search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Indian PM"

  • பிரதமரின் முயற்சியை மாலத்தீவை சேர்ந்த 3 மந்திரிகள் விமர்சித்திருந்தனர்
  • நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்றார் முய்சு

  சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தலில், சீன ஆதரவாளராக கருதப்படும் முகமது முய்சு (Mohamed Muizzu) வெற்றி பெற்றார். அவர் அதிபராக பதவி ஏற்றதுமே மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

  இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன், இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்று அங்கு இந்தியர்களை சுற்றுலாவிற்கு ஈர்க்கும் முயற்சியாக பல இயற்கை எழில் மிகுந்த பல காட்சிகளை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு அத்தீவின் சிறப்புகளை வர்ணித்து இருந்தார்.


  ஆனால், பிரதமரின் முயற்சியை மாலத்தீவை சேர்ந்த 3 மந்திரிகள், சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு விமர்சித்திருந்தனர்.

  இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியர்கள் பலர் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்வதை ரத்து செய்தனர்.

  இதற்கிடையே, 5 நாள் பயணமாக சீனா சென்றிருந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கூறியதாவது:

  இந்திய பெருங்கடல் (Indian Ocean), அதில் அமைந்துள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது. இந்தியப் பெருங்கடலில் 9 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்யேக பொருளாதார மண்டலமாக மாலத்தீவு உள்ளது. இப்பெருங்கடலில் மாலத்தீவிற்கும் பங்கு உண்டு.

  நாங்கள் அளவில் சிறிய நாடாக இருக்கலாம். அதற்காக எந்த ஒரு நாட்டிற்கும் எங்களை கொடுமைப்படுத்தும் உரிமை கிடையாது.

  நாங்கள் எந்த நாட்டின் கொல்லைப்புறத்திலும் இல்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு.

  சீனா மாலத்தீவின் உள்நாட்டு விவகாரங்கள் எதிலும் தனது செல்வாக்கை செலுத்தாது.

  இவ்வாறு முய்சு தெரிவித்தார்.

  • இறுதி போட்டியை காண பிரதமர் மோடியும் வந்திருந்தார்
  • இனி வரும் காலங்களில் ஊக்கமுடன் செயலாற்ற இது உதவும் என்றார் சேவாக்

  4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரின் 2023க்கான 13-வது போட்டி தொடர், அக்டோபர் 5 அன்று தொடங்கி நவம்பர் 19 அன்று நிறைவடைந்தது. அனைத்து போட்டிகளும் இந்தியாவில் பல நகரங்களில் நடைபெற்றது.

  இப்போட்டி தொடரின் இறுதி போட்டி, குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது.

  இப்போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வருகை தந்தார்.

  இத்தொடரின் ஆரம்பம் முதல், பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த இந்திய அணியினர், இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியினரிடம் தோல்வி அடைந்தனர். உலகம் முழுவதும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த படுதோல்வி, இந்திய அணியினரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. போட்டி முடிந்ததும் விளையாட்டு மைதானத்திலேயே சில இந்திய அணி வீரர்கள் கண்ணீர் சிந்தினர்.

  இதையடுத்து சோர்வுடன் தங்களின் ஒய்வு அறையில் இருந்த இந்திய அணியினரை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கை குலுக்கி ஆறுதல் வார்த்தைகள் கூறி உற்சாகப்படுத்தினார். மேலும், இந்திய அணியினரை டெல்லிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.

  இந்நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான "அதிரடி மன்னன்" வீரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்தார்.

  அப்போது அவர் கூறியதாவது:

  வீரர்களை ஓய்வு அறையில் (dressing room) நாட்டின் பிரதமரே நேரில் சென்று காண்பது அபூர்வமான விஷயம். ஒரு மோசமான தோல்விக்கு பிறகு நொறுங்கிய அவர்களின் இதயங்களையும், உற்சாகத்தையும் மேலே கொண்டு வர இது அவசியம். தனது முக்கிய பணிகளுக்கு இடையே ஒரு பிரதமர் தோல்வியடைந்த வீரர்களை காண வருவது இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை. வீரர்களின் நம்பிக்கையை உயர்த்தும் அற்புதமான நடத்தை இது. படுதோல்விக்கு பிறகு அணியினர், குடும்ப உறுப்பினர்களை போன்று ஒற்றுமையுடன் ஆறுதல் கூற எவரேனும் உள்ளனரா என ஏங்கும் தருணம் அது. இனி வரும் காலங்களில் பல நாடுகளில் பல போட்டிகளில் பங்கு பெற உள்ள நம் நாட்டு அணியினருக்கு பிரதமரின் வார்த்தைகள் ஊக்கமாக அமையும். இப்போது நடந்தது போல், இனி வரும் போட்டிகளில் இறுதி கட்ட தடை கற்களை தாண்டவும் இது உதவும்.

  இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.

