search icon
என் மலர்tooltip icon

  கோவில்கள்

  கோவை மாநகரின் நடுவில் ஆட்சிபுரியும் கோனியம்மன்
  X

  கோவை மாநகரின் நடுவில் ஆட்சிபுரியும் கோனியம்மன்

  • கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.
  • நவக்கிரக சுவாமிகள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும்.

  கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.

  ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களின் நிலையைக் கண்ட கோவன் தனது ஆட்சியின் கீழ், வசிக்கும் மக்கள் வாழ்வில் நன்மைகள் பல பெற்று பஞ்சம் பிணிகள் ஏற்படாமல் சிறந்து வாழ்ந்திட வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீரமைத்து அங்கு கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபடத் தொடங்கினான். அதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர். அதன்பின் இருளர்கள் அந்த அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர்.

  இக்கோவில் கோவைக்கு வடக்கு திசையில் அமைந்தது. அம்பிகை காவல் தெய்வமாக நகரைக் காத்தாள். அவனது ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப்பின் இப்பகுதியை இளங்கோசர் என்பவர் ஆண்டு வந்தார். அப்போது சேரமன்னர் ஒருவர் படையெடுத்து வந்தார். அவரின் படையெடுப்பில் இருந்து நாட்டைக்காக்க கோவன்புத்தூரின் மையத்தில் ஓர் கோட்டையையும் மண் மேட்டையும் கட்டி காப்புத் தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார். இவளே கோனியம்மனாக வழிபடப்படுகிறாள்.

  ஆலயத் தோற்றம்

  கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன். நமது செந்தமிழ்நாட்டிலே ஓரிடத்தில் பத்து குடிசைகள் சேர்ந்தாற்போல் அமைந்தாலும் அந்த இடத்தில் ஒரு மண்மேடை கட்டி அதன் மீது கூரை வேய்ந்து நடுவில் மண் திட்டில் ஓர் பிம்பத்தை அமைத்து தெய்வமாக தொழுவதும், அரசும் - வேம்பும் சேர்ந்து மரமாக வளர்ந்த நிழலில் கல்நட்டு தெய்வமாக வழிபடுவதும் நம் முன்னோர் வகுத்த வழியாகும்.

  இவ்வாறு தான் காடு திருத்தி மக்கள் வாழும் நிலமாக பண்படுத்தியபோது இருளர் தலைவனான கோவன் தங்கள் குடிசைக்கருகில் வடபாகத்தில் சிறு கோவில் ஒன்றெடுத்து ஒரு கல் நட்டு தானும் தன் இனத்தார்களும் குலதெய்வமென வழிபட்டு விழாசெய்தும் கொண்டாடினான். இக்கோவில் கோயம்புத்தூருக்கு வடக்கில் துடியலூருக்கு செல்லும் வழியில் சங்கனூர் பள்ளத்தருகே இருந்து பாழடைந்தது. மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.

  பல்லாண்டுக்குபின் இளங்கோசர் கொங்கு நாட்டினை ஆண்ட காலத்தில் சேரர் படையெடுத்தால் தடுக்க ஒரு மண்கோட்டையையும், மேட்டையும் புதிதாக கோவன் புத்தூரிலே கோசர்கள் கட்டினார்கள். அங்ஙனம் கட்டிய கோட்டைக்கு காப்பு தெய்வமாகவும் தன் பெயர் விளங்கும் வண்ணமும் சிறு கோவில் ஒன்றெடுத்து அதில் வைத்து வணங்கிய தெய்வத்துக்கு கோனியம்மன் என பெயரிட்டு கோவில் கொள்ள செய்தனர். அக்கோவிலே தற்போது கோவை மாநகரின் நடுவில் விளங்கும் கோனியம்மன் கோவில் ஆகும்.

  தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் நவக்கிரகங்கள்

  சிவன், பெருமாள், முருகன் என அனைத்து கோவில்களிலும் நவக்கிரகங்கள் சன்னதி தனியாக இருக்கும். கிரக தோஷம் நீங்க பக்தர்கள் நவக்கிரகங்களை வலம் வந்து விளக்கேற்றி வழிபடுவர். இதேபோல கோனியம்மன் கோவிலிலும் நவக்கிரக சன்னதி உள்ளது. மற்ற கோவில்களில் நவக்கிரக சுவாமிகளும் தனித்தனியாக அமர்ந்து அருள்பாலிப்பார்கள். ஆனால் கோனியம்மன் கோவிலில் நவக்கிரக சுவாமிகள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும்.

