search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "UN General Assembly"

  • இஸ்ரேல் ஹமாஸ் போர், 95 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது
  • தொடரும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிரிழப்பு அச்சுறுத்துவதாக உள்ளது

  கடந்த 2023 அக்டோபர் 7 தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் பாலஸ்தீன காசா பகுதியில் இதுவரை 23,210 பேர் உயிரிழந்துள்ளனர்.

  95 நாட்களுக்கும் மேலாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  இது குறித்து பேச அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை (UNGA) கூட்டம் நடைபெற்றது.

  இதில் பங்கேற்ற இந்தியாவின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதி ருசிரா கம்போஜ் (Ruchira Kamboj), பாலஸ்தீன காசா பகுதியில் நிலவும் சூழல் குறித்து இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை குறித்து பேசினார்.

  அதில் அவர் தெரிவித்ததாவது:

  காசாவிற்கு இதுவரை இந்தியா 70 டன் அளவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கி உள்ளது. அதில் 16.5 டன் மருந்துகளும் இடம்பெற்றன. அத்துடன் $5 மில்லியன் நிதியுதவி வழங்கினோம்.

  அக்டோபர் 7 அன்று நடைபெற்ற பயங்கர தாக்குதல்தான் இந்த பிரச்சனைக்கெல்லாம் தூண்டுதல் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். பயங்கரவாத தாக்குதல்களை ஒரு போதும் இந்தியா ஆதரிக்காது.

  ஆனால், காசாவில் தொடர்ந்து நடைபெறும் பெருமளவு உயிரிழப்புகள் சற்றும் ஏற்று கொள்ள முடியாதது. அதிலும் குறிப்பாக தொடர்ந்து நடைபெறும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிரிழப்புகள் அச்சுறுத்துவதாக உள்ளது.

  இப்பிரச்சனையின் தொடக்கம் முதலே இந்தியா தனது நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது.

  மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைத்திட, சச்சரவு தீவிரமடைவதை நிறுத்தியாக வேண்டும். அதற்கு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே இந்த சிக்கலுக்கு ஒரு அமைதியான தீர்வு கிடைக்கும்.

  இவ்வாறு ருசிரா கூறினார்.


  • 1948ல் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஐ.நா. பொதுச்சபை ஏற்றது
  • உலக நாடுகளில் சிக்கல்கள் நிலவும் சூழலில் மனித உரிமைக்கான அவசியம் வலுப்பெறுகிறது

  உலகெங்கிலும் ஆண்டுதோறும் டிசம்பர் 10, "மனித உரிமை தினம்" என கொண்டாடப்படுகிறது.

  1914லிருந்து 1918 வரையில் முதலாம் உலக போரையும், 1939லிருந்து 1945 வரை இரண்டாம் உலக போரையும் உலகம் சந்தித்தது. இதையடுத்து இதே போன்ற நிலை மீண்டும் தோன்றுவதை தடுக்கும் விதமாக உலக நாடுகள் ஒன்றுபட்டு பல முடிவுகளை எடுத்தன.

  அதன் ஒரு தொடர்ச்சியாக 1948ல் டிசம்பர் 10 அன்று, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஐ.நா. பொதுச்சபை பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்ற சந்திப்பில் ஏற்று கொண்டது.

  தொடர்ந்து 1950ல் இந்த பிரகடனம் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. அன்றிலிருந்து டிசம்பர் 10 "மனித உரிமை தினம்" என கொண்டாடப்படுகிறது.

  உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் அடிப்படை உரிமைகளை உணர்ந்து அவற்றை கோருவதற்கும், எந்த வித்தியாசங்களும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்வதற்குமான நோக்கத்துடன் மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய மனித உரிமை பிரகடனம் (UDHR) மக்களிடையே இனம், நிறம், மதம், பாலினம், மொழி, நாடு உள்ளிட்ட எந்த வித்தியாசமுமின்றி மனித உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

  இஸ்ரேல்-ஹமாஸ் போர், ரஷியா-உக்ரைன் போர், மியான்மர் உள்நாட்டு கலவரம், சூடான் உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட உலகளாவிய பதட்டமான சூழ்நிலையில் மனித உரிமைகளுக்கான அவசியம் மேலும் வலுவடைந்துள்ளது.

  பிரகடனப்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் இது குறித்து பேசிய ஐ.நா. கூட்டமைப்பின் தலைவர் வால்கர் டர்க் (Volker Turk), "உலகம் பல சிக்கல்களாலும், நெருக்கடியாலும் சூழப்பட்டிருந்தாலும் மனித உரிமைகள் தோற்கவில்லை" என கூறினார்.

