search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை கடற்படை"

    • ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.
    • கைதான மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய 2 டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    புதுக்கோட்டை:

    தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தமிழக மீனவர்கள் அவ்வபோது தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த 13-ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

    இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர். நடுக்கடலில் தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் அவர்களை வழிமறித்தனர்.

    பின்பு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகையும், அதில் இருந்த மீனவர்கள் விஜயகுமார், ஆரோக்கியம், யோகம், பிச்சை, இன்னாசி, ஸ்வீடன் உள்ளிட்ட 18 பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து 18 மீனவர்களிடமும் நடுக்கடலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. கைதான மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய 2 டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்பின்னர் கைதான 18 மீனவர்கள், மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    இதை தொடர்ந்து மீனவர்கள் 18 பேரும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். கடந்த ஒரு வாரத்தில் புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட 3 மாவட்டத்தை சேர்ந்த 40 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 250 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்.

    தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    சுமார் 250 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்கின்றனர். அவ்வப்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் வலை கள், மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப் படகு மீன்பிடித்துறை முகத்திலிருந்து 12-ந் தேதி புதன்கிழமை 79 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டி ருந்தபோது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சின்னையா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் அதில் சென்ற நரேஷ் (27), ஆனந்தபாபு (25), அஜய் (24), நந்தகுமார் (28), அஜித் (25), குமார் ஆகியோரை சிறைபிடித்து சென்றனர். மேலும் சிறை பிடிக்க ப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை முகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    நடவடிக்கை எடுக்காவிட்டால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

    • கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம்.
    • ஆறு மீனவர்கள் தவிர்த்து ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கைவசம் காவலில் உள்ளது.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் IND-TN-08-MM-26 என்ற பதிவு எண் கொண்ட இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம்.


    இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையில் இதுபோன்று கைது நடவடிக்கையில் ஈடுபடுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வில் பெருத்த அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறது. இந்த ஆறு மீனவர்கள் தவிர்த்து ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கைவசம் காவலில் உள்ளது.

    எனவே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

    • தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகை அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், படகின் உரிமையாளர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர், நாகையன், திவ்யநாதன், மாயவன், பாக்கியராஜ், சக்திவேல், மணிகண்டன், ராமச்சந்திரன், கோதண்டபானி, ராமச்சந்திரன், செல்வமணி ஆகிய 12 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 35 கடல்மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 12 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதைப்போல் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆச்சியம்மாள் என்ற விசைப்படகும் அதில் இருந்த 13 மீனவர்களும் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 25 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீனவர்களை தாக்கி விரட்டி அடித்து விட்டு சென்று விட்டனர்.
    • மீனவர்கள் வேதாரண்யம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    வேதாரண்யம்:

    கடந்த பல நாட்களாக புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

    பின்னர் மின்வளத்துறை சார்பில் விடுக்கப்பட்ட தடை நீக்கியதால் அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ள பள்ளத்தைச் சேர்ந்தவர் பக்கிரி சாமி (வயது 40). இவருக்கு சொந்தமான பைபர் படகில் படகு உரிமையாளர் பக்கிரிசாமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (33) சக்திவேல் ( 46) ஆகிய 3 பேரும் கோடியக்கரையில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

    நேற்று மதியம் 3 பேரும் கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கும் தென்கிழக்கு 10 கடல் மைல தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையில் நள்ளிரவில் வந்து15 கிலோ வலையை வெட்டி உள்ளனர். பின்பு மீனவர்களை தாக்கி விரட்டி அடித்து விட்டு சென்று விட்டனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்று காலை 11 மணிக்கு கோடியக்கரைக்கு வந்து சேர்தனர்.

    இது குறித்து மீனவர்கள் வேதாரண்யம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
    • மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கவலைபடத் தெரிவித்துள்ளார்.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும், அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    IND-TN-10-MM- 1061 IND-TN-08-MM-231, IND-TN-08-MM-385 மற்றும் IND-TN-06-MM-707 ஆகிய பதிவு எண் கொண்ட மீன்பிடிப் படகுகளில் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் 6-12-2023 அன்று கைது செய்யப்பட்டுள்ளதோடு. அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கவலைபடத் தெரிவித்துள்ளார்.

    மீன்பிடித் தொழிலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப்புப் படகுகளையும் விடுவிப்பதோடு, இலங்கைக் கடற்படையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    • காங்கேசன் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • மீனவர்களிடம் இருந்து இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

    கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    காங்கேசன் கடல் பகுதி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இலங்கை கடற்படை மீனவர்களிடம் இருந்து இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

    • இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சி மடத்தில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. சுமார் 6 ஆயிரம் மீனவர்கள், அதை சார்ந்த தொழிலாளர்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரமாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது.

