search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vladimir Putin"

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று தலைநகர் பீஜிங் சென்றடைந்தார்.
    • அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புதின் பங்கேற்கிறார்.

    பீஜிங்:

    சீனா தனது பெல்ட் ரோடு திட்டத்திற்கு 130 நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்று அழைப்பு விடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று சீனா சென்றடைந்தார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் சீனா சென்றுள்ளார்.

    ரஷியா, சீனா இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக, அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புதின் பங்கேற்கிறார்.

    உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பின் ரஷியாவை பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தி இருக்கும் நிலையில், புதின்-ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆன்டனி பிளிங்கன் கடந்த வாரம் சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யீவுடன் பேசினார். அப்போது சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • ரஷிய உக்ரைன் போர் 590 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது
    • மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவி அந்நாட்டை தூக்கி நிறுத்துகிறது என்றார் புதின்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் ஏராளமாக சேதங்களும் உயிரிழப்புகளும் நடைபெற்றும் போர் 590 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, அமெரிக்காவிற்கு உள்ள கடன் ரூ. 2,74,63,90,35,00,00,000 (33 டிரில்லியன் அமெரிக்க டாலர்) எனும் அளவை தொட்டு விட்டதால், அந்நாட்டில் செலவினங்களை குறைக்க கோரி பெரும் விவாதங்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்தது. இந்த விவாதங்களில் ரஷிய உக்ரைன் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா தற்போது வரை வழங்கிய பல கோடி நிதியுதவி ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது. தற்போதுள்ள சூழலில் முன்பு போல் இனியும் அமெரிக்காவால் தொடர்ந்து உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவி தடைபடும் சாத்தியம் அதிகம் உள்ளது என தெரிவித்தார்.

    இப்பின்னணியில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஒரு சந்திப்பில் பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இது குறித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    மேற்கத்திய நாடுகளின் ஆதரவு மட்டும் இல்லையென்றால் உக்ரைன், ரஷியாவிற்கு எதிராக ஒரு வாரத்திற்கு மேல் போரில் தாக்கு பிடிக்க முடியாது. மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவியினால் ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறது. உதவி நின்றால், ஒரு வாரத்தில் அனைத்தும் நின்று விடும். நிதியுதவி மட்டுமல்ல; ராணுவ தளவாட உதவிகளும் நிற்க தொடங்கினால், ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும். தற்போது வரை ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் போரிட்டதில், உக்ரைன் 90 ஆயிரம் வீரர்களுக்கு மேல் இழந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, "அமெரிக்காவை போன்று நிதியுதவியோ ராணுவ உதவியோ உக்ரைனுக்கு நிச்சயமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்க முடியாது," என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைக்கான தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்தார்.

    புதின் கூறியவாறு அமெரிக்க உதவி தடைபட்டு, போர் ரஷியாவிற்கு சாதகமாக சென்றால் அதனால் எற்பட கூடிய பாதிப்புகள் குறித்து அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    • ரஷியா வெற்றி பெற்றதாக கூறிய தேர்தலை உக்ரைன் புறக்கணித்தது
    • எந்த சர்வதேச சட்டங்களும் மீறப்படவில்லை என்றார் புதின்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் எண்ணிலடங்கா உயிர் பலிகளும், பெருமளவு கட்டிட சேதங்களும் ஏற்பட்டும் போர் முடிவுக்கு வராமல் 580 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.

    கடந்த ஆண்டு, உக்ரைனின் டோனெட்ஸ்க் (Donetsk), லுஹான்ஸ்க் (Luhansk), சப்போரிழியா (Zaporizhzhia) மற்றும் கெர்சன் (Kherson) ஆகிய பகுதிகளை ரஷியா தங்கள் நாட்டுடன் ஒவ்வொன்றாக இணைத்து கொண்டது. இணைக்கப்பட்ட இந்த 4 பகுதிகளில் சில நாட்களுக்கு முன் ரஷியாவின் மத்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தி, அத்தேர்தலில் ரஷிய பிரதிநிதிகள் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தது. ஆனால், உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் இந்த தேர்தலை ஒப்பு கொள்ளாமல் புறக்கணித்தன.