  கிருத்திகா ரோகினி உடனமர் சந்திரபகவான், சுகீர்த்தி உடனமர் சுக்கிர பகவான், ஞானதேவி உடனமர் புதன் பகவான், சித்திரலேகா உடனமர் கேதுபகவான், சக்திதேவி உடனமர் செவ்வாய் பகவான், ஹிம்ஷிகா தேவி உடனமர் ராகுபகவான், சனி நீலாதேவி உடனமர் சனீஷ்வரபகவான், உஷா பிரத்யுஷா உடனமர் சூரியபகவான், தாராதேவி உடனமர் குருபகவான் என சுவாமி சிலைகள் உள்ளன.

  இங்கு நவக்கிரகங்கள் மகிழ்ச்சியான நிலையில் அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு மகிழ்ச்சி நிலையில் இருக்கும் சுவாமிகளை வழிபட்டால் நாம் நினைத்து வழிபட்டது நடக்கும், சனி தோஷம், சுக்ர தோஷம் என அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். திருமண தோஷம் உள்ளவர்களும் இந்த நவக்கிரகங்களை வலம் வந்து பலன் பெறுகிறார்கள்.

  வியாழன், சனிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் எள் தீபம் ஏற்றி வழிபடுவர். நவக்கிரக சன்னதி களில் வழக்கமாக சூரியபகவான் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள் வழங்குவார்கள். இங்குள்ள சன்னதியில் மேற்கு நோக்கி உள்ளார். கோனியம்மன் வடக்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பதால் ஆகமவிதிப்படி சூரியபகவான் மேற்கு நோக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

  ஏழுநிலை ராஜகோபுரம்

  2008 ஆம் ஆண்டு இத்திரு க்கோயிலின் நுழைவாயிலில் 83 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது. பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை ரூபாய் முப்பது லட்சம் வழங்கியது. பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் மீதமிருந்த செலவுகள் செய்யப்பட்டன. திருக்கோயில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருக் குடமுழுக்கு விழா, புதிய ராஜகோபுரத்துடன் ஜூலை 11, 2014 இல் நடைபெற்றது.

  ஆதிகோனியம்மன் பின்னணி தகவல்கள்

  கோனியம்மன் ஆலயத்தின் பின்பகுதியில் ஆதிகோனியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அந்த சன்னதியில் துர்க்கையும் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள். சப்தமாதர்களும் உள்ளனர்.

  இவர்களுக்கு அருகில் உக்கிர வீரபத்திரர், கருப்பர், முனீஸ்வரரும் உள்ளனர். இந்த சன்னதியில் பக்தர்களை மிகவும் கவர்வது ஆதி கோனியம்மன் விக்ரக மாகும். இங்கு ஆதி கோனியம்மனுக்கு தலை மட்டுமே உள்ளது. உடல் இல்லை. இதன் பின்னணியில் ஒரு வரலாறு கூறப்படுகிறது. கோவையில் கோசர்கள் கோனியம்மனை வழிபட்டு வந்த காலக்கட்டத்தில் அதற்குரிய மூலவரை உருவாக்கி வைத்திருந்தனர்.

  அவர்களுக்கு பிறகு கோவை நிலப்பகுதியை ஆண்ட மைசூர் மன்னர்கள் கோனியம்மனை மகிஷாசூரமர்த்தினியாக வடிவமைத்து வழிபட்டனர். இந்தநிலையில் திப்புசுல்தான் படையெடுத்து வந்து கோவை யில் உள்ள ஆலயங்களை எல்லாம் சூறையாடினான். அப்போது இந்த தலமும் பலத்த சேதத்தை சந்தித்தது. சிலைகளில் பெரும்பாலானவை உடைக்கப்ப ட்டன.

