search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிசி"

    • விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் 9 விக்கெட்டுகள் சாய்த்தார்.
    • டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடம் பிடித்த முதல் வேகப்பந்து வீச்சாளர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.

    2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 6 விக்கெட், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் என 9 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இதன்மூலம் ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசயைில் முதல் இடத்தை பிடித்துள்ளார். முதன்முறையாக பும்ரா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இதுவரை முதல் இடத்தை பிடித்தது கிடையாது. தற்போது பும்ரா முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார்.

    ரபடா 2-வது இடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். கம்மின்ஸ் 4-வது இடத்தில் உள்ளார். ஹேசில்வுட ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார்.

    • இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • பும்ராவின் செயலுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்த போட்டியின் போது பும்ரா விதியை மீறலில் ஈடுபட்டதாக அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 81-வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது 1 ரன் எடுப்பதற்கு ஓடி வந்த ஆலி போப்பை வேண்டுமென்றே பும்ரா தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். இதற்கு ஐசிசி கணடனம் தெரிவித்துள்ளது.

    இந்த செயல் வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.12ஐ மீறியதாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் பும்ராவுக்கு எந்த அபராதமும் விதிக்கவில்லை. கடந்த 24 மாதங்களில் முதல் முறையாக அவர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் அபராதம் விதிக்கப்படவில்லை. ஆனால் அவரது நன்னடத்தை குறைபாட்டுக்கான புள்ளி சேர்க்கப்பட்டது. அடுத்த 1 ஆண்டிற்குள் மேலும் 3 புள்ளிகளை பெற்றால் 1 போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

    கள நடுவர்கள் பால் ரீஃபெல் மற்றும் கிறிஸ் கஃபேனி, மூன்றாவது நடுவர் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் நான்காவது நடுவர் ரோஹன் பண்டிட் ஆகியோரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, பும்ரா மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பும்ராவின் குற்றத்துக்கு முறையான விசாரணை தேவையில்லை, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவும், பும்ரா மீது விதிக்கப்பட்ட கண்டனத்தை ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரிகளின் ரிச்சி ரிச்சர்ட்சன் ஏற்றுக்கொண்டார்.

    • இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது.
    • இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடை நீக்கம் செய்வதாக ஐசிசி கிரிக்கெட் அறிவித்து உத்தரவிட்டது.

    இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தடை செய்யப்பட்டது.

    மேலும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

    இதற்கிடையே, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது குறிப்பிடத்தக்கது.

    இதனால், இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணி மீதான அனைத்து தடைகளையும் உடனடியாக நீக்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

    இடை நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும், அதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பதையும் உறுதி செய்த பின் அதன் மீதான தடை நீக்கப்பட்டதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

    • சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 3 இந்திய வீரர்கள் இடம்பிடித்தனர்.
    • ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

    அதன்படி 2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. அதில் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

    இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மற்றும் நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.

    • 2023-ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளார்.
    • தென் ஆப்பிரிக்கா அணியில் 2 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    2023 காலண்டர் வருடத்தில் ஒருநாள் போட்டிகளில் அசத்திய 11 பேர் கொண்ட கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக இந்தியாவின் ரோகித் சர்மாவை ஐசிசி அறிவித்துள்ளது.

    கடந்த வருடம் 1255 ரன்களை 52 என்ற சராசரியில் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு முக்கிய பங்காற்றிய ரோகித்தை தங்களுடைய அணியின் கேப்டன் மற்றும் முதல் துவக்க வீரராக ஐசிசி அறிவித்துள்ளது.

    ரோகித்தின் தொடக்க ஜோடியாக இந்தியாவின் சுப்மன் கில் தேர்வாகியுள்ளார். 3-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், 4-வது இடத்தில் விராட் கோலி உள்ளார். உலகக் கோப்பையில் மட்டும் 765 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருது வென்ற அவர் சச்சினை முந்தி 50 ஒருநாள் சதங்கள் அடித்த முதல் வீரராக வரலாறு படைத்ததை மறக்க முடியாது என ஐசிசி கூறியுள்ளது.

    5-வது இடத்தில் நியூசிலாந்தின் டாரில் மிட்செல் மற்றும் 6-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஹென்றி கிளாசனும் (விக்கெட் கீப்பர்) 7-வது இடத்தில் அதே அணியின் ஆல் ரவுண்டர் மார்கோ யான்சென் இடம் பிடித்துள்ளனர். 8-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஜாம்பா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    9, 10, 11-வது இடங்கள் முறையே இந்தியாவின் முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி தேர்வாகியுள்ளார்.

    ஐசிசி ஒருநாள் அணி:

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், டிராவிஸ் ஹெட், விராட் கோலி, டார்ல் மிட்சேல், ஹென்றிச் க்ளாஸென், மார்கோ யான்சென், ஆடம் ஜாம்பா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி

    • டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார்.
    • இந்திய வீரர்களில் கெய்க்வாட் 9-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர்களான அக்சர் படேல் மற்றும் ஜெய்ஸ்வால் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

    டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால், தனது சிறந்த தரநிலையான 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்ற இந்திய வீரர்களில் கெய்க்வாட் 9-வது இடத்தில் உள்ளார்.

    டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 4 இடங்களில் மாற்றமின்றி அதே வீரர்களே தொடருகின்றனர். ஆனால் 5-வது இடத்தில் இருந்த இந்திய வீரரான ரவி பிஷ்னோயை பின்னுக்கு தள்ளி சக நாட்டவரான அக்சர் படேல் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    • கடந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்துள்ளது.
    • சிறந்த வீரர் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கைப்பற்றினார்.

