search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மன் கோவில்"

    • கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.
    • நவக்கிரக சுவாமிகள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும்.

    கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.

    ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களின் நிலையைக் கண்ட கோவன் தனது ஆட்சியின் கீழ், வசிக்கும் மக்கள் வாழ்வில் நன்மைகள் பல பெற்று பஞ்சம் பிணிகள் ஏற்படாமல் சிறந்து வாழ்ந்திட வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீரமைத்து அங்கு கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபடத் தொடங்கினான். அதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர். அதன்பின் இருளர்கள் அந்த அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர்.

    இக்கோவில் கோவைக்கு வடக்கு திசையில் அமைந்தது. அம்பிகை காவல் தெய்வமாக நகரைக் காத்தாள். அவனது ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப்பின் இப்பகுதியை இளங்கோசர் என்பவர் ஆண்டு வந்தார். அப்போது சேரமன்னர் ஒருவர் படையெடுத்து வந்தார். அவரின் படையெடுப்பில் இருந்து நாட்டைக்காக்க கோவன்புத்தூரின் மையத்தில் ஓர் கோட்டையையும் மண் மேட்டையும் கட்டி காப்புத் தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார். இவளே கோனியம்மனாக வழிபடப்படுகிறாள்.

    ஆலயத் தோற்றம்

    கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன். நமது செந்தமிழ்நாட்டிலே ஓரிடத்தில் பத்து குடிசைகள் சேர்ந்தாற்போல் அமைந்தாலும் அந்த இடத்தில் ஒரு மண்மேடை கட்டி அதன் மீது கூரை வேய்ந்து நடுவில் மண் திட்டில் ஓர் பிம்பத்தை அமைத்து தெய்வமாக தொழுவதும், அரசும் - வேம்பும் சேர்ந்து மரமாக வளர்ந்த நிழலில் கல்நட்டு தெய்வமாக வழிபடுவதும் நம் முன்னோர் வகுத்த வழியாகும்.

    இவ்வாறு தான் காடு திருத்தி மக்கள் வாழும் நிலமாக பண்படுத்தியபோது இருளர் தலைவனான கோவன் தங்கள் குடிசைக்கருகில் வடபாகத்தில் சிறு கோவில் ஒன்றெடுத்து ஒரு கல் நட்டு தானும் தன் இனத்தார்களும் குலதெய்வமென வழிபட்டு விழாசெய்தும் கொண்டாடினான். இக்கோவில் கோயம்புத்தூருக்கு வடக்கில் துடியலூருக்கு செல்லும் வழியில் சங்கனூர் பள்ளத்தருகே இருந்து பாழடைந்தது. மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.

    பல்லாண்டுக்குபின் இளங்கோசர் கொங்கு நாட்டினை ஆண்ட காலத்தில் சேரர் படையெடுத்தால் தடுக்க ஒரு மண்கோட்டையையும், மேட்டையும் புதிதாக கோவன் புத்தூரிலே கோசர்கள் கட்டினார்கள். அங்ஙனம் கட்டிய கோட்டைக்கு காப்பு தெய்வமாகவும் தன் பெயர் விளங்கும் வண்ணமும் சிறு கோவில் ஒன்றெடுத்து அதில் வைத்து வணங்கிய தெய்வத்துக்கு கோனியம்மன் என பெயரிட்டு கோவில் கொள்ள செய்தனர். அக்கோவிலே தற்போது கோவை மாநகரின் நடுவில் விளங்கும் கோனியம்மன் கோவில் ஆகும்.

    தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் நவக்கிரகங்கள்

    சிவன், பெருமாள், முருகன் என அனைத்து கோவில்களிலும் நவக்கிரகங்கள் சன்னதி தனியாக இருக்கும். கிரக தோஷம் நீங்க பக்தர்கள் நவக்கிரகங்களை வலம் வந்து விளக்கேற்றி வழிபடுவர். இதேபோல கோனியம்மன் கோவிலிலும் நவக்கிரக சன்னதி உள்ளது. மற்ற கோவில்களில் நவக்கிரக சுவாமிகளும் தனித்தனியாக அமர்ந்து அருள்பாலிப்பார்கள். ஆனால் கோனியம்மன் கோவிலில் நவக்கிரக சுவாமிகள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும்.

    கிருத்திகா ரோகினி உடனமர் சந்திரபகவான், சுகீர்த்தி உடனமர் சுக்கிர பகவான், ஞானதேவி உடனமர் புதன் பகவான், சித்திரலேகா உடனமர் கேதுபகவான், சக்திதேவி உடனமர் செவ்வாய் பகவான், ஹிம்ஷிகா தேவி உடனமர் ராகுபகவான், சனி நீலாதேவி உடனமர் சனீஷ்வரபகவான், உஷா பிரத்யுஷா உடனமர் சூரியபகவான், தாராதேவி உடனமர் குருபகவான் என சுவாமி சிலைகள் உள்ளன.

    இங்கு நவக்கிரகங்கள் மகிழ்ச்சியான நிலையில் அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு மகிழ்ச்சி நிலையில் இருக்கும் சுவாமிகளை வழிபட்டால் நாம் நினைத்து வழிபட்டது நடக்கும், சனி தோஷம், சுக்ர தோஷம் என அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். திருமண தோஷம் உள்ளவர்களும் இந்த நவக்கிரகங்களை வலம் வந்து பலன் பெறுகிறார்கள்.

    வியாழன், சனிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் எள் தீபம் ஏற்றி வழிபடுவர். நவக்கிரக சன்னதி களில் வழக்கமாக சூரியபகவான் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள் வழங்குவார்கள். இங்குள்ள சன்னதியில் மேற்கு நோக்கி உள்ளார். கோனியம்மன் வடக்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பதால் ஆகமவிதிப்படி சூரியபகவான் மேற்கு நோக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    ஏழுநிலை ராஜகோபுரம்

    2008 ஆம் ஆண்டு இத்திரு க்கோயிலின் நுழைவாயிலில் 83 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது. பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை ரூபாய் முப்பது லட்சம் வழங்கியது. பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் மீதமிருந்த செலவுகள் செய்யப்பட்டன. திருக்கோயில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருக் குடமுழுக்கு விழா, புதிய ராஜகோபுரத்துடன் ஜூலை 11, 2014 இல் நடைபெற்றது.

    ஆதிகோனியம்மன் பின்னணி தகவல்கள்

    கோனியம்மன் ஆலயத்தின் பின்பகுதியில் ஆதிகோனியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அந்த சன்னதியில் துர்க்கையும் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள். சப்தமாதர்களும் உள்ளனர்.

