search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகதோஷம்"

    • வியாசர்பாடியில் சூரிய தலமான ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது.
    • தினமும் சூரியபூஜை நடைபெறும் திருத்தலம் இது.

    வட சென்னை பகுதியிலுள்ள வியாசர்பாடியில் சூரிய தலமான ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது. முலவர் ரவீஸ்வரர் மரகதாம்பாளுடன் அருள, உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தராக அருள்கிறார். தல விருட்சமாக வன்னிமரமும், தல தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் உள்ள இத்தலத்தில் காமீக ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. சிவன் சந்நதிக்கு மேலே உள்ள இந்திர விமானம், நடுவில் எந்த ஆதாரமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டிருக்கிறது. சிவன் மூலஸ்தானத்தில் இருந்து பார்த்தால், இந்த அமைப்பு தெரியும். தினமும் சூரியபூஜை நடைபெறும் திருத்தலம் இது.

     இக்கோயிலில் சிவன், கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவரது சந்நதி எதிரில் வாசல் கிடையாது. தென்திசையில் உள்ள வாசல் வழியாக நுழைந்துதான், இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர்.

    இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது. தினமும் இங்கு சூரியனே, முதலில் சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இதன் பிறகுதான் காலசந்தி பூஜை செய்கின்றனர். சிவன் சந்நதி முன்மண்டபத்தில் சூரியன், இருக்கிறார்.

    ஞாயிற்றுக்கி ழமை, உத்தராயண, தட்சிணாயண புண்ணிய கால துவக்கம், மகரசங்கராந்தி (தைப்பொங்கல்), ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியன் இருவருக்கும் விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கின்றன.

    ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். சூரியபகவானின் மனைவியான சம்ஞ்யா தேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச்சென்று விட்டாள். சாயா (நிழல்) தேவி எனப்பட்ட அவள், சம்ஞ்யாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள்.

    இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சம்ஞ்யாதேவி தன்னை பிரிந்து சென்றதை அறிந்தார். கோபம் கொண்ட சூரியன், சம்ஞ்யா தேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா, ஒரு யாகம் நடத்திக் கொண்டிருந்தார். மனைவியைத் தேடிச் சென்ற கோப அவசரத்தில் சூரியன் பிரம்மாவைக் கவனிக்கவில்லை.

    தன்னை சூரியன், அவமரியாதை செய்ததாக எண்ணிய பிரம்மா, அவரை மானிடனாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். இந்த சாபம் நீங்க, நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டார்.

    அவருக்குக் காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்தருளினார். சூரியனின் வேண்டுதலுக்காக சிவன், அந்த லிங்கத்தில் ஐக்கியமானார். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால், `ரவீஸ்வரர்' (ரவி என்பது சூரியனின் ஒரு பெயர்) என்றும் பெயர் பெற்றார்.

    முற்காலத்தில் இங்கு சிவன் சந்நதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை. தனக்கு அப்பாக்கியம் தரும்படி இங்கு சிவனை வேண்டினான். சிவன், அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி அருளினார்.

    அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்திலுள்ள ஒரு மகிழ மரத்தினடியில் அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அவளைக் கண்ட மன்னன், மரகதாம்பிகை என பெயர் சூட்டி வளர்த்தான். அவளும் இத்தலத்து இறைவன் மீது பக்தி கொண்டாள். அவளது திருமண வயதில் சிவன், அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இதன் பின்பு, இங்கு அம்பிகைக்கு சந்நதி எழுப்பப்பட்டது. இவ்விழாவின் பத்தாம் நாளில் மகிஷன் வதம் வைபவம் நடக்கும்.

    அப்போது அம்பாள் சந்நதி எதிரில் ஒரு வாழை மரம் கட்டி, (வாழை மரத்தின் வடிவில் மகிஷன் இருப்பதாகக் கருதி), அதில் வன்னி இலையையும் சேர்த்துக் கட்டிவிட்டு, அம்பாள் சார்பாக வெட்டி விடுகின்றனர்.

