search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் நீக்கப்பட்ட பெண் அமைச்சருக்கு பதிலாக புதிய அமைச்சர் நியமனம் எப்போது?
    X

    புதுச்சேரியில் நீக்கப்பட்ட பெண் அமைச்சருக்கு பதிலாக புதிய அமைச்சர் நியமனம் எப்போது?

    • காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது.
    • சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்து விட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

    என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சராக சந்திர பிரியங்கா இருந்து வந்தார். அவரை கடந்த அக்டோபர் 8-ந் தேதி டிஸ்மிஸ் செய்ய கவர்னர் தமிழிசையிடம் முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் அளித்தார்.

    இதை அறிந்த சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சந்திரபிரியங்கா நீக்கத்துக்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளிக்காததால் இந்த விவகாரம் புதுவை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 13 நாட்களுக்கு பிறகு சந்திரபிரியங்கா நீக்கத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

    இதனிடையே காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது.

    ஆனால் அமைச்சர் நீக்கத்துக்கு காலதாமதம், சர்ச்சை எழுந்ததால் புதிய அமைச்சர் உடனடியாக நியமிக்கப்படவில்லை.

    தற்போது சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்து விட்டது. ஆனால் இதுவரை புதிய அமைச்சர் நியமனத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லை.

    புதுவை அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா சார்பில் தலா ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.

    தற்போது சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு விட்டதால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அமைச்சர் இல்லை. தாழ்த்தப்பட்டோர், காரைக்கால் பிராந்தியம், பெண் என்ற 3 அம்சங்களும் பொருந்தும் வகையில்தான் சந்திரபிரியங்காவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    அவர் பதவி நீக்கத்தால் சட்டசபையில் இடம் பெற்றிருந்த ஒரே பெண், காரைக்காலுக்கான முக்கியத்துவம் இழந்துள்ளது. இதனால் பாராளுமன்ற தேர்தலுக்கு 6 மாதமே உள்ளதால் புதிய அமைச்சரை நியமிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

    தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை அமைச்சராக நியமித்தால் காரைக்கால் பிராந்தியத்துக்கு முக்கியத்துவம் கிடைக்காது. காரைக்காலுக்கு முக்கியத்துவம் அளித்தால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் பிரதிநிதித்துவம் இல்லை என்ற நிலை ஏற்படும்.

    இதனை பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் பிரசார யுக்தியாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கலாம் என என்.ஆர்.காங்கிரசார் முதலமைச்சர் ரங்கசாமியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    இதனாலேயே புதிய அமைச்சர் நியமனத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் என என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே 2011-ம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்த கல்யாணசுந்தரம் பதவியை ராஜினாமா செய்தார். அப்போதும் முதலமைச்சர் ரங்கசாமி புதிய அமைச்சரை உடனடியாக நியமிக்கவில்லை. அமைச்சர் பதவிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு சட்டமன்ற தேர்தலுக்கு நெருக்கத்தில்தான் புதிய அமைச்சரை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×