    இவர்களுக்கு அருகில் உக்கிர வீரபத்திரர், கருப்பர், முனீஸ்வரரும் உள்ளனர். இந்த சன்னதியில் பக்தர்களை மிகவும் கவர்வது ஆதி கோனியம்மன் விக்ரக மாகும். இங்கு ஆதி கோனியம்மனுக்கு தலை மட்டுமே உள்ளது. உடல் இல்லை. இதன் பின்னணியில் ஒரு வரலாறு கூறப்படுகிறது. கோவையில் கோசர்கள் கோனியம்மனை வழிபட்டு வந்த காலக்கட்டத்தில் அதற்குரிய மூலவரை உருவாக்கி வைத்திருந்தனர்.

    அவர்களுக்கு பிறகு கோவை நிலப்பகுதியை ஆண்ட மைசூர் மன்னர்கள் கோனியம்மனை மகிஷாசூரமர்த்தினியாக வடிவமைத்து வழிபட்டனர். இந்தநிலையில் திப்புசுல்தான் படையெடுத்து வந்து கோவை யில் உள்ள ஆலயங்களை எல்லாம் சூறையாடினான். அப்போது இந்த தலமும் பலத்த சேதத்தை சந்தித்தது. சிலைகளில் பெரும்பாலானவை உடைக்கப்ப ட்டன.

    மகிஷாசூரமர்த்தினி சிலையும் திப்புசுல்தான் படைகளால் உடைக்கப்பட்டது. அப்போது சிலையின் தலையும் உடலும் இரண்டு துண்டாக உடைந்தது. தலையை இந்த தலத்திலேயே வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

    உடல் பகுதி மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. தலை இல்லா முண்டத்தை அங்குள்ளவர்கள் இன்றும் வழிபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

    ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்கள்

    ஒவ்வொரு மாதமும் மாதப்பிறப்பு உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாலையில் கோவில் காலம் நிறைவு எய்திய பின்னர் கோனியம்மன் உற்சவரை கேடயத்தில் அழகுற எழச்செய்து கோவிலுக்குள் புறப்பாடு செய்யப்படும். அதுபோலவே பவுர்ணமி தோறும் கோனியம்மன் உற்சவர் கோவிலுக்குள் புறப்பாடு செய்யப்படும்.

    ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்துடன் இருக்கும் அம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து மகிழ்வர். ஆடி மாதம் முழுவதும் உற்சவ அம்மன் ஊஞ்சலில் கொலு இருக்கும். நவராத்திரி உற்சவத்தின்போது அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலமாக அலங்காரம் செய்விக்கப்பட்டு பக்தர்கள் மனம் நிறைவுறும் வண்ணம் கோனியம்மன் மூலவரும் உற்சவரும் காட்சி தருவர்.

    இது தவிர கீழ்கண்ட உற்சவங்களும் இத்திருக்கோவிலில் சிறப்புற நடைபெறுகின்றன.

    1. ஆடிவெள்ளிக்கிழமை 2. தை வெள்ளிக்கிழமை 3. நவராத்திரி 4. மாதப்பிறப்பு 5. பவுர்ணமி பூஜை 6. அமாவாசை 7. கார்த்திகை 8. தீபாவளி 9. தனுர் மாத விழா 10. தை பொங்கல்.

    கோனியம்மன் கோவிலில் நிச்சயதார்த்தம்

    கோனியம்மன் கோவிலில் திருமண பேறு, குழந்தை பேறு, நல்ல உடல் நலம் மற்றும் தொழில் விருத்தி ஆகிய 4 விதமான கோரிக்கைகள் தான் அதிக அளவில் பக்தர்களால் வேண்டுதல்களாக வைக்கப்படுகிறது.

    இந்த வேண்டுதல்களை கோனியம்மன் குறைவின்றி நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறாள். இதன் காரணமாக கோனியம்மன் மீது கொங்கு மண்டல மக்களுக்கு தணியாத பற்றும், பாசமும் இருக்கிறது.

    கோனியாத்தா உத்தரவு தராமல் எந்த ஒரு செயலையும் செய்வதில்லை என்பதை கொங்கு மண்டல தொழில் அதிபர்களும், அரசியல் வாதிகளும் ஒரு சடங்கு போல, மரபு போல கடைபிடித்து வருகிறார்கள்.

    இதனால் தான் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சி யான திருமணத்தை உறுதி செய்வதற்கான நிச்சயதார்த்தத்தையும் கொங்கு மக்கள் கோனியம்மன் ஆலயத்தில் நடத்துகிறார்கள்.

    கோனியம்மனை சாட்சியாக வைத்து அவள் முன்னிலையில் திருமண நிச்சயம் செய்தால் மணமக்கள் அனைத்து வித செல்வங்களும் பெற்று குறைவின்றி நீடூழி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது அவர்களது நம்பிக் கையாகும். திருமண நிச்சய தார்த்தத்துக்கு கொங்கு மண்டல மக்கள் உப்பை மாற்றி கொள்ளும் சடங்கை கடைபிடிக்கிறார்கள்.

    மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மீது மஞ்சள், குங்குமம், வெற்றிலை - பாக்கு, பூ வைத்து ஒருவருக்கொருவர் கொடுத்து மாற்றி கொள்வார்கள்.

    கோனியம்மன் கண் எதிரில் அவள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடப்பதால் மணமக்கள் வீட்டார் தாங்கள் கொடுத்த வாக்கை மீற மாட்டார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    பூ போட்டு உத்தரவு கேட்கும் பக்தர்கள்

    கோவை மாவட்ட பக்தர்கள் திருமணம், புதிய தொழில் தொடக்கம் என எந்தவொரு சுபநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றாலும் கோனியம்மனிடம் உத்தரவு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிவப்பு மற்றும் வெள்ளை பூவை தனித்தனியாக கட்டி அம்மன் முன்பு போடுகிறார்கள். பின்னர் அம்மனை வேண்டி பூவை எடுக்கிறார்கள். வெள்ளை பூ கிடைத்தால் சுபகாரியத்தை உடனே நடத்தலாம், அம்மன் உத்தரவு கிடைத்து விட்டது என்று அர்த்தமாம். சிவப்பு பூ வந்தால் அவசரம் வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து அந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என எண்ணப்படும்.

    தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம்

    இத்திருக்கோவிலில் 23-3-2002 முதல் தமிழக அரசு அறிவித்துள்ள அன்னதான திட்டத்தின்கீழ் தினமும் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

    இத்திட்டத்தில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் அதில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டியில் இருந்து வருடம் ஒரு நாளைக்கு தாங்கள் விரும்பும் நாளில் தங்கள் பெயரில் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். இத்திட்டத்திற்கு வருமான வரிசட்டம் 80(ஜி)-ன் கீழ் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    தானத்தில் சிறந்தது அன்னதானம் என மறைநூல்கள் கூறுகின்றன. அன்பர்கள் இச்சீரிய அன்னதான திட்டத்தில் தாங்களும் பங்கு கொண்டு ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தும் தங்கள் பிறந்த நாள், தங்களது குழந்தைகளின் பிறந்தநாள் போன்ற சிறப்பு தினங்களில் ரூ.3,500 திருக்கோவிலில் செலுத்தி குறைந்தது 100 பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கி அருள்மிகு கோனியம்மன் அருளுக்கு பாத்திரர் ஆகும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    நன்கொடைகளை வங்கி வரைவோலை மற்றும் பணிவிலை மூலமாகவும் அனுப்பலாம்.

    முகவரி, நிர்வாக அதிகாரி, அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் அன்னதான நிதி, கோயமுத்தூர் 641 001.

    கோவில் நடை தினந்தோறும் காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும். பின்னர் மாலை 4.30 மணிக்கு நடைதிறந்து இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    காலை 6.30 மணி-நடைதிறப்பு

    காலை 7 மணி-காலசந்தி பூஜை

    நண்பகல் 12 மணி -உச்சிகால பூஜை.

    பகல் 12.30 மணி -நடைசாத்துதல்

    மாலை 4.30 மணி -நடைதிறப்பு

    மாலை 7 மணி-சாயரட்சை பூஜை,

    இரவு 8.30 மணி-நடை சாத்துதல்.

    பூஜை கட்டண விவரம்

    அர்ச்சனை சீட்டு - ரூ.5

    தேங்காய் சீட்டு - ரூ.5

    மாவிளக்கு சீட்டு- ரூ.20

    உபய கட்டணச்சீட்டு - ரூ.20

    தனி வழி தரிசனம்- ரூ.25

    பால் அபிஷேகம் சீட்டு- ரூ.25

    குத்துவிளக்கு சீட்டு - ரூ.50

    விசேஷ நாட்கள் தனி வழி - ரூ.50

    ஆட்டோ, ஸ்கூட்டர் பூஜை- ரூ.50

    கார் பூஜை சீட்டு - ரூ.100

    அபிஷேக சீட்டு - ரூ.100

    புகைப்படம் எடுத்தல் - ரூ.150

    ஜமுக்காளச்சீட்டு - ரூ.200

    திருவிளக்கு வழிபாடு சீட்டு- ரூ.250

    உப்பு ஜவுளி - ரூ.500

    வீடியோ எடுத்தல் சீட்டு- ரூ.500

    தங்கப்பாவாடை சீட்டு- ரூ.1000

    கோவில் தொடர்புக்கு

    செயல் அலுவலர்,

    அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில்,

    பெரியகடை வீதி,

    கோவை-641 001.

    தொலைபேசி எண்: 0422-2396821.

    website: www.kovai.koniamman.org, Email-ID: koniamman@bsnl.in

    • பக்தர்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    ஆடி மாத பிறப்பை யொட்டி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ஆடி மாதம் நேற்று பிறந்தது. இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெறுவது வழக்கம். வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பொங்கல் வைத்தல் என இந்த மாதம் முழுவதும் அம்மனை வேண்டி பக்தர்கள் வழிபடுவார்கள்.

    நேற்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.

    அதன்படி, கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில், அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.

    இதே போல், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுர மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடந்தன. இதில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்களில் நேற்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    • தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவளை சரண் அடைந்து அருள் பெறுகிறார்கள்.
    • கருணை தெய்வமான காளிகாம்பாள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்

    ஆடி மாதம் பிறந்து விட்டது. தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் மாதமான ஆடி மாதத்தில் அம்மனின் அருள் மழை நிறைந்து இருக்கும். இந்த மாதம் முழுவதும் அம்மனை வழிபட்டால், அனைத்து சக்திகளையும் ஒருங்கே வழிபட்டதாக ஐதீகம். சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில்.

    நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக குடியிருந்தாள். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் கால கட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்து விட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

    காளிகாம்பாள் கோவில் ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்பு செட்டித் தெருவிற்கு இடம் மாறினாள். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து கொண்டே இருந்தனர். அப்படி வந்த ஒரு விஐ.பி. பக்தர்தான் சத்ரபதி சிவாஜி. 1677-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

    மகாகவி பாரதியார் சுதேசிமித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்தபாது பிராட்வேயில் தங்கி இருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவார். "யாதுமாகி நின்றாய் காளி" என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான். சத்ரபதி சிவாஜி, பாரதியார் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள், 3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவளை சரண் அடைந்து அருள் பெறுகிறார்கள். கடற்கரைக் கோவிலில் காளி உருவம் உக்கிரமாக இருந்ததாகவும், தம்புசெட்டித் தெருவிற்கு மாறியபோது காளியின் உருவம் சாந்த சொரூபியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கருணை தெய்வமான காளிகாம்பாள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்... ஏராளம்... அவற்றை எவராலும் பட்டியலிட முடியாது.

    பொதுவாக தமருகம், சூலம், கட்கம், கபாலம், கேடகம் முதலியன கொண்டு கோப ரூபத்துடன் இருப்பவளே காளி என்று சொல்வார்கள். ஆனால், நம் அன்னை ஸ்ரீகாளிகாம்பாளின் ரூபத்தினை சற்றே உன்னிப்பாகப் பார்த்தால், அன்னை எழில் கொஞ்சும் திருமேனியுடன் இருப்பதை காணலாம். ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பவ மலர் மற்றும் தன் திருவடிகளை தஞ்சமென அடைய உயிர்கட்குக் காட்டும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலம் என்று அன்னை நம் மனதை மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க வைக்கிறாள்.

    அன்னையின் இத்திருமேனி, அன்னை ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் ரூபம் கொண்டது. ஆனந்த வாழ்வளிக்கும் அன்னை, வேண்டுபவர்க்கு வேண்டுவன அளித்து ஆனந்தம் நல்குகிறாள். நம் அன்னை வரப்ரதாயினி. ஞானச்சுடராய் விளங்கி பெருங்கருணையோடு ஜீவன்களைக் காத்து அருளும் அன்னையினைக் காண கண்கள் கோடி வேண்டும். உலக வாழக்கையை வெறுத்து விரக்தியுடன் வந்து தரிசனம் செய்யும் பக்தனுக்கு முக்தி அளிக்கும் சக்தி கொண்டவள் அம்பிகை- காளிகாம்பாள் ஆவாள் அம்பாளைப் பார்க்கும் போது, அவள் நம்மை பாசத்தோடும், நேசத்தோடும் பார்ப்பது போலவே இருக்கும். அன்னை காளிகாம்பாள் தலத்திலும் இதை நாம் உணரலாம்.