    இந்த தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக நாட்டு மக்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வீடியோ மூலமாக உரையாற்றினார். இந்த உரை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    ரஷியா தனது இறையாண்மையையும், ஆன்மிக மதிப்பையும் காத்து கொள்ளவே போராடி வருகிறது. இதனால்தான் இந்த ரஷிய உக்ரைன் போரே ஏற்பட்டது. நாம் நமது தாயகத்திற்காக போராடுகிறோம்; நமது ஒற்றுமைக்காகவும், வெற்றிக்காகவும் நாம் சண்டையிடுகிறோம். இதில் எந்த சர்வதேச சட்டங்களோ, வழிமுறைகளோ மீறப்படவில்லை. ரஷியாவுடன் தற்போது இணைக்கப்பட்ட உக்ரைனின் 4 பகுதியை சேர்ந்த மக்களும் ரஷியாவுடன் இணையவே விரும்பினார்கள்.

    இவ்வாறு புதின் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ள நேட்டோ (NATO) கூட்டமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் (Jens Stoltenberg), "ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைன் மெதுவாக முன்னேறி வருகிறது. உக்ரைன் மீண்டும் கையகப்படுத்தும் ஒவ்வொரு மீட்டர் இடமும் ரஷியா இழக்கும் இடமாக கருத வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    • தாக்குதல் காரணமாக உக்ரைனியர்கள் ரஷியாவிற்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்
    • அவர்கள் தவிப்பதை எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது என்றார் ஒரு ரஷிய பெண்மணி

    2022 பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது.

    ரஷியாவில் இப்போர் குறித்து ரஷியாவையோ, அதிபர் விளாடிமிர் புதினையோ விமர்சிப்பவர்கள் மீது ரஷிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    ஆனால் அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷியாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.

    ராணுவ தாக்குதல் காரணமாக ரஷியாவிற்கோ அல்லது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர். தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷிய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர்.

    "இந்த அகதிகளுக்காக இணையவழியாக நன்கொடை பெற்று உடைகள், மருந்துகள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை செய்து தருகிறேன். ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரெயிலில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். என்னை போல் ஆயிரக்கணக்கான ரஷியர்கள் உதவி செய்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் இது குறித்து நாங்கள் வெளியில் பேசுவதில்லை," என கலினா அர்ட்யோமென்கோ (58) எனும் ரஷிய பெண்மணி தெரிவித்தார்.

    "எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்" என ல்யுட்மில்லா (43) எனும் மற்றொரு ரஷிய பெண் கூறினார்.

    2022 டிசம்பர் மாதமே ரஷியாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 லட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இரு நாடுகளுக்கும் தேவைகள் உள்ளதால் பரஸ்பரம் உதவி கொள்ள முடியும்
    • ஐ.நா. சபை தீர்மானத்திற்கு இது எதிரானது என்கிறது தென் கொரியா

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியா சென்றுள்ளார். அங்கு இரு நாட்டு அதிபர்களுக்கிடையே அதிகாரிகள் யாரும் இன்றி தனிப்பட்ட சந்திப்பு சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.

    கடந்த 2022 பிப்ரவரியில் இருந்து உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் ரஷியாவிற்கு ஆயுதங்களின் தேவை அதிகரித்திருக்கிறது.

    அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிடம் வெளிப்படையான எதிர்ப்பை காட்டி வரும் வட கொரியாவிற்கு உணவு தானிய தேவையும், அந்நாட்டு ராணுவத்திற்கான அதி நவீன ஆயுதங்களுக்கான தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகிறது.

