search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆடி மாத வைபவம்
    X

    ஆடி மாத வைபவம்

    • ஆடிப்பூரம் ஆண்டாளின் அவதாரத் திருநாள்! பூமாதேவியானவள் ஆண்டாளாக அவதரித்தாள் என்கிறது புராணம்.
    • ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆடிப்பூரத்தை மிக்க அற்புதமாக கொண்டாடுகிறார்கள்.

    ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. முன்னோர்கள் ஒரு ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரித்து இருக்கிறார்கள்.

    ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். தை முதல் ஆனிவரை உத்ராயனம். ஒன்று மாரி காலத்தின் ஆரம்பத்தையும் அடுத்தது கோடை காலத்தின் துவக்கத்தையும் காட்டுகின்றன.

    இந்த புண்ணிய காலகட்டங்களில் தீர்த்த ஸ்நானம் மிகவும் விசேஷம். ஆடி மாதத்தை கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் துவக்கமே ஏற்படுகிறது.

    ஆடி மாதம் பண்டிகைகளின் ஆரம்பம்! பூமாதேவி அவதரித்த ஆனந்த் மாதம். அம்மனுக்கு ப்ரீதியான ஆடி மாதம் பண்டிகைகளின் கொண்டாட்டம்.

    ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளியும் செவ்வாயும் பெண்களுக்குப் பொன்னான திருவிழா தான்! நமக்கு அருள்பாலிக்க அம்மன் இல்லங்கள் தோறும் எழுந்தருளி நலமெல்லாம் சொரியும் மங்கல மாதம் தான் இந்த ஆடி மாதம்.

    அதற்கு காரணம் ஆடிப் பூரம்!

    ஆடிப்பூரம் ஆண்டாளின் அவதாரத் திருநாள்! பூமாதேவியானவள் ஆண்டாளாக அவதரித்தாள் என்கிறது புராணம்.

    ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெரியாழ்வாரின் பிருந்தாவனத்திலே பிராட்டியார் கோதை அவதரித்தார்கள். 'கோதையா! அவள் கருணையின் கொழுந்து' என்று போற்றி பணிகின்றோம்.

    'சூடிக்கொடுத்த சுடர்க் கொடி நாச்சியார் ஆண்டாள்' தான் பாடிக் கொடுத்த பாமாலையால் பரமனை சேவித்து அவரிடமே ஜக்கியமானாள்.

    ஆண்டாள் பிறந்த அந்த தினத்தை ஆடிப்பூரம் என்று அனைவரும் கொண்டாடிக்களிக்கின்றோம்.

    இன்றும் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆடிப்பூரத்தை மிக்க அற்புதமாக கொண்டாடுகிறார்கள்.

    இதேபோல 'ஆடி பதினெட்டு' என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விசேஷமான பண்டிகை நாளாகும். அந்த பண்டிகை வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் கொண்டாட்டத்திற்கு கேட்கவே வேண்டாம்.

    முன்பு ஆடிப்பூரத் திருநாளின்போது காவேரியும், தாமிரபரணியும், வைகையும் வெள்ளப் பெருக்கெடுத்து, பொங்கிப் பெருகி ஓடும்.

    ஆடிப்பூர நந்நாளன்று அணங்கையர் புத்தாடை உடுத்திக் கோவிலுக்குச் செல்வர். மாலையில் தேங்காயம் சாதம், தயிர் சாதம், புளியஞ்சாதம், பாயசம் போன்ற சித்ரா அன்னம் தயாரித்து அம்மனுக்கு நிவேதிப்பர். பிறகு குடும்பத்துடன் அனைவரும் மாலையில் நதிக்கரைக்கு சென்று சித்ரா அன்னத்தை உண்டு மகிழ்வர்.

    ஆடி மாதத்தில் மாரியம்மன் கோவில்களில் விசேஷமான பூஜைகளும் விழாக்களும் நடைபெறும்.

    கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், ஐயனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்குப் பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

    கரக ஆட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை இவைகளுடன் கேளிக்கையும் கொண்டாட்டங்களும் நடைபெறும்.

    இந்த ஆடி மாதத்தில் புன்னைவனம் என்றழைக்கப்படும் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    'அரியும் சிவனும் ஒன்றே' என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டாள் பார்வதி தேவி. அதற்காக புன்னைவனத்தில் தவமிருந்தாள் அம்பிகை.

    அம்பிகையின் தவத்திற்கு திருவுள்ளம் கனிந்த பெருமான் சங்கரநாராயணராக காட்சி தருகிறார். அதே தலத்தில் ஐயன் சங்கரலிங்க மூர்த்தியாக எழுந்தருளி அம்பிகையை மணந்து கொள்கிறார்.

    ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் இந்த ஆடித்தபசு பண்டிகையைக் காண பக்தர்கள் கூட்டம் வெள்ளம் எனப்பெருகும்!

    இவ்வாறு அம்பிகைக்கு உகந்ததான ஆடி மாதத்தில் வரும் செவ்வாயும், வெள்ளியும் விரதம் இருந்து நாம் அம்மனின் பேரருளைப் பெறுவோமாக!

    ஆடி ஸ்பெஷல்

    ஆடிப்பெருக்கு தினத்தில் மன்னார்குடி ஸ்ரீசங்கர மடத்தில் இருந்து மாலை புறப்படும் 'காவிரி அம்மன் உலா' ஆற்றங்கரையை அடையும். திரளான பக்தர்களுடன் மேள தாளத்துடன் இந்த உலா செல்லும். படிக்கரையில், காவிரி அம்மனாக அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்குக்கு பூஜைகள் நடக்கும். சந்தனாபிஷேகம், பாலாபிஷேகம், தேனாபிஷேகம் முதலியவற்றை பொதுமக்களின் சங்கல்பத்துடன் துவங்கி, காவிரி அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடக்கும். ஸ்ரீகாஞ்சி மடத்தில் பக்தர்கள் மற்றும் உள்ளூர்க்காரர்கள் முயற்சியுடன் இந்த வைபவம் நடந்து வருகிறது. காவிரி அம்மனுக்கு அர்ச்சகர் தீபாராதனை காட்டும்போது, அங்கு கூடி இருக்கும் உள்ளூர் மக்கள், கங்கையில் ஆரத்தி விடுவது போல் வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி நதி நீரில் மிதக்க விடுவர்.

    Next Story
    ×