    காளிகாம்பாளும் நாம் வேண்டுவதை, ஒரு தாய் தன் பிள்ளையிடம் எப்படி கருணையோடு கேட்பாளோ, அந்த மாதிரி கேட்பாள். அவள் முகத்தை பார்க்கும் போது, ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் ஒரே நேரத்தில் ஒளியை வெளிப்படுத்துவது போல இருக்கும். தீபாராதனை காட்டும் போது காளிகாம்பாளை நன்கு உன்னிப்பாகப் பாருங்கள் அவள் விழிகள் சுடர் விழிகள் போல மாறி இருக்கும்.

    கருவறையில் அம்பாள் வீற்றிருந்த கோலத்தில் இருக்கிறாள். வலது மேல் கையில் அங்குசம் ஏந்தியுள்ளாள். இடது மேல் கையில் பாசம் உள்ளது. வலது கீழ் கையில் தாமரை புஷ்பமும், இடது கீழ் கையில் வரஹஸ்தமும் வைத்துள்ளாள். மேலும் இடது காலை மடக்கி, வலது காலை தொங்க விட்டபடி அமர்ந்துள்ளாள். அந்த கால் பாதம் தாமரை மலர் மீது படியும்படி அமர்ந்து இருக்கிறாள்.

    இத்தகைய சிறப்புடைய காளிகாம்பாள் ஆலயத்தில் ஆடி பெரு விழாவில் 9 வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணி அளவில் உற்சவர் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    காளிகாம்பாள் ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 10 ஞாயிற்றுக்கிழமைகளில் வித விதமான அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடத்தப்படும்.

    ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணிக்கு காளிகாம்பாளுக்கும், ஸ்ரீகாயத்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடும் நடைபெறும். ஒவ்வொரு அமாவாசை அன்று இரவு 7 மணிக்கு ஸ்ரீ விராட் விஸ்வ பிரம்மத்திற்கு விசேஷ பூஜையும், கூட்டு வழிபாடும் நடைபெறும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 6 மணிக்கு ஸ்ரீ வீர பிரம்மங்கார் சுவாமிகளுக்கு விசேஷ பூஜை நடைபெறும்.


    • மிகவும் பிரபலமானது கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில்.
    • இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் இருக்கும் இடம் முன் காலத்தில் தானியங்கள் விளையும் காடாக இருந்தது. ஸ்ரீமூலம் திருநாள் மன்னர் காலத்தில் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டது. அப்போது கன்னியாகுமரி பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. மன்னர் ஆட்சி நடந்தது. தாராசூரன் என்ற அரக்கன் தனக்கு நிகர் யாருமில்லை என்ற அகம்பாவத்தில் வாழ்ந்து வந்தான்.

    அவன் சிவபெருமானை வழிபட்டு கடும் தவம் செய்து இறைவனை வணங்கி நிற்க சிவபெருமான் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு அரக்கன் நான் கடலுக்கு அப்பால் கோட்டை கட்டி அங்கே தேவர்கள், முனிவர்கள் அனைவரும் என்னை வணங்கி பணிவிடை செய்து ஏவல் செய்ய வேண்டும். மேலும் எனக்கு தேவர்களாலும் மனிதர்களாலும் மற்றுமுள்ள விலங்குகளாலும் மரணம் ஏற்படக் கூடாது என்று ஈசனிடம் கனிந்து கேட்டுக் கொண்டான். அவன் கேட்டது போல் பகவான் அவனுக்கு வரங்களை அளித்தார். வரங்களைப் பெற்ற மமதையில் அன்னை உமாதேவியை மதிக்காமல் வணங்காமல் ஏளனமாக பேசினான்.

    7 கன்னியர்கள் போரிட்டனர் : இதைக் கண்ட தேவி கடும் கோபமுற்று சாபமிட்டாள். அன்னையின் சாபத்தை ஏளனமாக கருதிய அவன் கடும்கோபத்துடன் தேவர்கள், முனிவர்கள், நவக்கிரகங்கள் மற்றுமுள்ள அனைவரையும் கொடுமைகள் செய்து துன்புறுத்தி வந்தான். இந்த நிலையில் தாராசூரனின் கொடுமைகள் தாங்காமல் அன்னை பார்வதிதேவியிடம் அனைவரும் தங்கள் துன்பங்களை சொல்லி கண்கலங்கி நின்றனர். இதை கேட்ட உடன் அன்னை கொதித்து எழுந்து ஈஸ்வரனை வணங்கி தாரகனின் அக்கிரமங்களை எடுத்து சொல்லி இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்கு வேண்டினாள். இதைக் கேட்ட இறைவன், தேவி! இந்த உலகத்தில் இருக்கும் எந்த ஆணினாலும் அவர்களது படைகளாலும் என்னை கொல்லக்கூடாது என்ற வரத்தை பெற்றவன் அவன்.

    ஆதலால் அவனை அழிப்பதற்கு என்னால் இயலாது. தேவி உன்னுடைய அம்சத்தில் 7 கன்னியர்களை உருவாக்கி அனுப்புவோம். இதைக் கேட்ட தேவி சர்வசக்தியுமான 7 கன்னியர்களை பிறப்பித்து அவர்களுக்கு தகுந்த ஆயுதங்களையும் கொடுத்து அனுப்பினாள். அவர்கள் 7 பேரும் பூலோகம் வந்து தாராசூரனின் படைகளோடு போர் செய்தனர். கடுமையான போர் நடைபெற்ற போதிலும் தாரகனின் படைகளை அழிக்க முடியவில்லை. தாரகனின் படைகள் தரையில் சாய்ந்தாலும் அடுத்த நிமிடம் மீண்டும் உயிர்பெற்று எதிர்த்து நின்றனர்.

    தவக்கோலத்தில் தேவி : தெய்வ கன்னியர்களால் தாராசூரனை அழிக்க முடியவில்லை. இதைக் கண்ட தெய்வ கன்னியர்கள் 7 பேரும் துயருற்று என்ன செய்வது? என்று தடுமாறி நின்றனர். தேவலோகம் சென்றாலும் அவமானம் என்று நினைத்து அவர்கள் பூலோகத்தில் சோட்டாணிக் கரை, கொடுங்கல்லூர், செங்கண்ணூர், மண்டைக்காடு ஆகிய பல இடங்களில் கோவில் கொண்டனர். தெய்வ கன்னியாகிய பராசக்தியின் அம்சமான குமரி பகவதி தேவலோகம் செல்ல மறுத்து கடலின் அருகில் இருக்கும் சீவலப்பாறை என்னும் இடத்தில் வந்து மறைவாக பல வருடங்களாக கடும் தவக்கோலத்தில் இருந்து வந்தாள். வருடங்கள் பல கடந்தது.