    எனவே, இரு நாடுகளும் பரஸ்பரம் உதவி கொள்ளும் நிலையில் உள்ளதால், ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்ற முடியும். இப்பின்னணியில் சந்தித்து கொண்ட தலைவர்கள் இருவரும் பரஸ்பரம் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், இரு நாட்டின் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பிற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்த நிலையில், வட கொரியாவிற்கு ரஷியா வழங்கப்போகும் அதிநவீன ஆயுத மற்றும் உளவு விண்கலத்திற்கான தொழில்நுட்ப உதவி, தென் கொரியாவில் போர் பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

    இது குறித்து தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் லிம் சூ-சுக், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்..,

    "உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி விண்கலன் மேம்பாடு மற்றும் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இரு நாட்டு அதிபர்களும் பரஸ்பரம் ஒத்துழைக்க முனைவது குறித்து தென் கொரியா கவலையும், வருத்தமும் தெரிவிக்கிறது. அணு ஆயுத மற்றும் ஏவுகணை மேம்பாடு சம்பந்தமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் ஈடுபடுவது ஐ.நா.சபையின் தீர்மானங்களுக்கு எதிரானது. வட கொரியாவிற்கு ராணுவ ஒத்துழைப்பு அளித்தால், தென் கொரியாவிற்கும் ரஷியாவிற்குமான உறவில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும் என்பதை ரஷியா உணர வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • 2014-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது
    • 90-களில் அயல்நாடுகளிலிருந்து கார்களை வாங்கி குவித்தோம்

    இந்திய தொழில் துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும், புதுமைகளை வளர்க்கவும், திறனை மேம்படுத்தவும், அறிவுசார் உடைமைகளை பாதுகாக்கவும் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், அதனை கொண்டு இந்தியாவிலேயே அனைத்து பொருட்களும் தயாரிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு இறக்குமதியை குறைக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 2014-ல் கொண்டு வரப்பட்டது "மேக் இன் இந்தியா" திட்டம்.

    இந்நிலையில் கிழக்கு பொருளாதார மன்றத்தின் 8-வது அமர்வில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    ஒரு காலத்தில் நாங்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே கார்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். ஆனால், பிறகு நாங்கள் உள்நாட்டில் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கினோம். நாங்கள் 90-களில் இறக்குமதி செய்து குவித்து வந்த அயல்நாட்டு மெர்சிடிஸ் மற்றும் ஆடி கார்களை போல் இவை மிக பிரமாண்டமானவை அல்ல என்றாலும் அது ஒரு குறை அல்ல.

    எங்கள் கூட்டாளிகளின் வழிமுறைகளை நாங்களும் கடைபிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்தியாவின் "மேக் இன் இந்தியா" (இந்தியாவிலேயே தயாரியுங்கள்) திட்டம் போன்றவற்றை நாங்களும் கையாள விரும்புகிறேன். உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலமும் அந்தந்த நகரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்.

    இத்தகைய பொருளாதார வளர்ச்சிக்கான வெற்றி பெறும் வழிமுறைகளை ரஷியா இந்தியாவை போல கையாள வேண்டும். இந்தியர்கள் இந்தியாவிலேயே அதிகளவில் வாகனங்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மிக சரியான வழிமுறை. மோடி மிக சரியானதைத்தான் செய்கிறார்.

    இவ்வாறு புதின் தெரிவித்தார்.

    கடந்த 9, 10 தேதிகளில் இந்தியா ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை உலக நாடுகள் பாராட்டி வரும் பின்னணியில் ரஷிய அதிபரின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது.

    • பரஸ்பரம் கொடுக்கவும் பெறவும் இரு நாடுகளிடமும் பல விஷயங்கள் உள்ளன
    • உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட பிம்பத்தை உடைக்க வட கொரியா முயன்று வருகிறது

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபரை வரும் நாட்களில் அங்கு சென்று சந்திக்க போவதாக ரஷியாவின் அதிகாரபூர்வ செய்தி தளமான கிரெம்ளின் இணையதளமும், வட கொரியாவின் அதிகாரபூர்வ கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. தற்போது வரை இச்சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது உறுதியாகவில்லை.