    இந்த வைபவம் இங்கு விசேஷமாக நடக்கும். சிவன் சந்நதிக்கு பின்புறத்தில் வன்னி மரம் இருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள், இம்மரத்திற்கு கீழேயுள்ள நாகருக்கு மஞ்சள்பொடி, பால் அபிஷேகம் செய்தும், பெண்கள் சுமங்கலிகளாக இருக்க தாலி கட்டியும் வேண்டிக்கொள்கிறார்கள்.

    • நாகதோஷம் நீங்க வழிபட வேண்டிய கோவில்கள் பல உள்ளன.
    • சர்ப்ப விநாயகர் படம் வைத்து வீட்டிலும் வழிபடலாம்.

    நாகதோஷம் நீங்க வழிபட வேண்டிய புராதனக் கோவில்கள் பல உள்ளன. அவற்றில் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், நாகர்கோவில், திருக்காளகஸ்தி, பேரையூர், நயினார்கோவில், ராமேஸ்வரம், திருச்செங்கோடு போன்றவை முக்கியமானவை. சர்ப்பத்தை அருகில் வைத்திருக்கும் தெய்வங்கள், சர்ப்பத்தை மாலையாக அணிந்துள்ள தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயங்களுக்கும், சர்ப்ப விநாயகர் அருளும் ஆலயங்களுக்கும் சென்று வழிபடலாம். சர்ப்ப விநாயகர் படம் வைத்து வீட்டிலும் வழிபடலாம்.

    ஜாதகத்தில் ராகு-கேது ஆதிக்கம் அமைந்தவர்கள், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், 4, 7, 13, 16, 22, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், ராகு - கேது ஆதிக்க எண்களில் பிறந்தவர்கள் ஆகியோர் ஆதிசேஷனுக்குரிய பெயர்களை வைத்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் நாகப்பன், நாகம்மை, நாகராஜன், நாகமுத்து, நாகவள்ளி, நாகலிங்கம், நாகா, நாகரத்னம், நாகமணி போன்ற பெயர்களை வைப்பது வழக்கம்.

    எண்கணிதப்படி ஆராய்ந்து நாகர் பெயர் வைத்துக் கொண்டால் பெருமை சேரும். எப்படி இருந்தாலும் தோஷங்களிலேயே பெரிய தோஷமாகக் கருதப்படும் நாகதோஷம் ஒருவருக்கு ஜாதகத்தில் இருக்குமானால், முறையாக வழிபாடு செய்வதன் மூலமே முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். சுய ஜாதகத்தின் அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு யோகம் தரும் ஆலயங்களில் வழிபாடுவது உகந்தது.

    • திருமண பாக்கியம் வேண்டி பிரார்த்திப்பவர்கள், மஞ்சள் சரடை வேப்பமரத்தில் கட்டி, வேண்டிக் கொள்ளலாம்.
    • முதல் வார பிரார்த்தனையை திங்கள் அன்று துவங்கினால் 9 வாரங்களும் திங்கட்கிழமையில் கோவிலுக்கு வரவேண்டும்.

    சென்னை அருகில் உள்ள புட்லூரில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் கோலாகலமாக இருக்கும்.

    திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோவிலில் நீராடிவிட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிராகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும்.

    குழந்தைப் பேறு வேண்டுவோர் எலுமிச்சைப் பழம் மற்றும் தொட்டிலை எடுத்து வந்து, கோவிலின் உள்ளே இடது புறத்தில் புற்றுக்கு அருகில் உள்ள வேப்பமரத்தில், கட்டிவிட்டு பிரார்த்திக்க வேண்டும். திருமண பாக்கியம் வேண்டி பிரார்த்திப்பவர்கள், மஞ்சள் சரடை வேப்பமரத்தில் கட்டி, வேண்டிக் கொள்ளலாம்.

    கருவறையில் உள்ள புற்று வடிவில் கோலோச்சும் பூங்காவனத்தம்மனது பாதத்தில் எலுமிச்சைப் பழத்தை வைத்து, அப்படியே உருட்டிவிடுவார் பூசாரி. இதை பெண்கள், தங்கள் புடவைத் தலைப்பு அல்லது சுடிதார் துப்பாட்டாவால் ஏந்தி எடுத்துவந்து, கோவில் வளாகத்தில் அமர்ந்து அப்படியே தோலுடன் கடித்துச் சாப்பிட வேண்டும்.

