search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சந்திர பிரியங்கா சுயநலனால் வாய்ப்பை இழந்தார்: கவர்னர் தமிழிசை பேட்டி
    X

    சந்திர பிரியங்கா சுயநலனால் வாய்ப்பை இழந்தார்: கவர்னர் தமிழிசை பேட்டி

    • கடந்த 8-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி, ராஜ்நிவாசில் கவர்னர் தமிழிசையை சந்தித்தார்.
    • பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு மரியாதை தருவதில் யாரும் குறை வைக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திரபிரியங்கா கடந்த 10-ந் தேதி திடீரென ராஜினாமா செய்தார்.

    சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதால் பதவி விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில் 11-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் புதுவை கவர்னர் தமிழிசை பேட்டியளித்தார்.

    அப்போது புதுவை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின்பேரில் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    துறைரீதியான செயல்பாடுகளில் திருப்தியளிக்காததாலும், அதிருப்தியாலும் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    கடந்த 8-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி, ராஜ்நிவாசில் கவர்னர் தமிழிசையை சந்தித்தார். அப்போது அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்க கடிதம் அளித்தார்.

    இந்த கடிதத்தின்பேரில் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

    ஆனாலும் இதுவரை சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை. இதனால் சந்திர பிரியங்கா நீக்கமா? ராஜினாமாவா? என குழப்பமான நிலை நீடித்து வந்தது. அரசாணை வெளி வராதது பல்வேறு சர்ச்சைகளையும், சமூகவலைதளங்களில் விவாதங்களையும் ஏற்படுத்தியது.

    தெலுங்கானா சென்ற கவர்னர் தமிழிசை ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று புதுவை திரும்பினார். கவர்னர் மாளிகையில் நடந்த பள்ளி மாணவர்களின் திறன் தேடல் நிகழ்ச்சிக்கு பிறகு கவர்னர் தமிழிசை நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது, நிருபர்கள் கவர்னர் தமிழிசையிடம், சந்திர பிரியங்கா நீக்கமா? ராஜினாமாவா? அரசாணை வெளிவராதது ஏன்.? என பல கேள்விகளை எழுப்பினர்.

    அதற்கு தமிழிசை, நான் இதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சரை சேர்க்கவோ, நீக்கவோ, அமைச்சர்களின் பணியை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் முதலமைச்சருக்கு உரிமை உள்ளது. சுயநலனால் நல்ல வாய்ப்பை சந்திர பிரியங்கா இழந்துள்ளார் என்று கூறினார்.

    அதோடு, அரசாணை வெளிவராததற்கு நிர்வாக ரீதியாக சில சட்டதிட்டங்கள் உள்ளது என்றும், உரிய அறிவிப்பு வெளியாகும்போது பல உண்மைகள் தெரியும் என்றும் குறிப்பிட்டார்.

    மேலும், பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு மரியாதை தருவதில் யாரும் குறை வைக்கவில்லை. முதலமைச்சர் தந்தை போலவும், பிற அமைச்சர்கள் சகோதரர்கள் போலவும் சந்திர பிரியங்காவை பார்த்துக்கொண்டனர்.

    அவர் சாதி, பாலின ரீதியில் குற்றம் சாட்டியிருக்கக்கூடாது. நானும் சந்திர பிரியங்காவுக்கு உறுதுணையாகவே இருந்தேன் என்றும், இது என்.ஆர். காங்கிரஸ் முதலமைச்சர், அமைச்சர் இடையிலான பிரச்சினை என்றும் தெரிவித்தார்.

    இதன் மூலம் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதை கவர்னர் தமிழிசை மீண்டும் உறுதி செய்தார். அதோடு அரசாணை வெளிவர நிர்வாக தாமதமே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஓரிரு நாளில் சந்திர பிரியங்கா நீக்கம் குறித்த அரசாணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×