  2023க்கான மனித உரிமை தின கருப்பொருள் "சுதந்திரம், சமத்துவம், அனைவருக்குமான நீதி" என்பதாகும்.

  • இரு தரப்புக்கும் ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன
  • வெறுப்பு பேச்சு அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது என்றார் டென்னிஸ்

  கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரின் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

  உலக அளவில் பல நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாகவும் மக்களில் பலர் ஆங்காங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் இதனால் வன்முறை வெடித்துள்ளது.

  இந்நிலையில் இது குறித்து ஐ.நா. பொதுச்சபையின் 78-வது அமர்வில், அச்சபையின் அதிபர் டென்னிஸ் ஃப்ரான்ஸிஸ் (Dennis Francis) உரையாற்றினார்.

  அப்போது அவர் கூறியதாவது:

  அக்டோபர் 7 தொடங்கி உலகம் முழுவதும் அதிகரித்துள்ள வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்கள் கவலையளிக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாதது. உலக மக்கள் அனைவரையும் நான் கேட்டு கொள்கிறேன். நாம் வாழும் உலகில் வெறுப்புணர்ச்சிக்கு இடமே இல்லை. மனிதர்களுக்கு இடையே பாகுபாடுகள் எந்த வழியில் நடந்தாலும் அதனை நாம் புறக்கணிக்க வேண்டும். வலி தரும் காயங்களை வெறுப்பு பேச்சுக்கள் ஆழமாக்கும். அவநம்பிக்கையயும், வன்முறையையும் இது ஊக்குவிக்குமே தவிர எந்த சிக்கலையும் தீர்க்காது. ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளும் கண்ணியமான கருத்து பரிமாற்றங்களும் மட்டுமே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும். உலக சமுதாயம் வெறுப்பு பேச்சுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  தனது உரையில், மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தின் முதல் வரியான "அனைத்து மனிதர்களும் சுதந்திரமானவர்கள். அனைவருக்கும் உரிமைகள் உண்டு" என்பதை நினைவுகூர்ந்தார் பிரான்ஸிஸ்.

  • இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை
  • காந்தியின் கோட்பாடுகளே அரசியல் அமைப்பின் அடித்தளம் என்றார் பிரியங்கா

  கடந்த அக்டோபர் 7 முதல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் காசாவில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

  இந்நிலையில், ஐ.நா. கூட்டமைப்பின் பொதுச்சபையில் (UNGA) நேற்று முன் தினம் ஜோர்டான், "காசாவில் நிலையான அமைதிக்கு வழிவகுக்க உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அனைத்து அத்தியாவசியமான தேவைகளும் தங்கு தடையற்று கிடைக்க வேண்டும்," என்றும் கோரிக்கை வைத்து ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தது.

  ஜோர்டானின் தீர்மானத்திற்கு ஐ.நா. உறுப்பினர் நாடுகளில் 120 நாடுகள் ஆதரவும், அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன.

  இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

  "இஸ்ரேல் மீது அக்டோபர் 7 அன்று நடைபெற்ற ஹமாஸ் தாக்குதல் அதிர்ச்சிகரமானது. ஆனால், அது குறித்து தீர்மானத்தில் வாசகங்கள் இடம் பெறவில்லை. பொதுமக்கள் காசாவில் கொல்லப்படுவதும் கவலையளிக்கும் செயல். இதனால் இந்தியா வாக்கெடுப்பை தவிர்த்தது" என இந்தியாவின் நிலைப்பாட்டை குறித்து ஐ.நா. சபைக்கான இந்திய துணை நிரந்தர தூதர் யோஜ்னா படேல் (Yojna Patel) தெரிவித்தார்.

  இந்நிலையில், இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் (INC) பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கண்டித்துள்ளார்.

  அவர் இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது:

  'தன் கண்ணை பிடுங்கியவனின் கண்ணை பிடுங்க வேண்டும் எனும் எண்ணமும், செயலும், உலக மக்கள் அனைவரையும் குருடர்களாக்கி விடும்' என தேசப்பிதா மகாத்மா காந்தி கூறியிருந்தார். அகிம்சையும், உண்மையுமே நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளம். உணவு, குடிநீர், மருந்து, தொலைத்தொடர்பு, மின்சாரம் அனைத்தும் காசா பொது மக்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மிகுந்த துன்பங்களை அனுபவிக்கிறார்கள். ஜோர்டானின் போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்தில் பங்கேற்காததன் மூலம் நம் நாடு எந்த உயர்ந்த எண்ணங்களை தாங்கி பல காலங்களாக நிலை நிற்கிறதோ அவை அனைத்திற்கும் எதிரான நிலைப்பாட்டை இப்போது இந்தியா எடுத்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சிகரமான முடிவு. இந்த முடிவிற்காக ஒரு இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன்.

