என் மலர்
வழிபாடு

பஞ்சமி விரதமும், நாகதோஷ வழிபாடும்!
- பெருவாரியான குடும்பங்களுக்கு நாகங்கள் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருகிறது.
- இறைவனை நாகங்கள் வழிபட்டு பேறு பெற்ற தலங்கள் அநேகம் உள்ளது.
ஆனி மாதத்தில் ஸ்கந்த பஞ்சமி, ஆடியில் நாக பஞ்சமி, ஆவணியில் ரிஷி பஞ்சமி, கார்த்திகையில் நாக பஞ்சமி, தை மாதத்தில் வசந்த பஞ்சமி, மாசியில் ரங்க பஞ்சமி, பங்குனியில் ஸ்ரீபஞ்சமி என்று ஏழு பஞ்சமி விரதங்களை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது தமிழகத்தின் மரபாகும்.
பெருவாரியான குடும்பங்களுக்கு நாகங்கள் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருகிறது. ஆயில்யம் நட்சத்திர அதிதேவதை நாகராசாவாகும். நாகதோஷ நாக சாப பரிகார பூஜைகளுக்கு ஆயில்யம் நட்சத்திரமும், நாகங்களின் அனுக்கிரகம், அருள் நலம் வேண்டி பூஜித்திட பஞ்சமி திதியும் உத்தமமாகும்.
உரகம், ர, அ, பணா, கவ்வை, அரவு, நாகம், பாம்பு, சர்ப, ஆஷ்லேஷா, கட்செவி, போகி, சுகி, அரி, வியாளம், பன்னகம், மாசுணம், சக்கிரி, புயங்கம், பாந்தள், அங்கதம் எனும் 21 பெயர்களால் அழைக்கப்படுவது ஆயில்யம் நட்சத்திரம்.
பஞ்ச பிரம்மாக்களில் ஒருவரான கசியபமுனிவர் முதலில் கத்துரு முனி பத்னி மூலம் ஆயிரம் சர்ப்பங்களையும், இரண்டவதாக சுவரசை முனி பத்னி மூலம் ஆயிரம் பாம்புகளையும் தோற்றுவித்தார்.
முதன் முதலில் பிறந்தவர் சேஷன் அதனால் ஆதிசேஷன் என்ற பெயருடன் நாகராசாவாக முடி சூட்டப்பட்டார். சாத்வீக குணமும், பொறுமையும், நல்ல சிந்தனையும், கொண்ட ஆதிசேஷனுக்கு சர்ப்பங்களின் பழிவாங்கும் குணமும், கோபமும், முரட்டு சுபாவமும் பிடிக்காமல் அரச பதவியில் இருந்து விலகி தவம் மேற்கொண்டார். தவத்தின் பயனாக இறைவனிடம் வேண்டிய வரத்தின் மூலம் ஆயிரம் தலைகளுடன் பூமியைத் தாங்கும் வர பலத்தை பெற்று வணங்கத்தக்கவரானார்.
பின்னர் சர்பங்களுக்கு அரசனாக அனந்தனும் பாம்புகளுக்கு அரசனாக வாசுகியும் ஆனார்கள், ஆதிசேஷனின் தம்பியர்களான அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், பத்மன், சங்கபாலன், குளிகன், மகாபத்மன் எண்மரும் அண்ணனைப்போல தவமிருந்து அண்ணனுக்கு துணையாக இந்த பூமியை 8 திக்கில் இருந்தும் காக்கும் வரத்தைப் பெற்று அஷ்டதிக் நாகர்கள் ஆனார்கள்.
இறைவனை நாகங்கள் வழிபட்டு பேறு பெற்ற தலங்கள் அநேகம் உள்ளது. நாகர்கோவில், அனந்தமங்கலம். கார்கோடகநல்லூர், வாசுதேவநல்லூர், தச்சநல்லூர், பத்மநேரி, சங்க பாலபுரம் என்று பலவுள்ளன. நாகராசாவான அனந்தின் பெயரால் அனந்த விரதம் திருவனந்தபுரம், அனந்த பத்மநாபன், நாகநாதர், நாகேஸ்வரர்,நாகவல்லி, நாகம்மன், சேஷபுரீஸ்வரர், பாம்புரநாதர் என்ற திருப்பெயர்களும், தெய்வங்களுக்கு குடையாக படுக்கையாக, அணிகலன்கலாக, கச்சைகளாகவும் நாகங்கள் தனி இடத்தைப் பெற்றுள்ளன. புன்னாக மரம் என்ற புன்னை மரமும், புன்னாகவராளி என்ற ராகமும் விசேஷமாக உள்ளது.