    ஆனாலும், இரு நாட்டு எல்லைகளுக்கு இடையில் கிம் ஜாங் உன் பயணம் செய்யும் அவரது பிரத்யேக பச்சை நிற ரெயில் காணப்பட்டதாகவும், அவர் ரஷியா நோக்கி பயணிக்கிறார் என்றும் தென் கொரிய மற்றும் ஜப்பான் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

    இத்தகைய ஒரு சந்திப்பு ரஷியாவின் விலாடிவோஸ்டாக் நகரில் நிகழக்கூடும் என கடந்த வாரமே அமெரிக்காவின் உளவுப்பிரிவு, தகவல் ஒன்றை வெளியிட்டது. கடந்த 2019-ல் புதின் முதன்முறையாக இங்குதான் வட கொரிய அதிபரை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    உக்ரைன் உடனான போரில் ரஷியாவின் ராணுவ தளவாட மற்றும் ஆயுத கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. வட கொரியாவிடம் ரஷிய வடிவமைப்பை கொண்டு உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் உள்ளது. எனவே, அந்நாட்டிடம் இருந்து இவற்றை பெற புதின் ஆர்வமாக உள்ளார். இதன் மூலம் போர் ஒரு முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்லும் என்பதால் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்காவிற்கு அழுத்தம் தர முடியும் என அவர் நம்புவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கு பதிலாக எரிசக்தி, உணவு தானியம் மற்றும் அதி நவீன ஆயுத தொழில்நுட்பம் ஆகியவற்றை ரஷியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ள வட கொரிய அதிபர் கோரிக்கை விடுப்பார் என்று தெரிகிறது. ரஷியாவிற்கு உதவி செய்து, உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட தனது பிம்பத்தை மாற்றி, அமெரிக்காவிற்கு எதிரான வலிமையுள்ள ஒரு நாடாக காட்டி கொள்ளவும் வட கொரியா முயன்று வருகிறது.

    இத்தகைய ராணுவ தொழில்நுட்பத்தை பெறுவதால், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை தாக்கும் வல்லமை வட கொரியாவிற்கு அதிகரிக்கும் என்று அந்நாடுகள் அஞ்சுகின்றன.

    கடந்த ஜூலை மாதம், வட கொரியா ஏற்பாடு செய்திருந்த அமெரிக்காவை தாக்கும் சக்தி படைத்த ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் அடங்கிய கண்காட்சி ஒன்றினை காண ரஷிய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு வட கொரியா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ட்வெர் பகுதிக்கு அருகே குசென்கினோ கிராமத்தில் விமானம் விபத்திற்குள்ளானது
    • கிளர்ச்சியின் போது வாக்னர் குழு 7 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தியது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்ததை அடுத்து, ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் அப்போது தொடங்கி தற்போது வரை நடக்கும் போரில் ரஷியாவிற்கு உதவியாக அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பும், கூலிப்படையுமான வாக்னர் குழு எனும் ஒரு அமைப்பும் பங்கேற்றது.

    இதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின். ரஷியாவிற்கு உதவி வந்த பிரிகோசின் திடீரென இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவிற்கு எதிராகவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் இறங்கினார். ஆனால், புதின் இக்கிளர்ச்சியை சாமர்த்தியமாக எதிர்கொண்டு பெரிதாகாமல் அடக்கினார்.

    இந்நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ரஷியாவின் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி எம்ப்ரேயர் லெகசி 600 ஜெட் விமானத்தில், ட்வெர் பகுதிக்கு அருகே பயணம் செய்த போது, குசென்கினோ கிராமத்தில் அந்த விமானம் விபத்திற்குள்ளாகியது. அதில் பயணம் செய்த 10 பேருடன் அவரும் உயிரிழந்ததாக ரஷியா அறிவித்தது.

    இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வெளியானது. அதில் ஒரு விமானம் விபத்திற்குள்ளாகி தீப்பிடித்து கீழே விழும் காட்சியுடன் அது எவ்ஜெனி பயணம் செய்த விமானம் என குறுஞ்செய்தியும் வெளியிடப்பட்டு இருந்தது. இதனை உண்மையென நம்பி பலரும் இணையத்தில் இதனை பரவலாக்கினர்.

    ஆனால், ஆய்வில் இந்த செய்தி உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    இந்த வீடியோவில் காணப்படும் விமானம், ரஷிய விமான படையை சேர்ந்த ஏ.என்.-26 (AN-26) ரக விமானம் என்றும் அதை வாக்னர் குழு ஜூன் 24 அன்று சுட்டு வீழ்த்தும் காட்சிதான் வீடியோவில் உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. தனது கிளர்ச்சியின் போது வாக்னர் குழு 7 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தியது. அதில் ஒன்று விழும் காட்சிதான் வீடியோவில் பரவலாக்கப்பட்டது.

    ஜூன் மாதம் வீழ்த்தப்பட்ட இந்த விமானத்தின் காட்சிக்கும் ஆகஸ்ட் மாதம் பிரிகோசினை பலி வாங்கிய விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • பிரிகோஜின் பயணம் செய்த தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியது.
    • கடந்த மாதம் அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பிரிகோஜின் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.

    ஷியாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு விசாரணைக் குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

    இது குறித்து ரஷியாவின் விசாரணைக் குழு செய்தித் தொடர்பாளர் வெட்லனா பெட்ரென்கோ அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த புதன் கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் மீட்கப்பட்ட பத்து உடல்களும் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை அனைத்தும் விமானத்தில் பயணம் செய்த பத்து பேருடையது தான் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    ரஷியாவின் வான் போக்குவரத்து ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட தகவல்களில் பிரிகோஜினின் தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியதாகவும், இந்த தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்கள் பட்டியலில் பிரிகோஜின் பெயர் இடம்பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விபத்தில் சித்திய விமானத்தில் பிரிகோஜின் தவிர விமானி மற்றும் ஏழு பயணிகள் பயணம் செய்தனர். அந்த வகையில், விமானம் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி சென்று கொண்டிருந்த போது நடுவழியில் வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.

    • பல நாடுகள் ரஷியாவின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றன
    • உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையின் மீதே புதின் கவனம் செலுத்துகிறார் என ரஷியா கூறியுள்ளது

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை, சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போரை அறிவித்து, அந்நாட்டை ஆக்ரமிக்கும் முயற்சியை துவங்கியது.

    இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் உக்ரைன், ரஷியாவை எதிர்த்து தீவிரமாக போரிட்டு வருகிறது. 18 மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கிடையே நடந்து வரும் போர் காரணமாக, இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதங்களும், கட்டிட சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

    ரஷியாவின் ஆக்ரமிப்பை கண்டிக்கும் விதமாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது. இந்நிலையில் உலகின் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு, இந்தியாவில் புது டெல்லியில் நடக்க இருக்கிறது.

    அங்குள்ள பிரகதி மைதானில் உள்ள சர்வதேச கண்காட்சி-மாநாட்டு மையத்தின் பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடக்க இருப்பதால், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். ரஷியாவும் ஜி20 அமைப்பில் உறுப்பினர் என்பதால் புதின் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், "ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஜி20 உச்சி மாநாட்டிற்கு இந்தியாவிற்கு நேரில் வர போவதில்லை. உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையின் மீதே அவரது முழு கவனமும் உள்ளது," என அந்நாட்டு அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அறிவித்தார்.