    வாணாசூரன் முதலான அசுரர்களை அழிப்பதற்கு தக்க தருணங்களை எதிர்பார்த்து நின்றாள். குமரியை அடுத்த பக்கத்து ஊரான கடற்கரையை அடுத்த வாவத்துறை என்ற ஊரை சேர்ந்த மீனவ தாயார் ஒருவர் அந்த சீவிலிப் பாறைக்கு சென்ற போது அந்த தாயாருக்கு பகவதி அன்னை சிறுமியாக காட்சி கொடுத்தாள். தேவி அந்த அம்மாளை பார்த்து அம்மா! என்னை உன் பெட்டியில் எடுத்துக் கொண்டு கரையில் விடுவாயா? என்று கேட்டாள்.

    அதற்கு அந்த தாயார், நான் உன்னை கூடையில் வைத்து எடுத்து செல்கிறேன். இப்போது ஆலயம் இருக்கும் இடமானது அப்போது பருத்தி விளையும் இடமாக இருந்தது. அந்த இடத்தில் இருப்பதற்கு எண்ணம் கொண்ட தேவி சுமையை உண்டாக்கினாள். தான் சுமந்து வந்த கூடையை அந்த இடத்தில் இறக்கி வைத்து குழந்தையை இறக்கினாள். தான் சுமந்து வந்தது குழந்தையல்ல தேவி என்பதை புரிந்து கொண்ட பெரியவள் அன்னையை வணங்கி நின்றாள்.

    சூரன் வதம் : அன்னை அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டாள். குமரி பகவதி மறைந்த பருத்தி விளையானது. தேவி அந்த விளையின் உரிமையாளரான சான்றோருக்கு தான் வந்திருப்பதை காட்சி கொடுத்தாள். அவரால் அன்னைக்கு பணிவிடை செய்யப்பட்டு அங்கு அன்னை கோவில் கொண்டாள்.

    வாணாசூரன் முதலானவர்களை வதம் செய்வதற்கு அதற்கு இசைந்த புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் நவமி வரை உள்ள 9 நாட்களில் முன் பகவானால் வதம் செய்வதற்கு கொடுத்து அனுப்பிய ஆயுதங்களை பூஜையில் வைத்து விஜயதசமி அன்று பூஜை செய்த பின் தனக்கு துணையாக அம்பும் வில்லும் சுமப்பதற்கு சான்றோர்களின் பரிவாரங்களும் நாதஸ்வர இசை முழங்க மேளதாளங்களுடன் அன்னை ஆண் போல் உடை அணிந்து குதிரை மேலேறி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு ஆக்ரோசத்துடன் மகாதானபுரம் கிராமத்தின் அருகில் வைத்து கொடியவன் சூரனிடம் போர் புரிந்து அவனையும் அவனது ஆய பலங்களையும் சில நிமிடங்களில் அழித்து வெற்றிக்கொடி புனைந்து கடலில் நீராடி முன் போலவே வந்து நின்று தவக்கோலம் கொண்டாள்.

    மேலும் சீவிலிப் பாறையில் தேவி சின்னக் குழந்தையாக உருவத்தில் வாழ்ந்த போது தவம் செய்து ஓடி ஆடி விளையாடிய அம்பிகையின் கால் தடம் உள்ளது. அந்த கால் தடம் விவேகானந்தா கமிட்டியினரால் விளக்கேற்றி பூஜைகள் செய்யப்பட்ட் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. சூரன் வதம் முடிந்து வாகனத்தில் வெற்றி நடை போட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி அன்னை கன்னியாகுமரி கோவில் வந்து தவக்கோலம் அடைந்தாள்.

    அன்று முதல் இன்று வரை கன்னியாகுமாரியில் கன்னிப் பெண்ணாக, பகவதி அம்மனாக அமர்ந்து, அந்த சிவபெருமானை நினைத்து கொண்டு மக்களின் குறைகளை நீக்கி கொண்டிருக்கின்றாள் என்கிறது வரலாறு.

    கோவிலுக்கு செல்லும் வழி: நாகர்கோவிலில் இருந்து 25 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 90 கி.மீ தொலைவிலும், மதுரையில் இருந்து 240 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரி அமைந்துள்ளது.

    • ஆடி மாதத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
    • இந்த ஒருநாள் ஆன்மிக பயணத்திற்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. ஆன்மிக மாதம் என்றும் ஆடி போற்றப்படும். அந்த அளவுக்கு ஊரெங்கும் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் இந்த மாதத்தில் களைகட்டும். அதிலும் குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும். இதை கருத்தில் கொண்டு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

    இந்த முறை பக்தர்களுடன், இந்து சமய அறநிலையத்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து ஆன்மிக சுற்றுலா என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. கடந்த ஆண்டு இந்தத்திட்டம் பரிட்சார்த்த முறையில் செயல்படுத்தப்பட்டது. தற்போது ஆடி மாத பிறப்பையொட்டி சென்னையில் 2 பிரிவாக இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. வருகிற 17-ந்தேதி ஆடி மாதம் பிறக்கிறது.

    முதல் பிரிவில், முக்கிய கோவில்களான பாரிமுனை காளிகாம்பாள், ராயபுரம் அங்காளப்பரமேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், பெரிய பாளையம் பவானி அம்மன், புட்லூர் அங்காளப்பரமேஸ்வரி, திருமுல்லைவாயல் திருவுடையம்மன், பச்சையம்மன், கொரட்டூர் செய்யாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன் ஆகிய 10 கோவில்களுக்கு பக்தர்களை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் ஆன்மிக பயணத்திற்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    2-வது பிரிவாக மயிலாப்பூர் கபாலீசுவரர், முண்டக கண்ணியம்மன், கோலவிழியம்மன், தியாகராயநகர் ஆலயம்மன், முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளி, பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சியம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். இதற்காக ரூ.800 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    உணவு, தரிசன ஏற்பாடுகளை துறை சார்ந்த அதிகாரிகள் செய்கிறார்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் சுற்றுலாத்துறை இணையதளத்தில் விண்ணப்பித்தால் அவர்கள் விரும்பிய நாளில் அழைத்து செல்லப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    • இந்த கோவிலில் தினமும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    சர்வதேச சுற்றுலா தலமாகவும், கோடை வாசஸ்தலமாகவும் விளங்கும் கொடைக்கானலில், ஆனந்தகிரி முதல் தெருவில் பிரசித்திபெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கொடைக்கானல் மலைப்பகுதி பக்தர்கள் மட்டுமின்றி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவோரும் அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். வரங்களை அள்ளிதரும் கொடை வள்ளலாக கொடைக்கானல் மாரியம்மன் இருக்கிறார்.

    இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதுதவிர தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சுமார் 15 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழாவில் கொடைக்கானல் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள மலைக்கிராம மக்கள், தேனி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பங்கேற்பார்கள். திருவிழாவின்போது அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சிகள், கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த திருவிழாவில் முதல் நாளில் போலீசார் சார்பில் முதல் மண்டகப்படி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாதி, மத பேதமின்றி ஒன்றாக கொண்டாடும் திருவிழாவாகவும் இது உள்ளது.

    இதற்கிடையே கோவிலில் கடந்த 1978-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 1996-ம் ஆண்டும், மீண்டும் கடந்த 2010-ம் ஆண்டும் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆகமவிதிப்படி கொடைக்கானல் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

    இந்தநிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    • நாக சதுர்த்தி தினத்தில் உன்னை யாரெல்லாம் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நல்வழி காட்டியது.
    • நாகதோஷம் உள்ளவர்கள் இந்த நாளில், ஏதாவது ஒரு நாகம் கோவிலில் வெள்ளி அல்லது கல்லால் ஆன நாகத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது.

    ஒருவருக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படும், குழந்தை பாக்கியம் இருக்காது. மேலும் சகல செல்வங்களும் படிப்படியாக குறையும் என்கிறார்கள்.

    ஒருவர், நாக சதுர்த்தி தினத்தன்று வயலில் ஏர் இறங்கி உழுதார். அப்போது சில பாம்பு குட்டிகள் ஏரில் சிக்கி இறந்துவிட்டன. கோபம் கொண்ட தாய் நாகம், அந்த குடும்பத்தையே கொன்றது. ஆனால் அவரது ஒரு மகள் மட்டும் தப்பினாள். பக்கத்து கிராமத்தில் வசித்த அவள், தனது வீட்டு சுவரில் நாகத்தின் படம் ஒன்றை வரைந்து அதை பயபக்தியுடன் வணங்கி வந்தாள். இதை கண்ட தாய் நாகம், அவளை தீண்டாமல் மனம் மாறி திரும்பியது. திரும்பும்போது, அந்த பெண்ணிடம், 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டது.

    'நீ தீண்டியதால் இறந்த என் குடும்பத்தினர் மிண்டும் உயிர் பெற்று எழ வேண்டும் என்று கேட்டாள் அந்த பெண். தாய் நாகம் மனம் இரங்கி, அந்த குடும்பத்தினரை உயிர்பிழைக்கச்செய்தது. மேலும், நாக சதுர்த்தி தினத்தில் உன்னை யாரெல்லாம் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நல்வழி காட்டியது.

    சிறப்புமிக்க அந்த நாக சதுர்த்தி வருடா வருடம் ஜூலை மாதம் வருகிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த நாளில், ஏதாவது ஒரு நாகம் கோவிலில் வெள்ளி அல்லது கல்லால் ஆன நாகத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது.

    அவ்வாறு செய்து வழிபட்டால் நாகதோஷம் நீங்கும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும். இது வரை இல்லாமல் இருந்த குழந்தை பாக்கியமும் கிட்டும். வாழ்க்கையில் அனைத்துவித ஐஸ்வரியங்களும் வந்து சேரும்.

    • மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட, இளைய பெண்கள் விரதத்தை தொடங்குவர்.
    • பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைப் படுத்திவிடுவார்கள்.

    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் அவர்களது மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் இருப்பர். குறிப்பிட்ட நாளில் இரவு சுமார் 10.30 மணிக்கு மேலே அல்லது ஆண்களும் குழந்தைகளும் உறங்கிய பின்னரோ விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடுவர்.

    மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட, இளைய பெண்கள் விரதத்தை தொடங்குவர். பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பர். அந்த கொழுக்கட்டையின் வடிவம் வித்தியாசமானதாக இருக்கும். அன்றைய நிவேதனங்கள் எதிலும் உப்பு போடமாட்டார்கள்.

    அனைத்தும் தயாரானதும் ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள். பிறகு ஒளவையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடு கேட்பர்.

    இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும் அந்த பெண்களே உண்பார்கள். இந்த விரதத்தில் ஆண் குழந்தைகள் உள்பட ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைப் படுத்திவிடுவார்கள்.

    இந்த விரதம் ஒவ்வொரு செவ்வாயில் ஒவ்வொருவர் வீட்டில் நடத்துவர். இப்படி விரதம் அனுசரித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும், திருமணம் கைக்கூடும், குழந்தைபாக்கியம் கிடைக்கும்.

    • நெல் நாற்று காற்றில் அசைவது போல் முளைப்பாரிக்கதிர்களும் அலையலையாய் ஆடி அசையும் அழகே அழகு.
    • அலங்காரத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டும் முளைப்பாரி எடுத்து வருவதில்லை.

    அம்மன் கோவில்களில் முளைப்பாரிக்கு தனியிடம் உண்டு. இதனை முளைப்பாலிகை என்று சொல்வது தான் சரியாகும். பேச்சு வழக்கில் முளைப்பாரி என்றே கூறுகிறோம்.

    நெல் நாற்று காற்றில் அசைவது போல் முளைப்பாரிக்கதிர்களும் அலையலையாய் ஆடி அசையும் அழகே அழகு! பெண்கள் இதைச்சுமந்து செல்லும் போது அந்த அழகைக் காணலாம். அதே நேரம் வெறும் அலங்காரத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டும் முளைப்பாரி எடுத்து வருவதில்லை.

    முளைப்பாரி எப்படி செழித்து உயரமாக வளர்கிறதோ, அதுபோல குடும்பம் தழைக்கும். பெண்ணுக்கு நல்ல கணவன் அமைவான் என்று சொல்வார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் நவதானியப் பாலிகை தெளித்து வளர்த்து, தம்பதிகள் அதை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதும் இதற்காகத் தான்.

    • ஆடிப்பூரம் ஆண்டாளின் அவதாரத் திருநாள்! பூமாதேவியானவள் ஆண்டாளாக அவதரித்தாள் என்கிறது புராணம்.
    • ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆடிப்பூரத்தை மிக்க அற்புதமாக கொண்டாடுகிறார்கள்.

    ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. முன்னோர்கள் ஒரு ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரித்து இருக்கிறார்கள்.

    ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். தை முதல் ஆனிவரை உத்ராயனம். ஒன்று மாரி காலத்தின் ஆரம்பத்தையும் அடுத்தது கோடை காலத்தின் துவக்கத்தையும் காட்டுகின்றன.

    இந்த புண்ணிய காலகட்டங்களில் தீர்த்த ஸ்நானம் மிகவும் விசேஷம். ஆடி மாதத்தை கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் துவக்கமே ஏற்படுகிறது.

    ஆடி மாதம் பண்டிகைகளின் ஆரம்பம்! பூமாதேவி அவதரித்த ஆனந்த் மாதம். அம்மனுக்கு ப்ரீதியான ஆடி மாதம் பண்டிகைகளின் கொண்டாட்டம்.

    ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளியும் செவ்வாயும் பெண்களுக்குப் பொன்னான திருவிழா தான்! நமக்கு அருள்பாலிக்க அம்மன் இல்லங்கள் தோறும் எழுந்தருளி நலமெல்லாம் சொரியும் மங்கல மாதம் தான் இந்த ஆடி மாதம்.

    அதற்கு காரணம் ஆடிப் பூரம்!

    ஆடிப்பூரம் ஆண்டாளின் அவதாரத் திருநாள்! பூமாதேவியானவள் ஆண்டாளாக அவதரித்தாள் என்கிறது புராணம்.

    ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெரியாழ்வாரின் பிருந்தாவனத்திலே பிராட்டியார் கோதை அவதரித்தார்கள். 'கோதையா! அவள் கருணையின் கொழுந்து' என்று போற்றி பணிகின்றோம்.

    'சூடிக்கொடுத்த சுடர்க் கொடி நாச்சியார் ஆண்டாள்' தான் பாடிக் கொடுத்த பாமாலையால் பரமனை சேவித்து அவரிடமே ஜக்கியமானாள்.

    ஆண்டாள் பிறந்த அந்த தினத்தை ஆடிப்பூரம் என்று அனைவரும் கொண்டாடிக்களிக்கின்றோம்.

    இன்றும் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆடிப்பூரத்தை மிக்க அற்புதமாக கொண்டாடுகிறார்கள்.

    இதேபோல 'ஆடி பதினெட்டு' என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விசேஷமான பண்டிகை நாளாகும். அந்த பண்டிகை வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் கொண்டாட்டத்திற்கு கேட்கவே வேண்டாம்.

    முன்பு ஆடிப்பூரத் திருநாளின்போது காவேரியும், தாமிரபரணியும், வைகையும் வெள்ளப் பெருக்கெடுத்து, பொங்கிப் பெருகி ஓடும்.

    ஆடிப்பூர நந்நாளன்று அணங்கையர் புத்தாடை உடுத்திக் கோவிலுக்குச் செல்வர். மாலையில் தேங்காயம் சாதம், தயிர் சாதம், புளியஞ்சாதம், பாயசம் போன்ற சித்ரா அன்னம் தயாரித்து அம்மனுக்கு நிவேதிப்பர். பிறகு குடும்பத்துடன் அனைவரும் மாலையில் நதிக்கரைக்கு சென்று சித்ரா அன்னத்தை உண்டு மகிழ்வர்.

    ஆடி மாதத்தில் மாரியம்மன் கோவில்களில் விசேஷமான பூஜைகளும் விழாக்களும் நடைபெறும்.

    கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், ஐயனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்குப் பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

    கரக ஆட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை இவைகளுடன் கேளிக்கையும் கொண்டாட்டங்களும் நடைபெறும்.

    இந்த ஆடி மாதத்தில் புன்னைவனம் என்றழைக்கப்படும் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    'அரியும் சிவனும் ஒன்றே' என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டாள் பார்வதி தேவி. அதற்காக புன்னைவனத்தில் தவமிருந்தாள் அம்பிகை.

    அம்பிகையின் தவத்திற்கு திருவுள்ளம் கனிந்த பெருமான் சங்கரநாராயணராக காட்சி தருகிறார். அதே தலத்தில் ஐயன் சங்கரலிங்க மூர்த்தியாக எழுந்தருளி அம்பிகையை மணந்து கொள்கிறார்.

    ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் இந்த ஆடித்தபசு பண்டிகையைக் காண பக்தர்கள் கூட்டம் வெள்ளம் எனப்பெருகும்!

    இவ்வாறு அம்பிகைக்கு உகந்ததான ஆடி மாதத்தில் வரும் செவ்வாயும், வெள்ளியும் விரதம் இருந்து நாம் அம்மனின் பேரருளைப் பெறுவோமாக!

    ஆடி ஸ்பெஷல்

    ஆடிப்பெருக்கு தினத்தில் மன்னார்குடி ஸ்ரீசங்கர மடத்தில் இருந்து மாலை புறப்படும் 'காவிரி அம்மன் உலா' ஆற்றங்கரையை அடையும். திரளான பக்தர்களுடன் மேள தாளத்துடன் இந்த உலா செல்லும். படிக்கரையில், காவிரி அம்மனாக அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்குக்கு பூஜைகள் நடக்கும். சந்தனாபிஷேகம், பாலாபிஷேகம், தேனாபிஷேகம் முதலியவற்றை பொதுமக்களின் சங்கல்பத்துடன் துவங்கி, காவிரி அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடக்கும். ஸ்ரீகாஞ்சி மடத்தில் பக்தர்கள் மற்றும் உள்ளூர்க்காரர்கள் முயற்சியுடன் இந்த வைபவம் நடந்து வருகிறது. காவிரி அம்மனுக்கு அர்ச்சகர் தீபாராதனை காட்டும்போது, அங்கு கூடி இருக்கும் உள்ளூர் மக்கள், கங்கையில் ஆரத்தி விடுவது போல் வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி நதி நீரில் மிதக்க விடுவர்.

    • சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.
    • வடக்கு மாமல்லபுரம் கிராம மக்கள் இணைந்து கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    வடக்கு மாமல்லபுரம் கிராம பொதுக் கோவிலான, கங்கையம்மன், ஊத்துக்காட்டு அம்மன் கோயிலில் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னிதி விமானங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    70ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகத்தைகான தேவநேரி, வெண்புருஷம், பட்டிபுலம், கொக்கிலமேடு, மணமை, கடம்பாடி, பெருமாளேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    கோவிலின் தர்மகர்த்தா ராமலிங்கம், செயலாளர் லோகநாதன், பொருளாளர் பழனிவேல், கிட்டு, கேசவன், அன்பு, ரங்கநாதன், ஜெயராமன், கவாஸ்கர், மகேஷ் மற்றும் வடக்கு மாமல்லபுரம் கிராம மக்கள் இணைந்து கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • கோவிலின் முன் பகுதியில் கருட கம்பம் அமைந்துள்ளது
    • இந்த கோவில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா வெள்ளிரவெளியில் புகழ்பெற்ற கரியகாளியம்மன் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கரியகாளியம்மன் பரிவார மூர்த்திகளுடன் வடதிசை நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி வருகிறார். இந்த கோவிலானது வெள்ளிரவெளி, மயிலம்பாளையம், தேவனம்பாளையம், புளியங்காடு, பாப்பாவலசு, ரங்கநாயக்கனூர், வடுகபாளையம் ஆகிய 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்டது.

    கோவிலின் முன் பகுதியில் கருட கம்பம் அமைந்துள்ளது. கோவிலின் இடது புறத்தில் வடக்கு முகமாக கருப்பண்ணசாமி சன்னதி அமைந்துள்ளது. கோவில் உட்பிரகாரத்தில் கொடிக்கம்பமும், சிம்ம வாகனத்துடன் பலி பீடமும், வடமேற்கே 3 பெரிய குதிரை மற்றும் காளை சிலைகள் அமைந்துள்ளன. தென்மேற்கு மூலையில் கிழக்கு முகமாக விநாயகர் சன்னதியும், அர்த்தமண்டபத்தில் விநாயகரும், கருவறையில் கரியகாளியம்மனும் எழுந்தருளியுள்ளனர். கோவில் தலவிருட்சமாக வில்வ மரம் உள்ளது.

    இங்கு அம்மனிடம் வந்து மனமுருக வேண்டினால் வேண்டுவன நிறைவேறும் என்பது அனைத்து ஊர் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதேபோல் திருமண தடை உள்ளவர்கள் அம்மனை வணங்கினால் அவர்களுக்கு நிச்சயம் திருமணம் நடைபெறும் என்பதும் கண்கண்ட உண்மை என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நல்ல காரியங்கள் தொடங்கும் முன் கோவிலில் பூ போட்டு அம்மன் உத்தரவு கேட்பதும், இந்த கோவிலின் தனிச்சிறப்பாக உள்ளது.

    7 ஊர் திருவிழா

    இந்த கோவிலின் தேர் 200 வருடங்களுக்கு முன்பு பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு ஸ்கை லார்க் நாவுக்கரசு குடும்பத்தினர், ஆண்டவர் ராமசாமி குடும்பத்தினர், கே.பழனிச்சாமி குடும்பத்தினர், சென்னியப்பா டெக்ஸ் சென்னியப்பன், கோவிந்தராஜ் குடும்பத்தினர், திருமால் டெக்ஸ் முருகேசன் குடும்பத்தினர், சந்த்ரு பிராசஸ் சதாசிவம் குடும்பத்தினர் இணைந்து ஏற்படுத்திய கரியகாளியம்மன் சேவா டிரஸ்ட் சார்பில் கோவிலுக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் வழங்கப்பட்டு, கோவில் கோபுரம் அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இவர்களுடன் 7 ஊர் பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை செலுத்தினர். இதை தொடர்ந்து தேர் கமிட்டி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தேர் மற்றும் குண்டம் திருவிழாவை மாங்குட்டை ஈஸ்வரன், கோவில் தர்மகர்த்தா மோகன்குமார் தலைமையிலும், வெள்ளிரவெளி நாட்டாமைக்காரர் பழனியப்ப முதலியார், புள்ளிக்காரர் ஆறுமுகம், தேர் கமிட்டியுடன் சேர்ந்து 7 ஊர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    மாவிளக்கு ஊர்வலம்

    தற்போது 12-ம் ஆண்டு குண்டம், தேர்த்திருவிழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது. கொடியேற்றம் நேற்றுமுன்தினம் நடந்தது. நேற்று காலை அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து வெள்ளிரவெளி, மயிலம்பாளையம், தேவனம்பாளையம், புளியங்காடு, பாப்பாவலசு, ரங்கநாயக்கனூர், வடுகபாளையம் ஆகிய 7 ஊர்களை சேர்ந்த பெண்கள் கரியகாளியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது இளைஞர்களின் பெருஞ்சலங்கை ஆட்டமும் நடந்தது.

    பின்னர் பெண்கள் மாவிளக்குடன் கோவிலை சுற்றி வந்து அம்மனை வழிபட்டனர். முன்னதாக கோவிலில் சிறப்பு யாக பூஜை நடந்தது. அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலையில் பொங்கல் வைத்து, அம்மை அழைப்பு நடந்தது. மேலும் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்காக கோவிலின் முன் குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு இதற்கான சிறப்பு பூஜைகளும் நடந்தது.

    குண்டம், தேரோட்டம்

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல், தேரோட்டம் ஆகியவை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. காலை 5 மணி முதல் பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர். இதில் சுற்றுவட்டார ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குகிறார்கள். குண்டத்திற்கு பின் காலை 10.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. தேர் வடம் பிடிக்கப்பட்டு மேற்கு திருப்பி நிறுத்தப்பட்ட பின் மீண்டும் மாலையில் வடம் பிடிக்கப்பட்டு மாரியம்மன் கோவில் அருகில் நிறுத்தப்படுகிறது. இரவு தங்கலுக்கு பின் 2-வது நாளாக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தேரோட்டம் தொடங்கி தேர் நிலையை சென்றடைகிறது.

    வருகிற 24-ந்தேதி காலை 9 மணிக்கு மண்டப கட்டளையும், இரவு 8 மணிக்கு முத்துப்பல்லக்கு நடக்கிறது. 25-ந்தேதி மாலை 6 மணிக்கு மண்டப கட்டளையும், இரவு 8 மணிக்கு மாரியம்மனுக்கு அபிேஷகமும், 26-ந்தேதி மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மறுஅபிேஷக பூஜை, பொன்னூஞ்சல் நடக்கிறது. 28-ந்தேதி காலை 9 மணிக்கு கருப்பண்ணசாமிக்கு அடசல் பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

    தயார் நிலை

    தேரோட்டத்தையொட்டி தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பக்தர்கள் நெரிசல் இன்றி குண்டம் இறங்குவதற்கு வசதியாக கோவிலின் முன் பகுதியில் மூங்கில் கம்புகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. குண்டம் மற்றும் தேரோட்டம் ஆகியவை நடப்பதால் அதிக அளவில் மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×