    கடந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, சிறந்த வீரர் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கைப்பற்றினார். அவர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.இது முதல் முறையாக பேட் கம்மின்ஸ் பெறும் விருது ஆகும்.

    மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா சிறந்த வீராங்கனையாக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

    • 2021-ம் ஆண்டு நடந்த டி10 லீக்கில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது அம்பலமானது.
    • 32 வயதான நசிர் ஹூசைன் வங்காளதேச அணிக்காக 19 டெஸ்ட் மற்றும் 65 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    துபாய்:

    அபுதாபி 10 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2021-ம் ஆண்டு நடந்த டி10 லீக்கில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது அம்பலமானது. ஆட்டத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்ய முயற்சி (மேட்ச் பிக்சிங்), ரகசிய தகவல் பரிமாற்றம், சூதாட்டம் நோக்கில் சந்தேக நபர்கள் அணுகியதை தெரிவிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் புனே டெவில்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான இந்தியாவின் கிரிஷன் குமார் சவுத்ரி, பராக் சங்வி, உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ரிஸ்வான் ஜாவித், சலியா சமன், பேட்டிங் பயிற்சியாளர் அசார் ஜாய்தி, உதவி பயிற்சியாளர் சன்னி தில்லான், அணி மேலாளர் ஷதப் அகமத் மற்றும் வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் நசிர் ஹூசைன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

     

    இதில் 32 வயதான நசிர் ஹூசைன் வங்காளதேச அணிக்காக 19 டெஸ்ட் மற்றும் 65 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர் சந்தேகத்துக்குரிய நபரிடம் இருந்து பெற்ற விலை உயர்ந்த பரிசுப்பொருள் விவரத்தை மறைத்து ஊழல் தடுப்பு விதியை மீறியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) குற்றம் சுமத்தியது. அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், நசீர் ஹூசைன் இரண்டு வருடங்கள் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹொசைன் 2011 மற்றும் 2018 க்கு இடையில் வங்காளதேசத்திற்காக 115 போட்டிகளில் விளையாடி, 2,695 ரன்கள் மற்றும் 39 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

    இவரது தடைக்காலம் 2025 -ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னர் அவர் ஓய்வு பெறாவிட்டால் அதன்பின் கிரிக்கெட்டை மீண்டும் தொடர முடியும்.

    • டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
    • பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    துபாய்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. மேலும் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என ஆஸ்திரேலியா அணி முழுமையாக கைப்பற்றியது.

    இந்நிலையில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இதேபோல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 10-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் பும்ரா 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சாக்னே, டேரில் மிட்செல், விராட் கோலி, ஹாரி புரூக், பாபர் அசாம், உஸ்மான் கவாஜா, ரோகித் சர்மா ஆகியோர் உள்ளனர்.

    டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இடத்திலும், பேட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 2 முதல் 5 இடங்களிலும் உள்ளனர். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

    • இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 107 ஓவர்களே வீசப்பட்டுள்ளது.
    • மொத்தமாக 33 விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    கேப்டவுன்:

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் ஜனவரி 3-ந் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 34.5 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 36.5 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 2-வது இன்னிங்சில் 12 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டி 2 நாட்கள் முழுவதும் முடியும் முன்னரே முடிவடைந்தது.

    147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஓவர்களில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் முடிந்துள்ளது. இந்தப் போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 107 ஓவர்களே வீசப்பட்டது. மொத்தமாக 33 விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    இந்த பிட்ச் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா -இந்தியா மோதிய 2-வது டெஸ்ட் போட்டி நடந்த மைதான பிட்ச் திருப்தியற்றது என ஐசிசி நிர்ணயம் செய்துள்ளது. ஐசிசி-யின் பிட்ச் மற்றும் அவுட் பீல்ட் கண்காணிப்பு செயல்முறைகளின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


    • பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாசகம் எழுதிய ஷூவை அணிய கவாஜா முடிவு செய்திருந்தார்.
    • பாகிஸ்தான் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தனது சட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்.

    துபாய்:

    பெர்த் நகரில், ஆஸ்தி ரேலியா-பாகிஸ்தான் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தனது சட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாசகம் எழுதிய ஷூவை அணிய கவாஜா முடிவு செய்திருந்தார்.

     

    இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதித்தது. இதையடுத்து அவர் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார். இது ஐ.சி.சி.யின் ஆடை மற்றும் உபகரண விதி மீறல்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து கவாஜாவுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் கூறும்போது, "உஸ்மான் கவாஜா, தனிப்பட்ட செய்தியை காட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.சி.சி. முன் அனுமதி பெறாமல் கருப்பு பட்டை அணிந்துள்ளார். இது ஒரு விதி மீறல் ஆகும். முதல் கட்ட விதி மீறலையடுத்து கண்டனம் தெரிவிக்கப்படுகிறது" என்றார்.

    இது தொடர்பாக கவாஜா கூறும்போது, "தனிப்பட்ட துக்கத்திற்காக கருப்பு பட்டையை அணிந்ததாக ஐ.சி.சி.யிடம் கூறினேன். ஐ.சி.சி.யால் நான் கண்டிக்கப்பட்டதாக நினைக்கவில்லை" என்றார்.

    • ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பேட்மேன்ஸ்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
    • இதில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணியின் சுப்மன் கில் 2-வது இடத்திலும், இந்திய அணியின் விராட் கோலி 3-வது இடத்திலும், ரோகித் சர்மா 4-வது இடத்திலும் உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5வது இடத்திலும், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 6வது இடத்திலும் உள்ளனர்.

    அயர்லாந்தின் ஹாரி டெக்டர் 7-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் வான் டெர் டுசன் 8-வது இடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் 9-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் 10-வது இடத்திலும் உள்ளனர்.

    ×