  மகிஷாசூரமர்த்தினி சிலையும் திப்புசுல்தான் படைகளால் உடைக்கப்பட்டது. அப்போது சிலையின் தலையும் உடலும் இரண்டு துண்டாக உடைந்தது. தலையை இந்த தலத்திலேயே வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

  உடல் பகுதி மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. தலை இல்லா முண்டத்தை அங்குள்ளவர்கள் இன்றும் வழிபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

  ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்கள்

  ஒவ்வொரு மாதமும் மாதப்பிறப்பு உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாலையில் கோவில் காலம் நிறைவு எய்திய பின்னர் கோனியம்மன் உற்சவரை கேடயத்தில் அழகுற எழச்செய்து கோவிலுக்குள் புறப்பாடு செய்யப்படும். அதுபோலவே பவுர்ணமி தோறும் கோனியம்மன் உற்சவர் கோவிலுக்குள் புறப்பாடு செய்யப்படும்.

  ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்துடன் இருக்கும் அம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து மகிழ்வர். ஆடி மாதம் முழுவதும் உற்சவ அம்மன் ஊஞ்சலில் கொலு இருக்கும். நவராத்திரி உற்சவத்தின்போது அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலமாக அலங்காரம் செய்விக்கப்பட்டு பக்தர்கள் மனம் நிறைவுறும் வண்ணம் கோனியம்மன் மூலவரும் உற்சவரும் காட்சி தருவர்.

  இது தவிர கீழ்கண்ட உற்சவங்களும் இத்திருக்கோவிலில் சிறப்புற நடைபெறுகின்றன.

  1. ஆடிவெள்ளிக்கிழமை 2. தை வெள்ளிக்கிழமை 3. நவராத்திரி 4. மாதப்பிறப்பு 5. பவுர்ணமி பூஜை 6. அமாவாசை 7. கார்த்திகை 8. தீபாவளி 9. தனுர் மாத விழா 10. தை பொங்கல்.

  கோனியம்மன் கோவிலில் நிச்சயதார்த்தம்

  கோனியம்மன் கோவிலில் திருமண பேறு, குழந்தை பேறு, நல்ல உடல் நலம் மற்றும் தொழில் விருத்தி ஆகிய 4 விதமான கோரிக்கைகள் தான் அதிக அளவில் பக்தர்களால் வேண்டுதல்களாக வைக்கப்படுகிறது.

  இந்த வேண்டுதல்களை கோனியம்மன் குறைவின்றி நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறாள். இதன் காரணமாக கோனியம்மன் மீது கொங்கு மண்டல மக்களுக்கு தணியாத பற்றும், பாசமும் இருக்கிறது.

  கோனியாத்தா உத்தரவு தராமல் எந்த ஒரு செயலையும் செய்வதில்லை என்பதை கொங்கு மண்டல தொழில் அதிபர்களும், அரசியல் வாதிகளும் ஒரு சடங்கு போல, மரபு போல கடைபிடித்து வருகிறார்கள்.

  இதனால் தான் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சி யான திருமணத்தை உறுதி செய்வதற்கான நிச்சயதார்த்தத்தையும் கொங்கு மக்கள் கோனியம்மன் ஆலயத்தில் நடத்துகிறார்கள்.

  கோனியம்மனை சாட்சியாக வைத்து அவள் முன்னிலையில் திருமண நிச்சயம் செய்தால் மணமக்கள் அனைத்து வித செல்வங்களும் பெற்று குறைவின்றி நீடூழி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது அவர்களது நம்பிக் கையாகும். திருமண நிச்சய தார்த்தத்துக்கு கொங்கு மண்டல மக்கள் உப்பை மாற்றி கொள்ளும் சடங்கை கடைபிடிக்கிறார்கள்.

  மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மீது மஞ்சள், குங்குமம், வெற்றிலை - பாக்கு, பூ வைத்து ஒருவருக்கொருவர் கொடுத்து மாற்றி கொள்வார்கள்.

  கோனியம்மன் கண் எதிரில் அவள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடப்பதால் மணமக்கள் வீட்டார் தாங்கள் கொடுத்த வாக்கை மீற மாட்டார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.