  இவ்வாறு பிரியங்கா கூறினார்.

  • தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் உள்ளது
  • ஐ.நா. பொதுசபையின் 10-வது அவசர கூட்டம் அக்டோபர் 26 அன்று நடைபெறும்

  உலகின் 193 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் (UNO), 6 முக்கிய உறுப்பு அமைப்புகளில் முக்கியமானது, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA). பொதுசபை, 1945ல் ஐ.நா. கூட்டமைப்பின் கொள்கை முடிவுகளை வகுக்கவும், உலக நாடுகளுக்கிடையே சச்சரவு எழும் போது ஐ.நா. சபையின் பிரதிநிதியாக செயல்பட்டு முக்கிய முடிவுகளை எடுக்கவும் உருவாக்கப்பட்டது.

  இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் இதன் உறுப்பினர் நாடுகளின் வருடாந்திர சந்திப்பு நடைபெறும்.

  உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் சிக்கல்களால் நெருக்கடி நிலை தோன்றும் போது, அவசியம் ஏற்பட்டால் அவசர சந்திப்புகளுக்கு தன் உறுப்பினர் நாடுகளுக்கு அழைப்பு விடுத்து பொதுசபை கூடுவதுண்டு.

  கடந்த அக்டோபர் 7-லிருந்து பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து அவர்கள் பாலஸ்தீன காசா பகுதியில் ஒளிந்திருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.

  இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 10-வது அவசர சந்திப்பு அக்டோபர் 26 அன்று நடைபெறும் என அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் (Dennis Francis) அறிவித்துள்ளார்.

  "உறுப்பினர் நாடுகள் அவசர சந்திப்பிற்கு ஐ.நா. பொதுசபைக்கு கோரிக்கை வைத்தன. இக்கோரிக்கையை ஏற்று 10-வது அவசர கூட்டம் வரும் 26 அன்று நடத்தப்படும்" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் டென்னிஸ் பதிவிட்டுள்ளார்.

  கடந்த 2022 பிப்ரவரி மாதம் தனது அண்டை நாடான உக்ரைனை ரஷியா ஆக்ரமித்ததையடுத்து அவசர கூட்டம் நடைபெற்றது.

  உலக சூழலுக்கு ஏற்ப 24 மணி நேரத்திலேயே அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க ஐ.நா. பொதுசபைக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  • ரஷியா, கருங்கடல் பகுதி வழியாக உணவு தானிய கப்பல் போக்குவரத்தை தடுத்தது
  • 5 நாடுகளில் 3 நாடுகள், தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன

  2022 பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களாக தொடர்ந்து வருகிறது.

  மத்திய ஐரோப்பிய நாடான போலந்து உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கி உதவியது.

  போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்ரமித்த கருங்கடல் பகுதியை உணவு தானிய ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதை ரஷியா தடை செய்து விட்டது. இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்கள் உலகின் பல நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் வழியாக சென்றடைகின்றன.

  இந்நிலையில் ஐரோப்பியாவின் பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் உள்ளூர் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் அந்நாடுகளின் வழியாக தானியம் எடுத்து செல்ல அனுமதித்தாலும் அந்நாடுகளில் அவற்றை விற்பனை செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை விலக்குவதாக அறிவித்தது.

  இருப்பினும் அந்த 5 நாடுகளில் போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா ஆகிய 3 நாடுகள், தங்கள் நாட்டு உள்ளூர் விவசாயிகளை காக்கும் வகையில் இந்த தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன.

  இதனை எதிர்க்கும் விதமாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. கூட்டமைப்பின் பொது சபை கூட்டத்தில் உரையாற்றும் போது, "சில ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிற்கு மறைமுகமாக உதவுகின்றன" என குறிப்பிட்டார்.

  இதற்கு எதிர்வினையாக தற்போது போலந்து நாட்டு பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி (Mateusz Morawiecki), உள்நாட்டு ராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

  • ஐ.நா. பொது சபையின் 78-வது அமர்வு நியூயார்க் நகரில் நடைபெறுகிறது
  • பிற நாட்டின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்று கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்தது

  ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் கொள்கைகளை வகுக்கும் முக்கிய அங்கம், பொது சபை (General Assembly). ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் உறுப்பினர் நாடுகளுக்கான சந்திப்புக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இச்சபையின் கூட்டம் நடைபெறும்.