    இதே போல் தொடர்ந்து 9 வாரங்கள் இங்கு வந்து அம்மனை தரிசித்து பிரார்த்திக்க வேண்டும். முதல் வாரம் மட்டுமே தொட்டில் கட்ட வேண்டும் (மஞ்சள் சரடும் அப்படியே!). பிறகு ஒவ்வொரு வாரமும் எலுமிச்சைப் பழம் மட்டும் எடுத்துவந்தால் போதும்!

    செவ்வாய், வெள்ளி மட்டுமின்றி எந்த நாளும் வழிபடலாம்! முதல் வார பிரார்த்தனையை திங்கள் அன்று துவங்கினால் 9 வாரங்களும் திங்கட்கிழமையில் கோவிலுக்கு வரவேண்டும். செவ்வாய்க்கிழமை என்றால், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று வரவேண்டும். பக்தர்களில் சிலர், ஆடி மாதம் முழுவதும் பிரார்த்தனையைத் தொடர்வதுண்டு. ஆடிப்பூரம் மிகவும் விசேஷ நாளகும். அன்று பெண்கள் தங்கள் வேண்டுதலை நினைத்து பிரார்த்தனையைத் தொடங்கலாம்.

    • கருவறையில் சாந்தமும், கருணையும் பொங்க, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள் முப்பாத்தம்மன்.
    • நாகதோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து புற்று வழிபாடு செய்து, முப்பாத்தம்மனை வேண்டிக் கொண்டால், தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    சென்னை தி.நகர் பனகல்பார்க் அருகில் முப்பாத்தம்மன் கோவில் உள்ளது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி விவசாய பூமியாகத் திகழ்ந்த போது, முப்பாத்தம்மன் தோன்றினாள்.

    முன்பு இங்கு அரசு மற்றும் வேம்புக்கு நடுவே புற்று வளர்ந்திருந்தது. இதைத்தான் ஆரம்பத்தில் வழிபட்டனராம். பின்னர், முப்போகமும் விளையும் நிலத்தில் இருந்து அம்மன் விக்கிரகத்தைக் கண்டெடுத்தனராம்.

    இதை, புற்றுக்கு அருகில் வைத்து வழிபடவும் தொடங்கினார்கள். முப்போகமும் விளையும் நிலத்தில் இருந்து வந்தால், முப்பாத்தம்மன் என்றனர். இந்த கோவிலின் விசேஷங்களில் பிராகார வலம் வருதலும் ஒன்று! செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 108 முறை பிராகாரம் வலம் வரும் பக்தர்கள் நிறைய பேர் உள்ளனர். இப்படி 108 முறை வலம் வந்தால் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை.

    கருவறையில் சாந்தமும், கருணையும் பொங்க, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள் முப்பாத்தம்மன்.

    'இரண்டு நிமிடம் முழு ஈடுபாட்டுடன் நமது பிரார்த்தனையை அம்மனிடம் வைத்து வேண்டிக் கொண்டால் போதும். நினைத்தது நிறைவேறும்' என்கின்றனர் பக்தர்கள்.

    நாக தோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து புற்று வழிபாடு செய்து, முப்பாத்தம்மனை வேண்டிக் கொண்டால், தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. எலுமிச்சைப் பழத் தோலில் நெய் விளக்கு ஏற்றி வைத்து, செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை என ஒன்பது வாரங்கள் தொடர்ந்து முப்பாத்தம்மனை வழிபட்டு வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது நம்பிக்கை. ஆடி மாத விசேஷ நாட்களில் குறிப்பாக ஆடிப்பூரம் தினத்தன்று எலுமிச்சை மாலை அணிவித்து அம்மனை வேண்டிக் கொண்டால் தீராத நோயையும் தீர்த்து வைப்பாள் முப்பாத்தம்மன்.

    • ஆலயத்தின் மகிமையே, அம்மன் சுயம்புவாக வடிவெடுத்து இருப்பதுதான்.
    • நாகதோஷம் இருப்பவர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வழிப்பட்டு, நாகக்கன்னி சிலை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள்.