  பூ போட்டு உத்தரவு கேட்கும் பக்தர்கள்

  கோவை மாவட்ட பக்தர்கள் திருமணம், புதிய தொழில் தொடக்கம் என எந்தவொரு சுபநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றாலும் கோனியம்மனிடம் உத்தரவு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிவப்பு மற்றும் வெள்ளை பூவை தனித்தனியாக கட்டி அம்மன் முன்பு போடுகிறார்கள். பின்னர் அம்மனை வேண்டி பூவை எடுக்கிறார்கள். வெள்ளை பூ கிடைத்தால் சுபகாரியத்தை உடனே நடத்தலாம், அம்மன் உத்தரவு கிடைத்து விட்டது என்று அர்த்தமாம். சிவப்பு பூ வந்தால் அவசரம் வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து அந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என எண்ணப்படும்.

  தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம்

  இத்திருக்கோவிலில் 23-3-2002 முதல் தமிழக அரசு அறிவித்துள்ள அன்னதான திட்டத்தின்கீழ் தினமும் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

  இத்திட்டத்தில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் அதில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டியில் இருந்து வருடம் ஒரு நாளைக்கு தாங்கள் விரும்பும் நாளில் தங்கள் பெயரில் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். இத்திட்டத்திற்கு வருமான வரிசட்டம் 80(ஜி)-ன் கீழ் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  தானத்தில் சிறந்தது அன்னதானம் என மறைநூல்கள் கூறுகின்றன. அன்பர்கள் இச்சீரிய அன்னதான திட்டத்தில் தாங்களும் பங்கு கொண்டு ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தும் தங்கள் பிறந்த நாள், தங்களது குழந்தைகளின் பிறந்தநாள் போன்ற சிறப்பு தினங்களில் ரூ.3,500 திருக்கோவிலில் செலுத்தி குறைந்தது 100 பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கி அருள்மிகு கோனியம்மன் அருளுக்கு பாத்திரர் ஆகும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

  நன்கொடைகளை வங்கி வரைவோலை மற்றும் பணிவிலை மூலமாகவும் அனுப்பலாம்.

  முகவரி, நிர்வாக அதிகாரி, அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் அன்னதான நிதி, கோயமுத்தூர் 641 001.

  கோவில் நடை தினந்தோறும் காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும். பின்னர் மாலை 4.30 மணிக்கு நடைதிறந்து இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

  காலை 6.30 மணி-நடைதிறப்பு

  காலை 7 மணி-காலசந்தி பூஜை

  நண்பகல் 12 மணி -உச்சிகால பூஜை.

  பகல் 12.30 மணி -நடைசாத்துதல்

  மாலை 4.30 மணி -நடைதிறப்பு

  மாலை 7 மணி-சாயரட்சை பூஜை,

  இரவு 8.30 மணி-நடை சாத்துதல்.

  பூஜை கட்டண விவரம்

  அர்ச்சனை சீட்டு - ரூ.5

  தேங்காய் சீட்டு - ரூ.5

  மாவிளக்கு சீட்டு- ரூ.20

  உபய கட்டணச்சீட்டு - ரூ.20

  தனி வழி தரிசனம்- ரூ.25

  பால் அபிஷேகம் சீட்டு- ரூ.25

  குத்துவிளக்கு சீட்டு - ரூ.50

  விசேஷ நாட்கள் தனி வழி - ரூ.50

  ஆட்டோ, ஸ்கூட்டர் பூஜை- ரூ.50

  கார் பூஜை சீட்டு - ரூ.100

  அபிஷேக சீட்டு - ரூ.100

  புகைப்படம் எடுத்தல் - ரூ.150

  ஜமுக்காளச்சீட்டு - ரூ.200

  திருவிளக்கு வழிபாடு சீட்டு- ரூ.250

  உப்பு ஜவுளி - ரூ.500

  வீடியோ எடுத்தல் சீட்டு- ரூ.500

  தங்கப்பாவாடை சீட்டு- ரூ.1000

  கோவில் தொடர்புக்கு

  செயல் அலுவலர்,

  அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில்,

  பெரியகடை வீதி,

  கோவை-641 001.

  தொலைபேசி எண்: 0422-2396821.

  website: www.kovai.koniamman.org, Email-ID: koniamman@bsnl.in

  Next Story
  ×