வழிநடத்திச் செல்ல எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்திய நாட்டின் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும், குறிப்பாக நலிந்தோர் நலன் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில், இந்தியாவிற்கு சிறப்பான வழி காட்டி சென்றுகொண்டு இருக்கிற பாரதப் பிரதமர் மோடி பிறந்தநாளில் விஸ்வகர்மா என்ற நலிந்தோர் நலன் பேணும் திட்டம் செயல்படுத்துவதை அறிந்து நாட்டு மக்கள் நல்வாழ்த்து கூறுகிறார்கள்.

    தனது 9 ஆண்டுகால ஆட்சியில், இந்திய தேசத்தை வளம் நிறைந்த, வலிமைமிக்க நாடாக, உலக அரங்கில் நிலை நிறுத்திய பிரதமர் அவர்களே! உங்கள் பணி தொடர வேண்டும், தேசம் மேலும் வளர வேண்டும், அதற்கு மக்கள் துணை நிற்பார்கள், இறைவனும் அருள்புரிய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரத தேசம் முழுவதும் சுமார் 50 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்று அரசு மானியங்களை பெற்றதும், கமிஷன் கொடுத்ததும் மறைந்து போனது.

    சென்னை:

    தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் அனைத்து மகளிர்க்கும் எல்லா உரிமையும் கிடைத்தால் மகிழ்ச்சியே....

    தமிழகத்தில் உரிமைத்தொகை பெறும் சகோதரிகள் மகிழ்ச்சி அடைய ஒரு சகோதரனாக தொலை நோக்குப் பார்வையுடன் அன்றே ஜன் தன் வங்கி கணக்கை தொடங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த உரிமைத்தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணமாக இருந்தவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தான்.

    முதன் முதலில் அனைத்து பெண்களுக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று ஜன் தன் வங்கி கணக்கை தொடங்கி வைத்து அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்கள்.

    ஜன்தன் வங்கிக்கணக்குகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் வங்கி கணக்குகளில் மத்திய, மாநில அரசின் மானியங்கள் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படுகிறது. பாரதப் பிரதமருக்கு நம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வோம்.

    பாரத தேசம் முழுவதும் சுமார் 50 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 56 சதவீத பெண்கள் ஜன் தன் வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளனர்.

    கொரானா தொற்று காலத்தில் ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருந்த அனைத்து பெண்களுக்கும் மூன்று மாதம் மத்திய அரசு 500 ரூபாய் உதவித்தொகை அளித்தது.

    முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்று அரசு மானியங்களை பெற்றதும், கமிஷன் கொடுத்ததும் மறைந்து போனது. இப்போது எந்தவித சிக்கல்களும் இல்லாமல் நேரடியாக வங்கி கணக்குகளில் பெறுகிறோம். இதுவே டிஜிட்டல் இந்தியா.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நம் நாட்டுக்கு தனி கலாச்சாரம், பண்பாடு உள்ளது.
    • 2047-ல் உலகுக்கே இந்தியா தலைமை வகிக்கும் பெருமை பெறும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.

    கவர்னர் தமிழிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசித்தார். விழாவில் பங்கேற்றோர் உறுதிமொழி ஏற்றனர். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், மாநிலத்தின் பல பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணை கொட்டி மரக்கன்றுகள் நட்டனர். விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    நம் நாட்டுக்கு தனி கலாச்சாரம், பண்பாடு உள்ளது. சில ஆண்டுக்கு முன்பு பண்பாடு, கலாச்சாரம் பற்றி பேசினால் இந்து மதம் சார்ந்து பேசுவது போல கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

    2047-ல் உலகுக்கே இந்தியா தலைமை வகிக்கும் பெருமை பெறும். அதற்கேற்ப இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது.

    புதுவையில் முதலமைச்சர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. அதற்கு நான் உறுதுணையாக இருக்க தயக்கம் காட்டுவதில்லை. நாட்டில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். அரசு விழாக்களில் மரியாதை செலுத்தும்போது பொன்னாடைக்கு பதில் கதர் ஆடை அணிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காரைக்கால் மாவட்டத்தில் நிலவும் சிக்கல்கள் குறித்து கலெக்டர் விவரித்தார்.
    • புதுச்சேரி வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வளர்ச்சித் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கவர்னர் தமிழிசை பங்கேற்றார்.

    அமைச்சர் சந்திரப் பிரியங்கா, நாஜிம் எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணிஷ் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், காரைக்கால் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என கவர்னர் தமிழிசை கேட்டு கொண்டார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    காரைக்கால் மாவட்டத்தில் நிலவும் சிக்கல்கள் குறித்து கலெக்டர் விவரித்தார். சிக்கல்களுக்கு தீர்வு காணும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் அனைத்து இடங்களிலும் கிட்டத்தட்ட 80 சதவீதம் நிறைவடைந்து விட்டது.

    பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர்களின் பணியிடங்கள், டாக்டர்கள், சிறப்பு டாக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரி காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த அனைத்தும் விவாதிக்கப்பட்டது.

    காரைக்கால் பகுதியின் வளர்ச்சி எந்தவிதத்திலும் தடைபடாது. காரைக்கால் பகுதி வளர்ச்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் காரைக்கால் ஒரு வளர்ச்சி அடைந்த பகுதியாக உருவாவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    காரைக்கால் சிக்கல்களை குறித்த விவாதங்கள் எப்பொழுதும் நடைபெற்று வருகிறது. காரைக்கால் எந்தவிதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை.

    மக்களின் குறைகளை அறிந்து கொள்ள மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் 15-ந் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தி வருகிறார்.

    மக்கள் பிரச்சினைகள் சரியாக கவனிக்கப்பட்டு தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசுக்கு எதிராக நான் செயல்படவில்லை. புதுச்சேரி வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×