  112 கிரிக்கெட் வீரர்களை கொண்ட ஐசிசியின் "ஹால் ஆஃப் ஃபேம்" (Hall of Fame) எனும் புகழ் பெற்ற சாதனையாளர்களின் பட்டியலில் சில வாரங்களுக்கு முன், வீரேந்தர் சேவாக்கின் பெயர் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சேவாக், இப்பட்டியலில் இணையும் 8-வது இந்திய வீரர் ஆவார்.

  • 10 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழப்பு ஏற்பட்டதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது
  • போரை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என இஸ்ரேல் அறிவித்தது

  பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக அறிவித்துள்ள இஸ்ரேல், கடந்த அக்டோபர் 7 முதல் அவர்கள் மறைந்திருக்கும் காசா பகுதியில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் 32-வது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

  இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையேயான இந்த போரில் பாலஸ்தீன காசா பகுதியில் இருக்கும் அப்பாவி பாலஸ்தீனியர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன தரப்பு அறிவித்துள்ளது.

  உலக நாடுகள் விடுத்த போர் நிறுத்த கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்து விட்டது.

  இதற்கிடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தொலைபேசியில் பேசினார்.

  இரு நாட்டு தலைவர்களும் இந்தியா-ஈரான் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்தும் உரையாடியுள்ளனர்.

  இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு ரீதியான இந்த உரையாடலில் இப்ராஹிம் தெரிவித்திருப்பதாவது:

  மேற்கத்திய நாடுகளின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியா நடத்திய போராட்டங்களும், அணி சேரா நாடுகளை ஒருங்கிணைப்பதில் எடுத்த முயற்சிகளையும் ஈரான் இத்தருணத்தில் நினைவு கூர்கிறது. தன்னிடம் உள்ள அனைத்து திறனையும் முழுவதுமாக உபயோகித்து பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் போரை இந்தியா முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இது நடக்கும் என நாங்கள் நம்புகிறோம். காசாவில் நடப்பது அங்குள்ள மக்களுக்கு எதிரான குற்றம். போர் நீண்டு கொண்டே சென்றால் பிற நாடுகளுக்கும் பரவலாம் எனும் அச்சம் மேற்கு ஆசிய நாடுகளிடையே அதிகரித்து வருகிறது. அது நிலைமையை இன்னும் சிக்கலாக்கும். பாலஸ்தீன மக்களின் துன்பங்களை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்படும் எந்த உலகளாவிய நடவடிக்கைக்கும் ஈரான் ஆதரவளிக்கும். பாலஸ்தீன சுதந்திரத்திற்காக பாடுபடும் அமைப்புகளுக்கு தங்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட முழு உரிமை உண்டு.

  இவ்வாறு ஈரான் அதிபர் கூறியுள்ளார்.

  முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "பாலஸ்தீன பிரச்சனையை தீர்ப்பதற்கும், மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து அங்கு கிடைப்பதை உறுதி செய்யவும், விரைவில் அமைதி திரும்பவதையும் இந்தியா விரும்புகிறது" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் தெரிவித்திருந்தார்.

  • பல நாடுகள் ரஷியாவின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றன
  • உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையின் மீதே புதின் கவனம் செலுத்துகிறார் என ரஷியா கூறியுள்ளது

  கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை, சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போரை அறிவித்து, அந்நாட்டை ஆக்ரமிக்கும் முயற்சியை துவங்கியது.

  இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் உக்ரைன், ரஷியாவை எதிர்த்து தீவிரமாக போரிட்டு வருகிறது. 18 மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கிடையே நடந்து வரும் போர் காரணமாக, இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதங்களும், கட்டிட சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

  ரஷியாவின் ஆக்ரமிப்பை கண்டிக்கும் விதமாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது. இந்நிலையில் உலகின் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு, இந்தியாவில் புது டெல்லியில் நடக்க இருக்கிறது.

  அங்குள்ள பிரகதி மைதானில் உள்ள சர்வதேச கண்காட்சி-மாநாட்டு மையத்தின் பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடக்க இருப்பதால், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

  அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். ரஷியாவும் ஜி20 அமைப்பில் உறுப்பினர் என்பதால் புதின் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால், "ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஜி20 உச்சி மாநாட்டிற்கு இந்தியாவிற்கு நேரில் வர போவதில்லை. உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையின் மீதே அவரது முழு கவனமும் உள்ளது," என அந்நாட்டு அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அறிவித்தார்.

  தனது நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கும் நாடுகளின் தலைவர்களை நேரில் சந்திப்பதை தவிர்க்கவே அவர் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என முடிவெடுத்திருக்கலாம் என பன்னாட்டு அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

  ரஷியாவின் தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் விமான விபத்தில் உயிரிழந்ததை அடுத்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சியும் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என ஒரு சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  தென் ஆப்பிரிக்காவில் சமீபத்தில் முடிவடைந்த பிரிக்ஸ் மாநாட்டிலும் புதின் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  ×