    இலங்கைக்கு தானமாக வழங்கப்பட்ட கச்சத்தீவு அருகே அதிக அளவில் மீன்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும், சர்வதேச எல்லையை சரியாக அடையாளம் காண முடியாததாலும், கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை பாரம்பரிய மீன்பிடி இடம் என நினைத்தும் மீன்பிடிக்க அந்த பகுதிக்குள் செல்கின்றனர்.

    இவ்வாறு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி அச்சுறுத்தி விரட்டுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். மேலும் பல சமயங்களில் மீனவர்களை சிறைபிடித்து செல்கின்றனர். சமீப காலமாக இது அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 64 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். மேலும் 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவர்களின் குடும்பங்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை வடக்கு, கிழக்கு பகுதி மீனவர்கள் தலைமன்னார், யாழ்ப்பாணம் பகுதியில் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    இதன் காரணமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் எல்லை தாண்டி மீன் பிடிப்பது சற்று குறைந்தாலும் முழுமையாக முழுவதுமாக தடுக்க முடியவில்லை.

    இதனை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணா விரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையிலும், அவர்களை சிறைபிடித்து செல்வதை தவிர்க்கும் வகையிலும் கச்சத்தீவு பகுதியில் 6 கடற்படை கப்பல்களை இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    இந்த நிலையில் ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சி மடத்தில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 8, 9 ஆகிய நாட்களில் இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சியில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 27 பேரை கடந்த 14-ந் தேதி தான் சிங்களக் கடற்படை கைது செய்தது.
    • இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடுவிப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 37 பேரை அவர்களின் 5 படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாரை ஒட்டிய இந்திய பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

    ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 27 பேரை கடந்த 14-ந் தேதி தான் சிங்களக் கடற்படை கைது செய்தது. அவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக வேலைநிறுத்தம் மேற்கொண்ட ராமேஸ்வரம் மீனவர்கள், தங்களின் போராட்டத்தை முடித்துக்கொண்டு, நேற்று தான் முதன்முறையாக மீன் பிடிக்கச் சென்றனர். அவ்வாறு சென்ற முதல் நாளிலேயே அவர்களில் 37 பேர் கைது செய்யப்பட்டிருப்பது இரக்கமற்ற செயல் ஆகும்.

    ஒருபுறம் மீனவர்களை கைது செய்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தல், இன்னொருபுறம் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்களைக் கொண்டு தாக்குதல் நடத்துதல் என இருமுனைத் தாக்குதலை இலங்கை நடத்தி வருகிறது. இதனால், தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இதேநிலை தொடர்ந்தால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களையும், புதுச்சேரி காரைக்காலையும் சேர்ந்த மீனவர்கள் வாழ்வாதாரங்களை இழந்து உள்ளூர் அகதிகளாக மாற வேண்டிய நிலை ஏற்படும்.

    தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதால் மட்டுமே பயன் கிடைத்து விடாது. தமிழக மீனவர்கள் அவர்களின் பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் தடையின்றி மீன் பிடிப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் அதன் பங்குக்கு, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள 37 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் 64 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடுவிப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தொடர்ந்து இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மதியழகன், குமரவேல், நெடுஞ்செழியன் ஆகிய 4 பேரும் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 10 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு பைபர் படகில் இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் கத்தி முனையில் மீனவர்களை மிரட்டி படகில் இருந்த மீன்கள், ஜி.பி.எஸ். கருவி, செல்போன்கள் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இந்நிலையில் இன்று காலை ஆறுகாட்டுதுறைக்கு கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    தொடர்ந்து இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொடர்ந்து தாக்குதல் நடத்துவது சிறை பிடித்து செல்லுவது போன்ற செயல்பாடுகளால் மீன்பிடி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • மீனவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யதிட வேண்டும்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 5 விசைப்படகுகள் மற்றும் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்தனர். இதனை கண்டித்தும், படகுகள் மற்றும் மீனவர்களை விடுக்க கோரி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு பிறகு சிறிய படகுகள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று நேற்று 152 விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீனவர்கள் நள்ளிரவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும் 2 விசைப்படகுகளில் உள்ள மீன்பிடி வலைகளை அறுத்து கடலில் வீசினர். இதனால் பல ஆயிரம் மதிப்பிலான மீன் பிடி சாதனங்கள் இழப்புடன் மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர்.

    இதுகுறித்து மீனவ சங்கத்தலைவர் போஸ் கூறுகையில், ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது சிறை பிடித்து செல்லுவது போன்ற செயல்பாடுகளால் மீன்பிடி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மீன்பிடிக்க செல்லவே மீனவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். மீனவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யதிட வேண்டும். பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

    இந்த நிலையில், இலங்கையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரிய விசைப்படகு மீனவர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×