  இதன் 78-வது அமர்வு இம்மாதம் 5 அன்று தொடங்கியது. இது இம்மாதம் 26 வரை நடைபெறும். நேற்று தொடங்கி வரும் 23 வரையிலும், பிறகு இரண்டு நாட்கள் கழித்து 26 அன்றும், பல்வேறு பிரச்சனை குறித்து உறுப்பினர் நாடுகள் கலந்து கொள்ளும் விவாதங்கள் நடைபெறும்.

  இதில் உறுப்பினர் நாடான துருக்கியின் சார்பில் அதன் அதிபர் ரிசெப் டாயிப் எர்டோகன் கலந்து கொண்டார்.

  "பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி நிலைபெற இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச வேண்டும். இதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் துருக்கி வழங்க தயாராக உள்ளது." என விவாதத்தில் பேசிய போது அவர் தெரிவித்தார்.

  கடந்த வருடம் நடைபெற்ற பொது சபை சந்திப்பிலும் எர்டோகன் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார்.

  "பிற நாட்டின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்று கொள்ள வேண்டும்" என பதிலளித்து அதற்கு அப்பொழுதே இந்தியா கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் துருக்கி இந்த சிக்கலை கிளப்பியிருப்பதால், இந்தியாவின் நகர்வை அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர்.

  • எலான் மஸ்க் உலகின் நம்பர் 1. கோடீசுவரரும் அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும் ஆவார்
  • மஸ்கை இஸ்ரேலில் முதலீடு செய்ய அழைக்கிறார் நேதன்யாகு

  ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் பொது சபையின் சந்திப்பு நாளை அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்ள இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அங்கு செல்லும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்முறையாக சந்திக்கவிருக்கிறார்.

  தனது பயண திட்டத்தில் ஜோ பைடன் தவிர உலகின் நம்பர் 1. கோடீசுவரரும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ் (முன்னர் டுவிட்டர்) ஆகிய நிறுவனங்களின் நிறுவனருமான அமெரிக்கர் எலான் மஸ்கை சந்திக்கவுள்ளார்.

  இது குறித்து எக்ஸ் கணக்கில் நேதன்யாகு தெரிவித்திருப்பதாவது:

  கலிபோர்னியாவில் எனது பயணத்தை தொடங்க போகிறேன். இந்த நவீன காலகட்டத்திற்கான அதிசயத்தக்க மாற்றங்களின் தலைவரான எலான் மஸ்கை சந்திக்க போகிறேன். அவரிடம் செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதிக்க போகிறேன். இஸ்ரேலில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்துவேன். மனித குலத்தின் அடையாளத்தையும் இஸ்ரேலின் அடையாளத்தையும் மாற்ற கூடிய பயணத்தை மஸ்க் முன்னெடுத்திருக்கிறார்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  "செயற்கை நுண்ணறிவின் அதிவேகமான வளர்ச்சி மனித குல வாழ்வியலுக்கான மிக பெரும் ஆபத்து. அத்துறையில் விளைவுகளை சிந்திக்காமல் மேம்படுத்தி கொண்டே போவது சாத்தானை வரவேற்பதற்கு சமம்" என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

  இத்துறையில் முன்னணியில் உள்ள ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு போட்டியாக மஸ்க், எக்ஸ்ஏஐ எனும் நிறுவனத்தை கடந்த ஜூலையில் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்படுவது தொடர்பாக விவாதிக்க வரும் 13-ம் தேதி ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது. #UNGeneralAssemblyemergencysession
  நியூயார்க்:

  1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர்.

  கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறலாக அமைத்த வசிப்பிடங்களில் சுமார் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.

  இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் அரசு பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

  இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

  இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது.

  குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

  இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் காஸா எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இஸ்ரேல் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 129 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, கடந்த மே மாதத்தில் மட்டும் 61 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

  இந்நிலையில், காஸா எல்லையில் போராடும் பாலஸ்தீன மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையை அவசரமாக கூட்ட வேண்டும் என அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு கோரிக்கை விடுத்தது.

  இதனையேற்று, ஐக்கிய நாடுகள் சபையின் 72-வது கூட்டம் மற்றும் இந்த ஆண்டின் சிறப்பு அவசர கூட்டம் வரும் புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  #UNGeneralAssemblyemergencysession
  ×