    தனது நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கும் நாடுகளின் தலைவர்களை நேரில் சந்திப்பதை தவிர்க்கவே அவர் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என முடிவெடுத்திருக்கலாம் என பன்னாட்டு அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    ரஷியாவின் தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் விமான விபத்தில் உயிரிழந்ததை அடுத்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சியும் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என ஒரு சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    தென் ஆப்பிரிக்காவில் சமீபத்தில் முடிவடைந்த பிரிக்ஸ் மாநாட்டிலும் புதின் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாக்னர் கூலிப்படை ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது.
    • புதினின் அரசை கவிழ்க்க திடீர் புரட்சியில் ஈடுபட்டது.

    மாஸ்கோ :

    உக்ரைன் மீதான போரில் ரஷிய படைகளுடன் இணைந்து அந்த நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு செயல்பட்டு வந்தது. போரில் உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதில் இந்த கூலிப்படை முக்கிய பங்காற்றியது.

    இந்த சூழலில் திடீர் திருப்பமாக வாக்னர் கூலிப்படை ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது. புதினின் அரசை கவிழ்க்க திடீர் புரட்சியில் ஈடுபட்டது.

    எனினும் கூலிப்படையுடன் புதின் அரசு சமரசம் செய்து கொண்டதால் இந்த புரட்சி ஓரிரு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு உறுப்பினர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ரஷியாவின் வாக்னர் குழு இல்லை என்று அதிபர் புதின் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாஸ்கோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த புதினிடம் வாக்னர் குழு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ரஷியாவில் தனியார் ராணுவ அமைப்புகளுக்கு எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை. எனவே வாக்னர் குழு என்ற அமைப்பு இல்லை" என கூறினார்.

    • உக்ரைன் மீது படையெடுப்பதற்கான புதினின் முடிவிற்கு வட கொரியா துணை நிற்பதாக கிம் உறுதியளித்துள்ளார்.
    • ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கி, முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்தது.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன், 'கரம்கோர்ப்பதாகவும்', நாட்டை சக்திவாய்ந்ததாக்கும் இலக்கிற்காக, திட்டமிட்ட செயலாக்கத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உறுதியளித்துள்ளதாக, அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.

    ரஷியாவின் தேசிய தினத்தையொட்டி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கிம் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அந்த செய்தியில், உக்ரைன் மீது படையெடுப்பதற்கான புதினின் முடிவிற்கு வட கொரியா துணை நிற்பதாகவும், ரஷியாவிற்கு முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை அளிப்பதாகவும் கிம் உறுதியளித்துள்ளார்.

    "நீதி வெற்றி பெறுவது உறுதி என்றும், வெற்றி வரலாற்றிற்கு ரஷிய மக்கள் தொடர்ந்து பெருமை சேர்ப்பார்கள்", என்றும் கிம் தெரிவித்துள்ளார்.

    ரஷியாவுடன் நெருக்கமான திறன் வாய்ந்த ஒத்துழைப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கும் கிம், இரு நாட்டு மக்களின் பொதுவான விருப்பத்திற்கு இணங்க, தத்தம் நாடுகளை சக்தி வாய்ந்த நாடாக கட்டியெழுப்பும் பெரும் இலக்கை நிறைவேற்ற, ரஷிய அதிபருடன் உறுதியாக கரம் கோர்ப்பதாக அவர் தெரிவித்ததாக அச்செய்தி மேலும் கூறுகிறது.

    அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் எதேச்சதிகார மற்றும் மேலாதிக்க கொள்கைகளை குற்றம் சாட்டி உள்ள வட கொரியா, கடந்த ஆண்டு ரஷியா, உக்ரைனை ஆக்கிரமித்த பின்னரும் அந்நாட்டை ஆதரித்து நெருக்கமான நட்புறவை ஏற்படுத்த முயற்சித்தது.

    கடந்த 2021ம் ஆண்டு ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கி, முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்தது. இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனை ஆதரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்ளன. இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ரஷியாவிற்கு ஆதரவளித்திருப்பது உலக அரங்கில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.

    ×