search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "humanitarian aid"

    • இஸ்ரேல் ஹமாஸ் போர், 95 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது
    • தொடரும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிரிழப்பு அச்சுறுத்துவதாக உள்ளது

    கடந்த 2023 அக்டோபர் 7 தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் பாலஸ்தீன காசா பகுதியில் இதுவரை 23,210 பேர் உயிரிழந்துள்ளனர்.

    95 நாட்களுக்கும் மேலாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து பேச அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை (UNGA) கூட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற இந்தியாவின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதி ருசிரா கம்போஜ் (Ruchira Kamboj), பாலஸ்தீன காசா பகுதியில் நிலவும் சூழல் குறித்து இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை குறித்து பேசினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    காசாவிற்கு இதுவரை இந்தியா 70 டன் அளவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கி உள்ளது. அதில் 16.5 டன் மருந்துகளும் இடம்பெற்றன. அத்துடன் $5 மில்லியன் நிதியுதவி வழங்கினோம்.

    அக்டோபர் 7 அன்று நடைபெற்ற பயங்கர தாக்குதல்தான் இந்த பிரச்சனைக்கெல்லாம் தூண்டுதல் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். பயங்கரவாத தாக்குதல்களை ஒரு போதும் இந்தியா ஆதரிக்காது.

    ஆனால், காசாவில் தொடர்ந்து நடைபெறும் பெருமளவு உயிரிழப்புகள் சற்றும் ஏற்று கொள்ள முடியாதது. அதிலும் குறிப்பாக தொடர்ந்து நடைபெறும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிரிழப்புகள் அச்சுறுத்துவதாக உள்ளது.

    இப்பிரச்சனையின் தொடக்கம் முதலே இந்தியா தனது நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது.

    மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைத்திட, சச்சரவு தீவிரமடைவதை நிறுத்தியாக வேண்டும். அதற்கு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே இந்த சிக்கலுக்கு ஒரு அமைதியான தீர்வு கிடைக்கும்.

    இவ்வாறு ருசிரா கூறினார்.


    • ஐ.நா. உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகளின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்தது
    • உலகம் கண்டிராத ஒரு மனித குல பேரழிவு நடப்பதாக அந்த முகமை தெரிவித்தது

    பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் புரிந்து வரும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர், உணவு, மருந்து பொருட்கள், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை முற்றிலுமாக தடுத்து விட்டது. காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க ஒரு வழித்தடம் அமைத்து தரவேண்டும் என ஐ.நா. உள்ளிட்ட பல மனிதாபிமான அமைப்புகள் இஸ்ரேலிடம் வைத்த கோரிக்கையையும் இஸ்ரேல் நிராகரித்து விட்டது.

    வான்வழி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் தொடங்க இருப்பதாகவும், அதனால் காசா பகுதியில் வாழும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் கெடு விதித்திருந்தது. இஸ்ரேல் விதித்திருந்த கெடு முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அங்கிருந்து வெளியேற தொடங்கி விட்டனர்.

    இதற்கிடையே, கிழக்கு ஜெருசேலம் பகுதியில் ஐ.நா. கூட்டமைப்பின் நிவாரண பணி முகமை (UN Relief And Works Agency) அமைப்பின் தலைவர் பிலிப் லசாரினி (Philippe Lazzarini) காசா பொதுமக்களின் துயரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    உலகம் மனிதாபிமானத்தை இழந்து விட்டது. எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களால் எந்த மனிதாபிமான உதவிகளையும் காசா மக்களுக்கு வழங்க முடியவில்லை. காசாவின் கழுத்து நெரிக்கப்பட்டு வருகிறது. குடிநீர்தான் 'உயிர்' - ஆனால் காசாவில் குடிநீர் இல்லை; ஒரு சொட்டு குடிநீர் கூட இல்லை. காசாவின் 'உயிர்' பிரிந்து கொண்டிருக்கிறது. விரைவில் உணவு மற்றும் மருந்து ஆகியவையும் கிடைப்பது நின்று விடும். கடந்த 8 நாட்களாக காசாவில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை; ஒரு கோதுமை தானியம் கூட இல்லை; ஒரு லிட்டர் எரிபொருள் கூட இல்லை. அங்கு இதுவரை உலகம் கண்டிராத ஒரு மனிதகுல பேரழிவு நடந்து வருகிறது. பாதுகாப்பான இடம் என அங்கு எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இன்று (அக்டோபர் 16) உலகம் முழுவதும் "உலக உணவு தினம்" கொண்டாடப்படும் வேளையில், லட்சக்கணக்கான காசா மக்களுக்கு உணவு, வசிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது கவலை தரும் நிகழ்வு என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது
    • 150 இஸ்ரேலியர்களின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை

    கடந்த சனிக்கிழமை காலை இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பல இஸ்ரேலியர்கள் இதில் உயிரிழந்தனர். மேலும் பல இஸ்ரேலியர்களை பணய கைதிகளாக ஹமாஸ் கொண்டு சென்றது.

    இதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி, இஸ்ரேல் அதை சேர்ந்தவர்களை காசா பகுதியில் தேடி தேடி வேட்டையாடி வருகிறது.

    இஸ்ரேல் அறிவித்திருக்கும் இந்த போர் 6-வது நாளாக இன்றும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியின் மீது இஸ்ரேல் வான்வழியாக தொடர்ந்து குண்டு மழையை பொழிவதால் அப்பகுதியில் பல வீடுகள் சேதமடைந்தன. பலர் அண்டையில் உள்ள அரபு நாடுகளுக்கு அகதிகளாக செல்ல தொடங்கி விட்டனர்.

    காசாவில் பல லட்சம் மக்களுக்கு வீடு, மின்சாரம், எரிபொருள், குடிநீர், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இஸ்ரேல் துண்டித்து விட்டது. குண்டு வீச்சில் காயமடைந்தவர்களால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

    இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்கு அவசர தேவைகள் சென்றடைய வழித்தடத்தை அமைத்து தரவும், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தடை விதிக்க வேண்டாம் என்றும் இஸ்ரேலுக்கு சில மனிதாபிமான அமைப்புகள் கோரிக்கை வைத்தன.

    இதற்கு இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து விட்டது.

    "காசாவிற்கு மனிதாபிமான உதவிகளா? எங்கள் நாட்டவர்களை ஹமாஸ் விடுவிக்காத வரை காசாவில் எந்த மின்சார சுவிட்சும் வேலை செய்யாது; எந்த குடிநீர் குழாயும் திறக்கப்பட மாட்டாது; எந்த எரிபொருள் வாகனமும் உள்ளே நுழைய முடியாது. மனிதாபிமானமாக நடந்து கொள்பவர்களிடம்தான் மனிதாபிமானத்தை காட்ட முடியும். தார்மீக கடமைகளை எங்களுக்கு எவரும் கற்று தர வேண்டாம்" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் இஸ்ரேல் அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் (Israel Katz) உறுதியாக கூறியுள்ளார்.

    ஹமாஸ் அமைப்பால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் சுமார் 150 இஸ்ரேலியர்களின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை.

    பாலஸ்தீன பகுதியின் ஒரே மின்சார உற்பத்தி நிலையம் நேற்று எரிபொருள் இல்லாததால் முடங்கியது.

    • தாக்குதல் காரணமாக உக்ரைனியர்கள் ரஷியாவிற்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்
    • அவர்கள் தவிப்பதை எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது என்றார் ஒரு ரஷிய பெண்மணி

    2022 பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது.

    ரஷியாவில் இப்போர் குறித்து ரஷியாவையோ, அதிபர் விளாடிமிர் புதினையோ விமர்சிப்பவர்கள் மீது ரஷிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    ஆனால் அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷியாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.

    ராணுவ தாக்குதல் காரணமாக ரஷியாவிற்கோ அல்லது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர். தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷிய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர்.

    "இந்த அகதிகளுக்காக இணையவழியாக நன்கொடை பெற்று உடைகள், மருந்துகள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை செய்து தருகிறேன். ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரெயிலில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். என்னை போல் ஆயிரக்கணக்கான ரஷியர்கள் உதவி செய்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் இது குறித்து நாங்கள் வெளியில் பேசுவதில்லை," என கலினா அர்ட்யோமென்கோ (58) எனும் ரஷிய பெண்மணி தெரிவித்தார்.

    "எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்" என ல்யுட்மில்லா (43) எனும் மற்றொரு ரஷிய பெண் கூறினார்.

    2022 டிசம்பர் மாதமே ரஷியாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 லட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×