    நாகதோஷம் நீங்குவதற்கு தமிழ்நாட்டிலேயே சக்திவாய்ந்த தலமாக விளங்கிவரும் முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயில் சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கிறது. சென்னைப் பட்டணம் தோன்றுவதற்கு சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த அம்மன் அவதரித்ததாக ஆலய வரலாறு கூறுகிறது. ஆனால், அதையும் தாண்டி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியிருக்கக் கூடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த ஆலயத்தின் மகிமையே, அம்மன் சுயம்புவாக வடிவெடுத்து இருப்பதுதான்.

    நாகதோஷம் இருப்பவர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வழிப்பட்டு, நாகக்கன்னி சிலை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாட்களுக்கு நீரிலேயே நாகக்கன்னியை வைத்திருந்து, அதை ஆலயத்தின் முகப்பில் இருக்கிற மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு பாலாபிஷேகமும் வழிபாடும் நடத்தி வழிபடுவது இந்த ஆலயத்தின் விசேஷம். அதேபோல ஆடி மாதம் அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் காப்பு மற்றும் அன்னாபிஷேகம் செய்வதும் இங்கு விசேஷம்.

    ஆடிப்பூரத்துக்கு 1008 மலர் கூடைகள் எடுத்துவந்து அம்மனுக்கு பூச்சுடுதல் நடக்கும். நவராத்தி 10 நாளும் உற்சவ புறபாடு இருக்கும். 10 நாளும் 10 அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவாள். எல்லா விசேஷ நாளிலும் அம்மனுக்கு தங்கக் கவசம் சாற்றி வழிபாடு நடக்கும்.

    • நாக சதுர்த்தி தினத்தில் உன்னை யாரெல்லாம் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நல்வழி காட்டியது.
    • நாகதோஷம் உள்ளவர்கள் இந்த நாளில், ஏதாவது ஒரு நாகம் கோவிலில் வெள்ளி அல்லது கல்லால் ஆன நாகத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது.

    ஒருவருக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படும், குழந்தை பாக்கியம் இருக்காது. மேலும் சகல செல்வங்களும் படிப்படியாக குறையும் என்கிறார்கள்.

    ஒருவர், நாக சதுர்த்தி தினத்தன்று வயலில் ஏர் இறங்கி உழுதார். அப்போது சில பாம்பு குட்டிகள் ஏரில் சிக்கி இறந்துவிட்டன. கோபம் கொண்ட தாய் நாகம், அந்த குடும்பத்தையே கொன்றது. ஆனால் அவரது ஒரு மகள் மட்டும் தப்பினாள். பக்கத்து கிராமத்தில் வசித்த அவள், தனது வீட்டு சுவரில் நாகத்தின் படம் ஒன்றை வரைந்து அதை பயபக்தியுடன் வணங்கி வந்தாள். இதை கண்ட தாய் நாகம், அவளை தீண்டாமல் மனம் மாறி திரும்பியது. திரும்பும்போது, அந்த பெண்ணிடம், 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டது.

    'நீ தீண்டியதால் இறந்த என் குடும்பத்தினர் மிண்டும் உயிர் பெற்று எழ வேண்டும் என்று கேட்டாள் அந்த பெண். தாய் நாகம் மனம் இரங்கி, அந்த குடும்பத்தினரை உயிர்பிழைக்கச்செய்தது. மேலும், நாக சதுர்த்தி தினத்தில் உன்னை யாரெல்லாம் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நல்வழி காட்டியது.

    சிறப்புமிக்க அந்த நாக சதுர்த்தி வருடா வருடம் ஜூலை மாதம் வருகிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த நாளில், ஏதாவது ஒரு நாகம் கோவிலில் வெள்ளி அல்லது கல்லால் ஆன நாகத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது.

    அவ்வாறு செய்து வழிபட்டால் நாகதோஷம் நீங்கும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும். இது வரை இல்லாமல் இருந்த குழந்தை பாக்கியமும் கிட்டும். வாழ்க்கையில் அனைத்துவித ஐஸ்வரியங்களும் வந்து சேரும்.

    ×