search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி செவ்வாய்"

    • ஆடி, செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும்.
    • ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் ஒளவையார் விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

    ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும்.

    அதேபோன்று ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.

    கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும்,

    கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும், இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.

    வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து

    அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிப்பார்கள்.

    ஆடி - செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

    • வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை.
    • ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து மாப்பிள்ளை-பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள்.

    தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

    மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

    ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.

    ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து மாப்பிள்ளை-பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப் பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை மட்டும் அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுவதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.

    ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்; தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத்தான் இவை). இதை இன்னமும் பின்பற்றுகின்றனர். இதனால் 'ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்பார்கள்.

    திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும். சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. 'ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்' என்பார்கள். குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும். அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    திருச்சியருகேயுள்ள திருநெடுங்களநாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும். இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.

    ஆடி மாதப் பழமொழிகள் பல. 'ஆடிப் பட்டம் தேடி விதை', 'ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்', 'ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்', 'ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', 'ஆடிக் கூழ் அமிர்தமாகும்'.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.

    சேலம் ஏழுபேட்டைகளில் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷம். ஒவ்வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா. இங்குள்ள அன்னதானப் பட்டியில் ஆடிப் பெருவிழாவின் பொங்கல் படையல், அடுத்த நாளில் குகை வண்டி வேடிக்கை ஒரு சிறப்பான விழாவாகும். அந்த ஒருநாள் மட்டும் வேறு எந்த ஊரிலும் இல்லாத விதமாக செருப்படித் திருவிழா நடக்கும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தர, அவர் அதை பக்தர்கள் தலையில் மூன்று முறை நீவிவிடுவார். இதுதான் செருப்படித் திருவிழாவாகும். உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள். இதற்கு சேத்துமுட்டி விழா என்று பெயர். அடுத்த விழா சத்தாபரண விழா. இப்படி பல விழாக்கள் விதம்விதமான மாங்கனிகள் தரும் சேலத்தில் நடைபெறுகின்றன.

    திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சளாடை தரித்து பயபக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். மேல்மருவத்தூர் அம்மன் ஆலயத்திலும் இதுபோல் செய்வார்கள். அவ்வாலயம் வரும் பெண்களை அங்குள்ளோர் சக்தி என்றுதான் அழைப்பார்கள்.

    கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் முத்தேவியர் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். நடுவே மகாலட்சுமியும் வலப்புறம் துர்க்கையும் இடப்புறம் சரஸ்வதியும் அமைந்துள்ளனர். தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை நடுவேயுள்ள லட்சுமி முகத்தில் சூரிய ஒளிபடும். பகல் 12 மணிக்கு மூன்று தேவியர் முகங்களிலும் சூரிய ஒளிபடும் தரிசனத்தைக் கண்டு மகிழலாம். ஆடி மாதம் முழுதும் இவ்வாலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

    • மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட, இளைய பெண்கள் விரதத்தை தொடங்குவர்.
    • பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைப் படுத்திவிடுவார்கள்.

    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் அவர்களது மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் இருப்பர். குறிப்பிட்ட நாளில் இரவு சுமார் 10.30 மணிக்கு மேலே அல்லது ஆண்களும் குழந்தைகளும் உறங்கிய பின்னரோ விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடுவர்.

    மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட, இளைய பெண்கள் விரதத்தை தொடங்குவர். பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பர். அந்த கொழுக்கட்டையின் வடிவம் வித்தியாசமானதாக இருக்கும். அன்றைய நிவேதனங்கள் எதிலும் உப்பு போடமாட்டார்கள்.

    அனைத்தும் தயாரானதும் ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள். பிறகு ஒளவையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடு கேட்பர்.

    இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும் அந்த பெண்களே உண்பார்கள். இந்த விரதத்தில் ஆண் குழந்தைகள் உள்பட ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைப் படுத்திவிடுவார்கள்.

    இந்த விரதம் ஒவ்வொரு செவ்வாயில் ஒவ்வொருவர் வீட்டில் நடத்துவர். இப்படி விரதம் அனுசரித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும், திருமணம் கைக்கூடும், குழந்தைபாக்கியம் கிடைக்கும்.

    • செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்குபற்றுதல் நல்லது என்ற கருத்தும் உண்டு.
    • முருகப்பெருமானை வேண்டி விரதம் கடைப்பிடிப்பதும் உண்டு.

    ஆடி செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கி 4.30 மணி வரை உள்ள காலத்தில் துர்க்கையை பூஜிப்பது விசேஷமானது என்று இந்துக்கள் கருதுகிறார்கள். பத்திரகாளி ராகுவாக அவதாரம் செய்தார் என்பர்.

    செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமண தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்குபற்றுதல் நல்லது என்ற கருத்தும் உண்டு. ஆடிச்செவ்வாயில் மட்டுமின்றி பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வேண்டி விரதம் கடைப்பிடிப்பதும் உண்டு.

    • புருவத்தின் மத்தியிலிருந்து வகிடு வரை பல்வேறு நிறங்களில் குங்குமத் திலகங்கள் இட்டுக் கொள்வார்கள்.
    • வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், இருபத்தைந்து காசு வைத்து கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    ஒவ்வொரு ஆடி மாத செவ்வாய்க்கிழமையையும் ஒரு திருநாளாகக் கொண்டாடுவது தென்பாண்டி நாட்டின் தனிச்சிறப்பு.

    அன்று கன்னிப் பெண்கள் கூடி ஊர்வலமாய் நதிக்கோ, வாய்க்காலுக்கோ, குளத்திற்கோ சென்று தெய்வ வழிபாடு செய்வார்கள்.

    கண் நிறைந்த கணவனைப் பெறுவதற்குச் செய்யப்படும் நோன்பு இது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

    பொழுது விடியுமுன்பே மணமாகாத பல பெண்கள் எல்லோரும் தெருக்கோடியில் கூடுவார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பனைநார் ஓலைப்பெட்டி அல்லது பிரம்புப் பெட்டி இருக்கும். இப்பெட்டியை பொடகாப் பொட்டி என்று பாண்டி நாட்டில் கூறுவார்கள்.

    அதில் மாற்றுப் பாவாடை, சட்டை, மஞ்சள், பல்வேறு நிறங்களில் குங்குமம், நாவற்பழம், வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவை இருக்கும். இவை தவிர நல்லெண்ணெய், திரிநூல், சூடம், தீப்பெட்டியும் கூட இருப்பதுண்டு.

    எல்லோரும் சேர்ந்தவுடன் வரிசையாய் தெரு அடைக்க நின்று கொண்டு, ஒரு பாட்டைப் பாடிக் கொண்டு நதிக்கரைக்கோ, வாய்க்காலுக்கோ அல்லது குளக்கரைக்கோ செல்வார்கள்.

    எளிய தமிழில் பாடப்படும் அந்தப் பாட்டு அவ்வவ்வூர் தெய்வங்கள், நதிகளின் பேர்களையும் சேர்த்து அமைந்திருக்கும். எல்லோரும் ஒன்று கூடிச் சொல்லும்போது மிக அழகாயிருக்கும்.

    ஆற்றங்கரையை அடைந்ததும் கன்னிப்பெண்கள் எல்லோரும் நன்றாய்ப் பச்சை மஞ்சளைத் தேய்த்துக் குளித்து விட்டுப் புத்தாடை புனைவார்கள்.

    புருவத்தின் மத்தியிலிருந்து வகிடு வரை பல்வேறு நிறங்களில் குங்குமத் திலகங்கள் இட்டுக் கொள்வார்கள். பாதங்களில் நலுங்கு மஞ்சளைப் பூசிக் கொண்டு பின் அருகிலுள்ள அரசடிப் பிள்ளையாரையோ அல்லது ஆலயத்திலுள்ள மூர்த்தியையோ கண்டு, நல்ல கணவனை அளிக்குமாறு பிரார்த்தித்து வழிபடுவார்கள்.

    பின்பு தாங்கள் கொண்டு வந்த வாசனை மலர்களால் அர்ச்சித்து விட்டு, நாகப்பழத்தை நிவேதனம் செய்வார்கள். சூடத்தைக் கொளுத்தி வழிபட்டு நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள்.

    மீண்டும் எல்லோரும் ஒன்று கூடி வரிசையாய் நின்று பாடலைப் பாடிக் கொண்டு திரும்புவார்கள்.

    வீட்டிற்குச் சென்றதும் மஞ்சப் பொங்கல் தாளகம் கலந்து சாப்பிடுவது வழக்கம். துருவிய தேங்காயும் வெல்லமும் கூடச் சேர்த்துக் கொள்வதுண்டு. சில வீடுகளில் பலவித வடாம் பொரித்துப் போடுவதும் உண்டு.

    கடைசி ஆடிச் செவ்வாய் அன்று வருடத்திற்கொருமுறை கிராமத்தில் உள்ள வசதி படைத்த வீட்டார்கள் முறைப்படி ஒவ்வொருவராக எல்லாக் குழந்தைகளையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று அவர்களை தெய்வமாக வழிபட்டு வடை, பாயாசத்துடன் விருந்தளிப்பர். சிலர் புதிய பாவாடை, சட்டைகள் வாங்கிக் கொடுப்பதுண்டு. அதனுடன் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், இருபத்தைந்து காசு வைத்து கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    ×