என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மருத்துவ மாணவர்கள் படிப்பில் யாரும் விளையாடக் கூடாது- தமிழிசை சவுந்தரராஜன்
    X

    மருத்துவ மாணவர்கள் படிப்பில் யாரும் விளையாடக் கூடாது- தமிழிசை சவுந்தரராஜன்

    • அடிப்படை வசதிகள், கல்வி கற்பித்தல், நோயாளிகளை கவனத்தில் எதிலும் பிரச்சனை இல்லை.
    • புதுவையின் பெருமை குலைய கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு திடீரென அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனை அறிந்த புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டு மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    மருத்துவக் கல்லூரிக்கான உரிமம் புதுப்பிக்கத் தவறியமைக்கான காரணங்களை கேட்டறிந்தார்.

    அப்போது அவர் அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

    இதை தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய மருத்துவ கழகத்திற்கு பல கல்லூரிகளில் டாக்டர்கள் சரியாக வருவதில்லை என்றும் மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லி கொடுப்பதில்லை என்றும் புகார்கள் சென்றுள்ளது. இதனால் வருகை பதிவேடு மற்றும் சி.சி.டி.வி கேமரா பதிவு மருத்துவ கழகத்தின் இணையதளத்துடன் இணைக்க அறிவுறுத்தி யுள்ளனர்.

    இதனை ஏற்பாடு செய்த புதுவை அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் இணைப்பு தராமல் விட்டு விட்டார்கள். பெற்றோர்களும் மாணவர்களும் கவலைப்பட வேண்டாம். மிக விரைவில் இந்த குறைபாடுகள் சரி செய்யப்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த குறைபாட்டிற்கு அதிகாரிகள் காரணம். அவர்கள் அதை முறைப்படுத்தி இருக்க வேண்டும்.

    மருத்துவ மாணவர்களின் படிப்பில் யாரும் விளையாட கூடாது. இதற்கு காரணமானவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கையில் ஒரு பிரச்சனையும் கூடாது என்பதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அடிப்படை வசதிகள், கல்வி கற்பித்தல், நோயாளிகளை கவனத்தில் எதிலும் பிரச்சனை இல்லை.

    இது தான் அடிப்படையானது. இவைதான் மருத்துவக் கல்லூரிக்கு மிக முக்கியமானது.

    மற்ற யூனியன் பிரதேசங்களில் மருத்துவக் கல்லூரி இல்லை. புதுவையில் மட்டும்தான் நடத்தப்படுகிறது. அதனால் புதுவையின் பெருமை குலைய கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×